Thursday, November 30, 2017

அறிக!

நாளைய நற்செய்தி: அறிக!

நம் தொடக்கப்பெற்றோரின் முதல் ஆசையே 'அறிந்துகொள்ளுதல்'தான். 

'நன்மை - தீமை அறிய' ஆசைகொண்டதால் விலக்கப்பட்ட கனியை உண்கின்றனர்.

அறிந்துகொள்ளுதல் எப்படி இவர்களின் முதல் ஆசையோ, இப்படியே இவர்களின் முதல் ஆசியும் இதுவே.

நாளைய நற்செய்தி வாசகத்தில் (காண். லூக் 21:29-33)

'... பார்க்கும்போது கோடைகாலம் நெருங்கிவிட்டது என அறிந்துகொள்கிறீர்கள்.

... காணும்போது இறையாட்சி நெருங்கிவந்துவிட்டது என அறிந்து கொள்ளுங்கள்.'

என்கிறார் இயேசு.

அறிதலுக்கான முதல் படி 'அனுமானம்' என்கிறது இந்திய மெய்யியல். ஆங்கிலத்தில் 'இன்ஃபெரன்ஸ்.'

அப்படி என்றால் என்ன?

காணக்கூடிய ஒன்றிலிருந்து காண முடியாத ஒன்றை அறிந்து கொள்வது.

எடுத்துக்காட்டாக, நம் கண்முன் இருக்கும் கைக்கடிகாரத்தைப் பார்த்து நம் கண்ணால் காணாத அதை உருவாக்கியவரின் கைவேலைப்பாடை அறிந்துகொள்வது.

நம் கண்களால் பார்க்கின்ற அனைத்தும் கண் காணாத ஒன்று பற்றிய அறிதலுக்கு நம்மை இட்டுச்செல்கின்றன. 
கண்காணாமல் இருப்பது அனுபவம் தொடர்புடையது. கோடைக்காலத்தை நம்மால் பார்க்க முடிக்க முடிவதில்லை. ஆனால், அனுபவிக்கிறோம். அது போலவே இறையாட்சியும் பார்க்க முடியாதது. ஆனால் அனுபவிக்க முடிவது.
இன்று நான் என் வாழ்வில் காண்கின்ற பல நிகழ்வுகளை வைத்து காணாத ஒன்றை அறிய முடிகிறதா?
அந்த அறிதல் அனுபவித்தின் வழிதான் வருகிறது என்பதை நான் உணர்கிறேனா?

இன்று அறிதல்தான் ஆற்றல். யார் ஒருவர் அதிகம் அறிந்திருக்கிறாரோ அவர்தான் ஆற்றல்மிக்கவராக இருக்கிறார். அது நாம் சார்ந்த புலமாக இருந்தாலும் சரி. அல்லது பொதுவான வாழ்க்கை அறிவு என்றாலும் சரி.
அறிதலின் ஒரு வழி அனுபவம்.

இந்த அனுபவத்திற்கு நம் கண்களைத் திறக்க அழைக்கிறது நாளைய நற்செய்தி.

1 comment:

  1. ,இன்றையப்பதிவின் ஒவ்வொரு வரியும் திருவருகைக் காலம் வெகு அண்மையில் வந்துவிட்டது என்பதை நமக்குச் சொல்கின்றன.'அறிதல்','அனுபவம்' இவை எல்லாம் எல்லோருக்கும் ஒன்று போல அமைவதில்லை.அது அவரவர் சார்ந்த இடத்தையும்,காலத்தையும் பொறுத்தது.கிராமத்தில் பழைய சோற்றுக்கே வழி இல்லாத ஒரு சிறுவனுக்கு நகரத்து இளவலின் 'பிட்சா' என்றால் என்னவென்று தெரிவதில்லை.அனுமானங்களின் படி வருவதுதான் அறிதல் எனில் அது ஆளுக்கு ஆள் மாறுபடக்கூடியது.நம் தனிப்பட்ட அனுமானத்தை வைத்து,அறிதலை வைத்து சில சமயங்களில் நமக்கடுத்தவரைப் புரிந்து கொள்ள,எடை போட முயற்சிக்கிறோம்.'இறையாட்சி' பற்றிய புரிதலும் கூட அப்படித்தான் என்கிறது தந்தையின் அனுபவமும்,அறிதலும்.ஆற்றலோ, அனுமானமோ இல்லை அனுபவமோ எதுவானாலும் அடுத்தவரைப் பார்க்கும் சரியான ஒரு பார்வைக்கு நம் கண்களைத் திறந்தால் "இறையாட்சி நம்மை நெருங்கி விட்டது" என்பதுவே நம் அறிதலாக இருக்க முடியும்.தெரிந்த விஷயங்களை வைத்து தெரியாத விஷயங்களுக்கு நம்மை இட்டுச்செல்லும் தந்தைக்கு என் வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete