Thursday, September 29, 2016

கொராசின் நகரே

'கொராசின் நகரே, ஐயோ உனக்குக் கேடு!'

(காண். லூக் 10:13-16)

தன் போதனையைக் கேட்டு திருந்த மறுத்த கொராசின், பெத்சாய்தா, மற்றும் கப்பர்நகூம் நகரங்களைச் சாடுகின்றார் இயேசு.

இயேசுவே இந்நகரங்களைச் சாடினாரா அல்லது இயேசுவின் சீடர்கள் காலத்தில் அவர்களின் பணி இந்த நகரங்களில் எடுபடவில்லை என்பதால் தாங்கள் சாட விரும்பியதை இயேசுவே செய்ததாக அவர்கள் பதிவு செய்தார்களா?

'நீங்கள் மனம் மாறவில்லை!' என்று சபிக்கிறராரே இயேசு. ஏன்?

மனித மனத்தில் இருப்பது அவருக்கு எப்படி தெரிந்தது?

அல்லது மனமாற்றம் என்பது வெளிப்படைச் செயல்களில் தெரியவேண்டுமா?

மனம் மாறுவதற்கு என்று டிகிரி (அளவு) எதாவது இருக்கின்றதா?

இந்த அளவை எப்படி நிர்ணயம் செய்வது?

நாளைய பதிலுரைப்பாடல் (திபா 139) திருப்பாடல் ஆசிரியர், 'உன் உள் உறுப்புக்களை உண்டாக்கியவர் நீரே! என் தாயின் கருவில் எனக்கு உரு தந்தவர் நீரே!' என்று இறைவனின் வியத்தகு ஆற்றலைப் புகழ்ந்து பாடுவதாக இருக்கிறது.

ஆக, நம் உள்ளுறை எண்ணங்களை உய்த்துணர்பவர் கடவுள்.

நம் உள்ளுறை எண்ணங்கள் மற்றவர்களுக்குத் தெரியக் காரணம் நம் பழக்கவழக்கங்களும், செயல்களும், நடை உடை பாவணைகளும்.

எனவே, மனம் மாற வேண்டும்.

அதற்கேற்ற செயல்களும், பண்புகளும் இருக்க வேண்டும்.


1 comment:

  1. இங்கே கொடுக்கப்பட்டுள்ள கல்வெட்டில் உள்ள வார்த்தைகள் உள்மனத்தில் ஒரு பயத்தை ஏற்படுத்துகின்றன என்பது உண்மை.விவிலியத்தில் எங்கே 'ஐயோ கேடு' எனும் வார்த்தை வந்திடினும்,தொடர்ந்து வாசிப்பதை நிறுத்தி விடுவது என் வழக்கம். இவ்வார்த்தைகள் இயேசுவால் கூறப்பட்டதா இல்லை அவரது சீடர்கள் கூறினார்களா என்பதெல்லாம் இரண்டாம் பட்சமே! அன்பே வடிவான இறைவனால் எப்படி இக்கொடூரமான வார்த்தைகளை உச்சரிக்க முடிந்தது? " நம் உள்ளுறை எண்ணங்களும்,செயல்களும் புனிதமாயிருப்பது எத்தனை இன்றியமையாதது" என்பதை நாம் உணர்ந்து கொள்வது மட்டுமேதான் இவ்வாறான வார்த்தைகள் உச்சரிக்கப்படுவதற்குக் காரணமாயிருந்திருக்க முடியும். நம் ஆழ்மனத்தின் எண்ணங்களை அறியக்கூடிய இறைவனுக்கு அவற்றுக்கான அளவுகோல் நம் செயல்களாக மட்டுமே தான் இருக்க முடியும். இப்படிப்பட்ட செயல்களின் புனிதம் காப்போம்.நாளை ' ஐயோ கேடு' எனும் வார்த்தைகள் நம் செவிகளைத் தீண்டாதிருக்க திருப்பாடல் ஆசிரியரோடு இணைந்து " என் உறுப்புக்களின் செயல்கள் உமக்கு ஏற்றவையாகவும், என் உள்ளத்தின் எண்ணங்கள் உமக்கு உகந்தவையாகவும் இருக்கட்டும்" என வேண்டுவோம். மனமாற்றத்திற்கான ஒரு அழைப்புக்கு உகந்த வார்த்தைகளைத் தூவிய தந்தையை இறைவன் நிறைவாக ஆசீர்வதிப்பாராக!!!

    ReplyDelete