Monday, January 11, 2016

ஆறுதல் வார்த்தை

நேற்று மாலை என் பங்கு ஆலயத்தின் அருகில் இருக்கும் ஒரு முதியோர் காப்பகத்திற்கு திருப்பலிக்கு சென்றேன்.

அங்கிருக்கும் ஒரு பாட்டி (பெயர் தெரியவில்லை!) எனக்கு என் சின்ன அய்யாமையை அதிகம் நினைவுறுத்துவார். மிக அழகாக சிரிப்பார். மறதியில் அவதிப்படும் இவருக்கு, நான் சிரித்தவுடன் அவர் சிரிப்பது எனக்கு ஆச்சர்யமாக இருக்கும்.

(நாம் பழகிய உருவங்கள் நம்மைவிட்டு மறைந்தாலும், புதிய இடத்தில் வேறோர் உருவத்தில் அதே குணங்களை நான் பார்க்கும்போதெல்லாம், மரணம் என்பது பொய் என்றே தோன்றுகிறது. நாம் யாரும் இறப்பதில்லை. வேறோர் இடத்தில் பிறக்கிறோம். பிறந்து கொண்டே இருக்கிறோம்.)

நேற்று என் கையைப் பிடித்துக்கொண்டு, 'என் மகள் ரோஸ் அன்னா வந்திருக்கிறாளா?' எனக் கேட்டார். கேட்டபோதே அவரின் கண்களில் கண்ணீர். 'வந்திருப்பார்கள்!' என்றேன் நானும். 'அப்படின்னா அவளை மேலே கூட்டி வா! அவள் பெயர் ரோஸ் அன்னா. 'ப்ளான்ட்' முடி இருக்கும். அழகாக இருப்பாள்!' என்றார்.

'கண்டிப்பாக கூட்டி வருகிறேன்!' எனச் சொல்லிவிட்டு திருப்பலி தொடங்கினேன்.

திருப்பலி முடிந்தவுடன் திரும்பவும் என்னிடம் தன் மகளை அழைத்து வரச் சொன்னார்கள். நானும் 'சரி!' எனச் சொல்லிவிட்டு, அங்கிருந்த காப்பாளரிடம், அவரின் மகளை அழைத்து வர ஏற்பாடு செய்ய சொல்லிவிட்டு வந்தேன்.

இன்று காலை கல்லூரிக்கு வரும்போது அந்த காப்பகத்தின் முன் ஆம்புலன்ஸ் நின்றது.

'என்ன?' என விசாரித்ததில், என்னிடம் பேசிய அந்த பாட்டி இறந்துவிட்டதாக சொன்னார்கள்.

...
...

அந்த பாட்டி தன் மகளை சந்தித்தார்களா? அல்லது ஏக்கத்தோடு இறந்து போனார்களா?

என்னிடம் அவர் ஒப்படைத்த பணியை நான் செய்யவில்லையோ?

என பல கேள்விகள் வந்துகொண்டே இருக்கின்றன என்னுள்.

'மனநிறைவோடு செல்.
இஸ்ரயேலின் கடவுள் நீ அவரிடம் விண்ணப்பித்த உனது வேண்டுகோளைக் கேட்டருள்வார்.'

கடவுள் முன் தன் மனத்தைக் கொட்டிய அன்னாவுக்கு மேற்காணும் வார்த்தைகளால் ஆறுதல் தருகிறார் குரு ஏலி.

அவரின் வார்த்தைகளை எந்த அளவுக்கு அன்னா நம்புகிறார் என்றால், தொடர்ந்து வாசிக்கின்றோம்:

'அன்னா தம் இல்லம் சென்று உணவருந்தினார்.
இதன்பின் அவர் முகம் வாடியிருக்கவில்லை.'

குரு சொன்னால் அது கடவுளே சொன்னதுபோல என எடுத்துக்கொள்கிறார் அன்னா. இதுதான் எளிய நம்பிக்கை.

மற்றொரு பக்கம் பார்த்தால், குருவின் வார்த்தைகள் ஆறுதல் தருவனவாக இருக்க வேண்டும் என்பதே ஏலி வைக்கும் பாடம்.

இன்று அருட்பணியாளர்களை நாடி மக்கள் வருகிறார்கள் என்றால், அதற்கு காரணம் அவர்கள் தரும் ஆறுதல் வார்த்தைக்காகவே.

இன்று நம்மை சுற்றி எவ்வளவோ வார்த்தைகள் இருக்கின்றன.

ஏராளமான வார்த்தைகளை நாம் வாசிக்கின்றோம்.

ஏராளமான வார்த்தைகளை நாம் கேட்கின்றோம்.

சில வார்த்தைகள் பயம் தருகின்றன. சில வார்த்தைகள் புதிய செய்தியை தருகின்றன. சில வார்த்தைகளைப் படித்துவிட்டு, 'ஐயோ! டைம் வேஸ்ட்' என சொல்கிறோம். சில வார்த்தைகளை நாம் குறிப்பெடுத்துக் கொள்கிறோம். சில வார்த்தைகளை நாம் அழிக்கின்றோம். சில வார்த்தைகளுக்கு நாம் காதுகளை மூடிக் கொள்கிறோம்.

ஆறுதல் தரும் வார்த்தைகள் இன்று மிக குறைவு.

அதை நாம் ஒருவர் மற்றவருக்கு தந்தால் நாமும் அருட்பணியாளர்களே!


2 comments:

  1. தந்தைக்கு வணக்கம்.ஆறுதல் தரும் வார்த்தைகள் இன்று மிக குறைவு.
    அதை நாம் ஒருவர் மற்றவருக்கு தந்தால் நாமும் அருட்பணியாளர்களே! உங்கள் பதிவின் இறுதி வார்த்தை என்னை மிகவும் வருடிய வார்த்தைகள் இன்று.இந்த வரிகளுக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.

    ReplyDelete
  2. அருட்பணியாளர்கள் தம் மந்தையின் ஆடுகளுக்குத் தர வேண்டிய ஆறுதல் வார்த்தைகள் பற்றித் தந்தை கூறியிருப்பினும் அவை நாம் யாவருமே ஒருவர் மற்றவருக்குத் தர வேண்டியவையே! விண்ணப்பத்துடன் ஆலயம் நோக்கிச் செல்லும் ஒருவரைப் பார்த்து அஅருட்பணியாளர் " மன நிறைவோடு செல்; இஸ்ரவேலின் கடவுள் நீ அவரிடம் விண்ணப்பித்த உன் வேண்டுகோளைக் கேட்டருள்வார்" எனக் கூறினால் யாரின் முகம் தான் வாடியிருக்கும்? அரிதாகிக் கொண்டிருக்கும் ஆறுதல் வார்த்தைகளை மற்றவருக்குத் தரும் யாவருமே "அருட்பணியாளர்களே!".... சரியாகச் சொன்னீர்கள்.இணையும் கரங்களின் வலிமை சொல்லும் இன்னொரு பதிவு!!! தந்தைக்கு ஒரு சபாஷ்!!!

    ReplyDelete