ஆயன் போல
இன்றைய முதல் மற்றும் நற்செய்தி வாசகங்களில், 'ஆயன்' என்ற உருவகம் கையாளப்படுகின்றது.
முதல் வாசகத்தில் (காண். எசா 40:1-11), பாபிலோனியாவில் அடிமைப்பட்டுக் கிடந்த மக்களை நோக்கி இறைவாக்குரைக்கும் எசாயா, 'ஆறுதல் கூறுங்கள்! என் மக்களுக்குக் கனிமொழி கூறுங்கள்!' என்று ஆண்டவரின் வார்த்தைகளை எடுத்துரைக்கின்றார். மேலும், 'ஆண்டவரின் வார்த்தையின் ஆற்றல் என்ன' என்பதையும் இப்பகுதி நமக்குக் காட்டுகிறது: 'புல் உலர்ந்து போகும். பூ வதங்கி விழும். உண்மையில் மானிடர் புல்லே ஆவர்! புல் உதிர்ந்து போகும். பூ வதங்கி விழும். நம் ஆண்டவரின் வார்த்தையோ என்றென்றும் நிலைத்திருக்கும்!' தொடர்ந்து, ஆயன் செய்யக் கூடிய நான்கு பணிகளை ஆண்டவர் எடுத்துரைக்கின்றார்: (அ) ஆயனைப் போல மந்தையை மேய்ப்பார், (ஆ) ஆட்டுக்குட்டிகளைத் தம் கையால் ஒன்றுசேர்ப்பார், (இ) குட்டிகளைத் தோளில் சுமப்பார், மற்றும் (ஈ) சினையாடுகளைக் கவனமுடன் நடத்திச் செல்வார். ஆக, அனைத்து ஆடுகள்மேலும் அக்கறை கொள்பவராகவும், வலுவற்ற ஆடுகளைப் பாதுகாக்கிறவராகவும் இருக்கிறார். எருசலேமை ஆட்சி செய்த அரசர்கள் இப்படி இருக்கத் தவறினர். தங்களுடைய சிலைவழிபாட்டால் மக்களையும் திசைதிருப்பினர். ஆண்டவர் இதற்கு முந்தைய அரசர்களின் ஆட்சியைக் களைகின்றார்.
நற்செய்தி வாசகத்தில் (காண். மத் 18:12-14), திருச்சபைப் பொழிவின் தொடக்கத்தில் வருகின்ற காணாமற்போன ஆடு உவமை வழியாக, ஒரு சபையில் அனைவரும் முக்கியமானவர்கள் என்பதை இயேசு எடுத்துரைக்கின்றார். நூறு ஆடுகளில் ஒன்று தொலைந்தால், தொலைந்த அது கண்டுபிடிக்கப்பட்டவுடன் அதிக மகிழ்ச்சி தருகிறது. ஆடுகளின் உரிமையாளர் ஆட்டைத் தேடிச் செல்கின்றார். அதைக் கண்டுபிடிக்கும் வரை அவர் ஓய்வதில்லை.
'ஆயர்' உருவகம் நமக்குச் சொல்லும் பாடம் என்ன?
(அ) வலுவற்றவற்றின்மேல் அக்கறை
உடல், உள்ளம், ஆன்மா என வலுவற்ற நிலையில் இருக்கும் அனைவர்மேலும் சிறப்பான அக்கறை கொள்ள நாம் அழைக்கப்படுகிறோம். இறைமையைப் பொருத்தவரையில் மனிதம் என்பது வலுவின்மை. மனுவுருவாதல் நிகழ்வின் கடவுள் வலுவற்ற மனித இனத்தின்மேல் அக்கறை காட்டுவதை நாம் அறிகிறோம்.
(ஆ) சேர்த்துக்கொள்வதில் மகிழ்ச்சி
99 ஆடுகளுடன் ஒப்பிட்டால் 1 ஆடு என்பது ஒரு பொருட்டாகத் தெரிவதில்லை. ஆனால், அந்த ஓர் இழப்பும் சரி செய்யப்பட வேண்டும். இன்னொரு பக்கம், நம் வாழ்வில் நாம் பெற்றிருக்கின்ற 99 நிறைகளை மறந்துவிட்டு, நம்மிடம் உள்ள 1 குறையை மட்டும் நினைத்து வருந்திக்கொண்டிருப்பதும் தவறு.
(இ) அகத்தேடல்
நம் வாழ்வில் தொலைந்து போன ஆடு என்று ஒரு பகுதி இருக்கும். தொலைந்து போன அந்தப் பகுதிக்கு நம் அக்கறை தேவைப்படும். வெறும் 99 ஆடுகளை வைத்துக்கொள்வது போதும் என்ற தேக்க மனநிலை நம்மிடம் இருக்கலாம். தேடுதல் தேவைப்படுகின்ற பகுதியின்மேல் அக்கறை செலுத்தினால் நலம். உடல்நலமாக, உள்ளநலமாக, ஆன்மநலமாக எதுவானாலும், தேடல் நலம்.
No comments:
Post a Comment