Wednesday, December 14, 2022

விரிவாக்கு

இன்றைய (15 டிசம்பர் 2022) முதல் வாசகம் (எசா 54:1-10)

விரிவாக்கு

'உன் கூடாரத்தின் இடத்தை விரிவாக்கு. உன் குடியிருப்பின் தொங்கு திரைகளைப் பரப்பிவிடு. உன் கயிறுகளைத் தாராளமாய் நீட்டிவிடு. உன் முளைகளை உறுதிப்படுத்து. வலப்புறமும் இடப்புறமும் நீ விரிந்து பரவுவாய்' (காண். எசா 54:2).

கூட்டொருங்கியக்கத்துக்கான மாமன்றத்தின் இரண்டாம் கட்டமான கண்டத்தின் அளவு கலந்தாலோசித்தல் நிலையில் நாம் இப்போது இருக்கிறோம். இரண்டாம் நிலைக்கான கலந்தாலோசித்தலுக்காக நமக்குத் தரப்பட்டுள்ள கையேட்டின் தலைப்பாகக் கொடுக்கப்பட்டுள்ள இறைவார்த்தைப் பகுதி இன்றைய முதல் வாசகப் பகுதியிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது: 'உன் கூடாரத்தின் இடத்தை விரிவாக்கு!' திருஅவை என்னும் கூடாரத்திற்குள் சிலர் இருக்கின்றனர். பலர் வெளியே இருக்கின்றனர். திருஅவை தன் கூடாரத்தை விரிவுபடுத்தினால் அனைவரும் உள்ளே நுழைந்துகொள்ள முடியும். இதுவே கூட்டொருங்கியக்கத்தின் பொருள்.

நிற்க.

இன்றைய முதல் வாசகப் பகுதியை இறைவாக்கினர் எசாயா, பாபிலோனியாவில் அடிமைப்பட்டுக் கிடந்த இஸ்ரயேல் மக்களைப் பார்த்து அறிவிக்கின்றார். இஸ்ரயேல் அடிமைத்தனத்தில் இருந்தபோது அதன் எல்கைகள் சுருங்கிப் போனது. பலர் சிதறடிக்கவும் கொல்லவும் பட்டனர். இந்தப் பின்புலத்தில் இறைவாக்குரைக்கின்ற எசாயா, இஸ்ரயேல் பெறவிருக்கின்ற விடுதலையையும், விடுதலைக்குப் பின்னர் நாடு அடையும் வளர்ச்சியையும் இறைவாக்காக முன்னுரைக்கின்றார்.

'உன் கூடாரத்தின் இடத்தை விரிவாக்கு' 

கூடாரம் அடித்து வாழ்கின்ற மக்களை இன்றும் நாம் பல இடங்களில் பார்க்கின்றோம். பேருந்து நிலையங்கள், தொடர்வண்டி நிலையங்களுக்கு அருகே, பெரிய கட்டுமானப் பணிகள் நடக்கும் இடங்களருகே, மேய்ச்சல் நிலங்களில், விவசாய நிலங்களில் இன்றும் பலர் கூடாரங்கள் அடித்துக் குடியிருக்கின்றனர். தரையில் விரிக்கப்பட்ட துணி அல்லது பாய் தூக்கி நிறுத்தப்பட்டால் அது கூடாரம். அவ்வளவுதான்!

ஒரு கூடாரம் உருப் பெற்று நிலைபெற மூன்று காரணிகள் அவசியம்: (அ) தொங்கு திரை அல்லது துணி, (ஆ) கயிறுகள், (இ) முளை. முதலில், தொங்குதிரை அல்லது துணியின் அளவைப் பொருத்தே கூடாரத்தின் அளவு அமையும். கூடாரத்தின் பரப்பளவு கூட வேண்டுமெனில் துணியின் அளவு கூட வேண்டும். அதே வேளையில் துணிகளின் அளவு கூடினால் கயிறுகளும் அதிகம் தேவைப்படும், முளையும் மிக உறுதியாக இருக்க வேண்டும். காற்று அதிகமான பகுதிகளில் பெரும்பாலும் சிறிய கூடாரங்களே அமைக்கப்படுகின்றன. இரண்டாவதாக, கயிறுகள். கயிறுகள் கூடாரத் துணி காற்றில் பறக்காதவாறு அதைப் பாதுகாப்பதுடன், காற்றின் அசைவுக்கு ஏற்ப அமிழ்ந்து கூடாரத்தின் உள்ளே இருப்பவர்களைத் தழுவுகின்றன. மூன்றாவதாக, இரும்பு முளை கூடாரத்தின் கயிறுகளை உறுதியாகத் தாங்குவதோடு, ஓரிடத்திலிருந்து மற்ற இடத்திற்கு நகர்த்திச் செல்வதற்காகப் பிடுங்கவும் ஏதுவாக இருக்க வேண்டும்.

கூடாரத்தின் வலிமை, அழகு, நேர்த்தியால் கூடாரத்தில் வாழ்வோர் வளமும் நலமும் பெறுகின்றனர்.

இஸ்ரயேல் மக்கள் பெறுகின்ற உறுதித்தன்மையை அவர்களுக்கு அறிவிக்கின்ற எசாயா, வலமும் இடமும் அவர்கள் பெருகுவர் என்றும் முன்னுரைக்கின்றார்.

தொடர்ந்து இன்னொரு உருவகத்தையும் நாம் முதல் வாசகத்தில் வாசிக்கின்றோம்: 'கைவிடப்பட்டு மனமுடைந்து போன துணைவி போலும், தள்ளப்பட்ட இளம் மனைவி போலும் இருக்கும் உன்னை ஆண்டவர் அழைத்துள்ளார் என்கிறார் கடவுள். நொடிப்பொழுதே நான் உன்னைக் கைவிட்டேன். ஆயினும் பேரிரக்கத்தால் உன்னை மீண்டும் ஏற்றுக்கொள்வேன்.'

'கைவிடப்பட்டு மனமுடைந்தபோன துணைவி,' 'தள்ளப்பட்ட இளம் மனைவி'

இஸ்ரயேல் சமூகத்தில் மனைவியின் அடையாளம் அல்லது தான்மை அவருடைய கணவரைப் பொருத்தே இருந்தது. கணவர் வழியாகவே மனைவி சமூகத்துடன் உறவுகொள்ள இயலும். அதாவது, பொது வாழ்வில் என்ன நிகழ்வு இருந்தாலும் அந்த நிகழ்வில் பங்கேற்பது கணவர் வழியாகவே நடைபெறும். மணவிலக்கு கொடுக்கப்படும்போதும், கணவர் இறந்தபோதும் அதிகம் பாதிப்புக்கு உள்ளானவர்கள் மனைவியரே. ஏனெனில், கணவருடைய எந்தச் சொத்துரிமையும் அவர்களுக்குக் கிடைக்காமல் போகும். மேலும், கைவிடப்பட்டவர்களைக் கரம் பிடிப்பவர்களும் மிகவும் குறைவாக இருந்ததால், இத்தகைய பெண்கள் மிகவும் துன்பப்பட்டனர். இவர்களோடு இஸ்ரயேல் மக்களை ஒப்பிடுகின்ற ஆண்டவராகிய கடவுள், தன் பேரிரக்கத்தால் இஸ்ரயேல் மக்களை மீண்டும் ஏற்றுக்கொள்வதாக வாக்குறுதி தருகின்றார்.

இன்றைய முதல் வாசமும் நமக்கு இரு நிலைகளில் நம்பிக்கை தருகின்றது:

ஒன்று, நம் வாழ்வின் எல்கைகள் சுருங்கி விட்டது என நினைக்கும்போது, அவற்றின் எல்கைகளை விரிவாக்கி நம்மை வளர வைக்கின்றார் கடவுள்.

இரண்டு, வாழ்வின் சூழல்களால் நாம் மனமுடைந்து போகும் நிலையில் இருந்தாலும் தன் பேரிரக்கத்தால் அவர் நம்மைத் தழுவிக்கொள்கின்றார்.


No comments:

Post a Comment