Monday, July 25, 2016

தங்கம் லோன்

இரண்டு நாள்களுக்கு முன் ஆபரணத் தங்க நகை கடைகளின் உரிமையாளர்களை டில்லியில் சந்தித்த நம் பிரதமர் மோடி இரண்டு விஷயங்களைச் சொன்னார்:

அ. கருப்புப் பணம் வைத்திருப்பவர்கள் செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் அதை அரசிடம் சொல்லிவிட வேண்டும்.

ஆ. வீட்டில் அனைவரும் வைத்திருக்கும் தங்க நகைகளை அரசிடம் ஒப்படைத்து இரசீது பெற்றுக்கொள்ள வேண்டும். அதாவது, நாம் தங்க நகைகளை வருடத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறைதான் பயன்படுத்துகின்றோமாம். மற்ற நாட்கள் எல்லாம் அது நம் வீட்டில் சும்மா தான் இருக்கிறதாம். சும்மா இருக்கிறதை அரசிடம் கொடுத்தால் அரசின் தங்க இருப்பு அதிகமாகுமாம். நம் நாடு வளர்ந்த நாடாகிவிடுமாம்.

இதுதான் நம்ம மோடி மஸ்தான் வித்தை.

நம்ம நாட்டில் உள்ள வங்கிகளில் கோடிக்கணக்கில் கடன் வாங்கி விட்டு இங்கிலாந்து சென்றுவிட்டார் மல்லையா. 'அவரிடம் இருந்து கடனை எப்படி பெறப் போகிறீர்கள்?' என்று நிருபர் ஒருவர் மோடியிடம் கேட்கின்றார்.

அதற்கு மோடி சொல்கிறார்: 'மல்லையாவின் ரேஷன் கார்ட் மற்றும் கேஸ் மானியம் ரத்து செய்யப்பட்டிருக்கிறதாம்!'

ஆமாம் மோடி சார். ரேஷன்ல அரிசி, பருப்பு, சீனி வாங்க முடியாம மல்லையா ரொம்ப கஷ்டப்படுவார். உடனே உங்ககிட்டு வந்த சரணடைந்துவிடுவார்.

'சீப்பை ஒளிச்சு வச்சா கல்யாணம் நடக்காதுன்னு!' சொல்ற வடிவேல் காமெடி மாதிரி இருக்கு உங்கள் பதில்.

வாழ்த்துக்கள்!

நிற்க.

இன்று ஒரு வங்கியில் காசோலை மாற்றச் சென்றிருந்தேன்.

மதியம் வழக்கமாகக் காற்றாடும் அந்த வங்கியில் இன்று நிறைய பெண்கள் கூட்டம்.

திங்கள் கிழமை மதியம்தான் நகைக்கடன்கள் முடித்தவர்களுக்கு நகைகள் திரும்ப கொடுக்கப்படுமாம். ஆகையால்தான் இவ்வளவு கூட்டம்.

ஒரு அம்மா தான் ஒரு லட்சம் ரூபாய்க்கு அடகு வைத்த ஐந்து பவுன் நகைகளை திரும்பப் பெறுவதற்காக வந்திருந்தார். அவரின் விண்ணப்பங்களை சரி செய்த மேனேஜர் அவரின் நகைகளை திரும்ப ஒப்படைத்தார். நகைகள் இருந்த பையின் சீலை அவரால் பிரிக்க முடியாமல், யாரிடம் கொடுக்க என்று அவரே யோசித்து, அந்த வங்கியிலேயே நம்பிக்கைக்குரியவராய் தெரிந்த என்னிடம் கொண்டு வந்தார்.

'தம்பி! இதைப் பிரிங்க!' என்றார்.

கஷ்டப்பட்டுப் பிரித்தேன்.

'என் மகளின் தலைப்பிரசவத்துக்கு அடகு வைத்த நகைகள். குழந்தை பிறந்து இறந்து விட்டது. அம்மாவை மட்டும்தான் காப்பாற்ற முடிந்தது. ஐந்து வருடங்களாகக் கட்டி இப்போதுதான் மீட்கிறேன்' என்றார்.

அவர் பேசி முடிக்கவும், நான் பிரிக்கவும் சரியாக இருந்தது.

'வேகமாக அவற்றை வாங்கித் தன் கைகளால் தடவிப்பார்த்தார்!'

பேறுகால வேதனையுற்ற தன் மகளின் வியர்வைத் துளிகள் அந்த செயினிலும், வளையலிலும் படிந்திருப்பதை அவர் அறிந்து கொண்டார் போல!

வெறும் மஞ்சள் கையிற்றை மட்டும் கழுத்தில் கட்டிக் கொண்டு நிறையப் பெண்கள் கூலி வேலை செய்வதையும், காய்கறிகள் விற்பதையும், கட்டிட வேலைகள் செய்வதையும் பார்த்திருக்கிறேன்.

இந்த மஞ்சள் கயிறுகளுக்குப் பின் எத்தனையோ வங்கிகளின் அடகுச் சீட்டுகள் இருக்கலாம்.

நம்ம மோடிக்கு யார் சொல்வார் இந்த மஞ்சள் கயிறுகள் பற்றி?

4 comments:

  1. Anonymous7/26/2016

    Today's blog finds tears in me Yesu. My Amma was gold-chainless for many years because she had to spend for my medical expenses. But she wished to wear those days.
    Now she can wear so many but she doesn't want saying எம்புள்ளங்கதாயா எனக்கு அழகு

    ReplyDelete
    Replies
    1. Father... moving testimonial...

      Delete
    2. Father... moving testimonial...

      Delete
  2. இரு தினங்களாகத் கொஞ்சம் நுனிப்புல் மேய்ந்து, தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டு தன் பாணியில் களத்தில் இறங்கி விட்டார் தந்தை.மனத்தை நெகிழச்செய்யும் ஒரு பதிவு. தாம் பெற்ற பெண் மக்களின் திருமணத்திற்காகவும்,பேறுகாலத்திற்காகவும் வாங்கிய கடன்களின் வட்டியைக் கணக்குப் பார்ப்பதற்குள் புது மணம் மாறாத மகள் வீடு திரும்புவதும், மகளோ இல்லை பிறந்த குழந்தையோ மடிந்து போவதும் நமக்குப் புதிதல்ல. இதன் பின் ஒளிந்திருக்கும் கண்ணீரும், நெஞ்சின் அழுத்தமும் தந்தையே ...தங்களுக்கும் எனக்கும் வேண்டுமானால் பெரிய விஷயமாகத் தெரியலாம்.ஆனால் நாளுக்கு ஒரு நாடும்,நாட்டுக்கு ஒரு உடையுமாக வலம் வரும் மோடி போன்றவர்களுக்கும்,சொந்த மண்ணை சுரண்டி விட்டுத் தப்பித்து ஓடும் மல்லையா போன்றவர்களுக்கும் இது ஒரு விஷயமே அல்ல. நமக்கு இது ஒவ்வொன்றும் சரித்திரமெனில் அவர்களுக்கு இது ஒரு ' சம்பவம்'.அவ்வளவே! நம்மைப் பொறுத்தவரை நம் குலப் பெண்களின் ' மஞ்சள் கயிறாவது' நிலைக்க வேண்டுமே என்பது தான் பல நலம் விரும்பிகளின் கவலை.அதையாவது விட்டு வைப்பார்களா நம் அரசியல் வாதிகள்? கண்களைக் கசிய வைத்ததொரு பதிவிற்காகத் தந்தைக்கு என் வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete