செயல்களே சான்று
நேற்றைய நாளில் சொற்கள் மறைந்து செயல்கள் பெருக வேண்டும் என்று சிந்தித்தோம். இன்றைய வாசகங்கள் அதே கருத்துருவின் மறுபக்கத்தை நமக்குக் காட்டுகின்றன. அதாவது, நாம் செய்யும் செயல்கள் நம்மை யாரென்று மற்றவர்களுக்கு வெளிப்படுத்துகின்றன. ஆன்மிக அளவில், இறைவன் ஆற்றும் செயல்களைக் கொண்டு நம் இறைவன் யாரென நாம் அறிந்துகொள்கின்றோம்.
முதல் வாசகத்தில் (காண். எசா 45:6-8,18,21-25) மண்ணுலகில் பெய்யும் மழையும், பனியும் இறைவன் யாரென வெளிப்படுத்துகின்றன என்பதைக் காண்கின்றோம். ஆண்டவராகிய கடவுள், 'என்னிடம் திரும்பி வாருங்கள்' எனத் தன் மக்களுக்குக் கட்டளையிடுகின்றார். திரும்பி வருதல் என்பது அவருடைய அரும்பெரும் செயல்களை நினைவுகூரவும், அவற்றை ஏற்று ஆண்டவர் யார் என அறிக்கையிடவும் செய்கின்ற அழைப்பாக இருக்கின்றது.
நற்செய்தி வாசகத்தில் (காண். லூக் 7:19-23), யோவான் தம் சீடர்களை இயேசுவிடம் அனுப்பி, 'வரவிருப்பவர் நீர்தாமா? அல்லது வேறொருவரை எதிர்பார்க்க வேண்டுமா?' எனக் கேட்கச் சொல்கின்றார்.
இந்த இடத்தில் வாசகருக்கு ஒரு சந்தேகம் வர வேண்டும். இதே லூக்கா நற்செய்தியில், அன்னை கன்னி மரியா எலிசபெத்தைச் சந்திக்கச் செல்லும் நிகழ்வில், மரியாவின் வாழ்த்தைக் கேட்டவுடன், எலிசபெத்தின் வயிற்றிலிருந்த திருமுழுக்கு யோவான் துள்ளிக் குதிக்கின்றார். அதாவது, மரியின் வயிற்றில் உள்ள மெசியா கண்டு துள்ளிக் குதிக்கின்றார். ஒன்றும் அறியாப் பருவத்திலேயே துள்ளிக் குதித்த திருமுழுக்கு யோவானுக்கு இப்போது இயேசு பற்றிய சந்தேகம் ஏன் வந்தது? இதற்கு இரு நிலைகளில் பதில் அளிக்கலாம்: ஒன்று, இயேசுவின் குழந்தைப் பருவ நிகழ்வுகள் கதையாடல்கள் என்பவை வேறொரு இலக்கிய நடையைப் பின்பற்றுகின்றன. அந்த நடையில் உள்ள அனைத்தும் மித்ராஷ் இலக்கிய வகையை – அதாவது, விளக்கவுரை நடையை – சார்ந்தவை. மெசியாவின் பிறப்பை ஒட்டிய நிகழ்வுகள் வியக்கத்தக்கவையாக இருந்தன என்றும், வயிற்றிலிருந்த குழந்தைகூட துள்ளிக் குதித்தது என்றும் சொல்வது போல அவை எழுதப்பட்டுள்ளன. இரண்டு, திருமுழுக்கு யோவான் தான் கேட்டது தனக்கு ஏற்பட்ட சந்தேகத்தினால் அல்ல, மாறாக, மற்றவர்களுக்கு இயேசு யார் என்பதைச் சுட்டிக்காட்டுவதற்கு என்றும் பொருள் கொள்ளலாம். ஏனெனில், யோவான் நற்செய்தியில் திருமுழுக்கு யோவானே தன் சீடர்கள் இருவர் இயேசுவோடு சென்று தங்குமாறு அனுப்புகின்றார். அந்த வரிசையில் இங்கே அவர் தன் சீடர்கள் இருவரை அனுப்புகின்றார். ஏன் இருவரை அனுப்ப வேண்டும்? யூத மரபில் இருவரின் சாட்சியமே செல்லுபடியாகும். ஆகவே, இருவர் அனுப்பப்படுகின்றனர்.
சீடர்கள் இயேசுவிடம் செல்கின்ற நேரத்தில் அவர் குணமாக்கும் பணி செய்துகொண்டிருக்கின்றார். தான் யார் என்று இயேசு தனக்கே சான்றுபகரவில்லை. மாறாக, 'நீங்கள் கண்டவற்றையும் கேட்டவற்றையும் யோவானிடம் போய் அறிவியுங்கள்' என அனுப்புகின்றார். இறுதியில், 'என்னைத் தயக்கமின்றி ஏற்றுக்கொள்வோர் பேறுபெற்றோர்!' என்று சொல்லும் இயேசு அனைவரையும் நம்பிக்கை நோக்கி அழைக்கின்றார். தன் பணித்தொடக்கத்தில் தொழுகைக் கூடத்தில் தான் பயன்படுத்திய வார்த்தைகளையே இங்கே இயேசு குறிப்பிடுகின்றார்.
ஆக, இயேசு தான் தன் பணி வாழ்வின் தொடக்கத்தில் அறிவித்ததை இங்கே செயல்படுத்துகின்றார். அவரின் செயல்கள் அவர் யார் என்பதை மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்கின்றன.
இன்றைய இறைவார்த்தைப் பகுதிகள் நமக்குச் சொல்லும் பாடம் என்ன?
'செயல்களிடமிருந்து செய்பவருக்குக் கடந்து செல்வது'
இயேசுவின் செயல்களின் நோக்கம் மற்றவர்களை நம்பிக்கை நோக்கி ஈர்ப்பதே. கடவுள் நம் வாழ்வில் அன்றாடம் பல நிலைகளில் செயல்பட்டுக்கொண்டே இருக்கின்றார். நாம் செயல்களிடமிருந்து கடவுளை நோக்கிக் கடக்கின்றோமா?
இயேசுவை ஏற்றுக்கொள்வதற்கு நான் ஏன் தயக்கம் காட்டுகிறேன்?
No comments:
Post a Comment