Sunday, November 6, 2016

மலைமேல் ஏற

இன்று எங்கள் கல்லூரிக்கு அருகில் உள்ள ஃபீனிக்ஸ் மால் என்ற வணிக வளாகத்திற்கு நண்பர்கள் நால்வர் சென்றோம்.

உள்ளே நுழையுமுன் பாதுகாப்பு சோதனை.

ஒவ்வொரு கடைக்குள் நுழையும்போதும் கைப்பை சோதனை.

வழக்கம்போல கடைகளை வேடிக்கை பார்த்துவிட்டு, கடைசியில் ஒரு டீ குடித்துவிட்டு வீடு திரும்பினோம்.

ஏறக்குறைய 3 மணிநேரம் உள்ளேயே சுற்றிக்கொண்டிருந்ததால் ரொம்பவே கால் வலிக்கிறது.

'இந்த வணிக வளாகத்திற்குள் ஏறி வர உனக்கு என்ன தகுதி இருக்கிறது?'

இப்படி யாரும் யாரையும் கேட்டுவிட முடியுமா?

முடியாது.

'எல்லார் கையிலும் பையிலும் பணம் இருக்க வேண்டும்' என்பது ஒரு தகுதி.

'யாருக்கும் காயம் ஏற்படுத்தவோ, பொருள்களை சேதப்படுத்தவோ கூடாது' என்பது மற்றொரு தகுதி.

மற்றபடி யாரும் யாருக்கும் பொறுப்பல்ல.

நிறைய கடைகள்.

தனித்தனியே சிலர்.

ஜோடியாக பலர்.

தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்று தெரியாமலேயே ஓடித் திரியும் சின்னஞ்சிறுசுகள்.

'இதையெல்லாம் பார்க்காமலேயே வளர்ந்துட்டோம்ல!' என்று ஓரமாய் நாற்காலிகளில் அமர்ந்து அண்ணாந்து பார்த்து பெருமூச்சுவிடும் வயது வந்தவர்கள்.

நிற்க.

நாளைய பதிலுரைப் பாடலில் (திபா 24) ஆசிரியர் ஒரு கேள்வி கேட்கின்றார்:

'ஆண்டவரது மலையில் ஏறத் தகுதியுள்ளவர் யார்?'

அவரே பதிலையும் சொல்கின்றார்.

அ. கறைபடாத கைகளும் மாசற்ற உள்ளமும் உடையவர்.

ஆ. பொய்த்தெய்வங்களை நோக்கி தம் உள்ளத்தை உயர்த்தாதவர்.

ஒரு மாலுக்குள் நுழைந்தாலும் இந்தத் தகுதிகள் தேவை என்றே நினைக்கிறேன்.

இன்று கண்கள் நிறையவே அலைபாய்ந்தன.

உள்ளம் அலைபாய்வதால்தான் கண்களும் அலைபாய்கின்றனவோ!

'பொய்த்தெய்வங்களை நோக்கி தன் கண்களை உயர்த்தாதவரும் மாலுக்குள், மலைமேல் நுழையலாம்!'

1 comment:

  1. 'ஃபீனிக்ஸ் மால்'பார்த்ததன் உற்சாகம் தந்தையின் வரிகளில் நிறையவே கொப்பளிக்கிறது.அலைபாய்ந்த கண்களும், உள்ளமும் அதற்கு சாட்சி சொல்கின்றன.பார்க்கின்ற,கேட்கின்ற அத்தனையையும் 'பைபிளோடு' சம்பந்தப்படுத்தும் சாமர்த்தியம் தந்தையின் தனித்துவம்." கறைபடாத கைகளையும்,மாசற்ற உள்ளத்தையும் பெற்றவராய், பொய்த்தெய்வங்களை நோக்கி தம் உள்ளத்தை உயர்த்தாத ஒருவர் ஆண்டவரது மலையில் ஏற மட்டும் தகுதிபெற்றவர் இல்லை...அவர் மாலுக்குள் நுழையவும்,மலைமேல் ஏறவும் கூடத் தகுதி பெற்றவரே" என்கிறார் தந்தை.அவர் கூற்றுக்கு அப்பீல் ஏது? பயத்தால் புகட்டப்படும் இறைபக்தியைவிட பாசத்தோடு புகட்டப்படும் இறைபக்திக்கு என்றுமே பலன் உண்டு எனக் கூறாமல் கூறும் தந்தைக்கு என் வணக்கங்களும்,நன்றிகளும்!!!

    ReplyDelete