Friday, September 16, 2016

நிறைவு

'உமது கண்ணின் மணியென என்னைக் காத்தருளும்.
உம்முடைய சிறகுகளின் நிழலில் என்னை மூடிக்கொள்ளும்.
நானோ நேர்மையில் நிலைத்திருந்து உமது முகம் காண்பேன்.
விழித்தெழும்போது உமது உருவம் கண்டு நிறைவு பெறுவேன்.'
(திருப்பாடல் 17:8, 15)

இன்று காலை திருப்பலிக்கு வெளியே சென்றிருந்தேன்.

பதிலுரைப்பாடல் வாசித்தபோது மேற்காணும் இறைவார்த்தைகள் என் கவனத்தை ஈர்த்தன.

நான் தயார் செய்த மறையுரை ஒதுக்கிவிட்டு இவ்வார்த்தைகளைப் பற்றி பேசினேன்.

மேற்காணும் வார்த்தைகளில் மிகவும் பிடித்தது என்ன தெரியுமா?

'விழித்தெழும்போது உமது உருவம் கண்டு நிறைவு பெறுவேன்!'

திருப்பாடல் எழுதப்பட்ட காலத்தில் மக்கள் 'புவிமைய எண்ணம்' (geocentrism) கொண்டிருந்தனர். கோப்பர்னிகசுக்குப் பின்தான் 'சூரிய மைய எண்ணம்' (heliocentrism) தொடங்கியது.

புவிமைய எண்ணம் என்றால் என்ன?

புவி நடுவில் இருக்கிறது. பகலில் நம் கண்களுக்குத் தெரியும் இரவில் அடி உலகத்திற்கு கடந்து செல்கிறது. சூரியன் இல்லாததால் இரவில் எல்லாம் நிலைத்தன்மைக்கு வந்துவிடும். ஷேக்ஸ்பியர் 'ஒவ்வொரு உறக்கமும் குட்டி இறப்பு. ஒவ்வொரு இறப்பும் நீண்ட தூக்கம்'  என்று சொல்வது போல ஒவ்வொரு நாளும் எல்லாம் இறந்துவிடுவதாக நினைத்தனர் திருப்பாடல் ஆசிரியர் காலத்து மக்கள்.

காலையில் சூரியன் வந்தவுடன் மீண்டும் உயிர்வந்துவிடும் எல்லாவற்றுக்கும்.
நமக்கு அப்படி ஒரு நிலை வருகிறது என வைத்துக்கொள்வோம்.

எல்லாம் இறந்துவிட்டது என்று நினைத்தவர் திடீரென எழுந்தால் முதலில் எதைத் தேடுவார்? தன் மனைவி, பிள்ளை, பணம், நகை அல்லது தான் அதிகம் விரும்பும் ஒன்றைத் தேடுவார்.

ஆனால், நம் திருப்பாடல் ஆசிரியர் ரொம்பவே வித்தியாசமானவர்.

எழுந்தவுடன் கடவுளின் உருவத்தைத் தேடுகிறார்.

அப்படித் தேடி அவரைக் கண்டுகொள்கிறார். மேலும், நிறைவு அடைகின்றார்.

இவரிடம் நாம் காணும் 'நிறைவுதான்' நாம் கற்க வேண்டிய பாடம்.

நிறைவு எல்லாத இடத்தில்தான் கருத்து வேறுபாடுகளும், புகார்களும் எழுகின்றன.

அருள்நிலை வாழ்வில் நிறைவு இருந்தால்தான் வார்த்தைப்பாட்டிலும் நிலைக்க முடியும்.

இன்றைய நற்செய்தியில் லூக்கா இயேசுவைப் பின்பற்றிய பெண்சீடர்களைப் பற்றி எழுதுகின்றார். இந்தப் பெண்கள் தங்கள் வாழ்வில் 'நிறைவு' பெற்றதால்தான் இயேசுவைப் பின்பற்ற முடிந்தது என நினைக்கிறேன்.

அன்று மட்டுமல்ல இன்றும் கடவுளே கண் என்று நினைக்கும் நிறைய பெண்கள் இருக்கிறார்கள்.

ஒவ்வொரு வருடமும் எங்கள் ஊரில் மாரியம்மன் திருவிழாவுக்கு முளைப்பாரி செய்து கொடுக்கும் என் அய்யாமைக்கு ஊர் சார்பாக 100 ரூபாய் கொடுப்பார்கள் (15 ஆண்டுகளுக்கு முன்பு). ஒருமுறை அப்படி கொடுத்த ஊர் பெரியவர், 'லட்சுமி அம்மா, இது போதுமா?' என்றார்.

'போதாதுன்னா எதுவுமே போதாதுதான். போதும்னா இதுவே போதும்!' என்று சொல்லிவிட்டு நகர்ந்தார் அந்த வெள்ளை சேலை சீடத்தி.

இப்பெண்களும், திருப்பாடல் ஆசிரியரும் சொல்லும் பாடம் 'மனநிறைவு' (contentment)!

2 comments:

  1. ஒரு 'soulful' ஆன,அழகான பதிவு.இந்தத் 'திருப்பாடல்களுக்கு' மட்டும் எங்கிருந்து தான் இத்தனை மென்மையும்,மனத்தை உறக்க நிலைக்கு கொண்டு செல்லும் தன்மையும் வருகிறதோ தெரியவில்லை.இன்றையப் பதிவில் கொடுக்கப்பட்டுள்ள திருப்பாடல் வரிகள்..கண்களை மூடிக்கொண்டு ஒரு முறை உச்சரித்தால் விண்ணகமே நம் கண்முன் நிற்பது போன்றதொரு பிரமை.பெருகிவரும் எலக்ரானிக் கருவிகளுக்கு மத்தியில் காலை எழுந்தவுடன் 'அலைபேசி'யின் கண்களில் விழிப்பவர்கள் எங்ஙனம் 'அவர்'முகம் கண்டு நிறைவு பெற முடியும்? எங்ஙனம் 'நேர்மையில்' நிலைத்திருந்து அவர் முகம் காண முடியும்? நமக்குக் கிடைத்த நிறைவான விஷயங்களை மட்டுமே கண்டு திருப்தி அடைவது எப்பொழுது? ஆம்! இறைவனில் மட்டுமே நிறைவு கண்ட பெண்கள் தான் இன்றைய நற்செய்தியில் பெயர் வரும் அளவுக்கு உயர்ந்து நிற்கின்றனர் என்கிறார் தந்தை.நற்செய்தியில் மட்டுமா உள்ளனர் ' நிறைவு'எனும் வார்த்தைக்கு அர்த்தம் தரும் பெண்கள்? தந்தையின் அய்யாமை லட்சுமி அம்மாவின் "போதாதுன்னா எதுவுமே போதாதுதான்; போதும்னா இதுவே போதும்"... இதற்கு மேல் நிறைவு பற்றிப் புரிந்து கொள்ள விவிலியத்தில் வார்த்தைகளைத் தேட வேண்டுமா என்ன? பதிவின் ஆரம்ப ஆங்கில வரிகளைப் புரிந்து நடந்தாலே போதும் நாம் இம்மண்ணில் வாழ்வாங்கு வாழ! " Special Thanks to u dear Father for the lines from The Psalm".ஒரு தியானம் செய்த உணர்வைக் கொடுத்துள்ளீர்கள் தங்களது இன்றைய வரிகள் மூலம்.வாழ்த்துக்களும்,நன்றியும்!!!

    ReplyDelete
  2. 'போதாதுன்னா எதுவுமே போதாதுதான். போதும்னா இதுவே போதும்!' சாமானியர்களிடமிருந்து தான் வாழக் கற்றுக் கொள்ள வேண்டும்

    ReplyDelete