Saturday, March 20, 2021

துன்பமும் தூய்மையும்

21 மார்ச் 2021 தவக்காலம் ஐந்தாம் ஞாயிறு

I. எரேமியா 31:31-34 II. எபிரேயர் 5:7-9 III. யோவான் 12:20-33

துன்பமும் தூய்மையும்

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் பாடுகள், இறப்பு, மற்றும் உயிர்ப்பு விழாக் கொண்டாட்டங்கள் நெருங்கிவந்துவிட்ட வேளையில் இன்றைய வாசகங்கள், இயேசுவின் பாடுகள் மற்றும் துன்பம் நோக்கி நம் உள்ளங்களைத் திருப்புகின்றன.

துன்பம் நம் வாழ்வின் தவிர்க்க முடியாத ஓர் எதார்த்தம். 

இன்றைய முதல் வாசகத்தில் (காண். எரே 31:31-34) இஸ்ரயேல் மக்கள் இறைவனிடமிருந்து தூரமாகிப் போகின்றனர். அவர்களுடைய பாவத்தாலும், ஆண்டவராகிய கடவுளின் கட்டளைகளை மீறியதாலும் அவர்கள் இந்த நிலைக்கு ஆளாகின்றனர். தங்களுடைய பாவத்தாலும் கீழ்ப்படியாமையாலும் அந்நியப்பட்டுக் கிடந்த இஸ்ரயேல் மக்களை மீண்டும் தன்னருகே அழைக்கின்ற ஆண்டவராகிய கடவுள் அவர்களோடு புதிய உடன்படிக்கை ஒன்றைச் செய்துகொள்கின்றார். இந்த உடன்படிக்கை மனித உள்ளத்தில் எழுதப்படுவதால் இறைவனும் இஸ்ரயேல் மக்களும் ஒருவரோடு ஒருவர் மிகவும் நெருக்கமானவர்களாக மாறுகின்றனர்.

இரண்டாம் வாசகத்தில் (காண். எபி 5:7-9), எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமடலின் ஆசிரியர், இயேசு கிறிஸ்துவை தனிப்பெரும் தலைமைக்குருவாக முன்வைக்கின்றார். ஆண்டவராகிய இயேசு கெத்சமெனியில் பாடுகள் பட்டதை இறையியலாக்கம் செய்யும் ஆசிரியர், 'மன்றாடி வேண்டினார்' மற்றும் 'நிறைவுள்ளவரானார்' என்னும் இரு சொல்லாடல்களைப் பயன்படுத்துகின்றார். 'மன்றாடி வேண்டுதல்' என்பது பலி ஒப்புக்கொடுத்தலையும், 'நிறைவுள்ளவராதல்' என்பது பலி ஏற்றுக்கொள்ளப்படுதலையும் குறிக்கிறது. இங்கே, 'கீழ்ப்படிதலைக் கற்றுக்கொண்டார்' என்னும் சொல்லாடல் இயேசுவின் உள்ளத்தில் ஏற்பட்ட ஒரு மாற்றத்தைக் குறிக்கிறது. இயேசு தன் துன்பங்கள் வழியாகத் தலைமைக்குருவாக உயர்கின்றார்.

நற்செய்தி வாசகம் (காண். யோவா 12:20-33) மூன்று பிரிவுகளாக அமைந்துள்ளது: (அ) இயேசுவைக் காண கிரேக்கர்கள் சிலர் ஆர்வம் தெரிவிக்கின்றனர்ளூ (ஆ) இயேசு தன் இறப்பு பற்றியும், சீடத்துவம் பற்றியும் போதிக்கின்றார்ளூ மற்றும் (இ) வானிலிருந்து ஒரு குரல் இயேசுவின் செய்தியை ஆமோதிக்கிறது. இயேசு தன் இறப்பை கோதுமை மணி உருவகம் வழியாக எடுத்துரைக்கின்றார். இயேசு சொல்லும் இந்த உருவகம் ஒரு விவசாய உருவகம். நாம் விவசாயம் செய்து விதைகள் விதைக்கும் போது, நாம் செய்யும் விவசாயத்தின் நோக்கம் நாம் தெளிக்கும் விதைகள் எல்லாம் நம் வயலின் மேல் கிடந்து அதை அலங்கரிக்க வேண்டும் என்பதா? இல்லை. விதைக்கப்படுகின்ற விதைகள் போராட வேண்டும். முதலில் விதை மண்ணோடு போராட வேண்டும். மண்ணைத் துளைத்து உள்ளே சென்று தன்னையே மறைத்துக் கொள்ள வேண்டும். இரண்டாவதாக, தன்னை மறைத்துக் கொள்ளும் விதை மடிய வேண்டும். தன் இயல்பை முற்றிலும் இழக்க வேண்டும். மூன்றாவதாக, அதே போராட்டத்துடன் மண்ணை முட்டிக் கொண்டு மேலே வர வேண்டும். இந்த மூன்று நிலைகளில் ஏதாவது ஒரு நிலையில் விதையின் போராட்டம் தடைபட்டாலும் விதை பயனற்றதாகிவிடுகிறது. இங்கே, விதை போல இயேசு பாடுகள் படுகின்றார். விதை நிலத்தில் ஊன்றப்படுவது போல இயேசு அடக்கம் செய்யப்படுகின்றார். விதை புத்துயிர் பெற்று வெளியே வருவது போல இயேசு கல்லறையிலிருந்து வெளியெ வருகின்றார். இதுவே மாட்சிப்படுத்தப்படுதல். இந்த நிலையை அடைந்தவுடன் இயேசு அனைவரையும் தன் பக்கம் ஈர்த்துக்கொள்கின்றார். 

முதல் வாசகத்தில், இஸ்ரயேல் மக்களின் துன்பம் இறைவன் செயலாற்றும் தளமாக மாறுகிறது. இரண்டாம் வாசகத்தில், துன்பத்தின் வழியாக இயேசு நிறைவுள்ளவர் ஆகின்றார். நற்செய்தி வாசகத்தில், இயேசு துன்பங்கள் வழியாக உயிர்க்கின்றார்.

இன்றைய நம் உலகம் துன்பத்தைத் தவிர்க்கவே நமக்குக் கற்றுக்கொடுக்கிறது. துன்பத்தைத் தவிர்ப்பதற்காக நாம் இரண்டு பாதுகாப்புக் கவசங்களைப் பயன்படுத்துகிறோம்: ஒன்று, துன்ப மறுப்பு. இரண்டு, மற்றவரைக் குற்றம் சுமத்துதல். இக்கவசங்களை அகற்றிவிட்டு, நேருக்கு நேராக நாம் துன்பத்தை ஏற்கும்போது நம் உள்ளம் தூய்மை பெறுகிறது.

இன்றைய பதிலுரைப்பாடலில் (காண். திபா 51), இறைவன்முன் தன் பாவம் உணர்கின்ற தாவீது, 'தூயதோர் உள்ளத்தை என்னுள்ளே படைத்தருளும்!' என்று உருகுகின்றார். தாவீது தன்னுடைய துன்ப அனுபவத்தை இறை அனுபவமாக மாற்றுகின்றார். துன்பத்தின் வழியே தூய்மை. துன்பத்தின் வழியே உயிர்ப்பு.

1 comment:

  1. தவக்காலத்தின் ஐந்தாம் ஞாயிறு மறையுரை “துன்பம் இன்றித் தூய்மை இல்லை என்பதை நமக்கு எடுத்து வைக்கிறது.பாவத்தால் அந்நியப்பட்டுப்போன மக்களுடன் உடன்படிக்கை மூலம் இறைவன் அவர்களுடன் நெருக்கமானார் என்று சொல்லும் முதல் வாசகம். ஜெத்சமெனி பாடுகள் வழியாக இயேசுவின் உள்ள மாற்றத்தைச் சொல்லும் “மன்றாடி வேண்டினார்.”....”நிறைவுள்ளவரானார்” எனும் சொற்களைக் கொண்ட இரண்டாம் வாசகம்..மண்ணில் புதைக்கப்பட்டுத் தன் ஆற்றல். அனைத்தையும் காட்டி வெளியே வரும் கோதுமை மணிபோல கல்லறைக்குள் அடக்கம் பண்ணப்பட்ட இயேசு, மூன்றாம் நாள் இயற்கையையே பொய்யாக்கி விட்டு வெளியே வருகிறார் என்று உரைக்கும் நற்செய்தி.

    அனைத்து வாசகங்களிலும் “துன்பமின்றித் தூய்மை இல்லை” என்பது முன்வைக்கப்படுகிறது.ஆனால் இதற்கு நேர் மாறாக நாம் வாழும் உலகம் துன்பங்களைத் தூரத்தில் வைக்கவும்....அடுத்தவர்மேல் பழிபோடவும் நமக்குக்கற்றுத்தருகிறது. துன்பத்தின் வழியே தூய்மை காண்பவர்கள் மட்டுமே துன்பத்தின் வழியே உயிர்ப்பையும் காண முடியும் எனும் உண்மையை உணர்ந்ததனாலேதான் தாவீது அரசரால்....
    “ தூயதோர் உள்ளத்தை என்னுள்ளே படைத்தருளும்!” என்று மனமுருகிப்பாடமுடிந்தது. நமக்கும் அது சாத்தியமாக வேண்டுமெனில் நாமும் துன்பத்தை நமதாக்கிக் கொள்வோம்.நல்லதொரு மறையுரைக்கு நன்றியும்.... தந்தைக்கு ஞாயிறு வணக்கங்களும்!!!

    ReplyDelete