கண்களுக்கு ஒளி தருவார்
அலைபேசியின் வருகைக்குப் பின்னர் நம் வீடுகளிலிருந்து மறைந்து போன ஒரு பொருள் டார்ச் லைட். மாலை நேரங்களில் வீட்டை விட்டு வெளியே செல்லவும், இரவு நேரங்களில் வீடு முற்றத்திற்குச் செல்லவும் நாம் அழைத்துச் செல்லும் ஒரு தோழன் டார்ச் லைட். இப்போது வருகின்ற ஸ்மார்ட்ஃபோன்களின் முன்புறமும் பின்பிறமும் ஒளி நிறைந்திருக்கின்றது. முன்புறம் திரையின் ஒளி. பின்புறம் டார்ச் ஒளி. நம் கண்கள் ஏறக்குறைய ஒரு நாளில் 2 முதல் 4 மணி நேரங்கள் வரை செயல்திறன்பேசியின் திரையைப் பார்க்கின்றன. அழைப்பு, குறுஞ்செய்தி, காணொலி, சுயமி (செல்ஃபி) எடுத்தல், பார்த்தல், மின்னஞ்சல் பெறுதல், அனுப்புதல், பாடல்கள் கேட்டல் என நம் ஸ்க்ரீன் டைம் கூடிக்கொண்டே போகின்றது. இரவு தூங்கச்செல்லுமுன் நாம் பார்க்கும் கடைசி ஒளியும், காலையில் கண் விழித்தவுடன் பார்க்கின்ற முதல் ஒளியும் செயல்திறன்பேசியின் ஒளியே.
இன்றைய வாசகங்கள் அனைத்தும் 'கண்களுக்கு ஒளி தருதல்' என்னும் கருப்பொருளை மையமாகக் கொண்டு சுழல்கின்றன. பண்டைக்கால மத்தியக் கிழக்கிலும், இயேசுவின் சம காலத்திலும் கண்களின் ஒளி மிக முக்கியமானதாகக் கருதப்பட்டது. கண்களின் ஒளியைப் பொருத்தே ஒருவர் கடவுளின் ஆசி பெற்றிருப்பதை உறுதி செய்தனர். மோசேயின் இறப்பைப் பற்றிப் பதிவு செய்கின்ற ஆசிரியர், 'மோசே இறக்கும்போது அவருக்கு வயது நூற்றிருபது. அவரது கண்கள் மங்கினதுமில்லை. அவரது வலிமை குறைந்ததுமில்லை' (இச 34:7). நாம் எப்போதும் பார்த்துக்கொண்டே இருப்பதால் பார்வையின் முக்கியத்துவம் நமக்குத் தெரியவில்லை. ஒரு நிமிடம் கண்களை மூடிக்கொண்டு இங்கும் அங்கும் நடந்து பார்த்தால் பார்வையின் அருமை நமக்குப் புரியும். பார்வையற்ற நிலை என்பது இறந்த நிலை என்றே கருதப்பட்டது. ஏனெனில், இறப்பின்போது ஒருவரின் பார்வை முதலில் மறைகிறது என்பது அன்றைய நம்பிக்கை.
முதல் வாசகத்தில் (எசா 29:17-24), மெசியாவின் காலத்தில் நடந்தேறும் அறிகுறிகளைப் பட்டியலிடுகின்றார் எசாயா. இவற்றில் அழுத்தம் பெறுவது 'பார்வையற்றவர் பார்வை பெறுதலாகும்.'
நற்செய்தி வாசகத்தில் (மத் 9:27-31) பார்வையற்ற இருவருக்கு நலம் தருகின்றார். பார்வையற்ற நபர்கள் இயேசுவின் வீடு வரை அவரைப் பின்தொடர்ந்தே வருகின்றனர். அவர்கள் தம்மைத் தொடர அனுமதிக்கின்ற இயேசு, தன் வீட்டுக்கு அவர்கள் வந்ததும் அவர்களுக்கு நலம் தருகின்றார். இயேசுவுடன் இல்லம் நடப்பது பார்வை பெறுவதற்கான வழியாக இருக்கிறது.
பதிலுரைப் பாடல் ஆசிரியர் (திபா 27), 'ஆண்டவர் என் ஒளி. அவரே என் மீட்பு. யாருக்கு நான் அஞ்ச வேண்டும்?' எனக் கேட்கின்றார். இருள் நம் கண்களைத் தழுவிக்கொண்டால் அச்சமும் தழுவிக்கொள்கிறது. ஒளி வந்தவுடன் அச்சம் மறைகிறது.
இயேசுவின் குழந்தைப் பருவ நிகழ்வுகளில் ஒளி என்பது முதன்மையான உருவகமாக அல்லது அடையாளமாக உள்ளது. கீழ்த்திசை ஞானியர் விண்மீன் ஒளி காட்ட நடந்து வருகின்றனர். குழந்தையைக் கைகளில் ஏந்துகின்ற சிமியோன், 'பிறஇனத்தாருக்கு ஒளி' எனக் குழந்தையைப் புகழ்கின்றார்.
இன்றைய வாசகங்கள் நமக்குத் தரும் பாடங்கள் எவை?
(அ) நம் கண்கள் ஒளிநிறைந்ததாக இருந்தாலும், நம் உள்ளம் சில நேரங்களில் இருள்நிறைந்து இருக்கலாம். இருள்நிறைந்து நிற்கும் அந்தப் பகுதிகளை ஆராய்ந்து பார்த்தல்.
(ஆ) பார்வையற்றவர்களை, பார்வை இழந்தவர்களை, பார்வை குறைபாடு உள்ளவர்களை நினைத்துப் பார்த்தல்.
(இ) செயல்திறன்பேசியின் திரைநேரம் குறைத்து, அந்த நேரத்தை நம் அகஒளிக்கான செயல்பாட்டுக்குப் பயன்படுத்துதல்.
No comments:
Post a Comment