Thursday, September 15, 2016

குருத்துவ உறவு

இன்று மாலை திருச்சிலுவை துறவற இல்லத்திற்கு தேனீர் அருந்தச் சென்றோம்.

இனிய மாலை வேளை. மழை புதுப்பொண்ணு போல சொட்டு சொட்டாய் கண்ணீர் விட்டுக்கொண்டிருந்தது.

இந்த துறவற இல்லத்தில்தான் நான் குருமாணவராய் இருந்தபோது யோகா கற்றுக்கொள்ள வந்தேன். அந்த நினைவுகள் வந்து சென்றன. இன்று புதிதாய் சில அருள்சகோதரிகளின் அறிமுகம் பெற்றேன்.

சிலரின் பிரசன்னம் ஒருவித நம்பிக்கையையும், புத்துணர்வையும் விதைக்கும். அப்படித்தான் இருந்தது இன்று நான் சந்தித்தவர்களின் சந்திப்பு.

மேலும் இன்றைய இரவு உணவிற்கு எங்கள் இல்லத்தில் பணியாற்றும் அனைத்து பணியாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தார் அழைக்கப்பட்டிருந்தனர்.

பெரியவர்கள், சிறியவர்கள், ஆண்கள், பெண்கள், குட்டீஸ்கள் என ஒரே கலர்ஃபுல்லாய் இருந்தது.

இந்தி மொழியில் திருப்பலி இருந்தது.

புனேவுக்கு வரும்போதெல்லாம் ஏதோ புதிதாய் பிறந்தது போலத்தான் இருக்கும்.

என் வாழ்க்கையை ஐந்து ஏழு என பிரித்தால், முதல் மற்றும் இரண்டாம் ஏழு என் ஊரிலும், நான்காம் ஏழு புனேயிலும், ஐந்தாம் ஏழு அருள்பணியாளராகவும், மூன்றாம் ஏழு உயர்கல்வி, மேல்நிலை, ஆயத்தநிலை என கடந்தது என்றும் சொல்வேன்.

நான் குருமாணவராய் இருந்தபோது என் ஜன்னலுக்கு வெளியே கடந்து போகும் சோனாவை இன்று பார்த்தேன். திருமணம் முடிந்து இரண்டு குழந்தைகள் இருக்கிறது என்றவள், 'நீங்க அப்படியே இருக்கிறீங்க!' என்றாள்.

முன்பின் தெரியாதவர்களையும், நெருக்கமாக மாற்றும் உறவு குருத்துவ உறவுதான்.

'நாங்கள் யாருக்கும் அறிமுகமில்லாதவர் எனத் தெரிந்தாலும் எல்லாரும் எங்களை அறிவர்' என்று பவுல் சொன்னதுதான் நினைவிற்கு வருகிறது.

2 comments:

  1. என்றும் போல 'இதுவும் ஒரு நாள்' என்றில்லாமல் இன்று தனக்கேற்பட்ட அனுபவங்களை வெகு இலகுவாகப் பகிர்ந்து கொள்கிறார் தந்தை.மகிழ்ச்சி தரும் விஷயம். இன்றைய வரிகள் புனே குருமடம் தந்தையின் வாழ்க்கையில் எத்துணை முக்கியமான பங்குவகுக்கிறது என்பதை மட்டுமல்ல...குருத்துவத்தின் 'தனித்துவத்தையும்' எடுத்துக்காட்டுகிறது. கண்டிப்பாக "முன்பின் தெரியாதவர்களையும் நெருக்கமாக மாற்றும் உறவு குருத்துவ உறவுதான்" என்பது ஒப்புக்கொள்ள வேண்டிய விஷயமே! நம் வேலைத்தளங்களில் நாம் முதன்முறையாக நம் மேலதிகாரிகளைச் சந்திக்கும் போது இருக்கும் உடல்,உள்ள நடுக்கம் எல்லாம் முதன்முறையாக நம் பங்கிற்கு வரும் குருக்களைப் பார்க்கும் போது இருப்பதில்லை.காரணம் சிலரின் பிரசன்னம் நம் மனத்தில் 'நம்பிக்கையையும்,புத்துணர்வையும்' விதைக்கும் என்பதுதான்.நம் பிரசன்னமும் கூட நாலுபேருக்கு நம்பிக்கையுட்டும் முறையில் அமைந்திட இன்று இறைவனிடம் வரம் வேண்டலாமே! குருத்துவத்தின் மேன்மை சொல்லும் அழகான சில வரிகளைத்தந்த தந்தைக்கு நன்றிகள்!!!

    ReplyDelete
  2. தந்தைக்கு வணக்கமும் வாழ்த்துக்களும் மிக அருமையான பதிவு.
    'நாங்கள் யாருக்கும் அறிமுகமில்லாதவர் எனத் தெரிந்தாலும் எல்லாரும் எங்களை அறிவர்'.இதற்க்கு நன்றி.

    ReplyDelete