Wednesday, June 28, 2017

நலம் எனக் கண்டேன்

ரெகுலரா செய்யனும்னு நினைச்சு ரெகுலரா செய்ற மிகச் சில காரியங்களில் ஒன்று பார்லர் போவது. ஆண்களுக்குப் பார்லர் என்றால் வெறும் ஹேர்டிரஸ் மட்டும்தான்!

நான் வழக்கமாகச் செல்லும் பார்லருக்கு ஃபோன் அடித்தேன். அதன் உரிமையாளர், பணியாளர், விருந்தினர் உபசரிப்பாளர், கடை திறப்பாளர் எல்லாம் ஒரே ஆள்தான் - முருகன் அண்ணன்.

7 மணிக்கு ஃபோன் அடித்து, '7:10 க்கு வருகிறேன்' என்றேன். 'வாங்க!' என்றார்.

போய்ப்பார்த்தால் 4 பேர் வெயட்டிங். அந்த 4 பேரில் ஒருவருக்கு 'டை' அடிக்க அப்போதுதான் பவுடரைக் கொட்டிக் கொண்டிருந்தார். ஆளுக்கு 10 நிமிடம் என்றாலும் 40 நிமிடங்கள் ஆகிவிடும். இங்கேயே நின்றாhல் செபத்திற்கு செல்ல முடியாது. போய்விட்டு வந்தால் கடை மூடிவிடுவார். ரொம்பவும் யோசித்துக்கொண்டே, 'அண்ணன், போய்ட்டு 8 மணிக்கு வர்றேன்!' என்று சொல்லிவிட்டு திரும்பினேன்.

8 மணிக்குத்தான் என் அறையை விட்டு புறப்பட்டேன். பார்லர் போய் சேர்ந்தபோது 8:12 ஆகியிருந்தது. என்னை அழைப்பதற்காக தன் மொபைலை கையில் எடுக்க, நான் அங்கே போய் இறங்கினேன்.

போவதற்கு முன்பாகவே தூரத்தில் அவர் நிற்பதையும், அவரோடு உரையாடும் ஒருவரையும் கண்டேன். அருகில் வந்தபோது அவர் வட்டிக்கடைக்காரர் எனக் கண்டேன். வட்டிப்பணம் வசூலிக்க வந்திருந்தார் அவர். இவர் பார்லரின் கண்ணாடிக்குக் கீழிருந்த, கைப்பிடி ஒரு பக்கம் ஒடிந்து போயிருந்த டிராயரை இழுத்து அதில் இன்று விழுந்த அனைத்து பணத்தையும் எடுத்து அப்படியே வட்டியாக கொடுத்துக்கொண்டிருந்தார்.

இருக்கையில் அமர்ந்தேன்.

'எங்கே நீங்க வராமா போயிடுவீங்களோ!' என்றார்.

நான் அப்போது ஞானம் பெற்றேன்.

8 மணிக்கு இல்லத்திலிருந்து புறப்படும்போது எனக்குள்ளே ஒரு தயக்கம். 'நாளைக்கு போய் கொள்ளலாம்!' 'அடுத்த வாரம் பார்த்துக்கொள்ளலாம்!' என என் மூளை சொன்னது. ஃபோன் அடிச்சு, 'அண்ணன் எனக்கு வேலையிருக்கு. இன்னொரு நாள் வர்றேன்' என சொல்லலாம் என நினைத்தேன்.

அப்படி ஒரு வேளை நான் சொல்லியிருந்தால் என்ன நடக்கும்?

தன் டிராயரின் இறுதி பணத்தையும் கொடுத்துவிட்டு வெறும் கையராகத்தானே அவர் வீடு சென்றிருப்பார்! ஆக, நான் சொல்லும் சொல்லும், சொல்லைக் காப்பாற்றுவதும், காப்பாற்றாமல் விடுவதும் என்னை பாதிக்கிறதோ, இல்லையோ, அடுத்தவரை அதிகமாகவே பாதிக்கிறது.

குறைத்தே சொல்வதும், அதை நிறைத்தே காப்பாற்றுவதும் என்றும் நலம் எனக் கண்டேன்!

2 comments:

  1. " நலம் எனக்கண்டேன்" தலைப்பே கவிதையாக இருக்கிறது...காலம் கடந்து வந்ததாலோ என்னவோ." குறைத்தே சொல்வதும்,அதை நிறைத்தே காப்பாற்றுவதும் என்றும் நலம் எனக்கண்டேன்!"..... இன்றையப்பதிவின் முத்தான சாராம்சம்.ஆனால் எடுத்த எடுப்பில் சொல்லிவிட்டால் அதன் அழுத்தம் எடுபடாது என்பதாலோ என்னவோ தந்தை அதில் தன் அனுபவத்தையும் கலந்தே கொடுக்கிறார்.நம் கிராமங்களில் பார்பர் ஷாப், அம்பட்டன் கடை என்றெல்லாம் குறிப்பிடப்படும் இடங்கள் நகரங்களில் பார்லர்,சிகையலங்கார நிலையம் என்றெல்லாம் அழைக்கப்பட்டாலும் அதன் உரிமையாளருக்கே கூட அத்தனை மரியாதை கிடைப்பதில்லை.நிலமை இப்படி இருக்க தந்தை இந்தப்பதிவில் வரும் பார்லரின் உரிமையாளரை 'அண்ணா'என பாசம் மேலிட அழைப்பது மட்டுமின்றி,அவருக்குத் தான் வருவதாகக்கொடுத்த வாக்கைக் காப்பாற்றாமல் போயிருந்தால் அன்று மாலை அவரது நிலமை என்னவாயிருக்கும்? எனத்தன்னையே கேட்டுக்கொள்கிறார்.இங்கு கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவது என்பது ஒருபுறமிருக்க அவரின் செய்கையில் விஞ்சி நிற்பது "மனித நேயமே!" மனிதனை மாக்களிலிருந்து வேறுபட்டுக்காட்டுவது அவன் சார்ந்திருக்கும் தொழிலல்ல....அவனிடமிருக்கும் மனிதமே! என்பதை அழகாக சித்தரித்திருக்கிறார் தந்தை. நன்றியும்! வாழ்த்துக்களும்!!
    தந்தைக்கு ஒரு வார்த்தை.....தாங்கள் தோளில் சுமந்து கொண்டிருக்கும் பணியும், தங்களது கடமையுணர்வும் தங்களுக்கு எந்த நேரத்தையும் மிச்சமாக வைப்பதில்லை என்பது எங்களுக்குத் தெரியாத ஒன்றல்ல.ஆனாலும் கேட்கிறோம்...உரிமையுடன் கேட்கிறோம்....இந்தப்பதிவின் படைப்பை நீங்கள் மீண்டும் தொடரவேண்டுமென்று.கண்டிப்பாக இது உங்களுக்கும்,எங்களுக்கும் சேர்த்தே பலன் தரும் ஒரு விஷயம் என்பது நான் சொல்லித்தெரிய வேண்டிய விஷயமல்ல.தங்களின் படைப்பை மீண்டும் தொடரலாமே! நன்றி!!!

    ReplyDelete
  2. நல்ல செய்தி.. சுவையான செய்தி... சொன்னா அதை செய்யணும்னு நறுக்கான செய்தி....

    ReplyDelete