Thursday, December 28, 2017

ஆவியின் தூண்டுதலால்

நாளைய (29 டிசம்பர் 2017) நற்செய்தி (லூக் 2:22-35)

ஆவியின் தூண்டுதலால்

நாளைய நற்செய்தி வாசகத்தில் ஆண்டவராகிய இயேசு கோவிலில் காணிக்கையாக அர்ப்பணம் செய்யப்பட்ட நிகழ்வை வாசிக்கின்றோம். இங்கே குறிப்பிடப்படும் கதைமாந்தர் சிமியோன்.

லூக்கா நற்செய்தியாளர் தன் நற்செய்தியை 'ஒரு சான்ட்விச் போல' எழுதுகிறார் என்பதற்கு இந்நிகழ்வு ஓர் உதாரணம். லூக்கா நற்செய்தியின் படி இயேசுவை அவரது வாழ்வில் முதன்முதலாக ஏந்திய அந்நியரின் பெயர் 'சிமியோன்.' அதேபோல அவரை இறுதியில் கல்வாரிக்குச் செல்லுமுன் ஏந்தும் நபர் 'சீமோன்' (சீரேனே ஊரானாகிய சீமோன்). இந்த சிமியோன் ஆண்டவரின் ஆவியின் தூண்டுதலால் வருகிறார். அந்த சீமோன் வற்புறுத்தலில்பேரில் வருகின்றார்.

சிமியோனைப் பற்றிச் சொல்லும்போது, 'அந்த ஆவியின் தூண்டுதலால் அவர் கோவிலுக்கு வந்திருந்தார்' என லூக்கா பதிவு செய்கின்றார்.

'ஆவியின் தூண்டுதலை' அவர் எப்படி கண்டுணர்ந்தார்? என்பது நமக்கு ஆச்சர்யமாக இருந்தது.

நம் வாழ்விலும் பல நேரங்களில் தூண்டுதல்கள் இருப்பதை பார்க்கின்றோம். காலையில் எழுவதிலிருந்து நாம் தூங்கச் செல்லும் வரை நிறைய தூண்டுதல்கள் நம்மை உந்தித் தள்ளுகின்றன. ஆனால், ஆவியின் தூண்டுதல் எது என்று கண்டுபிடிப்பது மிக முக்கியம்.

'அவர் நேர்மையானவர். இறைபற்றுக் கொண்டவர். ஆறுதலை எதிர்பார்த்திருந்தவர்' - இந்த மூன்று காரணிகளால் அவர் ஆவியின் தூண்டுதலைக் கண்டுகொள்கின்றார்.

'நம்புகிற ஒருவருக்குத்தாம் அற்புதம் நடக்கும்' என்பது செல்டிக் பழமொழி.

ஆக, எதிர்பார்க்கிற ஒருவருக்குத்தான் தூண்டுதல் கிடைக்கும்.

'எதிர்பார்ப்பு' இல்லாமல் எதிர்பார்ப்பது - இதுதான் சிமியோன் கற்றுக்கொடுக்கும் பாடம்.
இந்த வகை எதிர்பார்ப்பில்தான் ஏமாற்றம் இருக்காது.
ஏமாற்றம் இருந்தாலும் அந்த ஏமாற்றம் அடுத்த எதிர்பார்ப்பிற்கான முதல்படியாகும்.

1 comment:

  1. " இந்த சிமியோன் ஆண்டவரின் ஆவியின் தூண்டுதலால் வருகிறார்;அந்த சீமோன் வற்புறுத்தலின் பேரில். வருகிறார்"... அழகான ஒப்புமை." அவர் நேர்மையானவர்;இறைபற்று கொண்டவர்; ஆறுதலை எதிர்பார்த்திருந்தவர்" நான் தூண்டப்படவில்லையெனில் இந்த மூன்றில் ஏதோ ஒன்று என்னில் குறைகிறது. அது என்ன வென்று சோதித்தறிதல் நானும் 'தூண்டுதலைப்' பெற வழி வகுக்கும்."எதிர்பார்ப்பு இல்லாமல் எதிர்பார்ப்பது"... வாழ்வில் எனக்கேற்படும் ஏமாற்றங்களைச் சமாளிக்க சிமியோன் கற்றுத்தரும் இந்தப்பாடம் எனக்குத் துணை நிற்கட்டும்! . தந்தைக்கு இனிய இரவு வணக்கம்!

    ReplyDelete