Monday, November 28, 2016

கருத்தமர்வு

'பால்குடி மறந்த பிள்ளை கட்டுவிரியன் வளையினுள் தன் கையை விடும்!'

(காண். எசாயா 11:1-10)

'அந்நாளில்' எனத் தொடங்கும் எசாயா இறைவாக்குப் பகுதியை நாளைய முதல் வாசகத்தில் வாசிக்கின்றோம்.

ஒன்றிற்கொன்று எதிர்மறையானது எல்லாம் நேர்முகமாக ஆகும் என்கிறது இறைவாக்குப் பகுதி.

வன்மையானது மென்மையானதோடு கைகோர்க்கும்.

விஷம் அமிர்தத்தோடு கைகோர்க்கும்.

பாசிட்டிவ் நெகடிவ் இரண்டும் ஒன்றாகிவிடும்.

குழந்தை கட்டுவிரியனின் வளைக்குள் கையை விடும்.

கட்டுவிரியனும் குழந்தையை ஒன்றும் செய்யாது!

இதெல்லாம் நடக்குமா? - என்ற கேள்விதான் நம்முள் எழுகிறது.

'நடக்கும்' என்ற நம்பிக்கையைத் தருகிறது இறைவாக்கு.

இன்று எங்கள் கல்லூரியில் 'தலித் கலக்கம்: ஓர் இறையியல் பதில்' (Dalit Unrest: A Theological Response) என்ற தலைப்பில் கருத்தமர்வு நடைபெற்றது.

முனைவர் ராம் புனியானி மற்றும் அருள்முனைவர் மரிய அருள்ராஜா, சேச, என்னும் இரண்டு ஆன்றோர்கள் உரை நிகழ்த்தினார்கள்.

நம் தாய்த்திருநாட்டில் கடந்த மூன்று ஆண்டுகளாக தலித் மக்களுக்கு எதிராக கட்டவிழ்க்கப்படும் அறிவுசார் மற்றும் உடல்சார் வன்முறைகளுக்கு எதிராக எழுந்திருக்கும் கலகக்குரல் ஏன்? என்பதுதான் கருத்தமர்வுகளின் கேள்வியாக இருந்தது.

கருத்தமர்வுகளில் என்னைக் கவர்ந்த சிலவற்றை இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன்:

1. 'ஆள்வோரின் முன்வைப்புகளும், செயல்பாடுகளும் என்றும் ஒன்றாக இருப்பதில்லை!' (The claims and the aims of the ruling class are not always equal)

அதாவது, 'நான் எல்லா மக்களுக்காகவும் இருக்கிறேன்' என்பது நம் மோடி அவர்களின் முன்வைப்பு. ஆனால், 'நான் அம்பானி மற்றும் அதானிக்காகத்தான் இருக்கிறேன்' என்பது அவரின் செயல்பாடு.

2. மதங்களும் அவற்றின் போதனைகளும் மனிதர்களை சக மனிதர்களோடு இணைக்க வேண்டுமே தவிர ஒருபோதும் பிரிக்கக் கூடாது.

3. 'எதற்கும், யாருக்கும் அடிமை ஆகாதீர்கள். எதையும், யாரையும் அடிமைப்படுத்தாதீர்கள்' - இதுதான் நம் விவிலியத்தின் ஒரே போதனை.

4. 'மிகச் சிறியோருக்கு என்று மீட்பு கிடைக்கிறதோ அன்றே எல்லாருக்கும் மீட்பு கிடைக்கிறது!'

அதாவது, என் சக மனிதர் சங்கடப்பட்டுக்கொண்டிருக்க நான், 'இறைவா நீ தந்த மீட்புக்கு நன்றி!' என்று பாட்டுப்பாடிக் கொண்டிருப்பது சால்பன்று.

5. 'கடவுளோடு நீங்கள் படைப்பாளி. சக மனிதரோடு நீங்கள் வேலைக்காரர். இயற்கையோடு நீங்கள் உடன்பிறப்பு.' (With God you are a creator. With fellow humans you are a worker. With nature you are a co-born)

இரண்டு கருத்தமர்வுகளுக்கு இடையே காட்டப்பட்ட காணொளிக்காட்சியும் என்னை மிகவும் தொட்டது.

'நன்றாக அடி. அவர்கள் காதுகளுக்குக் கேட்கட்டும்!'

என்று பறை முழக்கத்தோடு தொடங்கிய காணொளி அதே முழக்கத்தோடு நிறைவுபெற்றது.

காணொளிகளில் காட்டப்பட்ட சில குழந்தைகள், அவர்களின் செருப்பணியா பாதங்கள், காலையில் படிப்பு-மாலையில் வேலை போன்றவை என் குழந்தைப் பருவத்தை எனக்கு நினைவூட்டின.

பல குழந்தைகள் பள்ளி செல்ல முடியாமல் பரிதவிக்க,

சாதி மற்றும் பொருளாதார ஏற்றத்தாழ்வால் சிக்குண்டிருக்க,

நான் சின்ன சின்ன விஷயத்தையெல்லாம் ஏதோ பெரிய இழப்பாக நினைத்து வாழ்வது எனக்கே மனவுறுத்தலாக இருந்தது.

கருத்தமர்வின் இறுதியில், என் அருகில் இருந்த நண்பர், 'நீ எதுவும் கேள்வி கேட்கலயா?' என்றார்.

அதே அறையில் 8 ஆண்டுகளுக்கு முன் நான் கேள்வி கேட்டது நினைவிற்கு வந்தது அந்நேரம். அந்நாள்களில் இப்படி கேள்வி கேட்டுத்தான் கூட படித்துக்கொண்டிருந்த அருள்செல்வியரை இம்ப்ரஸ் செய்வது வழக்கம்.

ஆனால், இன்று எந்த மாணவரும் கேள்வி கேட்கவில்லை.

'இம்ப்ரஸ்' செய்யத் தேவையில்லை என நினைக்கும் அளவுக்கு வளர்ந்துவிட்டார்களா?

அல்லது

'என்ன கேட்டு என்ன ஆகப்போகுது?' என தளர்ந்துவிட்டார்களா?

இருதுருவங்கள் இணையும் என்பது நாளைய இறைவாக்கு தரும் நம்பிக்கை.

2 comments:

  1. உள்ளத்து உணர்வுகளை உறுத்தலின்றி வெளிக்கொணரும் ஒரு பதிவு.தான் கலந்துகொண்டகல்லூரிக்கருத்தமர்வில்கண்டவைகளையும்,கேட்டவைகளையும் பகிர்ந்து கொண்டுள்ளார் தந்தை.அவர் பகிர்ந்துகொண்டிருக்கும் கருத்துக்கள் அனைத்துமே எந்த சலனமும் இன்றி எல்லோராலும் வாழ்வாக்க்ப்பட வேண்டியவையே எனினும் " கடவுளோடு நீங்கள் படைப்பாளி; சக மனிதரோடு நீங்கள் வேலைக்காரர்கள்; இயற்கையோடு நீங்கள் உடன்பிறப்புகள்"....என்னைத் தொட்ட வரிகள்.காணொளியில் காட்டப்பட்ட விஷயங்கள் தந்தையின் மனசாட்சியைத் தட்டி எழுப்பியிருப்பதாக ஒத்துக்கொள்ளும் விதம் அழகு.தந்தை அந்த காலத்தில் அருட்செல்வியரை இம்ப்ரஸ் பண்ண கேள்வி கேட்டதுபோல் இன்றைய மாணவர்கள் கேள்வி கேட்கவில்லை என்பது கண்டிப்பாக இன்றைய மாணவர்கள் " யாரையும் இம்ப்ரஸ் செய்யத் தேவையில்லை" எனும் அளவுக்கு வளர்ந்து விட்டார்கள் என்பதைக்காட்டுகிறது...என்பது உண்மைதான் என்று தோன்றிகிறது.தந்தையின் கண்கள் கோபத்தால் சிவப்பது தெரிகிறது.மன்னிக்கவும்.அழகான ஒரு பதிவுக்காகத் தந்தைக்கு ஒரு சலாம்!!!

    ReplyDelete
  2. Anonymous11/29/2016

    Yesu Good Moring. Have a nice day. Nice to read your blog early morning. God bless us.

    ReplyDelete