Monday, December 18, 2017

சீட்டுக் குலுக்கிப் போட்டபோது

நாளைய (19 டிசம்பர் 2017) நற்செய்தி (லூக் 1:5-25)

சீட்டுக் குலுக்கிப் போட்டபோது

நாளைய நற்செய்தி வாசகத்தில் திருமுழுக்கு யோவானின் பிறப்பு முன்னறிவிப்பு நிகழ்வை வாசிக்கின்றோம்.

சக்கரியா, கபிரியேல், எலிசபெத்து என்ற மூன்று கதைமாந்தர்களை நாம் சந்திக்கின்றோம்.

நான் பல நேரங்களில் யோசித்ததுண்டு. வானதூதர் கபிரியேல் கடவுளின் செய்தியை சக்கரியாவுக்கும், மரியாளுக்கும் கொண்டு வருகிறார். இருவருமே தயக்கத்துடன் நிற்கின்றனர். சக்கரியாவின் தயக்கத்திற்காக அவரை ஊமையாக்குகின்ற கபிரியேல் நம்ம மரியாளை ஒன்றும் சொல்லாமல் விடுகின்றார். ஆண்பாவம் பொல்லாதது மிஸ்டர் கபிரியேல்!

சக்கரியா தண்டிக்கப்பட்டதற்கான காரணம் என்ன என்று யோசித்தால் அதற்கான விடை 'சீட்டுக் குலுக்கிப் போட்ட போது' என்ற வார்த்தையில் இருக்கிறது. எருசலேம் திருக்கோவிலுக்குள் உள்ள தூயகத்தில் 'தூப பீடம்' என்று ஒன்று உண்டு. ஓடோனில், ஆம்ப்பிப்யூர், கோத்ரேஜ் ஏர் போன்ற பிராண்டுகளில் அறை நறுமணப்பான்கள் இல்லாத காலகட்டத்தில் தூபமும், ஊதுபத்தியும்தான் நறுமணப்பான்களாக பயன்படுத்தப்பட்டன. ஆடுகளும், மாடுகளும், புறாக்களும் வெட்டப்பட்டு, அடுப்பு, நெருப்பு என்று எரிந்து கொண்டிருக்கும் இடம் சுத்தமாகவா இருக்கும்? இப்படிப்பட்ட இடத்தில் சத்தமும், சந்தடியுமாகத்தான் இருக்கும். சக்கரியாவைப் போல நிறையப் பேர் தூபம் போட்டுக்கொண்டிருப்பர். மேலும் சக்கரியாவைப் போல நிறைய குருக்கள் வெயிட்டிங் லிஸ்டில் இருப்பர்.

சக்கரியாவின் பெயருக்கு சீட்டு விழுகிறது என்றால் அவர் கொடுத்து வைத்தவர்.

ஏனெனில் இறைவன் தூயகத்தில் உண்மையாகவே இருப்பதாக யூதர்கள் நம்பினர். இன்னைக்கு நாம கடவுள் வானத்தில் இருக்கிறார் என்றுதானே நினைக்கிறோம். ஆக, கடவுளின் பிரசன்னத்தில், அவருக்கு வெகு சில அடி தூரத்தில் நிற்பதை இன்னும் பெரிய பாக்கியமாகக் கருதினர். தங்களின் பெயருக்கு சீட்டு விழாதா என்று தவங்கிடந்தனர். இப்படி இருந்தவர்களில் ஒருவர் சக்கரியா. ஆனால், சீட்டு விழுந்தவுடன் கடவுளை மறந்துவிடுகின்றார் சக்கரியா.

சக்கரியா மறக்கின்றார். ஆனால் கடவுள் அவரை நினைவுகூறுகின்றார். ஏனெனில் 'சக்கார் - யாவே' என்றால் 'ஆண்டவர் நினைவுகூர்கிறார்' என்பது பொருள்.

கடவுளை மறந்த அவரால் கடவுளின் செய்தியை ஏற்றுக்கொள்வதும் கடினமாக இருக்கிறது. ஆக, சீட்டில் பெயர் வந்தது என்பது அவருக்கு நிகழ்ந்த முதல் அற்புதம். அந்த அற்புதத்தை ஏற்றுக்கொள்ள மறந்தார். ஆகையால் இரண்டாம் அற்புதத்தை ஏற்றுக்கொள்ள மறுக்கின்றார்.

ஆனால் மரியாளுக்கு அற்புதம் ஒரே முறைதான் நடக்கிறது. அவர் அதை அப்படியே ஏற்றுக்கொள்கின்றார்.

கிறிஸ்து பிறப்பு தயாரிப்பு காலம் நாளைய நற்செய்தி வழியாக தரும் செய்தி, 'நமக்கு விழுந்த சீட்டுக்களை கணக்கில் எடுப்பது,' 'எண்ணிப் பார்ப்பது,' 'நன்றி கூறுவது.'

நம் பெற்றோர், உடன்பிறந்தோர், நாம் பேசும் மொழி, வணங்கும் கடவுள், வாழும் ஊர் எல்லாமே நமக்கு விழுந்த சீட்டுக்கள்தாம். அடுத்தவருக்கு விழுந்த சீட்டைப் பார்த்து பொறாமையோ, கோபமோ, வருத்தமோ படாமல் நம் சீட்டை நினைவுகூர்ந்தால் இரண்டாம் அற்புதம் நிச்சயம் நிகழும்.


2 comments:

  1. யாருக்குமே தோணாத ஒரு கோணத்தில் நிகழ்வுகளை அலசுவது தந்தையின் ஸ்பெஷாலிடி.இங்கும் அப்படித்தான்.தன்னை மறந்த சக்காரியாவை அடுத்தடுத்து அற்புதங்களால் அசத்தும் இறைவன் மரியாவைத் தன் முதல் அற்புதத்திலேயே "இதோ உம் அடிமை"என அடிபணியவைக்கிறார்.அதனால் தானே மரியா "பெண்களுக்குள் பேறுபெற்றவளாக" மற்ற பெண்களிலிருந்து தனித்து நிற்கிறார்! "நமக்கு விழுந்த சீட்டுக்களை எண்ணிப்பார்த்து நன்றி சொல்வதும்,அடுத்தவருக்கு விழுந்த சீட்டைப்பார்த்து கோபமோ,பொறாமையோ, வருத்தமோ படாமல் இருப்பதும் அடுத்த அற்புதத்தை நமக்கு நிகழ்த்த இறைவன் கண்களை நம் பக்கம் திருப்பும்" எனும் தந்தையின் வார்த்தைகள் நமக்குத் தரும் ஊக்கம்!
    " ஆண்பாவம் பொல்லாதது மிஸ்டர் கபிரியேல்!" எனும் தந்தையே!கபிரியல் ஒரு ஆண் என்று தங்களுக்கு யார் சொன்னது?!

    ReplyDelete
  2. You have earlier shared your thoughts on Annunciation and john the Baptist's birth. But you share different thought each time on the same event. Great, Father!!

    ReplyDelete