Monday, December 4, 2017

இவற்றை மறைத்து

நாளைய (5 டிசம்பர் 2017) நற்செய்தி: இவற்றை மறைத்து

நற்செய்தியாளர்கள் இயேசுவின் உணர்வுகளை சித்தரிப்பதில் கைதேர்ந்தவர்கள். அவரின் எதிர்மறை மற்றும் நேர்முக உணர்வுகளை மிக அழகாகப் பதிவு செய்கின்றனர். கெத்சமேனித் தோட்டத்தில் இயேசு இரத்த வியர்வை வியர்த்தது அவரின் எதிர்மறை உணர்வு என்றால், இயேசுவின் பேருவகை அவரின் நேர்முக உணர்வு.

உவகை - நல்ல தமிழ் வார்த்தை.

இது மகிழ்ச்சியைவிட சற்று மேலானது.

உவப்பு என்பதில் ஒரு தன்விருப்பம் அடங்கியிருக்கிறது. இன்று நான் காசில்லாமல் இருக்கிறேன் என வைத்துக்கொள்வோம். எனக்கு திடீரென்று 100 ரூபாய் கிடைக்கிறது என்றால் அது 'மகிழ்ச்சி.' ஆனால், அதுவே இன்று எனக்கு ஓர் வேலை கிடைத்து அந்த வேலையில் எனக்கு சம்பளமாக 100 ரூபாய் கிடைத்தால் அது 'உவகை.' ஏனெனில் அந்த 100 ரூபாயில் என் உள்ளத்து விருப்பம் அடங்கியிருக்கிறது. எனக்கு முந்தைய கிடைத்த 100 ரூபாய் எனக்கு அன்பளிப்பு அல்லது பரிசு. ஆனால் இது எனது உழைப்பு. அது வெளியில் இருந்து வருவது. இது உள்ளத்தில் ஊற்றெடுப்பது.

இயேசு நாளைய நற்செய்தியில் மகிழ்ச்சியை விட உவகை கொண்டிருக்கின்றார்.

அதிலும், 'பேருவகை' என்கிறது தமிழ் மொழிபெயர்ப்பு.
எதற்காக இந்த பேருவகை?
கடவுள் தான் விரும்பியதை தான் விரும்பியவருக்கு தான் விரும்பும் வகையில் செய்கிறார் என்பதை நினைத்து இயேசு பேருவகை கொள்கின்றார்.
'ஞானிகளுக்கும், அறிஞர்களுக்கும்' வெளிப்படுத்தப்படாத கடவுளின் திருவுளம் 'குழந்தைகளுக்கு' வெளிப்படுத்தப்படுகிறது. இங்கே 'ஞானிகள்,' 'அறிஞர்கள்,' மற்றும் 'குழந்தைகள்' அனைத்தும் உருவகங்கள். 'பெரியவங்களுக்குத் தெரியாத பல விஷயங்கள் சின்ன பிள்ளைகளுக்குத் தெரியும்' என்பது ஊரறரிந்த உண்மையே.

'ஞானமும்,' 'அறிவும்' கண்டுகொள்ள இயலாத ஒன்று இருக்கிறது என்பது முதல் விஷயம்.
அது தேடினால் கிடைக்காது.
தானாகவே கிடைக்கும்.

குழந்தைகள் எதையும் தேடுவதில்லை.
ஆனால் அவர்களுக்கு எல்லாமே கிடைக்கிறது.

கிடைப்பது கிடைக்க வேண்டிய நேரத்தில் கிடைக்கும் என ஏற்றுக்கொள்வதே சிறந்த ஞானம், சிறந்த அறிவு.
இப்படி ஏற்றுக்கொண்டுவிட்டால் அங்கே பதற்றத்திற்கும், ஏக்கத்திற்கும், ஏமாற்றத்திற்கும் இடமே இல்லை.

1 comment:

  1. போகிற போக்கில் பார்க்கிறவர்களுக்கு இந்த 'உவகை','மகிழ்ச்சி' போன்ற வார்த்தைகள் எல்லாம் ஒன்று போலத்தான் தெரிகின்றன.ஆனால் தந்தையின் பாணியில் சற்றே நிதானமாக அமர்ந்து யோசிப்பவர்களுக்குத்தான் இந்த வார்த்தைகளுக்கிடையே உள்ள மயிரிழை வேறுபாடு புரிகிறது."ஞானிகளுக்கும்,அறிஞர்களுக்கும் வெளிப்படுத்தப்படாத இறைவனின் திருவுளம்,குழந்தைகளுக்கு வெளிப்படுத்தப்படுகிறது " என்பது இன்றைய செய்தியாகத் தரப்படுகிறது.நினைத்ததெல்லாம் நடக்க வேண்டுமென்று நினைக்கும் பெரியவர்கள் எல்லாம் ஏமாற்றத்தைக் கௌவ்வ, எந்த எதிர்பார்ப்புமில்லாத குழந்தைகள் ஒரு துண்டு மிட்டாய் குறித்துப் பேருவகை கொள்வதும் ஊரறிந்த உண்மைதான்." சிறு பிள்ளைகள் போல நீங்கள் ஆகாவிடில் விண்ணரசில் நுழைய முடியாது" என்று சொல்லும் விவிலியத்தின் படி பார்த்தால் மனத்தளவில் சிறு பிள்ளையாவது எத்தனை முக்கியம் என்று தெரிகிறது.பதற்றத்திற்கும்,ஏக்கத்திற்கும்,ஏமாற்றத்திற்கும் அப்பாற்பட்ட குழந்தை உள்ளத்தினராக மாறுவோம்; இறைவனைப் "பேருவகை" கொள்ளச் செய்வோம்.
    அப்பப்போ தமிழாசிரியராகவும் பிறவி எடுக்கும் தந்தைக்கு என் வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete