Monday, May 9, 2016

பவுலுஸ்

'பவுலுஸ்' என்ற ஓர் உரோமையை குடும்பப் பெயர் கிறிஸ்தவத்தின் முக்கியமான தூணாக மாறும் என்று யாரும் நினைத்துப் பார்க்கவில்லை.

லத்தீன் மொழியில் 'பவுலுஸ்' என்றால் 'சிறிய,' 'சின்னதான,' அல்லது 'தாழ்ந்த' என்பது பொருள். ஆகையால்தான் தமிழில் இவரை 'சின்னப்பர்' என அழைக்கின்றோம்.

சவுல் பவுலாக மாறிய நிகழ்வு இரண்டாம் ஏற்பாட்டில் நான்கு முறை சொல்லப்பட்டுள்ளது: திப 9:1-9, 22:6-16, 26:12-18, மற்றும் கலா 1:11-24. இந்த நான்கு பதிவுகளில் முதல் மூன்று லூக்காவினுடையது. நான்காம் பதிவு பவுலின் சொந்தப் பதிவு.

பவுலின் பதிவை லூக்காவின் பதிவோடு ஒப்பிட்டுப்பார்க்கும்போது, பவுலின் மனமாற்ற நிகழ்வில் நிறைய வேறுபாடுகள் இருக்கின்றன. மேலும், தன் மூன்று பதிவுகளிலும் லூக்கா முன்பின் முரண்படுகின்றார். உதாரணத்திற்கு, திப 9ல் இயேசுவின் குரலை எல்லாரும் கேட்கின்றனர். ஆனால் 22ல், பவுல் மட்டுமே கேட்க, மற்றவர்கள் கேட்க முடியவில்லை.

இந்த நான்கு பதிவுகளில் எது உண்மையானது?

சவுலின் மனமாற்றம் அவரின் வாழ்வில் ஒரு முக்கியமான நிகழ்வு. அந்த நிகழ்வு எந்த அளவுக்கு வியப்புக்குரியதாக இருந்தது என்றால், அதை யாரும் வார்த்தைகளில் விளக்க முடியவில்லை. அப்படி விளக்க முடிந்துவிட்டால் அந்த நிகழ்வின் வியப்பு மறைந்துவிடும். ஆகையால்தான், லூக்கா இந்தக் குழப்பத்தை சரி செய்யாமல் அப்படியே விடுகின்றார்.

இயேசுவுக்கும் சவுலுக்கும் இடையே நடந்த உரையாடலை இங்கே பார்ப்போம்:

'சவுலே, சவுலே, ஏன் என்னைத் துன்புறுத்துகிறாய்?'

'ஆண்டவரே, நீர் யார்?'

'நீ துன்புறுத்தும் இயேசு நானே!'

சவுல், 'ஆண்டவரே' என இயேசுவை அழைக்கும்போது, அந்நாளில் வழக்கத்தில் இருந்த, 'ஐயா, சார்' என்ற அர்த்தத்தில்தான் அழைக்கின்றார்.

இயேசு தன்னைத் தன் மக்களோடு ஒன்றிணைத்துக்கொள்கின்றார்.

'நீங்கள் இவற்றைச் செய்தபோதெல்லாம் எனக்கே செய்தீர்கள்' என்று இறுதித்தீர்ப்பு பற்றிச் சொல்லும் இயேசு, இங்கே தன் மக்களுக்கு இழைக்கப்படும் துன்பங்கள் தனக்கே இழைக்கப்படுவதாகச் சொல்கின்றார்.

கிறிஸ்தவத்தின் கடவுளின் தனிச்சிறப்பு இதுதான்.

இவர் தன்னை நம்பும் மக்களோடு தன்னையே இணைத்துக்கொள்கிறார்.

ஆக, பவுலின் மனமாற்ற நிகழ்வு அவருக்கு முக்கிய அனுபவமாக இருந்ததுபோல, அது நமக்கும் புதிய அடையாளத்தைக் கொடுக்கின்றது.

என்னில் இறைவன் தன்னையே ஒன்றிணைக்கின்றார்.

இது என் வாழ்வை நான் மேன்மையாக வாழ என்னை தூண்டுகிறது.

1 comment:

  1. 'சவுலாக' இருந்து 'பவுலாக' மாறியவரின் மனமாற்றம் குறித்த ஒரு பதிவு."இந்த நிகழ்வு எவ்வளவு வியப்புக்குரியதாக இருந்ததென்றால் அதை யாரும் வார்த்தைகளில் விளக்க இயலவில்லை.அப்படி விளக்க முடிந்துவிட்டால் அந்த நிகழ்வின் வியப்பு மறைந்து விடும்." ஒருவரின் ' மனமாற்றம்' என்பது எத்தனை அழகான,வியப்புக்குரியதொரு விஷயம் என்பதை தந்தை தன் சொற்களில் விளக்க முற்படுவது அழகு." நம்மில் சிறிய சகோதரனுக்கு செய்யும் ஒரு உதவி இயேசுவுக்கே செய்தது" என்ற பாணியில் " அவரது மக்களுக்கு இழைக்கப்படும் துன்பங்களும் அவரைப் பாதிப்பவையே".... தன்னையே தன் மக்களோடு ஐக்கியப்படுத்திக் கொள்ளும் இறைவன்! 'கிறித்துவத்தின்' மணிமுடி இதுதான்! அப்படியெனில் என்னில் தன்னையே ஒன்றிணைக்கும் இறைவனுக்காக நான் மனம் மாறுவது; என் வாழ்வை நான் மேன்மையாக்கப்போவது எப்பொழுது? அது ""இன்றாகவே" இருக்கலாமே! தன் மக்களைத் துன்புறுத்திய சவுலைத் திருச்சபையின் தூணாக மாற்றிய இறைவன் நம்மிலும் பல அதிசயங்களை நிகழ்த்த வல்லவர் என்பதை நம்புவோம்.' கருத்தாழமிக்க' பல விஷயங்களைத் தாங்கி வந்த பதிவிற்காகத் தந்தைக்கு நன்றிகள்!!!

    ReplyDelete