Tuesday, January 5, 2016

தண்டு வலிக்க

'பொழுது சாய்ந்த பிறகும் படகு நடுக்கடலில் இருந்தது.
ஆனால் அவர் தனியே கரையில் இருந்தார்.
அப்போது எதிர்க்காற்று அடித்தது.
சீடர்கள் தண்டு வலிக்கப் பெரிதும் வருந்துவதைக் கண்ட அவர்
கடல்மீது நடந்து அவர்களை நோக்கி வந்தார்.
அவர்களைக் கடந்து செல்ல விரும்பினார்.'

(காண். மாற்கு 6:45-52)

'பொழுது சாய்ந்த பிறகும்' என்று குறிப்பிடுவதன் வழியாக மாற்கு, நடக்க கூடாத ஒன்று நடந்து கொண்டிருந்தது என அர்த்தம் கொடுக்கிறார். அதாவது, பொழுது சாய்ந்துவிட்டால் படகுகள் கரையில் ஒதுங்கவிட வேண்டும். ஆனால், இங்கே படகு இன்னும் நடுக்கடலில் இருக்கின்றது.

இரண்டு வகை துன்பங்கள் வருகின்றன:

ஒன்று, எதிர்க்காற்று.
மற்றொன்று, சீடர்களின் சோர்வு.

சீடர்கள் கரைக்கு செல்ல முயன்று கொண்டிருக்க எதிர்க்காற்று குறுக்கே நின்றிருக்கலாம். எதிர்க்காற்றுக்கு எதிராக துடுப்பு போட்டதில் அவர்களின் தண்டுவடம் வலித்திருக்கலாம்.

'தண்டு வலிக்கப் பெரிதும் வருந்துவதைக்' காண்கிறார் இயேசு.

இந்த சொல்லாடல் எனக்கு பிடித்திருக்கிறது.

எப்போது நமக்கு தண்டு வலிக்கும்?

அதிக நேரம் கம்ப்யூட்டர் முன் உட்கார்ந்திருக்கும்போது.

அல்லது ஸோஃபாவில் அமர்ந்து கொண்டு குனிந்து ஐபேட் அல்லது மொபைலின் டச் ஸ்க்ரீனைத் தடவிக் கொண்டிருக்கும்போது.

அல்லது அளவுக்கு அதிகமான சுமைகளை கைகளில் எடுத்துக்கொண்டு, நாம் ஏற வேண்டிய எஸ்4 பெட்டி எண்ணை நோக்கி வேகமாக நடந்து ஓடும்போது.

அல்லது 'டக்குனு' திரும்புனேன் - அப்படியே புடிச்சிகிடுச்சு என்று சொல்லும் நிகழ்வு நடக்கும்போது.

அல்லது 'பாவி மக என்ன கனம் கனக்குறா?' என்று நம் காதலியைத் தூக்கிவிட்டு, மேல்மூச்சு, கீழ்மூச்சு விடும்போது.

அல்லது கட்டிலின் மெத்தை சீராக இல்லாதபோது.

அல்லது குளிர்ந்த தரையில் தூங்கும்போது.

அல்லது நம் சீடர்களைப் போல எதிர்க்காற்றில் துடுப்பு போடும்போது.

இவ்வளவு கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கும் சீடர்களை நோக்கி வரும் இயேசுவைப் பற்றி மாற்கு இன்னொரு விடயத்தையும் குறிப்பிடுகின்றார்.

அதாவது, தன் சீடர்களின் துன்பம் கண்டு அவர்களை நோக்கி வருகின்றார் இயேசு.

ஆனால், வந்தவர் அவர்களிடம் சேராமல் அவர்களைக் கடந்து போக விரும்புகின்றார்.

(கடைசியில் அவர் அவர்களின் படகில் ஏறிவிடுகின்றார்)

ஆனால் இயேசு படகில் ஏறாமல் இருந்திருக்கலாம். மாற்கு ஏன் முதலில் ஏற்றாமல் பின் ஏற்றுகிறார்? இதில் முக்கியமான இறையியலை நாம் கவனிக்க வேண்டும். மாற்கு தன் நற்செய்தியை இயேசுவின் இறப்பு, உயிர்ப்புக்கு பின் எழுதுகின்றார். இயேசு இங்கே உடலோடு இனி இருக்கப்போவதில்லை. ஆக, உடலோடு இல்லாத இயேசு படகில் ஏறுவது சாத்தியமில்லை.

இயேசுவின் பிறப்பு விழாக் கொண்டாட்டத்தை நாளை திருக்காட்சி பெருவிழாவோடு நிறைவு செய்கிறோம். என்னதான் குடில் வச்சி கொண்டாடினாலும், அவர் நம் நடுவில் தன் உடலோடு இல்லை.

ஆனால், எப்போதும் அவர் நம் படகைக் கடந்து போய்க்கொண்டே இருக்கிறார்.

நாம்தான் அவரை அடையாளம் கண்டுகொள்ள வேண்டும்.

அப்படி அடையாளம் காணும்போது அவர், 'துணிவோடிருங்கள், நான்தான் அஞ்சாதீர்கள்!' என்பார்.



2 comments:

  1. Dear Father,what a powerful sharing.Yes,I always feel that God crosses across my life starting from small event onward. I thank God for touching my life boat.
    I recognize him in my life as well as through my beloved dear and near ones.

    Congrats Father for encouraging me through your precious writings.God bless Us.

    ReplyDelete
  2. தூங்க முரண்டு பிடிக்கும் குழந்தையைத் தூங்க வைக்க பிரயத்தனப்படும் ஒரு தாயின் தாலாட்டே இன்றையப் பதிவு.நம் வாழ்க்கைப் படகு தடுமாறுகையில், சோதனைகள் துன்பங்கள் எனும் சூறைக்காற்று நம் படகைத் திசை திருப்புகையில்"' அஞ்சாதே; துணிவோடிரு மகனே/ மகளே! உலகம் முடியும் வரை உன்னோடு நானிருப்பேன்"என்று moov ஆக,tiger balm, Amrutanjan ஆக வந்து நம் ' செவிகளில் கிசுகிசுக்கிறார்; நம் தண்டுவடத்தைப் பிடித்து விடுகிறார்.உடலோடு இல்லையெனினும் உணர்வுகளால் நம்முடன் உள்ளார்'.தந்தை கூறுவது போல நாம் தான் அவரை அடையாளம் காண வேண்டும்..அழகான,சுகமான ஒரு பதிவுக்காக தந்தைக்கு நன்றிகள்!!! ஆமாம் ஃபாதர் ! தண்டுவடம் வலிப்பதற்கான பல காரணங்களைக் கூறியுள்ளீர்கள் சரிதான். அதென்ன ,நம் காதலியைத் தூக்கி விட்டு மேல் மூச்சு, கீழ் மூச்சு வாங்கும் போது?? கவனம் ஃபாதர்! கவனம் !! நாம் தூக்கிச் சுமக்க வேண்டிய விஷயங்கள் நிறையவே உள்ளன!!! சரியா??!!

    ReplyDelete