Sunday, December 4, 2022

புதுமையானவற்றைக் கண்டோம்

இன்றைய (5 டிசம்பர் 2022) நற்செய்தி (லூக் 5:17-26)

புதுமையானவற்றைக் கண்டோம்

புதிய இடம், புதிய பொருள், புதிய ஆடை, புதிய அனுபவம் போன்றவை நமக்கு புத்துணர்ச்சி தருகின்றன. மெசியாவின் வருகையில் அனைத்தும் புதுமை பெறும் என்பது இஸ்ரயேல் மக்களின் எதிர்நோக்காக இருந்தது. இந்த எதிர்நோக்கு இன்றைய முதல் வாசகத்தில் பதிவு செய்யப்படுகின்றது. மெசியாவின் நாளில் இயற்கையிலும், தனிநபர் வாழ்விலும், சமூக உறவிலும் புதிய மாற்றங்கள் அரங்கேறுகின்றன.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் முடக்குவாதமுற்ற ஒருவரை அவருடைய நண்பர்கள் இயேசுவிடம் கொண்டுவருகின்றனர். கூட்ட மிகுதியால் இயேசுவுக்கு அருகில் செல்ல இயலாத அவர்கள் வீட்டின் கூரையைப் பிடித்து நண்பரை இயேசுவின் அருகில் இறக்குகின்றனர். இயேசு அவருடைய பாவங்களையும் மன்னிப்பது சிலருக்கு இடறலாக இருக்கின்றது. அதைப் பொருட்படுத்தாத இயேசு அவருக்கு நலம் தருகின்றார். கூடியிருந்த அனைவரும் மலைத்துப்போய், 'இன்று புதுமையானவற்றைக் கண்டோம்' என ஆச்சர்யப்படுகின்றனர்.

லூக்கா நற்செய்தியில், 'இன்று' என்பது வெறும் நாளைக் குறிக்கக் கூடிய சொல் அல்ல. மாறாக, இறைவனின் நீடித்த நிலையான நேரத்தைக் குறிக்கப் பயன்படும் சொல்லும் கூட. ஏனெனில், இறைவனைப் பொருத்தவரையில் எல்லா நேரமும் அவருக்கு இன்று மட்டுமே.

இறைவனின் நேரத்திற்குள் இயேசு தன் சமகாலத்தவரைக் கூட்டிச் செல்கின்றார். மக்கள் அங்கே அனைத்தையும் புதியனவாகக் காண்கின்றனர்.

முடக்குவாதமுற்றவரை அவருடைய விண்ணப்பம் எதுவும் இல்லாமலேயே அவருடைய நண்பர்கள் தூக்கி வந்தது புதுமை.

தன்னை தெருவில் தூக்கிக் கொண்டு செல்வதை மற்றவர்கள் பார்த்தால் என்ன நினைப்பார்களோ என்ற கூச்சமும் பயமும் இல்லாமல் அந்த நபர் கட்டிலில் படுத்துக் கிடந்தது புதுமை.

முடக்குவாதமுற்றவரை இறக்குவதற்காக கூரை பிரிக்கப்பட்டபோது கூரையைப் பற்றிக் கணக்குப் பார்க்காமல், வீட்டு உரிமையாளர் முடக்குவாதமுற்றவரின் நலம் நாடியது புதுமை.

நண்பர்களின் நம்பிக்கை புதுமை.

'உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன' என்று இயேசு மொழிந்தபோது, 'அது எப்படி?' எனக் கேட்டு இயேசுவின் இறைத்தன்மையை அனுபவிக்கத் தூண்டிய இயேசுவின் எதிரிகளின் இருத்தலும் புதுமை.

எதிரிகளின் சொற்களைக் கேட்டுத் துவண்டுவிடாமல், தன் பணியைத் தானே செய்து அங்கிருந்து இயேசு இடம் நகர்ந்தது புதுமை.

ஆக, முடக்குவாதமுற்றவர் நடக்கும் இந்த நிகழ்வு என்னும் புதுமையோடு இணைந்து நிறைய புதுமைகள் நிகழ்வில் இருக்கவே செய்கின்றன.

நம் வாழ்விலும் அன்றாடம் புதுமையானவையும், வியப்புக்குரியவையும் நடந்துகொண்டேதான் இருக்கின்றன. அவற்றை அடையாளம் காணுதல் நலம்.


No comments:

Post a Comment