Thursday, December 14, 2017

ஞானம் மெய்யானது!

நாளைய (15 டிசம்பர் 2017) நற்செய்தி (மத் 11:16-19): ஞானம் மெய்யானது!

நாளைய நற்செய்தி வாசகத்தில் இயேசுவின் சமகாலத்தில் வழங்கப்பட்ட சொலவடை அல்லது பழமொழி ஒன்றை வாசிக்கின்றோம்: 'நாங்கள் குழல் ஊதினோம். நீங்கள் கூத்தாடவில்லை. நாங்கள் ஒப்பாரி வைத்தோம். நீங்கள் மாரடித்துப் புலம்பவில்லை'

இந்தச் சொலவடை சிறுபிள்ளைகளின் விளையாட்டுச் சொல்லாடல் என்றும் சொல்கிறார் இயேசு.

மேற்காணும் சொலவடை சிறுபிள்ளைகளின் விளையாட்டுகளில் ஒன்று. சிறுபிள்ளைகளின் விளையாட்டுகள் பெரும்பாலும் பெரியவர்கள் செய்பவற்றின் இமிடேஷன்தான். வீடு கட்டுவது, சோறு சமைப்பது, வாகனம் ஓட்டுவது என பெரியவர்களின் செயல்களை சிறுபிள்ளைகள் விளையாட்டாகச் செய்து பார்ப்பர். இயேசு குறிப்பிடும் பழமொழியில் வரும் சிறுபிள்ளைகள் பாலஸ்தீன நாட்டில் நிலவிய திருமணம் மற்றும் இறப்பு நிகழ்வுகளை இமிடேஷன் செய்கின்றனர். திருமண நிகழ்வில் குழல் ஊதுவதும், கூத்தாடுவதும் இருக்கும். அதாவது, இரண்டும் ஒன்றை ஒன்று சார்ந்த நிகழ்வுகள். ஒன்று இருக்கும்போது மற்றதும் இருக்க வேண்டும். அதே போல இறப்பு அல்லது அடக்கச் சடங்கில் வீட்டார் ஒப்பாரி வைக்க, வெளியிலிருந்து அழைக்கப்பட்டோர் அதற்கேற்ப மாரடிப்பர்.

இதன் கருத்து ஒன்றுதான்: 'ஒருவரின் எதிர்பார்பிற்கு ஏற்ப அடுத்தவர் செயல்பட வேண்டும்'

திருமுழுக்கு யோவான் வருகிறார். மக்கள் அந்நேரம் உண்டு, களித்து, குடிவெறியில் இருக்கிறார்கள். ஆனால், திருமுழுக்கு யோவானோ உண்ணவுமில்லை. குடிக்கவுமில்லை. அவர் தங்களைப் போல இல்லாததால் அவருக்கு உடனடியாக 'பேய்பிடித்தவன்' என்ற முத்திரையைக் குத்திவிடுகின்றனர்.

இயேசு வருகிறார். ஆனால் அந்நேரம் மக்கள் வெளிவேடத்தனமான ஒறுத்தலில் இருக்கின்றனர். இயேசுவோ உண்டு குடிக்கின்றார். அவர் தங்களைப் போல இல்லாததால் உடனடியாக அவரை 'பெருந்தீனிக்காரன்' என அழைக்கின்றனர்.

இவ்வாறாக, மக்கள் தங்கள் எதிர்பார்ப்புக்களுக்கேற்ப கடவுள்-மனிதர்களும், இறைவாக்கினார்களும், ஏன் கடவுளுமே செயல்பட வேண்டும் என நினைக்கின்றனர்.

இப்படி இருப்பதை சிறுபிள்ளைத்தனம் என்கிறார் இயேசு.

ஆனால், இறுதியில் 'ஞானம் மெய்யானது என்பதற்கு அதை ஏற்றுக்கொண்டோரின் செயல்களை சான்று' என்கிறார்.

எதிர்பார்ப்புக்களின் படி நடக்கிறவர்கள் மனிதர்கள் என்றாலும், அதையும் மீறி சிலர் இருப்பதை இருப்பதுபோல ஏற்றுக்கொண்டு அதற்கேற்ற செயல்களைச் செய்வர். இவர்களின் செயல்கள் இவர்களின் ஞானம் மெய்யானது என்பதைக் காட்டும்.

ஆக, எதிர்பார்ப்புகளை விடுத்து இறைவனை அல்லது இறைவாக்கினரை அல்லது மற்றவரை இருப்பதுபோல ஏற்றுக்கொள்வதும், அதற்கேற்ப நம் செயல்களை வடிவமைத்துக்கொள்வதும் மெய்யான ஞானம்.


1 comment:

  1. "ஊரோடு ஒத்துப்போ" என்கிறது பழமொழி. ஆனால் சில சமயங்களில் அப்படிப்போவதை 'மந்தைத்தனம்' என்றும், போகவில்லை எனில் ' அவனுக்குன்னு ஒரு வழி' போன்ற சொற்களினாலும் வசைபாடுகிறோம்.பல சமயங்களில் எப்பக்கம் திரும்பிடினும் நம்மைக் குறை சொல்பவர்களைத்தான் பார்க்கிறோம். நாமும் கூட அதே தவறை மற்றவர்களுக்குத் திருப்பிச் செய்கிறோம்.என்ன செய்வது? அப்படிப்பட்ட நேரங்களில்?!" எதிர்பார்ப்புக்களை விடுத்து இறைவனை அல்லது இறைவாக்கினரை அல்லது மற்றவரை இருப்பது போல ஏற்றுக்கொள்வதும்,அதற்கேற்ப நம் செயல்களை வடிவமைத்துக் கொள்வதும் மெய்யான ஞானம்" என்கிறார் தந்தை. இது எப்பொழுதுமே நமக்கு இசைவானதாக இருக்க வாய்ப்பில்லைதான்; ஆனாலும் முயன்று பார்ப்பதில் தவறில்லை. தந்தைக்கு என் மாலை வணக்கம்!!!!

    ReplyDelete