Wednesday, November 2, 2016

திராக்மா

வருகின்ற ஞாயிறு திருப்பலிக்காக மறையுரை எழுத தயாரானேன் இன்று. நற்செய்தி வாசகத்தை வாசித்தேன். மிகவும் கடினமான நற்செய்திப் பகுதிகளில் ஒன்று அது. ஒரு பெண்ணை ஏழு பேர் திருமணம் செய்து உயிர்ப்பில் அவர் யாருக்கு மனைவியாய் இருப்பார்? என்று கேட்கும் பகுதி. எதைப் பற்றி எழுதுவது? உயிர்ப்பு என்றால் என்ன? இறப்பிற்குப் பின் என்ன நடக்கும்? பெண் கொள்வதில்லை, கொடுப்பதில்லை, வானதூதர்களைப் போல இருத்தல் என்றால் என்ன? என நிறைய கேள்விகள்.

ஒவ்வொரு வாரமும் நல்ல மறையுரை எழுதி அல்லது சொல்லி மற்றவர்களை இம்ப்ரஸ் பண்ண வேண்டும் என்ற நினைப்பு என்னில் வரும்போதெல்லாம், நான் என் வாழ்க்கையை யாருக்காக வாழ்கின்றேன்? எனக்காகவா? அல்லது மற்றவர்களுக்காகவா? என்ற கேள்வியும் வரும்.

சரி.

மேற்காணும் குழப்பமான கேள்விகள் மனத்தில் ஓடிக்கொண்டிருக்க, என் அம்மாவுக்கு ஃபோன் பண்ணினேன்.

போனை எடுத்தவர்கள்,

'இராசபாளையத்திற்கு வந்தேன். அப்பா கல்லறைக்கு மாலை வாங்கினேன். மழை பெய்து கொண்டிருக்கிறது. பஸ்க்காக காத்திருக்கேன்' என்று ஒரே மூச்சில் சொல்லி முடித்தார்கள்.

ரொம்ப இரைச்சலாக இருந்ததால், 'அப்புறம் பேசுகிறேன்' என சொல்லிவிட்டு ஃபோனை வைத்தேன்.

('அப்புறம் பேசுறேன்' என்று நாம் ஃபோனில் சொல்வதன் அர்த்தம் 'இப்ப வை!' என்பதுதானே!)

ஃபோனை வைத்துவிட்டு சாப்பிடச் சென்று கொண்டிருந்தேன்.

என் அம்மா மாலையை வாங்கிக் கொண்டு மழையில் இராசபாளையம் பேருந்து நிறுத்தத்தில் காத்திருப்பதுதான் மனதிற்குள் ஓடியது.

'உயிர்ப்பு, மறுவாழ்வு, இறப்பிற்குப் பின் உள்ள வாழ்வு, மோட்சம், நரகம், உத்தரிக்கிற நிலை' என நாம் பெரிய வார்த்தைகளில் பேசுகிறோம். சிந்திக்கிறோம்.

ஆனா, என் அம்மா மாதிரி சாதாரண ஆள்களுக்கு அதெல்லாம் ஒன்றுமில்லை.

தன் கணவர் இறந்துவிட்டார் என்பது அவர் கண்ட நிஜம். வாழ்க்கையை தொடர்ந்து வாழ வேண்டும் என்பதும் நிஜம். தன் இருப்பை தன் கணவருக்கு உணர்த்துவதற்குத்தான் இந்த மாலை.

நான் என் அப்பாவுக்கு ஒப்புக்கொடுக்கும் திருப்பலியை விட, என் அம்மா கால் கடுக்க மழையில் நின்ற வாங்கும் மாலையும், காத்திருத்தலும் அவருக்கு ஒப்புக்கொடுக்கும் பெரிய பலி என்றே எனக்க எண்ணத் தோன்றுகிறது.

மாலை வாங்கும்போது என் அப்பாவைப் பற்றிய எந்த எண்ணம் அவரின் மனதில் ஓடும்?

இன்று ஒரு விஷயம் கற்றுக்கொண்டேன்: 'வாழ்வின் மகத்துவங்கள் பெரிய நூல்களிலும், பெரிய மகான்களின் சித்தாந்தத்திலும் இல்லை. அவைகள் வாழ்வின் சாதாரண நிகழ்வுகளில், மாலை வாங்குவதில், பேருந்துக்காக காத்திருத்தலில், மழையில் நனைதலில்தான் இருக்கின்றன.'

நாளைய நற்செய்தியில் (காண். லூக் 15:1-10) காணாமல்போன நாணயம் அல்லது திராக்மா பற்றிய உவமையைச் சொல்கிறார் இயேசு.

பெண் ஒருத்தி தன்னிடமிருந்த 10 திராக்மாக்களில் ஒன்றைத் தொலைத்துவிட்டு, தேடுகிறாள், கண்டுகொள்கிறாள். மகிழ்கிறாள்.

ஆனால், தன்னிடமிருந்த ஒரே திராக்மா என்னும் தன் கணவரையும் தொலைத்துவிட்ட என் அம்மா எப்போது அதைக் கண்டுகொள்வார்? எப்போது மகிழ்வார்?

வாழ்வில் சில நேரங்களில் நாம் தொலைக்கும் திராக்மாக்கள் நம் வீட்டை எவ்வளவு கூட்டிப் பெருக்கினாலும், நமக்குக் கிடைப்பதில்லை.

நாம் இவ்வுலகில் தொலைத்த திராக்மாக்களைக் கண்டுகொள்வதற்காகவதாவது மறுவாழ்வு அல்லது உயிர்ப்பு வேண்டும்.

இல்லையா?

1 comment:

  1. தந்தையே! எப்படி வாழ்க்கையை இத்தனை நிதர்சனமாகப் பார்க்க முடிகிறது தங்களால்? என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.மனத்தில் அலையென ஓலமிடும் சோகங்களை இவ்வளவு இலாவகமாக எப்படி இறக்கி வைக்க முடிகிறது உங்களால்? அதுவும் புரியவில்லை.தங்கள் அப்பாவுக்காகத் தாங்கள் ஒப்புக்கொடுக்கும் திருப்பலியை விட அவருக்காகத் தங்களின் அம்மா வாங்கிய மாலையும், கால்கடுக்க மழையில் காத்திருந்ததும்,அவர் ஒப்புக்கொடுத்த திருப்பலியும் பெரிது என்பது ஒத்துக்கொள்ளக்கூடிய விஷயமே எனினும் அதைத் தாங்களே ஒத்துக்கொள்வது கணவனை இழந்த தங்களின் தாயை எத்தனை அழகாகத் தாங்கள் பூஜிக்கிறீர்கள் என்பதை சொல்லாமல் சொல்கிறது." வாழ்வின் மகத்துவங்கள் பெரிய நூல்களிலும்,சித்தாந்தங்களிலும் இல்லை; அவை மாலை வாங்குவது,காத்திருப்பது மற்றும் மழையில் நனைவது போன்ற சாதாரண நிகழ்வுகளில் தான் இருக்கின்றன" ... வாழ்வின் எதார்த்தத்தைத் துகிலுரித்துக் காட்டும் வரிகள்.கண்டிப்பாகத் தங்களின் தாய்மட்டுமில்லை ...நாம் அனைவருமே தொலைத்த,பல திராக்மாக்களினும் மேலான நம் மனத்துக்கினியவர்களைக் கண்டு கொள்ளவாவது ' உயிர்ப்பு வேண்டும்தான்." தங்களின் எண்ண ஓட்டங்களுக்கு பின்னனி பாடுகிறது என் மனம்.சோகமும் கூட சுகம்தான்...அவை நம் மனத்துக்கு நெருக்கமானவர்களைப்பற்றிய விஷயமாக இருப்பின்! சொல்லாமல் சொல்லும் தந்தைக்கு என் வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete