Saturday, January 16, 2016

ஞானம் பெற்றவரே


'பேய்போல் திரிந்து பிணம்போல் கிடந்துஇட்ட பிச்சையெல்லாம்
நாய்போல் அருந்தி நரிபோல் உழன்றுநன் மங்கையரைத்
தாய்போல் கருதித் தமர்போல் அனைவர்க்கும் தாழ்மைசொல்லிச்
சேய்போல் இருப்பர்கண் டீர்! உண்மை ஞானம் தெளிந்தவரே!'

(பட்டினத்தார், பொது, பாடல். 35)

2016ஆம் ஆண்டில் எப்போதும் மனதில் நிறுத்தி வாழ வேண்டிய நன்மொழியாக எதை எடுக்கலாம் என தேடியபோது என் மனதில் நின்றதுதான் மேற்காணும் பட்டினத்தார் பாடல்.

கொஞ்சம் 'கடாமுடா கணேசா' பாடலாக இருந்தாலும், அதன் பொருள் மேன்மையாக இருக்கிறது.

முதலில் பாடலின் பொருள் உணர்வோம்:

1. 'பேய்போல் திரிந்து'
பேய் இருக்கும் என பட்டினத்தார் நம்புகிறார். பேயின் குணநலன் திரிவது. ஆனால், அர்த்தம் இல்லாமல் அது திரிவது கிடையாது. அதன் ஒவ்வொரு பயணத்திற்கும் ஒரு இலக்கு இருக்கும். மேலும், எந்த ஒரு இடத்திலும் அது நிலைத்து நிற்காது.

2. 'பிணம்போல் கிடந்து'
நான் அலைந்து திரியும் வேலை எப்படி இருக்க வேண்டுமென்றால், நான் படுத்தவுடன் தூங்கிவிட வேண்டும். நான் படுக்கையில் எனக்கு தூக்கம் வரவில்லையென்றால், அன்று நான் வேலை செய்யவில்லை என்றுதான் அர்த்தம். படுத்துக்கொண்டே டிவி சேனல் மாத்துவது, புத்தகத்தை புரட்டுவது இதற்கெல்லாம் நேரம் இருக்கக் கூடாது.

3. 'இட்ட பிச்சையெல்லாம் நாய்போல் அருந்தி'
'பிச்சை' என என் உணவை ஏற்றுக்கொள்வது. அதாவது, உணவு ஒரு கொடை. நாய்போல மிச்சம் வைக்காமல், அல்லது எதிர்ப்பு சொல்லாமல் அருந்தி. மொத்தத்தில், குறைகாணாமல் உண்பது.

4. 'நரிபோல் உழன்று'
நரி ஒன்றைத்தான் சிங்கத்தால் கூட அடக்க முடியாதாம். அதாவது, 'நான் யாருக்கும் அடிமையல்ல!' என்பதில் உறுதியாக இருக்கக் கூடியது நரி. மேலும், நரி எந்த நேரத்தில் என்ன பிரச்சினை வரும் என்பதை முன்கூட்டியே அறியக் கூடியது. விவேகத்தோடு அதை எதிர்கொள்ளக் கூடியது.

5. 'நன்மங்கையரை தாய்போல் கருதி'
விவேகானந்தரிடம் இந்த பண்பும் இருந்தது. எல்லாப் பெண்களையும் தன் தாயைப்போல கண்டுபாவிப்பது. எல்லாப் பெண்களையும் தாயைப்போல பார்க்க எளிதான வழி, எல்லாருக்கும் குழந்தைபோல மாறிவிடுவதுதான். மேலும், இதயத்தில் எந்தவித உடல்-உணர்வு எதிர்பார்ப்பும் இல்லாமல் மங்கையரை - அவர்கள் நெருக்கமான நண்பியர் என்றாலும் - அணுகுவது.

6. 'தமர்போல் அனைவர்க்கும் தாழ்மை சொல்லி'
அடுத்தவர்களை உறவினர்களாய் காண்பது. இதைக் கண்டுணர தேவையான முக்கிய பண்பு தாழ்மை. நான் மற்றவர்களை ஒரு படி முன்னால் ஏறவிட்டு, படியில் ஒரு படி நான் பின்னால் ஏறுவதால் என் பயணம் மாறிவிடுவதோ, தடைப்படுவதோ இல்லையே!

7. 'சேய்போல் இருப்பர் கண்டீர்'
குழந்தையின் அடையாளமாக நான் காண்பது சிரிப்பு ஒன்றுதான். இன்று சிரிப்பு என்பது செல்ஃபி எடுக்கும்போது வருவது என்ற நிலைக்கு அரிதாகிவிட்டது. சிரிப்புகள் குறையும்போதுதான் நமக்கு வயதாகிறது. நான் இழந்த சிரிப்பை மீண்டும் நான் கண்டெடுக்க வேண்டும்.

'உண்மை ஞானம் தெளிந்தவரே!' என்பது இந்த ஏழு குணங்களைக் கொண்டிருப்பவரைக் குறிக்கிறதா அல்லது யாரிடம் பட்டினத்தார் இந்நேரம் பேசிக்கொண்டிருக்கிறாரோ, அவரைக் குறிக்கிறதா என்று தெரியவில்லை.இரண்டு பொருளிலும் நாம் எடுத்துக்கொள்ளலாம்.

ஆக, இதைக் கொண்டிருப்பவரும் ஞானம் பெற்றவரே. இதைக் கொண்டிருக்க வேண்டும் என நினைப்பவரும் ஞானம் பெற்றவரே.


3 comments:

  1. அழகான பதிவு.17 தினங்கள் கடந்திடினும் it's never too late என்பதற்கிணங்க 2016 ம் ஆண்டில் தான் மனத்தில் நிறுத்தி வாழ வேண்டிய நன் மொழியாகத் தந்தை தேர்ந்தெடுத்த பட்டினத்தாரின் வரிகளை நம்முடன் பகிர்ந்து கொண்டிருப்பது போற்றுதற்குரியது. "யாதும் ஊரே; யாவரும் கேளீர்" ....நல்ல விஷயங்கள் எங்கிருந்தால் என்ன? அதைத் தேடிப்பிடித்து தான் பயனுறுவது மட்டுமின்றி தன்னைச் சார்ந்தவர்களோடு பகிர்ந்தும் கொள்வது பாராட்டப்பட வேண்டிய விஷயம்.,நல்ல பாடங்களை யாரிடமிருந்து வேண்டுமானாலும் படித்துக் கொள்ளலாம் என்பதை நிரூபிக்க பேய், பிணம்,நாய்,நரியில் தொடங்கி தாய்- சேய் வரை யாரையும் விட்டு வைக்கவில்லை.இவற்றில் அத்தனையையும் ஒரே மூச்சில் நமதாக்கிக்கொள்வது கடினமாயிருக்கலாம்.ஒவ்வொன்றாகத் தொடங்குவோம்; அதை இன்றே தொடங்குவோம்.நாமும் கூட ' ஞானம் பெற்றவர்' பட்டியலில் இடம் பிடிப்போம்.அடுத்தவர் ஞானம் பெற வழி காட்டும் தந்தையே! தாங்களும் 'ஞானம்' பெற்றவரே! ஞாயிறு வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete
  2. Dear Bernard! Thanks a lot for the nice words.It really makes me feel good to know that you're going thro' the comments that I give on Fr.Yesu's thoughts.yes, I was totally at dark regarding the Tamil translations of the great writer Kalhlil Gibran whom I admire so much for various reasons.Fr.Yesu has alteady spoken to me about this.I will ceratainly take your advice on this matter.I sincerely wish& pray that the year 2016 is one of 'Blessings' to you & your family.May The Good Lord bless you in abundance & all the work of your hands.Praying for your health as well. Love& Godbless....

    ReplyDelete
  3. Dear Father,Very very precious words on particular post.Thanks and Congrats.

    ReplyDelete