Sunday, April 26, 2015

சொந்தக் காலில் நிற்க...

இன்று நல்லாயன் ஞாயிறைக் கொண்டாடுகிறோம்.

ஆயனின் முக்கியமான பணி ஆடுகளை கிடையிலிருந்து அழைத்துக் கொண்டு சென்று, நல்ல மேய்ச்சல் மற்றும் தண்ணீர் கொடுத்துவிட்டு, மீண்டும் கிடைக்கு கொண்டு வந்து சேர்ப்பது. ஆக, ஒரு ஆயனின் பணி வழிகாட்டுதல், உணவூட்டுதல். பாதுகாப்பு தருதல் என்ற மூன்று. ஆயனாக நாம் குடும்பத்தில் இருந்தாலும், சமூகத்தில் இருந்தாலும், திருச்சபையில் இருந்தாலும் இந்த மூன்று பணிகளையும் செய்ய வேண்டிய கடமை இருக்கிறது.

இந்த மூன்று பணிகளில் ஏதாவது ஒன்றில் தவறினாலும், ஆடுகளுக்கு சேதராம் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. வழிகாட்டவில்லையென்றால் ஆடுகள் திசைமாறிப் போகும், உணவூட்டவில்லையென்றால் பசித்திருக்கும். பாதுகாப்பு தரவில்லையென்றால் ஓநாய் வந்து அடித்துச் செல்லும்.

நான் ஒருவாரமாக ஜாக்கிங் செல்லும் 'கஃபரெல்லா' என்ற பார்க்கின் ஒரு பகுதி ஆடுகளுக்கும், மாடுகளுக்கும் என ஒதுக்கப்பட்டிருக்கின்றது. இரண்டு நாட்களாக அதைக் கவனித்தபோது ஒன்றைக் கண்டேன். சரியாக மாலை 6 மணிக்கு ஆடுகளைக் கொட்டிலிலிருந்து திறந்து விடுகிறார்கள். பார்க்கில் அவை எங்கும் மேயலாம். இடையிடையே தண்ணீர் தொட்டிகளும் உள்ளன. ஓநாய் அச்சம் அறவே கிடையாது. யார் வழிநடத்துதலும் இல்லாமல் சரியாக 7:30 மணிக்கு கொட்டிலுக்குத் திரும்பவிடுகின்றன. 

இந்தச் செயலை இந்த ஆடுகளுக்கு பழக்கியவர் யாராக இருக்கும்? ஆக, ஆயன் இல்லாமல் இருப்பதற்கு ஆடுகள் பழகிக் கொண்டுள்ளன. இதைத்தான் ஆங்கிலத்தில் resilience என்று சொல்வார்கள். தன் தந்தையை ஒரு வருடத்திற்கு முன் இழந்து வருந்திய என் பங்கின் பெண் ஒருவர் நேற்று தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இன்று கொஞ்சம் உடல்நலம் தேறியிருந்ததால் நற்கருணை கொண்டுவரச் சொன்னார்கள். நானும் சென்றேன். நற்கருணை கொடுத்து முடித்துவுடன், 'ஓ'வெ அழத் தொடங்கினார். இறந்த அவரது தந்தைக்கு எப்படியும் 80 வயது இருக்கும். இவருக்கு வயது 45 இருக்கும். காவல்துறை அதிகாரியாக (நம்ம ஊர் சப்-இன்ஸ்பெக்டர் கிரேடு) இருக்கிறார். இன்னும் திருமணம் ஆகவில்லை. இவருடைய அம்மாவும் உடல்நலம் சரியில்லாதவர். தன் தந்தை இறந்து ஒரு வருடம் ஆகியும் அதிலிருந்து அவரால் வெளிவர முடியவில்லை. அவரின் சோகம் அவர் ஒருவருக்குத்தான் தெரியும். அவரை நான் தவறாகச் சொல்லவில்லை. ஆனால், ஒரு ஆயனின் வேலையை அவரது தந்தை செய்யத் தவறிவிட்டார். 'ஆடுகளால் சொந்தக் காலில் நிற்கப் பயிற்றுவிப்பதும் ஆயனின் வேலைதானே!'

வாழ்வில் ஒரு கட்டத்தில் ஆயன் தன்னிடமிருந்து எடுக்கப்படுவான் என்று தெரிந்த இயேசு தன் சீடர்களை அதற்கேற்றாற்போல சொந்தக்காலில் நிற்கத் தயாரிக்கின்றார். ஆக, நான் எந்த நிலையில் ஆயனாக இருந்தாலும், என் பார்வையில் இருக்கும் மந்தையை நான் சொந்தக்காலில் நிற்கத் தயாரிக்கத் தவறுகிறேன் என்றால் என் பணியில் குறைவிருக்கிறது என்றே அர்த்தம்!


1 comment:

  1. ஆரம்பகாலத்திலிருந்தே சிலருக்கு அவர்கள் விரும்புவதெல்லாம் கிடைத்து விடுகிறது. திடீரென்று யாராவது அவர்களுக்கு ' இல்லை' என்று சொன்னாலோ, நினைத்தது நடக்கவில்லை என்றாலோ அதைத் 'தோல்வி'யாக நினைத்து விரக்தியின் உச்சத்துக்கே சென்றுவிடுகிறார்கள்; உயிரை மாய்த்துக் கொள்ளும் முயற்சியும் இந்த இயலாமையின் வெளிப்பாடே.பிள்ளைகள் வளர்ந்துவரும்போதே பெரியவர்கள் பிள்ளைகளுக்கு 'ஏமாற்றத்தையும்' சுவைக்க,பழக்கப்படுத்த வேண்டும்.தாயோ,தந்தையோ இல்லை எந்த ஒரு தலைவனுமே தனக்குப்பின் தன்தலைமுறைகளை,தொண்டர்களை தங்கள் விழுமங்களின் துணையோடு நடைபோடத் தாங்கள் வாழும் காலத்திலேயே பழக்க வேண்டும்.அதுவே எந்த ஒரு தலைவனுக்கும் வெற்றி. இலையெனில் தந்தை குறிப்பிட்டுள்ள காவல்துறை அதிகாரியின் கதிதான் ஏற்படும்.ஒரு காவல்துறை அதிகாரிக்கே இக்கதி என்றால் மற்றவருக்கு....???

    ReplyDelete