Wednesday, January 13, 2016

ராசியான

கடந்த வாரம் என் பங்கில் திருப்பலி முடிந்து, வெளியே நின்று எல்லாரையும் வாழ்த்தி வழியனுப்பிக் கொண்டிருந்தபோது, ஒரு பெண்மணி தன் கையில் அணிந்திருக்கும் மோதிரத்தை ஆசீர்வதித்துக் கொடுக்கச் சொன்னார்.

திருமண மோதிரம் என்றால் ஜோடியாகத் தான் மந்திரிப்பர்.

இந்த மோதிரம் தனியாக இருந்தது. மேலும், எமரால்ட் என்று சொல்லப்படும் கல் பதித்து மிக அழகாக இருந்தது.

இந்த பெண்மணிக்கு இயல்பாகவே ராசிக்கற்கள் மேல் ஒரு நாட்டம் உண்டு.

தான் ஏற்கனவே ஒரு கல் வைத்த மோதிரம் வைத்திருந்ததாகவும், அது இருந்தால் தன் வாழ்வில் எல்லாம் நன்றாக நடக்கும் என்றும் சொன்னவர், அது தொலைந்து போனதாக சொல்லி வருத்தப்பட்டார்.

...
...

ராசியான கல். ராசியான நாள். ராசியான படம். ராசியான நேரம். ராசியான பை. ராசியான சட்டை. ராசியான கடிகாரம். ராசியான மோதிரம். ராசியான நபர். ராசியான முகம்.

நாமும் ராசியான பொருட்களை வைத்திருக்கிறோம்.

இவைகள் உண்மையில் ராசியைக் கொண்டுவருகிறனவா, அல்லது இல்லையா என்பது ஒவ்வொருவரின் தனிப்பட்ட நம்பிக்கை.

நாளைய முதல் வாசகத்தில் (1 சாமுவேல் 4) இப்படித்தான் ஒரு நிகழ்வு நடக்கிறது.

பெலிஸ்தியருக்கு எதிரான போரில் இஸ்ரயேலர் தோற்கின்றனர்.

தோல்வியின் காரணம் என்ன என்று எல்லாரும் யோசித்தபோது, ஊர் பெரியவர்கள் எல்லாரும் சேர்ந்து, 'ஆண்டவரின் பேழை நம் நடுவில் இல்லாததால்தான் தோற்றுவிட்டோம்!' என கண்டுபிடிக்கின்றனர்.

உடனடியாக சீலோவுக்கு ஆள்கள் அனுப்பப்பட்டு, ஆண்டவரின் பேழையும் கொண்டுவரப்படுகிறது. பேழை வந்தவுடன் ஒரே ஆர்ப்பாட்டம். இந்த ஆர்ப்பாட்டம் கேட்டவுடன், எதிரிகளும் நடுங்குகின்றனர்.

'ராசியான பேழை நம்மிடம் இருக்கிறது' என்று தைரியமாக போரிடச் சென்றவர்களுக்கு இன்னும் அதிக பேரதிர்ச்சி காத்திருக்கிறது.

பேழை தங்களோடு இல்லாதபோது 4000 இஸ்ரயேலர்கள் இறந்தனர். இப்போது, ராசியான பேழை இருந்தபோது, 30000 இஸ்ரயேலர்கள் இறக்கின்றனர் (ஏறக்குறைய ஏழு மடங்கு பேரழிவு!).

கடவுள் இங்கே அவர்களுக்கு மூன்று விஷயங்களைக் கற்பிக்கின்றார்:

அ. வாழ்க்கையில் ராசியானது, ராசியற்றது என எதுவும் இல்லை. எது எது எந்தெந்த நேரத்தில் நடக்குமோ, அது அது அந்த நேரத்தில் நடக்கும். பிரகாஷ்ராஜ், 'மொழி' படத்தில் சொல்வதுபோல, 'வாழ்க்கையில் ஒரு சில விஷயங்களை வெள்ளைப் பூண்டினால் கூட காப்பாற்ற முடியாது!'

ஆ. ஆண்டவரின் பிரசன்னம் மேஜிக் பிரசன்னம் அல்ல. வேளாங்கண்ணியில் சுனாமி வந்து, பலர் அழிந்தபோது, 'அங்கிருந்த மாதாவும், கடவுளும் மக்களை ஏன் காப்பாற்றவில்லை?' என பலர் விமர்சித்தனர். கடவுள் ஒரு இடத்தில் இருக்கிறார் என்பதற்காக, அங்கே எல்லாம் நன்றாக நடந்துவிடும் என்று பொருளல்ல. ஒரே நொடியில் கசப்பானவற்றை இனிப்பானவைகளாக மாற்றும் மந்திரவாதி அல்ல கடவுள்.

இ. அவரவரின் செயல்கள்தான் அவரவரின் முடிவைக் கொண்டுவருகின்றன. இஸ்ரயேல் பெலிஸ்தியரிடம் தோற்றதற்கு அவர்களின் கீழ்ப்படியாமையும், அவர்களின் குருக்களின் மகன்களின் கீழ்ப்படியாமையும்தான் காரணம். இந்தக் காரணத்திற்காகத்தான் கடவுள் அவர்களை பிலிஸ்தியரிடம் ஒப்புவிக்கின்றார். கடவுள் இரக்கமுள்ளவர்தாம். ஆனால், சில நேரங்களில் ரொம்ப ஸ்டிரிக்ட் ஆன பி.இ.டி. மாஸ்டராகவும் இருக்கிறார்.

2 comments:

  1. இன்றையப் பதிவில் தந்தையின் எண்ண ஓட்டமும் ஒரு பி.இ.டி மாஸ்டருடையதைப் போலவே இருக்கிறது.அவரவர் இராசி என்பது அன்றையப் பொழுது அவரவரின் எண்ண ஓட்டத்தைப் பொறுத்தே அமைகிறது.இதைத்தான் 'காக்கை உட்காரப் பனம் பழம் விழுந்த கதை' எனச் சொல்கிறார்கள்.நம்முடன் இருக்கும் இறைவன் இராசியானதை மட்டுமே செய்ய வல்லவர் என்பது பல சமயங்களில் காலம் கடந்துதான் தெரியவரும்.பொறுமை உள்ள மனங்கள் மட்டுமே இந்த உண்மையைப் புரிந்து கொள்ள இயலும். "வாழ்க்கையின் சில விஷயங்களை வெள்ளைப்பூண்டினால் காப்பாற்ற இயலாமல் போகலாம்; ஆனால் நம் இறைவனால் முடியும்" நம்மையும் கூட மற்றவர்கள் 'இராசியானவர்' என அழைத்தால் எப்படி இருக்கும்? நினைவே சுகமாக இருக்கிறது. தந்தைக்கு வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete
  2. Dear Father,Good sharing on this post.If we be good to others we will receive good.

    If we don't be good to others, we wouldn't receive good even from God.Congrats and Thanks.

    ReplyDelete