Saturday, September 3, 2016

கேள்விக்கென்ன பதில் - 3

கேள்வி: பிரிவினை சபை அன்பர்கள் இயேசுவை 'அப்பா' என அழைத்து, 'இயேசப்பா' என்ற சொல்லாடலைப் பயன்படுத்துகின்றனர். இதைக் கேட்கும் நம்மவர்கள் அச்சொல்லாடலைப் பயன்படுத்துகின்றனர். அப்படி பயன்படுத்துவது சரியா?

பதில்: 'மண்ணுலகில் நீங்கள் ஒருவரையும் 'தந்தை' ('அப்பா') என அழைக்க வேண்டாம். ஏனெனில் விண்ணுலகில் உள்ள தந்தை ஒருவரே உங்கள் தந்தை' (மத் 23:9) என கற்பித்த இயேசு, தன்னை தன் சமகாலத்தவர்கள் 'அப்பா' என அழைப்பதை விரும்பியிருக்க மாட்டார்.

இயேசுவின் சமகாலத்தில் போதகர்களை 'அப்பா' என அழைத்ததாக ஜோசப் ப்ளேவியுஸ் வரலாற்றுப் பதிவுகள் குறிப்பிடுகின்றன. மற்ற போதகர்கள் பெறும் 'போலி' மரியாதையை தான் பெற விரும்பாத இயேசு ஒருவேளை அந்த டைட்டில் தனக்கு வேண்டாம் என சொல்லியிருக்கலாம்.

ஆனால், இயேசு தன் வானகத்தந்தையை மட்டுமே 'அப்பா' என அழைத்தார். வானகத்தந்தையும் இயேசுவை 'மகன்' என அழைக்கின்றார்.

இயேசு மனிதர் என்னும் நிலையில் நம் சகோதரர், அண்ணன். இதை எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமடலின் ஆசிரியரும், 'அவர் (இயேசு) நம்மை சகோதரர்கள் என அழைக்க வெட்கப்படவில்லை' (எபி 2:11) என எழுதுகின்றார்.

இயேசு உயிர்ப்புக்குப் பின் தன் சீடர்களை திபேரியக் கடலருகே பார்த்து, 'பிள்ளைகளே, மீன் ஒன்றும் படவில்லையா?' எனக் கேட்கின்றார். 'பிள்ளைகளே' என்பது யோவான் நற்செய்தியாளர் 'அன்பிற்குரியவர்களே' என்ற பொருளில் பயன்படுத்தும் வார்த்தை. இந்த வார்த்தையை இவர் தன் திருமடல்களில் அதிகம் கையாளுகின்றார். இந்த ஒரு நிகழ்வை வைத்து இயேசு நம்மை 'பிள்ளைகள்' என்றால், அவரை நாம் 'அப்பா' என்று சொல்வது சரி என்று சொல்லிவிட முடியாது.

நம் தமிழ் மரபில் இறைவனை அம்மையே அப்பா என்று பார்த்துவிட்டதால், இயேசு என்ற இறைவனையும் 'அப்பா' என்று அழைக்க நம் மனம் துடிக்கிறது.

ஆக, இறைவனுக்கும் நமக்கும் உள்ள உறவை யாரோ 'அப்பா-மகன்.மகள்' என பார்க்கத் தொடங்கியதன் விளைவே இயேசுவை 'அப்பா' என்று அழைப்பது.

எனக்குத் தெரிந்த மொழிகளில் - 'இயேசப்பா' என்ற சொல்லாடல் இல்லை. இத்தாலியன் மற்றும் ஜெர்மன் வழிபாடுகளில் இப்படிப்பட்ட வார்த்தை இல்லை.

ஏன்! மலையாளத்தில் 'இயேசுவாகிய பிதாவே' 'பிதாவாகிய இயேசுவே' என்று அழைத்துப் பார்த்தால் அது வித்தியாசமாக தெரிகிறது.

இன்னொரு விளக்கம்.

முதல் ஏற்பாட்டு இறைவனை நாம் 'ஆண்டவர்' என அழைக்கிறோம். அந்த ஆண்டவர்தான் 'தந்தையாகிய அப்பா'.

இரண்டாம் ஏற்பாட்டில் இயேசுவை 'ஆண்டவர்' என அழைக்கின்றோம்.

ஆண்டவர் - அப்பா என்றால்

ஆண்டவர் - இயேசு என்றால்

இயேசு - அப்பா தானே!

மேஜிக் இல்லா லாஜிக்.

2 comments:

  1. இதற்குமேல் மக்களைக்குழப்ப வார்த்தைகள் இல்லை எனும் அளவுக்கு குழப்பத்தின் உச்ச கட்டம்.இதற்குப் பெயர் 'மேஜிக் இல்லாத லாஜிக்' என்கிறார் தந்தை.இதற்குப்பதில் ஒரே வரியில் நம் பிரிவினை சகோதரர்கள் பாணியில் நாமும் இயேசுவை 'அப்பா'என்றழைப்பதில் தப்பில்லை என்று கூறியிருக்கலாம்.தம் சமகாலத்தவரால் இயேசு 'அப்பா'என்று அழைக்கப்படாமல் போயிருக்கலாம்; எபிரேயருக்கு எழுதிய திருமடலின் ஆசிரியரும் இயேசுவை 'சகோதரர்'என அழைத்திருக்கலாம்; இத்தாலியன்,ஜெர்மன்,மற்றும் மலையாள மொழிகளில் கூட 'அப்பா'எனும் வார்த்தை இல்லாமல் போயிருக்கலாம்.அதற்காக 'அப்பா' எனும் வார்த்தை நமக்குப்பிடித்தால் இயேசுவை நாம் அப்படி அழைப்பதை யாரால் தடுக்க இயலும்? அது அழைப்பவருக்கும்,அழைக்கப்படுபவருக்கும் இடையே உள்ள நெருக்கத்தைப் பொருத்ததல்லவா? இத்தனை வியாக்கியானங்களையும் கூறிவிட்டு "ஆண்டவர்- அப்பா என்றால்,ஆண்டவர்- இயேசு என்றால்,இயேசு- அப்பாதானே" என்று தன் லாஜிக்கை தந்தை அவிழ்த்து
    விடுவது " எதையோ சுற்றி மூக்கைத் தொடுவது போல் உள்ளதே!"... என் கூற்று கொஞ்சம் 'அதிக்பிரசங்கித்' தனமாக இருந்தால் தந்தை பொறுத்துக்கொள்வாராக!
    நாளை புனிதர் பட்டம் பெறப்போகும் அன்னை தெரசாவின் பெயரால் வாழ்த்துக்களும்,செபங்களும் அனைவருக்கும் உரித்தாகட்டும்!!!

    ReplyDelete
  2. Anonymous9/06/2016

    Yesu would you please enlighten us with the difference between knowledge and wisdom with biblical and tamil literature backrounds

    ReplyDelete