Sunday, December 10, 2017

நாடோடிகள்

இன்று மாலை மதுரை நாய்ஸ் பள்ளி வளாகத்தில் யுனைடெட் கேரல்ஸ் (கிறிஸ்தவ ஒன்றிப்பு கிறிஸ்து பிறப்பு இன்னிசை கொண்டாட்டம்) நடைபெற்றது. 'கண்டிப்பாக நாம் ஒன்று சேர மாட்டோம்' என்ற உறுதியான நம்பிக்கையோடு கிறிஸ்தவர்கள் ஒன்றித்து வரும் நிகழ்வே கிறிஸ்தவ ஒன்றிப்பு!

நிகழ்ச்சி நடந்த மேடையில் பதிக்கப்பட்டிருந்த கல்வெட்டில் இருந்த ஒரு வரி என்னை மிகவும் கவர்ந்தது:
'நீ பார்வையாளர்களைக் காண முடிந்தது என்றால் பார்வையாளர்கள் உன்னைக் காண முடியும்'
இந்த வரியில் மறைபொருள் ஒன்றும் இல்லை. ஆனால் இதன் அர்த்தம் அகன்றது. எப்படி? இந்த இடத்தில் இது மேடையின் முன் அமரும் பார்வையாளர்களையும், மேடையில் இருப்பவர்களையும் மட்டும் குறித்தாலும் இதை நம் வாழ்க்கைக்கும் பொருத்திப்பார்க்கலாம். அதாவது, நாம் எப்போது ஒன்றைப் பார்க்கிறோமோ அப்போதுதான் அது நம்மைப் பார்க்கத் தொடங்குகிறது. நாம் பார்க்காதவரை நம்மை யாரும் பார்ப்பதில்லை. அல்லது பார்க்க முடிவதில்லை. நாம் யாரிடம் நட்பாக பழகுகிறோமோ அவர்கள்தாம் நம்மிடம் நட்பாகப் பழகுகிறார்கள். அப்படி என்றால், நம்மிடம் எல்லாரும் நட்பாக பழக வேண்டும் என்றால் நாம் எல்லாரிடமும் நட்பாகப் பழக வேண்டும். என்னை எல்லாரும் பார்க்க வேண்டுமென்றால் நான் எல்லாரையும் பார்க்க வேண்டும்.

நிற்க.

கடந்த டிசம்பர் 1 அன்று எங்கள் பேராயர் இல்ல வளாகத்தில் நாடோடிகளுக்கான கூடுகை நடைபெற்றது. சாட்டை அடிப்போர், குறவன்-குறத்தி, குறி சொல்வோர், வேடமிடுவோர், கூத்தாடி, பாம்பாட்டி, பூம்பூம் மாட்டுக்காரர் எனப் பலர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்களை வரவேற்கும் விதமாக சாட்டை அடிக்கும் நிகழ்வு நடைபெற்றது. மூன்று பெண்கள் கொட்டு அடிக்க, இரண்டு பெரியவர்களும், இரண்டு குழந்தைகளும் சாட்டை அடிக்க நாங்கள் மெதுவாக நடந்து சென்றோம். நடக்கத் தொடங்கிய சில நிமிடங்களில் சாட்டை அடித்துக்கொண்டிருந்த பெரியவர் ஒருவர் குழந்தை ஒன்றை படுக்க வைத்து தன் கையை கத்தியால் கீறி இரத்தத்தை அந்தக் குழந்தையின்மேல் வடித்தார். குழந்தை சிரித்தது. அப்படித்தான் பழக்கியிருக்க வேண்டும் அந்தக் குழந்தையை. அந்தக் குழந்தையின் தாயும், அந்த பெரியவரின் மனைவியுமான பெண்ணும் வேகமாக கொட்டு அடித்துக்கொண்டிருந்தார். அந்த நொடி என் மனம் அப்படியே உறைந்து போனது. தன் கணவன் தன் குழந்தையின் மேல் இரத்தம் சிந்துவதைப் பார்த்து ஒரு பெண் தொடர்ந்து கொட்டு அடித்துக்கொண்டிருக்க வேண்டுமென்றால் அவள் எத்துணை தைரியசாலியாக இருக்க வேண்டும். அந்த நேரத்தில் என் நினைவு டக்கென்று கடவுள் பக்கம் போனது. எதற்காக கடவுள் ஒவ்வொருவரையும் ஒவ்வொரு நிலையில் வைக்க வேண்டும்? நான் வெள்ளை அங்கி அணிந்து அழுக்கப்படாமல் நடந்து செல்ல, கூடியிருப்பவர்கள் வேக வேகமாக ஃபோட்டோ எடுக்க இந்த ஆணும் அவருடைய மகனும் ஏன் எங்களுக்காக இரத்தம் சிந்த வேண்டும்? அந்த ஒரு நிமிடம் கடவுள் நம்பிக்கை, மறுபிறப்பு, நிறைவாழ்வு, இறையரசு என்பன எல்லாம் வெறும் வார்த்தை விளையாட்டுக்கள்தாம் என்று தோன்றியது.

அந்த நாள் எனக்கு நிறைய பாடங்களைக் கற்றுக்கொடுத்தது. அவற்றில் சில:

1. என்னையும் தாண்டி ஒரு உலகம் இருக்கிறது. என் உணவு, என் உடை, என் உறைவிடம் என எனக்கு எல்லாமே திட்டமிட்டுத் தரப்பட்டிருக்கிறது. ஆனால், உணவிற்கு பிறரை சார்ந்து, உடைக்கு யாரையோ சார்ந்து, உறைவிடத்திற்கு இறைவனைச் சார்ந்து உண்மையிலேயே துறவியாக வாழ்பவர்கள் இந்த நாடோடிகள்தாம். இராமர் வேடம், கிருஷ்ணர் வேடம் அணிந்தோ, களைக்கூத்தாடியோ, கம்பியில் நடந்தோ, சர்க்கஸ் செய்தோ தான் இவர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை தேடிக்கொள்ள வேண்டும்.

2. என் பிரச்சினைகள் பிரச்சினைகளே அல்ல. 'அவர் என்னைப் பற்றி இப்படி கமெண்ட் அடித்தார்' என்றும், 'நாளை நான் ஐந்து வேலைகள் செய்ய வேண்டும்,' 'இந்த வாரம் மறையுரை எழுத வேண்டும்,' 'நான் எழுதும் மறையுரையை யாரும் குறை சொல்லக் கூடாது,' 'என் இரத்தத்தில் கொழுப்பு அளவு குறைய வேண்டும்,' 'எனக்கு இரண்டு முட்டைகள் வேண்டும்,' 'இந்த வாரம் கிறிஸ்துமஸ் செய்தி கொடுக்க வேண்டும்' என்று என் கவலைகளை அல்லது பிரச்சினைகளை நான் பட்டியலிடுகிறேன். ஆனால் இவைகள் பிரச்சினைகளே அல்ல. இந்த நாடோடிகளுக்கு வாழ்வாதாரமே பிரச்சினையாக இருக்க, எனக்கு மட்டும் என் தலைவர்களை திருப்திப்படுத்தவேண்டும் என்ற பிரச்சினை பெரிய பிரச்சினையாக இருப்பது எனக்கு தலைகுனிவை ஏற்படுத்துகிறது.

3. தூய்மை எல்லா நேரத்திலும் நல்லதல்ல. நாம வைத்திருக்கும் மதிப்பீடுகள் - உண்மை, தூய்மை, நீதி - போன்றவை எல்லாம் எல்லாருக்கும் பொதுவானவை என நான் நினைத்திருந்த என் நினைப்பு அன்று உடைந்தது. ஒரு குறத்திப் பெண் இப்படி பகிர்ந்து கொண்டார்: 'நாங்கள் எல்லாம் அழுக்காய், குளிக்காமல், கட்டிய புடவையை மாற்றாமல் இருக்கிறோம் என நினைத்து எங்களை தூய்மையற்றவர்கள் என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் நாங்கள் குளித்து, நல்ல ஆடை அணிந்திருந்தால் எங்கள் கற்பிற்கு பாதுகாப்பில்லை. தெருக்களில், பேருந்து நிலையங்களில், இரயில் நிலையங்களில் நாங்கள் தூய்மையாகத் தூங்க நேர்ந்தால் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்படும் அபாயம் இருக்கிறது. இதற்காகவே நாங்கள் தூய்மையற்று இருக்கிறோம். ஆக, தூய்மை என்பதை மதிப்பீடு என்று நான் சொல்வது தவறாகக்கூட இருக்கலாம். ஆக, மதிப்பீடுகளை நிர்ணயிப்பவர் தனிநபர்தானே தவிர, ஒரு நிறுவனமோ, மதமோ, தலைவர்களோ அல்ல.

4. பத்து ஆண்டுகள் மேடைப்பேச்சு பயிற்சி எடுத்தாலும் இன்னும் பெரிய இடங்களில் மறையுரை வைக்கும்போது என் கால்கள் நடுங்குகின்றன, என் நாக்கு குழறுகிறது. ஆனால், அன்று ஒரு ஆச்சர்யம். தெருக்கூத்து நடத்துபவர்களின் சார்பாக ஒருவர் பேசினார். தான் முதன்முதலாக மைக் முன் நிற்பதாக சொன்ன அவர் தெலுங்குக்காரர். தமிழும் தெரியாது. இருந்தாலும் கூட்டத்தின்முன் மைக்கைப் பிடித்துக்கொண்டு தெலுங்கையும், தமிழையும் கலந்து தான் சொல்ல வேண்டியதை சொல்லி முடித்தார். அதாவது, தனக்கு ஒரு பிரச்சினை என்றும், தன் வயிற்று உணவுக்கு வழியில்லை என்ற நிலையும் வரும்போது 'கான்ஃபிடன்ஸ்' தானாகவே வந்துவிடுகிறது. இதைத்தான் இயேசுவும், 'அந்த இடத்தில் உங்களுக்கு அருளப்படும்' என்று சொல்கிறாரோ என்னவோ!

5. இடம். 'மனித வாழ்க்கையின் ஆசைக்குக் காரணம் இடம்' என்றார் பாம்பாட்டிக்காரர். அதாவது எனக்கென ஒரு சின்ன இடம் இருக்கிறது என வைத்துக்கொள்வோம். அந்த இடம் என் ஆசையைத் தூண்டுகிறது. அந்த இடத்திற்கு வேலியிட வேண்டும். ஒரு வீடு கட்ட வேண்டும். வீட்டிற்கு தேவையானதை வாங்க வேண்டும். வீட்டைத் தக்கவைக்க நான் படிக்க வேண்டும். வேலைக்குச் செல்ல வேண்டும். திருமணம் முடிக்க வேண்டும். சம்பாதிக்க வேண்டும். வரி கட்ட வேண்டும். பொருள்கள் வாங்க வேண்டும். அழகுபடுத்த வேண்டும். என் வீட்டைவிட்டு வெளியே சென்று வர வாகனம் வாங்க வேண்டும். இப்படியாக ஆசை அதிகரித்துக்கொண்டே போகும். இவர்களுக்கென்று எந்த இடமும் இல்லாமல் இருப்பதால்தான் இவர்கள் மகிழ்ச்சியாக இருப்பதாக பாம்பாட்டிக்காரர் சொன்னார். இன்று நான் என் இடம் என எதை நினைக்கிறேன்? அந்த இடத்தை நான் எப்படியெல்லாம் தக்க வைக்கிறேன்?

இறுதியாக, வாழ்க்கையில் பெரிய விஷயம் என்று எதுவுமே கிடையாது. 'இதுதான் பெருசு!' என நினைத்து இன்று நான் வாழும் ஒன்று, நாளை எனக்குத் தேவையற்றதாகிவிடுகின்றது. வாழ்வை மொத்தமாகப் பார்க்கத் தொடங்கினால் இந்த ஞானம் வந்துவிடும். ஆனால் என்னால் கொஞ்சம் கொஞ்சமாகத்தானே பார்க்க முடிகிறது.

இந்த நாடோடிகளுக்கு நான் ஏதாவது செய்ய வேண்டும் - இந்த சோதனையிலிருந்து நான் தப்பிவிட விழைகிறேன். நான் அவர்களுக்கு ஏதாவது செய்வதற்கும், அவர்கள் என் முன் கைகட்டி அல்லது கையேந்தி நிற்பதற்கும், நான் அவர்களின் தலைவனும், அவர்கள் இரந்துண்பவர்களும் அல்லர். அவர்களுக்கு பிச்சையிட்டு அவர்களை நான் வெறும் பொருள்களாகவே, என் மீட்பிற்கான கருவிகளாக அவர்களை மாற்றிவிட எனக்கு மனசு வரவில்லை. நான் அவர்களுக்குப் பிச்சையிடுகிறேன் என்றால், நான் வேறு ஒரு வாழ்க்கை கட்டத்தில் பிச்சைக்காக கையை ஏந்திதானே நிற்கிறேன்.

அப்படிப் பார்த்தால்,

அவர்கள், நான், நீங்கள் - எல்லாருமே நாடோடிகள்தாம்!

2 comments:

  1. Good one Father... Very rational

    ReplyDelete
  2. தான் கலந்துகொண்ட " கிறிஸ்தவ ஒன்றிப்பு- கிறிஸ்து பிறப்பு இன்னிசைக் கொண்டாட்டத்தையும்" தான் காண நேரிட்ட "நாடோடிகளுக்கான கூடுகையையும்" வைத்தே அழகானதொரு படையலைக் கொடுத்திருக்கிறார் தந்தை. இதில் முன்னதைக்குறித்த " கண்டிப்பாக நாம் ஒன்றுசேர மாட்டோம் எனும் உறுதியான நம்பிக்கையோடு கிறிஸ்துவர்கள் ஒன்றித்து வரும் நிகழ்வே கிறிஸ்துவ ஒன்றிப்பு"..... நல்ல சாட்டையடி!? பின்னதிலிருந்து தான் கற்றுக்கொண்ட விஷயங்களைப் பட்டியலிடும் தந்தை அந்த நாடோடிகளின் வாழ்க்கையைத் தன் வாழ்க்கையோடு ஒப்பிட்டுப்பார்க்கிறார்.ஒவ்வொரு வரியுமே கண்களில் ஒத்திக்கொள்ள வேண்டியவைதான் எனினும் என்னை மிகவும் கவர்ந்தவை அந்த இறுதி பத்தியில் உள்ளவையே!" தந்தை அந்த நாடோடிகளுக்கு ஏதேனும் நல்லது செய்ய நினைத்தாலும் அதைச்செய்வதற்கு இவர் அவர்களின் தலைவனோ,இல்லை கைநீட்டி அந்த உதவியைப்பெற்றுக்கொள்ள அங்கள் இரந்துண்பவர்களோ இல்லை" என்பதே! மற்றும் " இவர் அவர்களுக்குப் பிச்சை இடுகிறார் என்றால் வேறு ஒரு வாழ்க்கைக்கட்டத்தில்இவரும் கையேந்தி நிற்பதாக" ஒத்துக்கொள்கிறார. இறுதியில் தன்னுடைய கருத்துக்களின் முடிவாக " அவர்கள்,நான்,நீங்கள்- எல்லோருமே நாடோடிகள் தான்!" என்று முடிக்கிறார். ஒத்துக்கொள்ள வேண்டிய விஷயமே!இப்படி வித்தாயாசமான கோணத்தில் சிந்திப்பதும், இப்படிப்பட்ட விஷயங்களில் தன்னையே பகடைக்காயாய் வைத்து சிலாகிப்பதும் தந்தைக்கு கை வந்த கலை; இறைவன் கொடுத்த கொடை. இவருக்கு இறைவன் நல்ல உடல்,உள்ள சுகம் தந்து "அவரின்" புகழ் பரப்பும் கருவியாக மேலும் செதுக்கிட வேண்டுகிறேன்!!!

    ReplyDelete