Friday, December 15, 2017

தாங்கள் விரும்பியவாறெல்லாம்

நாளைய (16 டிசம்பர் 2017) நற்செய்தி (மத் 17:10-13): தாங்கள் விரும்பியவாறெல்லாம்

திருமுழுக்கு யோவானை மையப்படுத்தியே நாள்கள் நகர்கின்றன. 'எலியா' ஏற்கனவே வந்துவிட்டார் என்று, திருமுழுக்கு யோவானை எலியாவிற்கு ஒப்பிடும் இயேசு, 'தாங்கள் விரும்பியவாறெல்லாம் அவருக்குச் செய்தார்கள்' என்று சொல்கின்றார். இங்கே இயேசுவின் மனத்தில் இருப்பது திருமுழுக்கு யோவானின் படுகொலையாகத்தான் இருந்திருக்க வேண்டும்.

தங்கள் விருப்பம்போல செய்வது - இதன் பொருள் என்ன?

நீதித்தலைவர்கள் நூலில் அடிக்கடி இடம் பெறும் ஒரு வசனம் இது: 'அந்நாள்களில் இஸ்ரயேலில் அரசன் இல்லை. ஒவ்வொருவரும் தாம் விரும்பியவாறு செயல்பட்டனர்.'

மனுக்குலத்தின் முதற்பெற்றோர் செய்த முதற் பாவமே அவர்கள் தாங்கள் விரும்பியவாறு செயல்பட்டதுதான்.

நம் ஒவ்வொருவருக்கும் 'விருப்பம்' என்பது உண்டு. இதை நாம் உள்ளத்து விருப்பம் என்ற சொன்னாலும் இது என்னவோ தூண்டப்பெறுவது மூளையில் இருந்ததான்.

திருமுழுக்கு யோவான் ஏரோதைத் தட்டிக் கேட்க, கடிந்துகொள்ள, ஏரோது அவரைக் கொலைசெய்யச் சொல்கின்றான். தன் விருப்பம்போல நடக்க முயற்சிக்கின்றான். தன்விருப்பம் கொண்ட அவனை பகைத்துக்கொள்ள மற்றவர்கள் விரும்பவில்லை. ஆக, தன்விருப்பமே தரணியர் விருப்பம் என்று துணிகின்றான் ஏரோது.

இன்று, என்னுடைய விருப்பங்கள் எல்லாம் எவை?
எனக்கு அருகில் இருப்பவரின் விருப்பம் தவறு என்று தெரியும்போது என்னால் சுட்டிக்காட்ட அல்லது தட்டிக்கேட்க முடிகிறதா?

எனக்கு விருப்பம் என்பதற்காக நான் செய்வது அனைத்தும் நல்லதல்ல என்பதைச் சொல்கிறது நாளைய வாசகம்.

1 comment:

  1. நம்மை அடிக்கடி கலங்கடிக்கும் ஒரு விஷயத்தைக் கருப்பொருளாக ஏந்தி வருகிறது இன்றையப் பதிவு.நாலு பேர் நடமாடும் தெருக்களில், பளிச்சென்று இருக்கும் பட்டப்பகல் வெளிச்சத்தில், மனிதர்கள் எனும் பெயரில் சில மிருகங்கள் செய்யும் எத்தனை விஷயங்களைப் பார்க்கிறோம்! என்ன செய்ய முடிகிறது நம்மால்? ஏன் நம் வீட்டில், பணிசெய்யும் இடங்களில்,வழிபாட்டுத்தளங்களில் வேண்டாத விஷயங்கள் எத்தனையோ நடக்கிறதே! என்ன செய்ய முடிகிறது நம்மால்?...'நமக்கேன் வம்பு?' என்று நம் கண்களைக் குருடாக்கிக்கொண்டு போவதைத்தவிர? எங்கு தேடினும் ஒரு திருமுழுக்கு யோவான் கூட நம் கண்களில் படுவதில்லையே! எதனால்? பச்சைக்கோழைத்தனம்! தேவையற்ற விஷயங்களுக்கு குரலெழுப்பும் நாம் தேவையான விஷயங்களுக்கு வாய்மூடி மௌனிகளாகிவிடுகிறோம்..இன்று நம்மைச்சுற்றி இருக்கும் ஒருவரின் தவறான விருப்பத்தைச் சுற்றிக்காட்ட முயலுவோம்... அதன் விளைவு என்னவாயிருப்பினும். வெற்றி கிட்டாமல் போகலாம்.ஆனால் ஒரு நல்ல ஆரம்பமாக இருக்கட்டுமே! அப்படி என்னாலும் செய்ய முடியுமெனில் நானும் கூட ஒரு 'திருமுழுக்கு யோவானே!' உசுப்பேத்திவிட்ட தந்தைக்கு என் நன்றிகள்!!!

    ReplyDelete