Friday, May 17, 2019

கால்களில் படிந்திருந்த தூசி

இன்றைய (18 மே 2019) முதல் வாசகம் (திப 13:44-52)

கால்களில் படிந்திருந்த தூசி

யூட்யூபில் திரு. மது பாஸ்கரன் என்பவர் 'மோட்டிவேஷன் தமிழ்' என்ற ஒரு சேனல் வைத்திருக்கிறார். நான் விரும்பிப் பார்க்கும் சில சேனல்களில் இதுவும் ஒன்று. 'வெற்றியாளர்களின் ஐந்து பண்புகள்' என்று சில மாதங்களுக்கு முன் ஒரு காணொளி வெளியிட்டார்:

(அ) வெற்றியாளர்கள் மற்றவர்களுக்கு உதவி செய்வார்கள் - ஏனெனில், அடுத்தவருக்கு உதவும்போதுதான் நாம் நிறைவு பெறுகிறோம். நம்மில் இருக்கும் நற்குணம், பணம், நேரம், ஆற்றல் மற்றவருக்காக செலவிடப்படும்போது நிறைவு பெறுகிறது.

(ஆ) வெற்றியாளர்கள் தோல்விகளைக் கண்டு பயப்பட மாட்டார்கள் - தோல்வியை நேருக்கு நேராக எதிர்கொள்வார்கள். தோல்வி என்பது நாம் எதிர்கொள்ளும் துயரம் அல்லது இன்னலாகக் கூட இருக்கலாம்.

(இ) வெற்றியாளர்கள் புதிய முயற்சிகளை எடுப்பர் - ஒன்று தவறினாலும், இன்னொன்றைத் துணிந்து எடுப்பர்.

(ஈ) வெற்றியாளர்கள் தங்கள் உறவுகளைப் பலப்படுத்திக்கொள்வர் - அது குடும்ப உறவாக இருக்கலாம், திருமண உறவாக இருக்கலாம், நட்பு வட்டமாக இருக்கலாம். இருக்கிற உணர்வுகளை இறுக்கமாக்கவும், இல்லாத உறவுகளை உருவாக்கவும் செய்வர்.

(உ) வெற்றியாளர்கள் நிதிமேலாண்மையை அறிந்திருப்பர் - ஏனெனில், நிதி என்பது எண்கள் சார்ந்தது. எண்கள் சார்ந்த ஒன்றை மேலாண்மை செய்யத்தெரிந்த ஒருவரே எண்கள் சாராத உணர்வுகளை மேலாண்மை செய்ய முடியும்.

நிற்க.

இந்தப் பண்புகள் நம்மிடம் இருந்தால் நம்மையே தட்டிக்கொடுத்துக்கொள்ளலாம்.

இன்றைய முதல் வாசகம் கடந்த வார ஞாயிறன்று நாம் வாசித்த முதல் வாசகமே. திருத்தூதர்கள் பவுலும் பர்னபாவும் தங்களுடைய முதல் தூதுரைப் பயணம் ஏறக்குறைய நிறைவுறும் நேரம் யூதர்களின் பொறாமையால் இன்னலுக்கு உள்ளாகிறார்கள். அதாவது, அவர்களுடைய பணி தோல்வியில் முடிகிறது.

ஆனாலும், அவர்கள் தோல்வியில் துவண்டுவிடாமல், புதிய முயற்சியாக, புறவினத்தாருக்கு நற்செய்தி அறிவிக்கப் புறப்படுகின்றனர்.

இவர்களும் வெற்றியாளர்கள்.

இந்த வெற்றியாளர்கள் நமக்கு இன்னொரு பண்பை இன்று கற்றுத் தருகிறார்கள்: 'கால்களில் படிந்திருக்கும் தூசியை உதறுவது.'

'கட்டிலின் சுத்தம்' பற்றி எங்களுக்கு குருமடத்தில் வகுப்பெடுத்த அருள்தந்தை, கட்டிலுக்குக் கீழே ஒரு கால்மிதி வைத்துக்கொள்ள வேண்டும் என்றும், இரவு தூங்குமுன் கால்களை நன்றாக வெதுவெதுப்பான அல்லது இளஞ்சூடான தண்ணீரில் கழுவிவிட்டு, நன்றாகத் துடைத்துவிட்டு, கட்டிலுக்கு அருகில் வந்த, அக்கால்மிதியில் மீண்டும் துடைத்துவிட்டு தூங்க வேண்டும் என்றார். பல காரணங்கள்: சுடுதண்ணீரில் கால் நனைத்துத் துடைத்து தூங்கினால் நல்ல தூக்கம் வரும். மேலும், காலில் உள்ள நரம்புகள் புத்துணர்ச்சி பெறும். காலில் உள்ள தூசி மற்றும் கிருமிகள் அகலும். படுக்கை சுத்தமாகும். அவரைப் பொறுத்தவரையில் அசுத்தமான படுக்கை அசுத்தாமான உணர்வுகளைக் கொண்டுவரும்.

இயேசுவும் தன் திருத்தூதர்களைப் பணிக்கு அனுப்பும்போது, அவர்கள் ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்றால், காலில் ஒட்டியிருக்கும் தூசியை அகற்றுமாறு கூறுகிறார். தூசியை அகற்றுவது என்பது நம்முடைய கடந்த காலத்தை, காயத்தை, குழப்பத்தை, வெறுப்பை அகற்றுவது என்றே நினைக்கிறேன். அவற்றை நம் கால்களில் ஏந்திக்கொண்டே அடுத்த இடங்களுக்குச் செல்லும்போது அவை நம்மோடு ஒட்டிக்கொண்டே வரும். தூசி என்றால் பரவாயில்லை. சில நேரங்களில் செருப்பில் ஒட்டிய எச்சில், பப்ள் கம், வேப்பம் பழம், சாணம், பறவைகளின் எச்சம், சகதி இன்னும் நிறைய அளெகரியங்களை ஏற்படுத்தும். செருப்பில் ஒட்டியிருந்தாலே நமக்கு அருவருப்பாக இருக்கிறது என்றால், காலில் ஒட்டினால் என்ன ஆகும்?

ஆக, ஒவ்வொரு நொடியையும் கடக்கும் நாம் அந்த நொடியின் தூசியை அந்த நொடியிலே விட்டுவிட்டால், அடுத்த நொடி தூசி படாமல் காக்கப்படும்.
பவுலும் பர்னபாவும் நீங்களும் நானும் வெற்றியாளர்களே!


2 comments:

  1. அருமையான பதிவு! வெற்றியாளர்களின் ஐந்து பண்புகள் குறித்துப்பேசும் தந்தை அந்தப் பண்புகளின், இருப்பிடமான திருத்தூதர்கள் பவுல் மற்றும் பர்னபா பற்றி குறிப்பிடுகிறார்.அத்தோடு வெற்றியாளர்களின் இன்னொரு பண்பான காலில் ‘ஒட்டியிருக்கும் தூசியை உதறுவது’ பற்றியும் குறிப்பிட்டுள்ளார்.அந்த செயலின் செயல்முறையையும்,காரணங்களுடன் விளக்கியுள்ளார்.இதே பண்பை இயேசுவும், தன் சீடர்களுக்குப் பாடமாகத்தருகிறார்.தூசியை அகற்றுவது என்பது நம்முடைய கடந்த காலத்தை,காய்த்தை,குழப்பத்தை, வெறுப்பை அகற்றுவது என்ற அழகான விளக்கத்தையும் தருகிறார்.ஆக, ஒவ்வொரு நொடியையும் கடக்கும் நாம்,அந்த நொடியின் தூசியை அந்த நொடியிலேயே விட்டுவிட்டால்,அடுத்த நொடி தூசி படாமல் காக்கப்படும்...அருமை!.இப்பொழுது புரிகிறது தந்தையின் வெற்றி இரகசியம். வாழ்வில் ஒவ்வொருவரும் பின்பற்ற வேண்டிய,நம்மை மேல் மட்டத்திற்கு இட்டுச்செல்லக்கூடிய பழக்க வழக்கங்களை நேரிடையாகச் சொல்லாமல் சிலபல உதாரணங்களுடனும், காரணகாரியங்களுடனும்,சில சமயங்களில், கொஞ்சம் பளிச்சென்று சாயம் தடவியும் தரும் தந்தையை நாமும் பின்பற்றினால் நாமும் கூட வெற்றியாளர்களே!!! தந்தைக்கு வாழ்த்துக்களும்! நன்றிகளும்!!!

    ReplyDelete
  2. ஒவ்வொரு நொடியையும் கடக்கும் நாம்,
    அந்த நொடியின் தூசியை, அந்த நொடியிலேயே, விட்டுவிட்டால்,
    பவுலும், பர்னபாவும் போன்று நீங்களும், நானும் வெற்றியாளர்களே!....
    Hats off to your ending positive approach.

    ReplyDelete