சீஞா 3:2-6,12-14 கொலோ 3:12-21 மத் 2:13-15,19-23
வலுவின்மைகளைக் கொண்டாடுதலே குடும்பம்
நான் இதை எழுதிக்கொண்டிருக்கும் இந்நேரம் உலகின் ஏதோ ஒரு மூலையில் இவையெல்லாம் நடந்து கொண்டிருக்கும்: ஒரு ஆணும், இன்னொரு ஆணும் அல்லது ஒரு பெண்ணும். இன்னொரு பெண்ணும் திருமணம் செய்து கொண்டிருப்பர். அல்லது இன்னொரு பெண் தன்னைத் தானே திருமணம் செய்து கொண்டதாக டுவிட் செய்து கொண்டிருப்பார். அல்லது நாம் இருவரும் நண்பர்களாகவே இருப்போம் என ஓர் ஆணும், பெண்ணும் முடிவெடுத்துக்கொண்டிருப்பர். அல்லது நம் சேர்ந்து வாழ்தலை இன்றோடு முடித்துக்கொள்வோம் என்ற இருவர் தத்தம் வீடுகள் நோக்கிச் செல்வர். அல்லது ஒரு பெண் தன் நண்பனுக்கு வாடகைத் தாயாக இருக்க முன்வருவதாக வாக்குறுதிப் பத்திரத்தில் கையெழுத்து போட்டுக் கொண்டிருப்பாள்.
குடும்பத்தின் பரிமாணங்கள் வேகமாக மாறிக்கொண்டே வரும் இக்காலத்தில் இயேசு-மரி-வளன் திருக்குடும்பம் நமக்குச் சொல்லும் பாடம் என்ன?
மனிதர்கள் மட்டும் உருவாக்கினால் அது குடும்பம். இறைவனும் அதில் ஓர் உறுப்பினர் என்றால் அது திருக்குடும்பம். இல்லையா?
ஒரு குடும்பத்தில் அண்ணன்-தம்பி என்று இரு சகோதரர்கள் இருந்தார்கள். இருவருக்கும் வயது 9-8 இருக்கும். தம்பி போலியோ நோயினால் நடக்க முடியாமல் ஆகிறான். ஆனால், அவனுக்கு கேரம் போர்ட் விளையாடுவது ரொம்பப் பிடிக்கும். ஊரின் வெளியில் உள்ள ஒரு அரங்கில் சிறுவர்களுக்காக கேரம் போர்ட் விளையாட்டு நடக்கும். அங்கே செல்ல விரும்பிய தன் தம்பியைத் தோளில் சுமந்துகொண்டு செல்கின்றான் அண்ணன். அரங்கம் நிரம்பி இருந்ததால் காத்திருக்க வேண்டிய கட்டாயம். அரங்கத்தின் ஓரத்தில் தம்பியை முதுகில் சுமந்தவாறு எந்த இடம் காலியாகும் என்று காத்திருக்கின்றான் அண்ணன். அண்ணன் தம்பியைத் தூக்கிக்கொண்டே நிற்பதைக் கவனிக்கின்ற பெரியவர் ஒருவர், 'தம்பி! அந்தச் சுமையைக் கொஞ்சம் இறக்கிவைக்கலாமே! இப்படி தூக்கிக்கொண்டே நிற்கின்றாயே?' எனக் கேட்கின்றார். 'இவன் சுமையல்ல. என் தம்பி!' என்கிறான் அண்ணன்.
குடும்பம் என்றால் ஒருவர் மற்றவரின் வலுவின்மையைச் சுமப்பதே.
பிறந்த கன்றுக்குட்டியோ, ஆட்டுக்குட்டியோ பிறந்த அதே நாளில் நடக்கவும், ஓடவும் செய்கின்றன. தங்களுடைய வாழ்க்கைத் தேவையை தாங்களே நிறைவேற்றிக்கொள்ளும் அளவிற்கு வலிமையுடையதாக மாறிவிடுகின்றன. ஆனால், மனிதர்கள் நாம் பிறந்தது முதல் இறப்பது வரை வலுவில்லாமல் இருக்கின்றோம். நம்முடைய வலுவின்மைகளைத் தாங்கிக்கொள்ள கடவுள் ஏற்படுத்திய ஒன்றுதான் குடும்பம்.
வலுவானவர்களுக்கு, தங்களிலேயே நிறைவு பெற்றவர்களாய் எண்ணுபவர்களுக்குக் குடும்பம் தேவையில்லை. வலுவற்றவர்களுக்கும், தங்களிலேயே நிறைவு காண இயலாதவர்களுக்குமே குடும்பம் தேவை.
இன்றைய முதல் வாசகத்தில் (காண். சீஞா 3:2-7, 12-14) அன்னையருக்கும் தந்தையருக்கும் தம்முடைய பிள்ளைகள்மேல் இருக்கும் உரிமைகளைச் சுட்டிக்காட்டும் சீராக்கின் ஞானநூல் ஆசிரியர், பிள்ளைகள் தங்களுடைய பெற்றோருக்கு ஆற்றவேண்டிய கடமைகளைச் சுட்டிக்காட்டுகின்றார்: 'குழந்தாய், உன் தந்தையின் முதுமையில் அவருக்கு உதவு, அவரது வாழ்நாளெல்லாம் அவர் உள்ளத்தைப் புண்படுத்தாதே. அவரது அறிவாற்றல் குறைந்தாலும் பொறுமையைக் கடைப்பிடி. நீ இளமை மிடுக்கில் இருப்பதால் அவரை இகழாதே. தந்தைக்குக் காட்டும் பரிவு மறக்கப்படாது. அது உன் பாவங்களுக்குக் கழுவாயாக விளங்கும்.' இங்கே 'தந்தை' என்ற சொல்லை, 'தாய்' என்ற சொல்லையும் உள்ளடக்கி, 'பெற்றோர்' என்ற நிலையிலேயே புரிந்துகொள்ள வேண்டும். இந்த அறிவுரைப்பகுதியில் இரண்டு விடயங்கள் புலப்படுகின்றன: ஒன்று, நாம் எல்லாரும் முதுமை அடைவோம். இன்றைய இளமை நாளைய முதுமையாகும். முதுமையில் நம்முடைய உடல் வல்லமை இழக்கும். சிந்திக்கும் திறன் அல்லது அறிவாற்றல் குறையும். இரண்டு, குழந்தை இந்நேரத்தில் தன் பெற்றோருக்குக் காட்டும் அன்பு பொறுமையாக வெளிப்பட வேண்டும். குழந்தை காட்டும் பொறுமை கடவுளிடமிருந்து அவருக்கு பரிவைப் பெற்றுக்கொடுக்கும்.
ஆக, உடல் தளர்ச்சி, அறிவுத் தளர்ச்சி என்று நம்முடைய பெற்றோர்கள் வலுவின்மையில் இருக்கும்போது குழந்தைகள் காட்ட வேண்டியது பொறுமை.
இன்றைய இரண்டாம் வாசகத்தில் (காண். கொலோ 3:12-21), கொலோசை நகரத் திருஅவைக்கு எழுதும் தன்னுடைய மடலை நிறைவு செய்யுமுன் பவுல் சில அறிவுரைகளைக் கொடுக்கின்றார். அவருடைய அறிவுரை இரண்டு பகுதிகளாக அமைந்துள்ளது. முதல் பகுதியில், திருஅவை என்ற குடும்பத்தில் உறுப்பினர்கள் பெற்றிருக்க வேண்டிய பண்புகள் அல்லது குணநலன்கள் சிலவற்றைப் பட்டியலிடுகின்றார்: 'பரிவு, இரக்கம், நல்லெண்ணம், மனத்தாழ்மை, கனிவு, பொறுமை.' இரண்டாம் பகுதியில், திருமணமான பெண்களே, ஆண்களே, பிள்ளைகளே என்று ஒட்டுமொத்தக் குழுமத்திற்குள் இருக்கும் குடும்பங்களில் திகழ வேண்டிய பண்புநலன்களைச் சுட்டிக்காட்டுகின்றார்: 'பணிவு, அன்பு, கீழ்ப்படிதல்'. மேலும், 'கொடுமைப்படுத்தாதீர்கள்,' 'எரிச்சல் மூட்டாதீர்கள்' என்று எதிர்மறை வார்த்தைகளாலும் அறிவுறுத்துகின்றார்.
இம்மதிப்பீடுகள் எதற்காக? ஒருவர் மற்றவரின் வலுவின்மையைத் தாங்கிக்கொள்வதற்காகவே.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் (காண். மத் 2:13-15, 19-23) குழந்தை இயேசுவைத் தூக்கிக்கொண்டு, மரியாவைக் கரம் பிடித்துக்கொண்டு, யோசேப்பு எகிப்திற்கு செல்வதையும், எகிப்திலிருந்து நாசரேத்து திரும்புவதையும் வாசிக்கின்றோம். 'குழந்தையின் உயிருக்கு அச்சுறுத்தல்' வருகின்றது. 'குழந்தையும் அதன் தாயும்' வலுவற்றவர்களாக இருக்கின்றனர். வலுவற்ற இவர்களைக் கூட்டிக்கொண்டு எகிப்திற்குச் செல்கின்றார் யோசேப்பு. இம்மூன்று வலுவற்றவர்களையும் இறைவனின் வல்லமை வழிநடத்துவதால், இறைவன் இவர்களோடு உடனிருப்பதால் இக்குடும்பம் திருக்குடும்பம் என ஆகிறது.
இங்கே, யோசேப்பின் உடனிருப்பு, பொறுமை, தெளிவான முடிவெடுத்தல், வேகம் போன்ற பண்புகள் நம்முடைய குடும்பங்களின் வாழ்வியல் பாடங்களாக இருக்கின்றன.
இவ்வாறாக, மூன்று வாசகங்களும் மனித வலுவின்மைகளை முன்னிறுத்தி, வலுவின்மையில் ஒருவர் மற்றவரோடு உடனிருப்பது குடும்ப உறவில்தான் என்று உறுதிபடக் கூறுகிறது.
நட்பு, காதல், பழக்கம், அறிமுகம் போன்ற மற்ற உறவுநிலைகளிலிருந்து குடும்ப உறவு மூன்று நிலைகளில் வேறுபடுகிறது:
அ. குடும்ப உறுப்பினர்களை நாம் தெரிந்துகொள்வதில்லை. அவர்கள் நமக்கு இறைவனால் கொடுக்கப்படுகிறார்கள். நம்முடைய அப்பா, அம்மா, அண்ணன், தம்பி, அக்கா, தங்கை, மகன், மகள் ஆகியோரைத் தேர்ந்தெடுக்கும் உரிமை நமக்கு இல்லை.
ஆ. குடும்ப உறுப்பினர்களின் உறவு ஒருநாளும் முடிவதில்லை. என் அப்பாவை எனக்கு பிடிக்கவில்லை என்றாலும் அவர் எனக்கு அப்பாதான். இறுதிவரை என் அப்பா எனக்கு அப்பாதானே தவிர அவர் எனக்கு மாமாவாக, சித்தப்பாவாக மாறுவதில்லை. ஆனால், நட்பில் அந்த மாற்றம் சாத்தியம். மேலும், நானாக இந்த உறவை முறித்துக்கொள்ளவும் இயலாது.
இ. குடும்ப உறுப்பினர்கள் ஒரே இரத்தத்தால் பிணைக்கப்படுபவர்கள். இரத்தம் என்றால் உயிர். ஆக, எவ்வளவு பிரச்சினைகள் வந்தாலும் அவர்களுக்கிடையே இருக்கின்ற பிணைப்பை நாம் எடுக்கவே முடியாது. மேலும், ஆபத்துக்காலத்தில் உடன் வருபவர்கள் குடும்ப உறுப்பினர்களே. சில நேரங்களில் இந்நிலை சாத்தியமில்லாமல் இருக்கலாம். விவிலியம் அழகாகச் சொல்கிறது: 'நண்பன் எப்போதும் அன்பு காட்டுவான். இடுக்கணில் உதவுவதற்கே உடன் பிறந்தவன் இருக்கிறான்' (நீமொ 17:17)
மற்ற எந்த உறவுநிலையிலும் இல்லாத நெருக்கமும் பிணைப்பும் குடும்ப உறவில் இருக்கின்றது.
இந்தக் குடும்ப உறவின் நோக்கம் ஒருவர் மற்றவரின் வலுவின்மையைக் கொண்டாடுவது என்றால், வலுவின்மையை நாம் எப்படிக் கொண்டாட வேண்டும்?
1. பிறரின் நலன் நாடுவது
திருக்குடும்பத்தில் யோசேப்பு மரியாவின், குழந்தையின் நலன் நாடுகின்றார். திருமண உறவில் கணவனும், மனைவியும் ஒருவர் மற்றவரின் நலன் நாட வேண்டும் என்று அறிவுறுத்துகின்றார் பவுல். சீராக்கும் இதே கருத்தையே சொல்கின்றார். என்னுடைய நலனை நாடாது, நான் எனக்கு அடுத்திருக்கும் - அப்பா, அம்மா, சகோதரன், சகோதரி, மகன், மகள் - நபரின் நலனை நாட வேண்டும். அடுத்தவரின் நலன் நாடும் ஒருவரால்தான் அடுத்தவரின் வலுவின்மையைக் கொண்டாட முடியும்.
2. துன்பம் ஏற்பது
வலுவின்மையைக் கொண்டாடுதல் என்றால், நடுஇரவில் விழிப்பது, குளிரில் எகிப்து நோக்கி புறப்படுவது, ஆபத்துக்களை எதிர்கொள்வது, அஞ்சாநெஞ்சம் கொண்டிருப்பது, திட்டமிடுவது, செயல்படுத்துவது, கடவுள்தரும் அடையாளங்களைச் சரியாகக் கண்டுகொள்வது. என்னுடைய பாதுகாப்பு வளையத்திற்குள் நான் நின்றுகொண்டு அடுத்தவரின் வலுவின்மையைக் கொண்டாட முடியாது.
3. பலனை எதிர்பாராமல் இருப்பது
குடும்ப உறவுகளுக்குள் பலனை எதிர்பார்ப்பது என்பது வியாபாரம் செய்வது போன்றது. 'இதைச் செய்தால் எனக்கு என்ன கிடைக்கும்' என்பது நட்பு அல்லது அறிமுக உறவில் இருக்கலாமே தவிர, குடும்ப உறவில் இருக்க முடியாது. தாயின் அன்புக்கும், தந்தையின் தியாகத்திற்கும் குழந்தை ஒருபோதும் கைம்மாறு செய்யவே முடியாது. எனக்கு என் குழந்தையிடம் எந்தக் கைம்மாறும் இல்லை என்று சொல்லி எந்தத் தந்தையாவது தன் குழந்தைக்குரிய கடமையைச் செய்யத் தவறுகிறாரா? இல்லை. நடுஇரவில் தன்னுடைய மனைவியையும், குழந்தையையும் தூக்கிக்கொண்டு எகிப்துக்கு ஓடிய வளனாருக்கு மரியாவும், குழந்தையும் என்ன கைம்மாறு செய்துவிட முடியும்? எந்த பலனையும் எதிர்பார்க்காமல் புறப்படுகின்றார் வளனார்.
இறுதியாக,
இன்றைய நாளில் நம்முடைய அப்பா, அம்மா, பிள்ளைகளுக்காக நன்றி கூறுவோம். என்னுடைய வலுவின்மைகளை மட்டுமே நான் அடுக்காமல், அவர்களின் வலுவின்மைகளை நான் கண்டறிந்து கொண்டாடும் போது, நம்முடைய குடும்பங்களும் திருக்குடும்பங்களாகும்!
Wonderful fr.
ReplyDelete