நாளைய நற்செய்தி: மிகவும் மகிழ்ச்சியடைவார்
'ஒன்றின் பெருமையை அல்லது முக்கியத்துவத்தை நீ உணர வேண்டுமென்றால் அதை நீ தொலைக்க வேண்டும்' என்பதுதான் நாளைய (12 டிசம்பர் 2017) நற்செய்தி (மத் 18:12-14) நமக்கு வழங்கும் செய்தி.
காணாமற்போன நூறாவது ஆடு எடுத்துக்காட்டில் இயேசு இரண்டு வகையான மகிழ்ச்சி நிலைகளைப் பற்றிப் பேசுகின்றார்: ஒன்று, இருப்பதன் மகிழ்ச்சி. இரண்டு, தொலைந்து போனது கிடைப்பதன் மகிழ்ச்சி. இந்த இரண்டு நிலைகளில் இரண்டாவது மகிழ்ச்சி முதல் மகிழ்ச்சி நிலையைவிட மேலானது என்கிறார்.
இதை நாம் மூன்று நிலைகளில் புரிந்துகொள்ள முடியும்:
முதலில், இயேசுவின் இந்த வேறுபடுத்தும் நிலை கணிதம் மற்றும் கோர்வைக்கு எதிராகச் செல்கின்றது. '99' பெரியதா? '1' பெரியதா? '99' தான் பெரியது. ஆனால் '1' '99'ஐ விட எப்படி பெரியது ஆகின்றது என்றால் அதன் 'தொலைதலில்' அல்லது அதன் 'இல்லாமையில்.'
இரண்டாவதாக, தொலைந்துபோன அந்த 'ஒன்று' நம்மை அலைக்கழிக்கிறது. நம்மைப் பயணம் செய்ய வைக்கிறது. நம் மனதைக் கவலையால் நிரப்பிவிடுகிறது. நாம் எழும்போது, அமரும்போது, சாப்பிடும்போது, தூங்கச் செல்லும்போது அந்த 'ஒன்றே' நம் எண்ணத்தில் நிற்கிறது.
மூன்றாவதாக, தொலைந்துபோன அந்த 'ஒன்று' நம்மிடம் இருக்கும் '99'ஐ நிறைவு செய்கிறது. ரேவன்ஸ்பர்கர் ஆட்டம் போல. 1000 படத் துண்டுகளைச் சேர்த்து பெரிய படம் உருவாக்கும் அந்த விளையாட்டில் 999 துண்டுகள் இருந்தாலும் அவற்றை நாம் சரியே அடுக்கினாலும் தொலைந்துபோன அந்த '1' துண்டு படத்தை குறைவுள்ளதாக்கிவிடுகிறது.
இன்று,
நான் என் வாழ்வில் தொலைத்துவிட்டு அந்த 'ஒன்று' எது?
சில நேரங்களில் தொலைந்துபோன அந்த 'ஒன்றை' விட்டு நான் என்னிடம் இருக்கும் '99'ஐ திரும்ப திரும்ப எண்ணிக்கொண்டிருப்பதிலும், அவற்றை அழகுபடுத்துவதிலும், அவற்றோடு நேரம் செலவழிப்பதிலும் மும்முரமாய் இருக்கிறேன்.
இந்த கிறிஸ்து பிறப்பு கொண்டாட்ட தயாரிப்பு காலத்தில் நம்மிடம் '99' - கேக், கார்ட், ஸ்டார், குடில், கிப்ட், சான்ட்டா கிளாஸ், சாக்ஸ், கைத்தடி - இருந்தாலும், 'கிறிஸ்து' என்ற அந்த '1' இல்லை என்றால் கொண்டாட்டங்கள் நிறைவு பெறுவதில்லை.
முந்தைய அனைத்தும் நமக்கு மகிழ்ச்சி தரலாம். ஆனால் பிந்தையதே மிகுதியான மகிழ்ச்சியைத் தர முடியும்.
மேலும், 100வது ஆட்டைக் காணோம் என்ற கண்டுபிடிப்பே நாம் அதைப் பெற்றுவிட்டோம் என்பதைக் காட்டுகிறது. பல நேரங்களில் 100வது ஆடு காணாமல்போய்விட்டது என்பதையே கண்டறிய என்னால் முடியவில்லை. அது இன்னும் ஆபத்து!
ஆமாம்! சில சமயங்களில் சில உண்மைகள் தந்தை போன்றவர்களால் எடுத்துச்சொல்லப்படும் போதுதான் அதன் உள்ளே ஒளிந்திருக்கும் விஷயங்கள் நம் கண்களைத் திறக்கின்றன..அந்த '1' '99' ஐ விட எப்படிப்பெரியது ஆகிறது என்றால் அதன் 'தொலைதலில்' அதன் 'இல்லாமையில்'. இந்த விழா நாட்களில் நம்மை மகிழ்விக்க,நம்மை அழகுபடுத்த இது,அது என எத்தனையோ இருந்தாலும் 'கிறிஸ்து' என்ற அந்த '1' இல்லையைனில் எல்லாமே விழலுக்கிறைத்த நீர்."100வது ஆட்டைக்காணோம் என்ற கண்டுபிடிப்பே நாம் அதைப் பெற்றுவிட்டோம் என்பதைக் காட்டுகிறது.".... இன்றையப்பதிவின் உச்சம் இதுதான்.நம்மிடம் இருப்பவை குறித்து மகிழ்வோம்; ஆனால் நம்மிடம் இல்லாதவற்றைத் தேடிக்கண்டுபிடிக்கையில் மட்டுமே அந்த மகிழ்ச்சி நிறைவு பெறும் என்பதைப்புரிந்து கொள்வோம்.வித்தியாசமான கோணத்தில் விஷயங்களைப் புரிய வைத்த தந்தைக்கு என் பாராட்டுக்கள் உரித்தாகட்டும்!!!
ReplyDelete