Friday, December 29, 2017

அன்னா

நாளைய (30 டிசம்பர் 2017) நற்செய்தி (லூக் 2:36-40)

இயேசுவை கோயிலில் காணிக்கையாக அர்ப்பணிக்கும் நிகழ்வின் இரண்டாம் கதைமாந்தரை நாளைய நற்செய்தி வாசகம் நமக்கு அறிமுகம் செய்கிறது:

'ஆசேர் குலத்தைச் சேர்ந்த பானுவேலின் மகளாகிய அன்னா. இவர் இறைவாக்கினர். வயது முதிர்ந்தவர். மணமாகி ஏழு ஆண்டுகள் கணவரோடு வாழ்ந்தபின் கைம்பெண் ஆனவர். வயது எண்பத்து நான்கு.'

'ஆசேர் குலத்தை' பற்றி யாக்கோபும், மோசேயும் இறைவாக்குரைத்திருக்கின்றனர். இவர்களின் இறைவாக்குகள் 'ஆசீர்' போல இருக்கின்றன:

'ஆசேரின் நிலம் ஊட்டமிக்க உணவளிக்கும். மன்னனும் விரும்பும் உணவை அவன் அளித்திடுவான்.' (தொநூ 49:20)

'ஆசேர் எல்லாக் குலங்களிடையே ஆசி பெற்றவனாவான். தன் உடன்பிறந்தார்க்கு உகந்தனவாய் இருப்பான். அவன் தன் காலை எண்ணெயில் தோய்ப்பான் ... உன் தாழ்ப்பாள்கள் இரும்பாலும் செம்பாலும் ஆனவை. உன் வாழ்நாள் அனைத்தும் நீ பாதுகாப்புடன் இருப்பாய்.' (இச 33:24-25)

இப்படி செழுமையான குலத்திலிருந்து வந்தவர் அன்னா. இவர் இறைவாக்கினர். வயது முதிர்ந்தவர். மணமானவர். 'ஏழு' ஆண்டுகள் கணவரோடு வாழ்ந்தவர். திருமண வாழ்வில் நிறைவு கண்டவர். மேலும், 'எண்பத்து நான்கு' வயது - ஏழு முறை பன்னிரண்டு (இரு மடங்கு நிறைவு).
நிறைவான ஒருவர் தன் வாழ்வின் நிறைவில் நிறைவான இறைவனைக் கண்டுகொள்கின்றார்.

இவர் செய்த அழகான செயல் குழந்தையைப் பற்றி அடுத்தவர்களிடம் - எல்லாரிடமும் பேசினார்.

'குறைகளை எங்களிடம் சொல்லுங்கள். நிறைகளை மற்றவரிடம் சொல்லுங்கள்' என்று சில ஓட்டல்களில் எழுதியிருப்பார்கள்.

தான் கண்ட நிறைவை மற்றவர்களிடம் அள்ளிச் செல்கின்றார் அன்னா.

இன்று நான் என் அடுத்தவரிடம் காணும் நிறைவை மற்றவரிடம் சொல்லும் நற்பண்பை இந்த அன்னா பாட்டி நமக்கு அருள்வாராக!


1 comment:

  1. சில நாட்களுக்கு முன் தந்தை தந்த 'சாமுவேலின் அன்னை' அன்னாவை நினைவு படுத்துகிறது இன்றைய 'அன்னா' எனும் பெயர்.நான் ஏற்கனவே குறிப்பிட்டதையே உறுதிப்படுத்த விழைகிறேன்....சில பேர்கள் பெயருக்காகவே போற்றப்படுகின்றனர்.ஒருவரின் குலப்பின்னனியும் கூட அவர் செய்யும் செயல்களுக்குப் பொறுப்பேற்கும் என்பது 'ஆசேர் குலத்தைப்' பற்றிய குலத்திலிருந்து விளங்குகிறது.இவர் செய்த அழகான செயல்...குழந்தையைப்பற்றி எல்லாரிடமும் பேசியது...அதாவது தான் கண்ட நிறைவை மற்றவரிடம் எடுத்துச்செல்கிறார் அன்னா.இவர் வழியில் நானும் எனக்கடுத்திருப்பவரின் நற்பண்பைப் பிறரிடம் எடுத்துச்சென்றால் நானும் ஒரு 'அன்னா'தான். இந்த நாட்களில் பெண்குலத்திற்குப் பெருமை சேர்க்கும் பலரைப்பற்றிய குறிப்புகளுக்காக தந்தைக்கு என் பாராட்டுக்கள்!!!

    ReplyDelete