Tuesday, November 29, 2016

அந்திரேயா

'ஆனால் அவர்மீது நம்பிக்கை கொண்டிருந்தாலன்றி, அவர்கள் எவ்வாறு அவரை நோக்கி மன்றாடுவார்கள்?
தாங்கள் கேள்வியுறாத ஒருவர்மீது எவ்வாறு நம்பிக்கை கொள்வார்கள்?
அறிவிக்கப்படாத ஒன்று பற்றி அவர்கள் எவ்வாறு கேள்வியுறுவார்கள்?
அனுப்பப்படாமல் அவர்கள் எவ்வாறு அறிவிப்பார்கள்?'

(உரோமையர் 10:9-18)

நாளை திருத்தூதரான அந்திரேயாவின் திருநாளைக் கொண்டாடுகிறோம்.

சீமோன் பேதுருவின் சகோதரர் என அறியப்படும் இவர் யோவான் நற்செய்தியில் பிலிப்பின் நண்பராக வருகிறார்.

இயேசுவைத் தேடிச் சென்றவரும் இவரே.

இயேசுவை மற்றவர்களிடம் அழைத்து வந்தவரும் இவரே.

இவர் ஒரு நல்ல பி.ஆர்.ஓ.

நாளைய முதல் வாசகத்தில் தூய பவுல் 'படி நடை' (step pattern) என்னும் இலக்கிய நடையைக் கையாளுகின்றார்.

மேலே காணும் வசனத்தைக் கவனித்தீர்களா?

மேலிருந்து ஒருமுறை வாசித்துவிட்டு, கீழிருந்து மேலாக மற்றொரு முறை வாசியுங்கள்:

அனுப்பப்படுதல் - அறிவித்தல் - கேள்விப்படுதல் - நம்பிக்கை கொள்தல்

இதில் முதல் இரண்டு திருத்தூதர் செய்ய வேண்டியது.

இறுதி இரண்டு போதனையைக் கேட்பவர் செய்ய வேண்டியது.

அனுப்பப்பட்டாலன்றி அறிவிக்க முடியாது என்பது பவுலின் வாதம்.

பவுலின் வாதத்தை இன்னும் ஒரு படி கீழே இழுக்கலாம். 'அழைக்கப்படாத' ஒருவர் எப்படி அனுப்பப்படுவார்?

நாம் ஒவ்வொரு நிலையிலும் அனுப்பப்பட்டுக்கொண்டே இருக்கிறோம்.

நம் வாழ்வின் ஒவ்வொரு கட்டமும் நாம் 'தி அதர்' நோக்கி பயணம் செய்கிறோம்.

அப்படி அனுப்பப்படும்போது நம் வேலை என்ன?

அறிவித்தல்.

எதை அறிவிக்க வேண்டும்?

கிறிஸ்துவின் செய்தியை.

இன்று காலை டீ குடித்துக் கொண்டிருந்தபோது அகுஸ்தினார் பற்றிய பேச்சு எழுந்தது.

'பெண் என்னும் போதையிலிருந்து (addiction) அகுஸ்தினார் மீளவில்லை. அவர் அப்படியே இறையியல் என்ற இன்னொரு போதையைப் பிடித்துக் கொண்டு முந்தைய போதையைக் கைவிட்டார். மனிதர்களுக்கு ஒவ்வொரு கட்டமும் ஒரு போதை தேவைப்படுகிறது' என்றார் நண்பர் ஒருவர்.

போதை (addiction) என்றால் என்ன?

உதாரணத்திற்கு, மது எனக்கு போதை தருகிறது என்பதை நான் எப்படி உணர்வேன்?

இப்போது மணி மாலை 4. இன்று இரவு வெளியே விருந்திற்குச் செல்ல வேண்டும். ஆனால், 4 மணிக்கே நான் 8 மணி விருந்தையும் அதில் பரிமாறப்படும் மதுவையும் நான் எண்ணிப்பார்க்கவும், அப்படி எண்ணிப்பார்ப்பதால் என் இப்போதைய வேலை பாதிக்கப்படுகிறது என்றால் நான் அதற்கு போதை என்று பொருள்.

அதாவது, போதை நம் எண்ணத்தை முதலில் நிரப்பிவிடுகிறது.

ஆகையால்தான், பாலியல் வன்புணர்ச்சி கூட முதலில் அதைச் செய்பவரின் மூளையில் அரங்கேறுகிறது என்று சொல்கிறார்கள். பின் தான் அது மற்றவரின் உடல்மேல் நடத்தப்படுகிறது.

திருத்தூதர்களின் வாழ்வு ஆச்சர்யமாக இருக்கிறது.

எந்நேரமும் கிறிஸ்துவையும், அவரோடு இருந்த அனுபவத்தையும் தங்கள் எண்ணத்தில் நிறைத்திருந்தனர். ஆகையால்தான் தங்களின் எண்ணங்கள், ஏக்கங்கள், மனைவி, பெற்றோர், பிள்ளைகள், நண்பர்கள், சொந்த ஊர் என அனைத்தையும் விட்டுவிட்டு கிறிஸ்துவை மட்டுமே எண்ணிக்கொண்டிருக்க அவர்களால் முடிந்தது.

அனுப்பப்படுபவரால் நிரப்பப்பட்டால் ஒழிய அறிவித்தல் சாத்தியமல்ல.

அறிவித்தல் ஒரு கடமையும் பொறுப்பும் ஆகும்.

ஏனெனில் எனக்கு அடுத்திருப்பவரின் நம்பிக்கை அதைச் சார்ந்தே இருக்கிறது.

1 comment:

  1. ' படி நடை'... முதல் முறையாக்க் கேள்விப்படும் ஒன்று.அனுப்பப்படவும், அறிவிக்கவும் ஒருவர் இருப்பின் அதைக்கேள்விப்படவும்,நம்பிக்கை கொள்ளவும் ஒருவர் இருப்பார் என்பது ஒத்துக்கொள்ள வேண்டிய ஒன்றுதானே!அருட்பணியாளர்கள் மட்டும்தான் அறிவிக்க முடியும் என்பதைப் பொய்யாக்கி 'அவரின்' பெயரை அறிந்த யாரும் அறிவிக்கலாம் எனச் சொல்ல வருகிறது இன்றையப் பதிவு.தங்களுக்குச் சொந்தமான எல்லாவற்றையும் ஓரங்கட்டிவிட்டு கிறிஸ்துவைப்பற்றிய எண்ணங்களால் மட்டுமே நிறைந்திருக்க திருத்தூதர்களால் முடியுமெனில் அது நம்மாலும் கண்டிப்பாக முடியவேண்டும் எனச் சொல்ல வருகிறார் தந்தை, புனித அகுஸ்தினாரின் வாழ்க்கைச் சரிதையை மேற்கோள்காட்டி.நம்மை அடுத்திருப்பவரின் நம்பிக்கையை வளர்ப்பதற்காக,அறிவித்தலை ஒரு கடமையாகவும்,பொறுப்பாகவும் ஏற்க வேண்டுமெனும் தந்தையின் அறிவித்தலுக்காக அவருக்கு 'நன்றி' சொல்லலாமே!!!

    ReplyDelete