Monday, January 25, 2016

எப்பொழுதும்

நாளை தூய பவுலின் மனமாற்றப் பெருவிழாவைக் கொண்டாடுகிறோம்.

புதிய நம்பிக்கையாக வளர்ந்து கொண்டிருந்த நசரேய மதத்தை (கிறிஸ்தவம்) வேரறுக்க, கையில் வாளோடு புறப்பட்டவர், இறைவனால் ஆட்கொள்ளப்படுகிறார்.

ஆட்கொள்ளப்பட்ட அன்றே ஆள் புதிய மனிதராகின்றார்.

'நான்' என்று எப்போதும் சொல்லிக்கொண்டிருக்கும் மனம், இறைவன் பக்கம் திரும்பி, இனி எப்போதும் 'நீ' என்று சொல்வதுதான் மனமாற்றம்.

பவுல் இதை ஒருமுறை சொன்னது மட்டுமல்லாமல், வாழ்நாள் முழுவதும் அப்படியே வாழ்ந்தும் காட்டுகிறார். அதனால்தான் அவரால், 'வாழ்வது நானல்ல, என்னில் கிறிஸ்துவே வாழ்கிறார்!' என சொல்ல முடிந்தது.

தன் பின்புலம், தன் திருச்சட்டம், தன் இனம், தன் உறவு, தன் தொழில், தன் விருப்பு-வெறுப்பு, தன் நண்பர்கள் வட்டம், தன் சொந்த ஊர் அனைத்தையும் விட்டுவிட அவரால் எப்படி முடிந்தது? அவரின் தைரியம் எனக்கு ஆச்சர்யமாக இருக்கிறது.

இன்று நமக்கெல்லாம் மனமாற்றம் தேவையில்லைதான்.

நாம் பிறந்தவுடன் இயேசுவின் உடலுக்குள் திருமுழுக்கு பெற்றுவிட்டோம்.

இது மட்டும் போதுமா?

இல்லை.

மனமாற்றம் என்பது அர்ப்பணம்.

எனக்கு நானே கொடுத்துக்கொள்ளும் வாக்குறுதி இது.

காலையில் 6 மணிக்கு அலாரம் வைத்து எழுந்து படிக்க வேண்டும் என்று தூங்கப்போய், 6 மணிக்கு அலாரம் அடிக்கும் போது, இன்னும் கொஞ்ச நேரம் தூங்கலாம்! என போர்வையை இழுக்க கை போகும்போது, 'வேண்டாம்' என்று என் மனம் சொன்னால், அது மனமாற்றம்.

அர்ப்பணத்தில் என்ன பிரச்சினை என்றால், அது நீண்ட காலம் நீடிக்க முடியாததுதான்.

மனமாற்றம் என்பது நீண்டகால அர்ப்பணம் (long-term or perpetual commitment).

இன்று நாம் வாழும் வியாபார உலகத்தில் எதுவும் நீண்டகாலம் இருப்பதற்கு உற்சாகப்படுத்தப்படுவதில்லை. இன்றைய மார்க்கெட் எல்லாவற்றுக்கும் ஒரு முடிவு தேதியை குறித்து விடுகிறது. சீக்கிரம் முடிவு தேதி இருந்தால், சீக்கிரம் மக்கள் பயன்படுத்தி, சீக்கிரம் வியாபாரம் நடக்கும் என எல்லாமே நடக்கிறது. பால், தண்ணீர், பிஸ்கட், அரிசி, பருப்பு, கோக், தேன், மருந்து, பற்பசை, ரோஸ் பவுடர், மாய்சரைசர், எண்ணெய், க்ரீம், சீப்பு, சோப்பு, கண்ணாடி என எல்லாவற்றுக்கும் எக்ஸ்பைரி டேட் இருக்கிறது.

நாம் வாங்கிய இரண்டு நாட்களில், மற்றொரு புதிய பொருள் வந்துவிடுகிறது.

இது பொருட்களில் மட்டுமல்ல. நம் வாழ்க்கை மதிப்பீடுகளையும் முழுமையாக மாற்றிவிட்டது.

40 வருட திருமண வாழ்வு, 40 வருட ஆசிரியப் பணி என்றெல்லாம் இனி நாம் பெருமையடைய முடியாது. திருமணம், வேலை, நட்பு நீடிக்கும் காலமும் குறைந்துகொண்டே வருகிறது.

நாம் வாழும் நாட்களை கூட்டிவிட்டோம். ஆனால், இந்த நாட்களுக்குள் வாழும் வாழ்க்கையை குறைத்துவிட்டோம். இதுதான் பெரிய முரண்.

இன்று ஒருநாள் நான் குடிக்காமல் இருப்பதோ, திருடாமல் இருப்பதோ, இலஞ்சம் வாங்காமல் இருப்பதோ கஷ்டமல்ல. நீண்டகாலம் குடிக்காமலும், திருடாமலும், இலஞ்சம் வாங்காமலும் இருப்பதுதான் கஷ்டமாக இருக்கும்.

இப்பொழுதின் ஒவ்வொரு பொழுதும், 'நான்,' 'நீ' என இறைவன் பக்கம் நான் திரும்பினால், இப்பொழுது மட்டுமல்ல...எப்பொழுதும் மனமாற்றம், அர்ப்பணம் சாத்தியமே.


2 comments:

  1. தவக்காலத்தை நோக்கிப் பயணித்துக்கொண்டிருக்கும் நமக்கு அறைகூவலாக வருகிறது இன்றையப் பதிவு."புதிய நம்பிக்கை வளர்ந்துகொண்டிருந்த கிறிஸ்துவத்தை வேரறுக்க வாளோடு புறப்பட்டவர் இறைவனால் ஆட்கொள்ளப்படுகிறார்; அன்றே மனம் மாறுகிறார்". நம்மில் பலர் ' நான் பிறவிக் கிறிஸ்துவன்; கிறிஸ்துவள்' என்று மார்தட்டிக்கொள்வதிலேயே காலத்தை விரயம் செய்கிறோம்.அதனால் சாதித்தது என்ன என்று நம்மையே சுயபரிசோதனைக்குட்படுத்தினால் பதிலில் ஏமாற்றமே மிஞ்சும்."நாம் வாழும் நாட்களைக் கூட்டிவிட்டோம்; ஆனால் வாழும் வாழ்க்கையைக் குறைத்து விட்டோம்".... சவுக்கடி! இன்று இறைவன் என்னைப் பெயர் சொல்லி அழைத்து " மகளே! ஏன் என்னைத் துன்புறுத்துகிறாய்?" என்று கேட்பாரேயானால் என் பதில் என்னவாக இருக்கும்? யோசிக்க வேண்டிய தருணம்.என்னில் உறையும் 'சவுல்' ' பவுலாக' மாறுவது எப்போது? அதற்கும் விடை தருகிறார் தந்தை.'மனமாற்றம்' எனும் நம் முயற்சி 'அர்ப்பணம்' என்ற வாழ்வாக மாறும்போது.வாரத்தின் விடியலிலேயே நாம் வாழவேண்டிய வாழ்க்கையைப் பற்றிய சிந்தனைகளைத்தூவிய தந்தைக்கு நன்றிகள்.அனைவருக்கும் இந்த வாரம் இனிய வாரமாகட்டும்!!!

    ReplyDelete
  2. Dear Father, Thanks on

    நான்,' 'நீ' என இறைவன் பக்கம் நான் திரும்பினால், இப்பொழுது மட்டுமல்ல...

    எப்பொழுதும் மனமாற்றம், அர்ப்பணம் சாத்தியமே.

    Congrats.

    ReplyDelete