Wednesday, September 28, 2016

அதிதூதர்கள்

'வானம் திறந்திருப்பதையும் கடவுளின் தூதர்கள் மானிடமகன்மீது ஏறுவதையும் இறங்குவதையும் காண்பீர்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்' (காண். யோவான் 1:47-51)

நாளை (செப்டம்பர் 29) அதிதூதர்களான மிக்கேல், கபிரியேல், இரபேல் ஆகியோரின் திருநாளைக் கொண்டாடுகிறோம்.

தீமையிலிருந்து காப்பாற்றும் மிக்கேல்,

மங்கள வார்த்தை சொல்லும் கபிரியேல்,

நலம் நல்கும் இரபேல்

என மூன்று அதிதூதர்கள் இருக்கின்றனர் நம் கத்தோலிக்க நம்பிக்கை மரபில்.

தூதர்கள் என்பவர்கள் இசுலாம், யூத, மற்றும் பாரசீக சமயங்களிலும் காணப்படுகின்றனர்.

இறைவனுக்கும், மனிதருக்கும் இடைப்பட்டவர்கள் இவர்கள். இரண்டு இயல்புகளையும் உடையவர்கள் இவர்கள்.

கடவுளைப் போல காலத்தையும், இடத்தையும் கடந்து நின்றாலும், மனிதர்களைப் போல காலத்திற்கும், இடத்திற்கும் உட்பட்டவர்கள் இவர்கள்.

நிறைய நாள்கள் நாம் கடவுளையும், புனிதர்களையும் நினைத்துப் பார்க்கிறோம். நாளை ஒருநாள் இந்த அதிதூதர்களை சிறப்பாக நினைத்துப் பார்க்கலாமே.

என்னைப் பொறுத்தவரையில் நம் குடும்பங்களில் அல்லது நம் நண்பர்கள் வட்டத்தில் இறந்த நம் முன்னோர்களும் காவல்தூதர்களே. இவர்கள் எந்நேரமும் நம்மைச் சுற்றி சுற்றி வருகிறார்கள். நாம் நம் அறையில் தனியாக இருந்தாலும், நெடுந்தூரம் பயணம் செய்தாலும் இவர்கள் அருகில் இருக்கிறார்கள்.

ஆக, அதிதூதர்கள் தரும் முதல் செய்தி 'உடனிருப்பு.'

நாம் தனிமையில் இல்லை. அவர்கள் என்றும் நம் உடனிருக்கிறார்கள்.

இரண்டாவது, நாமும் இந்த அதிதூதர்கள் போல பிறர்வாழ்வில் உடனிருக்க நம்மை அழைக்கிறார்கள்.

இன்று பல நேரங்களில் நமக்கு எல்லாம் இருப்பது போல இருக்கும். ஆனால், ஏதோ ஒரு தனிமை கன்னத்தில் அறைந்துகொண்டே இருக்கும். நான் தனிமையாக இருக்கிறேன் என புலம்புவதை விட்டு, அடுத்தவரும் அப்படித்தானே நினைத்துக் கொண்டிருப்பார் என அவரின் அருகில் சென்றால் நாமும் அதிதூதர்களே.

'கடவுளின் தூதர் ஏறுவதையும் இறங்குவதையும்' காட்சியில் காண்கிறார் யாக்கோபு (காண். தொடக்கநூல் 28:12).

தன் அண்ணன் ஏசாவை ஏமாற்றி தலைப்பேறு உரிமை மற்றும் தந்தையின் ஆசியைப் பெற்றுக்கொண்டு ஓடிக்கொண்டிருக்கும் யாக்கோபு பெத்தேலில் கனவு காண்கின்றார். அந்தக் கனவில்தான் இந்தக் காட்சியைக் காண்கிறார்.

'நான் உன்னோடு இருப்பேன். நீ எங்கு சென்றாலும் உனக்கு நான் காவலாயிருந்து இந்நாட்டிற்கு திரும்பிவரச் செய்வேன்' என்று கடவுள் அவருக்கு வாக்குறுதி கொடுப்பதும் இக்காட்சியில்தான்.

ஆக, முதல் ஏற்பாட்டிலும் இரண்டாம் ஏற்பாட்டிலும் கடவுளின் தூதர்கள் பற்றிய செய்தி 'கடவுளின் உடனிருப்பை' நமக்கு உறுதி செய்கிறது.

இன்று ஒட்டுமொத்தமாக நம் எண்ணத்தில் குறைவுபடுவது இந்த உடனிருப்பு உணர்வே.

இதை நாளைய திருநாள் நிறைவுசெய்வதாக.

இறைவன் நம்மை நிறைவாக ஆசீர்வதிப்பாராக.

2 comments:

  1. அழகானதொரு பதிவு.அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்திருக்கும் இந்த 'அதிதூதர்களை' யார் வேண்டுமானாலும் சொந்தம் கொண்டாடலாம்."தீமையிலிருந்து நம்மைக் காக்கும் மிக்கேலும்,மங்கள வார்த்தை சொல்லும் கபிரியேலும்,நலம் நல்கும் இரபேலும்" நம்முடனே ஒன்றித்திருக்கிறார்கள் என்பது எத்துணை ஆறுதலான விஷயம்! நம் காவல் தூதர்கள் நம் அருகாமையிலேயே நடந்து வருகிறார்கள் என்று என்றோ ஞானோபதேசத்தில் படித்த ஒரு விஷயம் நான் வீட்டை இட்டு இறங்கும் ஒவ்வொரு முறையும் என் ஞாபகத்திற்கு வருவது எனக்குப் பெருமை தரும் விஷயம். காலத்தையும், இடத்தையும் கடந்து நிற்கும் இந்த அதிதூதர்கள் பற்றிய பதிவை தொடக்க நூலின் " நான் உன்னோடு இருப்பேன்; நீ எங்கு சென்றாலும் உனக்கு நான் காவலாயிருந்து இந்நாட்டிற்குத் திரும்பி வரச்செய்வேன்" என்ற வார்த்தைகளோடு இணைத்திருப்பது பிறந்த மண்ணை விட்டு,சொந்தங்களைப் பிரிந்து நிற்கும் பலருக்கு ஊக்கமூட்டும் வார்த்தைகள். இறுதியாக வரும் தந்தையின் வார்த்தைகள்....' தனிமை நம் கன்னத்தில் அறைந்திடினும் அதை நினைத்துப் புலம்புவதை விட்டு அதே நிலையில் இருக்கும் ஒருவருக்கு நம் 'உடனிருப்பைத்' தந்தால் நாமும் ' அதிதூதர்களே!'.....மெய்சிலிர்க்க வைக்கும் இந்த வார்த்தைகளுக்காகத் தந்தைக்கு என் ஆழ்மனத்தின் பாராட்டுக்கள்!!!

    ReplyDelete
  2. 'கடவுளின் தூதர் ஏறுவதையும் இறங்குவதையும்' காட்சியில் காண்கிறார் யாக்கோபு (காண். தொடக்கநூல் 28:12)// When I was telling the story of Jacob and this incident to my son a few days back, he asked me "Silly angels!! why do they have to climb the ladder when they have wings? "

    ReplyDelete