Thursday, September 1, 2016

சைக்கிள்

எனக்கு எங்க அப்பா மேல நிறைய நாளு ஒரு கோபம் இருந்துச்சு!

நான் பள்ளிக்குப் போன நாட்களில் எனக்கு அவர் சைக்கிள் சொல்லிக் கொடுக்கவில்லை.

என் வீட்டிற்கு அருகில் வாழ்ந்த கடற்கரை, சங்கர், மோகன் என எல்லாரும் சைக்கிள் படிக்க சென்றபோதும்கூட என்னை அனுப்ப மறுத்துவிட்டார்.

நான் புனேவிற்கு மெய்யியல் படிக்கச் சென்றபின்தான் (என் 19வது வயதில்) சைக்கிளே பயின்றேன்.

நிற்க.

இன்று வீட்டிற்கு போய்விட்டு வரலாம் என மதுரையிலிருந்து புறப்பட்டேன்.

இராஜபாளையத்தில் இறங்கி என் சிற்றூருக்கான பேருந்திற்காக நிறுத்தத்தில் காத்திருந்தேன். காலை 8:15 மணி. நிறைய ஸ்கூல் வேன்கள் வேகமாக சென்று கொண்டிருந்தன. குழந்தைகள் ஆயாவின் மடியில் உட்கார்ந்திருந்தன. நிறைய வேன்களில் 'இன்டர்நேஷனல் ஸ்கூல்' என எழுதப்பட்டிருந்தது. அப்படி என்ன அங்கே 'இன்டர்நேஷனல்' என்று தெரியவில்லை?

சில குழந்தைகள் தங்கள் அப்பாக்களின் டூவிலர்களில் தொங்கிக் கொண்டு போனார்கள்.

சில ஆட்டோக்காரர்களும் தங்களால் முயன்ற அளவு குழந்தைகளைத் திணித்து அள்ளிக் கொண்டு போனார்கள்.

மூன்று இளவல்கள் சைக்கிள்கள் ஓட்டிக் கொண்டு சென்றனர்.

அவர்கள் ஓரமாகத்தான் சென்றார்கள். ஆனால், அவர்களுக்குப் பின்னால் ஹாரன் அடித்துக் கொண்டே வந்த லாரி ஒன்றின் ஹாரன் சத்தம் கேட்டு திரும்பிப் பார்த்த அவர்களில் ஒருத்தி பேலன்ஸ் தவறி கீழே விழுந்துவிட்டாள். 'ஐயயோ!' என்று அவளை நோக்கி ஓடியவர்களில் நானும் ஒருவன். ஒன்றுமே நடக்காதது போல கடந்துவிட்டது லாரி.

அவளைத் தூக்கிவிட்டு, கொட்டிய தண்ணீர் பாட்டிலையும், டிபன் பாக்ஸையும் மூடி அவளுடைய நண்பிகளுடன் அனுப்பி வைத்துவிட்டு மீண்டும் நிறுத்தத்திற்கு வந்தவுடன் டக்கென்று என் அப்பா நினைவு வந்தது.

'இப்படி நானும் விழுந்துவிடுவேன்!' என நினைத்துத்தான் பள்ளி நாட்களில் எனக்கு அவர் சைக்கிள் சொல்லிக் கொடுக்கவில்லையோ?

ஏனெனில் மாதம் 1200 ரூபாய் சம்பளம் வாங்கிய அவர் 300 ரூபாயை என் பேருந்து செலவிற்காக கொடுத்துவிட்டார். அவர் நினைத்திருந்தால், மூன்று மாதங்களில் சைக்கிளை வாங்கிக் கொடுத்துவிட்டு, காசை மிச்சப்படுத்தியிருக்கலாம்!

அன்றாட சம்பளம் வாங்கிய நாட்களில்கூட என்னைப் பேருந்தில் ஏற்றி என் கால் வலிக்காமல், உடல் வியர்க்காமல் பள்ளிக்கு அனுப்பி வைத்தார்.

சைக்கிள் பழகாதது நல்லதே!

அப்பாக்கள் என்றும் ஆச்சர்யங்களே.

6 comments:

  1. என்ன சாமி நீங்க.. இப்பிடி சொல்லிட்டீங்க?? .. இப்படித்தான் பொத்தி பொத்தி வளர்த்து பிள்ளைகளுக்கு தைரியமே இல்லாம பண்ணிட்டாங்க...இன்னிக்கு வரைக்கும் எனக்கு டூ வீலர் ஓட்ட தெரியாது ... பை தி பை, என் பையனை நாளைக்கு சைக்கிள் ஓட்ட விடுவேனாங்கிறது இப்போ தேவை இல்லாத கேள்வி என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்..

    ReplyDelete
  2. Anonymous9/02/2016

    No words to explain the Wisdom of our simple humble and prayerful fathers. My Dad is my hero

    ReplyDelete
  3. ஆயகலைகள் அறுபத்து நான்கினையும் தங்கள் பிள்ளைகள் கற்றுத்தேற வேண்டும் எனும் பேராசை பிடித்த இக்காலத்துப் பெற்றோருக்கு மத்தியில் தங்கள் பிள்ளைகளுக்குத் தேவையானதை மட்டும் கொடுத்து அவர்கள் 'சிந்தாமல்,சிதறாமல்' தங்கள் அருகிலேயே இருக்க வேண்டும் என நினைத்த பெற்றோரும் உண்டு.அப்படி ஒருவர் தான் நம் தந்தையைப்பெற்ற பாசமிகு.திரு.கருணாநிதி அவர்கள். இலையெனில் அவரின் மொத்தவருமானத்தில் நான்கில் ஒரு பங்கை இவரின் பேரூந்துக்காக மட்டும் செலவிட்டிருக்க முடியுமா என்ன? மகனுக்கு சைக்கிள் ஓட்டக் கற்றுக்கொடுக்காமல் போயிருக்கலாம்.ஆனால் நின்ற இடத்திலும்,சென்ற இடத்திலும் கண்ட நிகழ்வுகளை அப்படியே நிழற்படமாக வடித்துக் கொடுக்கும் வித்தையைக் கற்றுக்கொடுத்திருக்கிறாரே! கண்டிப்பாக இந்த 'அப்பாக்கள்' ஏன் அம்மாக்களும் கூடத்தான்..." ஆச்சரியங்களே!". ஆனால் இந்த உண்மை பிள்ளைகளுக்குப் புரிவதென்னவோ காலம் கடந்துதான்! நல்லதொரு கவிதை வடித்த தந்தைக்கு என் வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete
  4. GITANJALI A BERNARD
    New York

    Dear Fr. YESU:

    I love your "cycling-circling-recycling" thoughts on your younger days.
    Chewing one's memory - Oh, how sweet it is!

    So you had classmates who bore names as, "KADARKARAI", "SHANKAR" and "MOHAN".
    What is that Kadarkari - kind of "sea shore"?

    You wonder if Nathampatti, or Rajapalayam or anywhere in between is "international".
    May be not.

    But again, any place or region can be international in this global world with high tech connections.
    Additionally, when YESU is in Nathampatti, Nathampatti becomes international.
    Jesus in Rajapalayam makes Rajapalayam another Jerusalem.

    Finally, I loved your rushing to help the young ladies,
    hit by the rushing truck.
    You remind me you are the Good Samaritan.
    That, after all, is what really matters.


    ReplyDelete
  5. Dear Father,Congrats for helping me to remember my Father.
    I am thankful to my Father because before 10th standard he taught me to drive cycle and Tvs50.

    Learning sooner or later everything is for our good only.Thanks be to GOD!

    ReplyDelete