விலக்கிவிட திட்டமிட்டிருந்தார்!
இயேசு பிறப்பதற்கு முன், அல்லது இயேசு பிறந்த சில நாள்களில் தங்கள் வீட்டின் முற்றத்தருகில் கட்டில் போட்டமர்ந்து, வானத்தின் நிலாவையும் நட்சத்திரங்களையும் மரியாளும், யோசேப்பும் இரசித்துக் கொண்டிருந்த அந்த ரம்மியமான முன்னிரவு நேரத்தில் என்றாவது ஒரு நாள் கண்டிப்பாக மரியாள் இந்தக் கேள்வியை யோசேப்பிடம் கேட்டிருப்பார்:
'என்னங்க. உங்கள ஒன்னு கேட்கலாமா? நான் கருவுற்றிருப்பது உங்களுக்குத் தெரிய வந்து நீங்க என்னய மறைவா விலக்கிவிட திட்டம் போட்டிங்கதானே?'
தனக்கு விருப்பமில்லாத கேள்வியைக் கேட்கும் பெண்ணிடமிருந்து விலகும் எந்த ஆணையும் போல,
'அதெல்லாம் ஒன்னுமில்ல! எனக்கு தூக்கம் வருது! குட்நைட்!' என்று evasive-வாக பேசிவிட்டு தன் வீட்டிற்குள் சென்றிருப்பார் யோசேப்பு.
'யோசேப்பு நேர்மையாளர். அவர் மரியாவை இகழ்ச்சிக்கு உள்ளாக்க விரும்பாமல் மறைவாக விலக்கிவிட திட்டமிருந்தார்' என்று நாளைய நற்செய்தியில் வாசிக்கின்றோம்.
'Failing to Plan is Planning to Fail' என்ற ஒரு மேற்கோளை இன்று வாசிக்க நேரிட்டது. இன்று மேலாண்மையியல் மற்றும் மனித வளத்தில் அதிகமாக பேசப்படும் வார்த்தை திட்டமிடுதல் அல்லது planning.
நாம் கட்டும் வீடு, சேர்க்கும் சேமிப்பு, படிக்கும் படிப்பு, பார்க்கும் வேலை, பார்க்கும் மருத்துவம் என எல்லாவற்றிற்கும் திட்டமிடல் தேவை என்று நாம் ஏற்றுக்கொள்கின்றோம்.
ஆனால், கிறிஸ்து பிறப்பு நிகழ்வுகளின் செய்தி கொஞ்சம் எதிர்மாறானதாக இருக்கிறது.
மனித திட்டங்களையும், திட்டமிடுதலையும் உடைக்கிறது மீட்பின் நிகழ்வு.
மரியாளை விலக்கிவிட திட்டமிடுகின்றார் யோசேப்பு - அவரின் திட்டம் கலைகிறது - மரியாளை ஏற்றுக்கொள்ளப் பணிக்கப்படுகின்றார்.
தங்கள் இடையைக் காவல் காக்க திட்டமிடுகின்றனர் இடையர்கள் - அவர்களின் திட்டம் கலைகிறது - பெத்லகேம் செல்ல அழைப்பு வருகின்றது.
வானவியல் ஆராய்ச்சியில் காலம் கழிக்கலாம் என திட்டமிடுகின்றனர் ஞானிகள் - அவர்களின் திட்டம் கலைகிறது - தாங்கள் முன்பின் தெரியாத நாட்டில் முன்பின் தெரியாத அரசனைத் தேடி அலைகின்றனர்.
இறந்து போய்விடலாம் என திட்டமிடுகின்றார் சிமியோன் - அவரின் திட்டம் கலைகிறது - குழந்தையைக் கையில் ஏந்துகின்றார்.
ஓய்வு பெற்று வீட்டில் இருந்துவிடலாம் என நினைக்கிறார் அன்னா - அவரின் திட்டம் கலைகிறது - தூய ஆவியால் உந்தப்பட்டு எருசலேம் ஆலயம் வருகின்றார்.
ஆனால்,
அதே நேரத்தில் இயேசுவோடு தொடர்பில்லாதவர்களின் வாழ்வு திட்டமிட்டதுபோல நடக்கின்றது:
அகஸ்து சீசர் திட்டமிட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு நடக்கிறது.
சத்திரக்காரன் திட்டமிட்டபடி சத்திரம் நிரம்பி வழிகின்றது.
ஏரோது திட்டமிட்டபடி குழந்தைகள் கொல்லப்படுகின்றனர்.
ஆக, மீட்பின் திட்டத்தில்(!) தொடர்புடையோர் தங்கள் திட்டங்களை மாற்றிக்கொள்கின்றனர். அல்லது மாற்றிக்கொள்ளுமாறு பணிக்கப்படுகிறார்கள்.
யோசேப்பும் அப்படியே.
திட்டமிடுதல் எப்போதும் சரியல்ல என்பது நாளைய நற்செய்தி தரும் பாடம். ஏனெனில் திட்டமிடும்போது வாழ்க்கையின் spontaneityயை நாம் தடுக்கின்றோம்.
அப்படியெனில் நாம் செய்ய வேண்டியது என்ன?
'தூக்கத்திலிருந்து விழித்தெழுந்த யோசேப்பு போல நாமும் விழித்தெழுந்து நமக்கு இறைவன் பணித்திருப்பதை ஏற்றுக்கொள்வது!'
நிற்க.
நாளைக்கு விடிஞ்சவுடன் Monthly Planner வாங்கப் போகலாம் என நினைத்தேன்
முற்றத்தருகில் கட்டிலில் மரியாவும்,யோசேப்பும் ஒரு இரம்மியமான சூழ்நிலையில் தங்களுக்குள் சம்பாஷிப்பதாகத் தந்தை வெளிப்படுத்தும் கற்பனை அழகானது; ஆனால் நடக்கவில்லையே! இதன் பின்னனியில் மீட்பின் நிகழ்வு திட்டங்களையும்,திட்டமிடுதலையும் எவ்வாறு உடைக்கிறது என்பதே இன்றையப் பதிவின் மையப்பொருள்.நாம் இராப்பகலாக ஒரு விஷயத்தைத் திட்டமிட்டு அது சுக்கு நூறாக உடையும் போது அத்துடன் சேர்ந்து நம் மனமும் உடைந்து போன நிகழ்வுகளைச் சந்திந்திருப்போம்."எல்லாம் நல்லதற்கே!" என்று நம்மைச்சுற்றியுள்ளவர்கள் சொன்னாலும் நம் மனம் படும்பாடு நமக்கு மட்டுமே தெரியும்.இத்தகைய நிகழ்வை ஓராயிரம் முறைத் தன் வாழ்வில் சந்தித்துள்ள யோசேப்பே இன்று நமக்குப் பாடமாக நிற்கிறார்."தூக்கத்திலிருந்து விழித்தெழுந்த யோசேப்பு போல நாமும் விழித்தெழுந்து இறைவன் நமக்குப் பணித்திருப்பதை ஏற்றுக்கொள்வோம்!"விடிஞ்சவுடன் monthly planner வாங்கும் தந்தையின் திட்டம் இனிதே நிறைவேற வாழ்த்துக்கள்!!!
ReplyDelete