விவிலியத்தில் காணப்படும் அடிக்கடி பயன்படுத்தப்படும் உருவகங்களில் ஒன்று 'கண்ணி.' 'கண்ணியில் அகப்பட்ட பறவை,' 'கண்ணியில் அகப்பட்ட மான்,' 'வேடரின் கண்ணி' என அடிக்கடி இந்த வார்த்தை ஞானநூல்களில் (குறிப்பாக, நீதிமொழிகள், சீராக்கின் ஞானம், திருப்பாடல்கள்) பயன்படுத்தப்பட்டுள்ளது.
கண்ணியில் மாட்டிக்கொள்வது நாம் அனுபவித்திராத ஒன்றாக இருக்கலாம். இதை எப்படி புரிந்து கொள்வது?
வாகனத்தில் சாலையில் செல்கிறோம் என வைத்தக்கொள்வோம். நாம் எதிர்பாராத நேரத்தில் திடீரென வந்த ஒருவர் மேல் வண்டி மோதிவிடுகிறது. அந்த நபர் அந்த இடத்திலேயே இரத்தம் கொட்டி இறந்துவிடுகிறார். சுற்றிலும் கூட்டம் கூடி விடுகிறது. சிலர் நம்மை அடிக்க முயற்சிக்கிறார்கள். சிலர் காவல்துறைக்கு தகவல் கொடுக்கிறார்கள். நாமோ அங்கே செய்வதறியாது நிற்கின்றோம்.
அதுதான் கண்ணியில் அகப்பட்ட நிலை.
கண்ணி கொடுமையான ஒன்று. ஏனெனில், இதிலிருந்து தப்பிக்க முயலும்போதுதான் நாம் இன்னும் அதிகம் மாட்டிக்கொள்வோம். கண்ணியில் மாட்டிய பறவை தன் இறக்கையை அடித்து வெளியே பறக்க முயலும்போது தன்னை அறியாமலேயே கண்ணியின் முடிச்சை இன்னும் இறுக்கிவிடுகிறது.
அந்த நேரத்தில் நம் சிந்தனை இரண்டு நிலைகளில் இருக்கின்றது:
ஒன்று, இந்த நிமிடமே இல்லாமல் போயிருக்கக்கூடாதா? ஏன் இந்த நாளும், இந்த நேரமும் வந்து இந்த நிகழ்வு நடந்தது?
இரண்டு, காலத்தை அப்படியே பின்நோக்கி நகர்த்தி, நான் கொஞ்சம் கவனமாக வண்டி ஓட்டி, இந்த நபர் மேல் மோதாமல் இவர் உயிர்பிழைத்திருக்கக்கூடாதா?
இந்த இரண்டு எண்ண ஓட்டங்களுமே எதார்த்தற்கு முரணானவை.
கண்ணியில் அகப்படும் இந்த நிலை வரக் காரணம் என்ன?
என்னிடம் குறைவாக் காணப்பட்ட விழிப்புநிலை.
விழிப்பு நிலையை ஏற்படுத்தும் மூன்று காரணிகளைப் பட்டியலிடுகின்றது நாளைய நற்செய்தி (காண். லூக் 21:34-36): (அ) குடிவெறி, (ஆ) களியாட்டம், (இ) கவலை. இவற்றில் (அ) மற்றும் (ஆ) நமக்கு வெளியிலிருந்து வரக்கூடியது. (இ) என்பது நம் அகஉணர்வு சார்ந்தது.
கண்ணியில் விழ நேர்பவர்களைக் கருணையோடு பார்க்கவும், அதில் விழுந்துவிடாதவாறு பார்த்துக்கொள்ளவும் இன்றைய நாள் நமக்கு அழைப்பு விடுக்கிறது.
' கண்ணி' எனும் ஒரு சாதனத்தை நம்மில் பலர் பார்த்திருக்கவே மாட்டோம்.தந்தை கூறுவது போல் விவிலிய நூல்களிலும்,மற்றவர் சொல்லக் கேட்டும் தான் அறிந்திருப்போம்.ஒரு கண்ணியில், தெரியாமல் வந்து மாட்டிக்கொண்ட ஒரு பறவையின் இயலாமையைக்,கையறுநிலையைத் தந்தை விவரித்திருக்கும் முறையிலிருந்து அந்தக் 'கண்ணி' யின் எதிர்மறை நிலையால் உயிரைத் துறக்கும் பறவையின் பரிதாபம் என்னவென்று தெரிகிறது.ஒரு பறவைக்கே இந்நிலை எனில் மானம்,மரியாதைக்குட்பட்ட, அதுவும் தந்தை இப்பதிவில் குறிப்பிட்டுள்ளது போல நடந்த சம்பவத்திற்கு எந்த வகையிலும் பொறுப்பேற்றுக்கொள்ள முடியாத ஒரு மனிதனின் நிலையை என்னென்று கூற முடியும்? தன்னை மிஞ்சி நடந்து போன ஒரு சம்பவமே எனினும்,அதற்கு சம்பந்தப்பட்டவர் பொறுப்பேற்றே தீர வேண்டுமென்பது வாழ்வின் எதார்த்தம்.....தன் புறத்திலிருந்து வந்த குடிவெறி,களியாட்டம் மற்றும் அகத்திலிருந்து வந்த கவலை எனும் காரணிகளில் ஒன்றைக் காரணம் காட்டி.இப்படிப்பட்ட ஒரு கண்ணிக்கு ஆளான யாரையும் கருணையுடன் பார்க்கவும்,அதில் நாம் விழாதவாறு பார்த்துக்கொள்ளவும் அழைப்பு விடுக்கும் ஒரு பதிவிற்காக தந்தையைப் பாராட்டுகிறேன், நம்மில் பலருக்குப் பரிட்சயம் இல்லாத 'கண்ணி' எனும் ஒரு கருவியைப் படத்துடன் அடையாளம் காட்டியிருக்கும் தந்தைக்க என் நன்றிகள்!!!
ReplyDelete