Friday, April 8, 2022

ஒரு மனிதன் மட்டும்

நாளின் (9 ஏப்ரல் 2022) நற்சொல்

ஒரு மனிதன் மட்டும்

புனித வாரத்திற்குள் நுழைய நாம் தயாராகி நிற்கும் வேளையில், யூதர்களுக்கும் இயேசுவுக்கும் உள்ள விவாதம் மறைந்து, யூதர்கள் இயேசுவைக் கொன்றுவிடத் தயாராகின்றார்கள் என்பதை இன்றைய நற்செய்தி வாசகம் (யோவா 11:45-57) நமக்குச் சொல்கிறது.

'இனம் முழுவதும் அழிந்து போவதை விட ஒரு மனிதன் மட்டும் மக்களுக்காக இறப்பது நல்லது என்பதை நீங்கள் உணரவில்லை' என்னும் தலைமைக்குரு கயபாவின் வார்த்தைகள் இறைவாக்காகச் சொல்லப்பட்டதாக எழுதுகின்றார் யோவான்.

'பெரியது ஒன்று அழிவதற்குப் பதிலாகச் சிறியது ஒன்று அழிந்து போவது நல்லது' என உரைக்கிறது இறைவாக்கு.

இதை வாசிக்கும்போது நம்மை அறியாமல் சோகம் நம்மைப் பற்றிக்கொள்கிறது. நாம் விரும்புகிறோமோ, விரும்பவில்லையோ வாழ்க்கை இப்படித்தான் நடத்துகிறது.

ஒரு பெரிய நிறுவனம் அழிந்துவிடக் கூடாது என்பதற்காக, அதில் வேலை செய்யும் ஒருவர் தனக்குக் குறைவான ஊதியம் வழங்கப்பட்டாலும் தன்னையே அழித்துக் கொள்கின்றார்.

குடும்பம் என்னும் அமைப்பு அழிந்துவிடக் கூடாது என்பதற்காக, கணவனும் மனைவியும் ஒருவர் மற்றவருக்காக தங்களையே அழித்துக்கொள்கின்றனர்.

பெரிய உடலைக் காப்பாற்றுவதற்காக சிறிய கேன்சர் கட்டி அகற்றப்படுகிறது.

பெரிய மனிதரின் நலனுக்காக சிறிய கோழி பலியிடப்படுகின்றது.

இப்படியாக பெரியவற்றுக்காகச் சிறியவை எப்போதும் பலியாகிக்கொண்டே இருக்கின்றன. 

பெரியவை பக்கம் நியாயம் இருப்பதாகவும், இதில் ஒரு நல்ல நோக்கம் இருப்பதாகவும் சொல்லப்படுகின்றது. 

பெரியவர்களுக்காகவும், பெரிய இனத்துக்காகவும் சிறியது ஒன்று அழிக்கப்படலாம் என்பதைக் கேட்ட நாள் முதல் இயேசு பெரியவர்களின் கண்களிலிருந்து தப்பிச் செல்கின்றார். வெளிப்படையாக அவர் நடமாடவில்லை. 

முதல் வாசகத்தில் (எசேக்கியேல் 37:21-28), 'நான் அவர்களுக்குக் கடவுளாக இருப்பேன். அவர்கள் என் மக்களாக இருப்பர்' என்று சிறியவர்களின் சார்பாகக் கடவுள் நிற்பதைப் பார்க்கின்றோம். சிதறுண்ட மக்களினங்களைக் கடவுள்தாமே கூட்டிச் சேர்க்கின்றார்.

இன்றைய வாசகங்கள் இரு நிலைகளில் நமக்குச் சவால் விடுகின்றன:

ஒன்று, பெரியவற்றுக்காக பலியாகும் சிறியவராக, சிறியதாக நாமும் இருக்கின்றோம். அல்லது மற்றவர்களை அந்நிலைக்கு ஆளாக்கியிருக்கின்றோம். பலிகடா என்னும் மனநிலையில் வாழ்வதும் தவறு, பலிகடா போல மற்றவர்களைப் பயன்படுத்துவதும் தவறு.

இரண்டு, பலிகடா என மற்றவர்கள் நம்மை நினைக்கும்போது, 'நான் பலிகடா அல்ல, தலைவர்' என்ற மனநிலை பிறந்தால் நாம் கடவுள் நிலைக்கு உயர்ந்துவிடலாம்.

'ஆயர் தம் மந்தையைக் காப்பது போல ஆண்டவர் நம்மைக் காக்கின்றார்' என்கிறது எரேமியா இறைவாக்கு.

மந்தையைக் காக்கும் ஆயர் பலிகடா அல்ல. அவர் தன் ஆடுகளுக்காக தன் உடல், பொருள், ஆவி என அனைத்தையும் இழந்தாலும் அவர் அம்மந்தையின் தலைவர்.


2 comments:

  1. “ பெரியது ஒன்று அழிவதற்குப் பதிலாக சிறியது ஒன்று அழிந்து போவது நல்லது” இன்றைய இந்த இறைவாக்கின் வார்த்தைகள் நம் வாழ்வின் பல நேரங்களில் மெய்ப்பிக்கப்படுவதை உணரமுடிகிறது. இந்த வார்த்தைகள் தன் வாழ்விலும் உண்மையாகப் போகின்றன என்பதை உணர்ந்த இயேசு, பெரியவர்களின் கண்களிலிருந்து தப்பிச்செல்வதற்குக் காரணம் பயமா இல்லை தன் நேரம் இன்னும் வரவில்லை என்ற உணர்வா? ஆனாலும் சிறியவர்களின் சார்பாக நிற்கும் கடவுள் அவர் கூடவும் இருந்துள்ளார்…அவருக்கு நடக்கப்போகும் கசப்பான விஷயங்களில் அவருக்கு தைரியமூட்ட. நம்மீது ஒரு பொறுப்பு திணிக்கப்படும்பொழுது, நாம் பலிகடாவாக்கப்பட்டிருக்கிறோம் என்ற உணர்வு நமக்கு வருவதும் தவறு….நம் அதிகாரத்திற்குக்கீழே உள்ளவர்களைப் பலிகடாக்களென நினைப்பதும் தவறு என்று உணர்த்தப்படுகிறோம்.
    “ ஆயர் தம் மந்தையைக்காப்பது போல ஆண்டவர் நம்மைக் காக்கின்றார்”…. நம்மைத் தன் உயிர்கொடுத்துக் காக்கும் ஆயர் நமக்குத் தலைவரேயன்றி ஒரு நாளும் பலிகடாவாகமாட்டார் எனும் உண்மையை உரக்கச் சொல்லும் ஒரு பதிவிற்காகத் தந்தைக்கு நன்றிகள்!!!

    ReplyDelete