Tuesday, December 27, 2022

மாசில்லாக் குழந்தைகள் திருநாள்

மாசில்லாக் குழந்தைகள் திருநாள்

விவிலியமும் வரலாறும்

இயேசுவின் குழந்தைப் பருவ நிகழ்வுகளைப் பதிவு செய்கின்ற மத்தேயு 'குழந்தைகள் படுகொலை' நிகழ்வையும் (காண். மத் 2:16-18) பதிவு செய்கின்றார். கீழ்த்திசை ஞானியர் வேறு வழியில் சென்றதைக் கேள்வியுற்ற ஏரோது பெத்லகேமிலும் அதன் சுற்றுப்புறமெங்கும் ஆள்களை அனுப்பி இரண்டு வயதும் அதற்கு உட்பட்டவையுமான எல்லா ஆண்குழந்தைகளையும் கொல்லுமாறு ஆணையிடுகின்றார்.

இந்த நற்செய்திப் பாடத்தை ஒருமுறை நான் குழந்தைகளுக்கு மறைக்கல்வி வகுப்பில் நடத்திக்கொண்டிருந்தேன். அப்போது ஓர் இளவல், 'ஏன் ஃபாதர் கடவுள் மற்றக் குழந்தைகளையும் காப்பாற்றவில்லை?' என்று கேட்டார்;. 'எல்லாத் தந்தையர்களின் கனவுகளிலும் தூதர் வந்து எச்சரித்திருக்கலாமே? அல்லது பெரிய ஏரோதுவைக் கடவுள் கொன்றிருக்கலாமே? ஒரு குழந்தை காப்பாற்றப்படுவதற்காக மற்றக் குழந்தைகள் கொல்லப்பட வேண்டுமா? யூதேய மலைநாட்டிலுள்ள சக்கரியா-எலிசபெத்தின் குழந்தை திருமுழுக்கு யோவான் எப்படிக் காப்பாற்றபட்டார்? இலக்கு சரியானது என்பதற்காக, எந்தவொரு வழியையும் பயன்படுத்த இயலுமா?' என்னும் கேள்விகள் அக்குழந்தையின் கேள்வியின் நீட்சிகளே. இக்கேள்விகள் நிகழ்வின் அறநெறி சார்ந்ததாக இருக்க, இந்நிகழ்வு வரலாற்று நிகழ்வா அல்லது இறையியல் நிகழ்வா என்னும் கேள்வியும் நம்மில் எழுகின்றது. இக்கேள்விகளுக்கு விடை காண முயற்சி செய்கின்றது இக்கட்டுரை.

1. யார் இந்தப் பெரிய ஏரோது?

ஏறக்குறைய 2000 ஆண்டுகளுக்கு முன்னர் பண்டைக்கால அண்மைக் கிழக்குப் பகுதியில் வாழ்ந்தவர்களில் அலெக்ஸாண்டர் தெ கிரேட், அகுஸ்து சீசர், இயேசு கிறிஸ்து, பவுல் போன்றவர்கள் பற்றிய குறிப்புகள் அல்ல, மாறாக, ஹெரட் தெ கிரேட் (பெரிய ஏரோது) பற்றிய குறிப்புகளே அதிகம் காணப்படுகின்றது. யோசேப்பு ஃப்ளேவியு என்னும் வரலாற்று ஆசிரியர் பெரிய ஏரோது பற்றிய இரு பெரும் நூல்களை எழுதியுள்ளார். 

பெரிய ஏரோது தன் பெயருக்கு ஏற்றாற்போலவே மேன்மை மிகுந்தவராகவே விளங்கினார். எப்படி? கிமு 63ஆம் ஆண்டு உரோமை யூதேயாவைக் கையகப்படுத்துகிறது. அந்த நேரத்தில் யூதேயாவின் ஆளுநராக இருந்த பெரிய ஏரோது யூதேயாவின் அரசராக நியமிக்கப்படுகின்றார். உரோமை அப்படித்தான் ஆட்சி நடத்தியது. கிமு 40இலிருந்து கிபி 4ஆம் ஆண்டு வரை யூதேயாவின் அரசராக ஆட்சி செய்கின்றார் பெரிய ஏரோது. செருபாபேல் கட்டிய இரண்டாம் எருசலேம் ஆலயத்தைப் புதுப்பித்து விரிவுபடுத்துகின்றார் பெரிய ஏரோது. மேலும், செசரியா என்னும் நகரையும், எருசலேமைச் சுற்றி ஏழு பாதுகாப்புக் கோட்டைகளையும், சாக்கடலுக்கு அருகே மசாதா என்னும் நகரையும் கட்டு எழுப்புகின்றார். யூதேயாவைக் கொடும் பஞ்சம் தாக்கியபோது தன் தந்தைவழிச் சொத்தையும் விற்று நகருக்குத் தண்ணீர் கொண்டு வந்தார். உரோமைக்கும் எருசNலுமுக்கும் இடையே அமைதியை ஏற்படுத்தியதோடு, மக்கள் மனத்திலும் நல்மனிதராகத் திகழ்ந்தார்.

ஆனால், அவருடைய குடும்பம் கண்களில் விழுந்த தூசியாக, செருப்புக்குள் சிக்கிய கல்லாக அவரை வருத்திக்கொண்டே இருந்தது. அவருக்கு பத்து மனைவியர். இவர்கள் பெற்றெடுத்த மகன்கள் அனைவரும் தந்தைக்குப் பிறகு அரசராக விரும்பினர். மேலும், ஒருவர் மற்றவர்மேல் போட்டி மற்றும் பொறாமை உணர்வு கொண்டு, ஒருவர் மற்றவரை அழித்துக்கொள்ளவும் தொடங்கினர். தனக்கு எதிராகச் சூழ்ச்சி செய்த தனது மூன்று மகன்களைக் கொன்று போடுகின்றார் பெரிய ஏரோது. மேலும், தனக்கு மிகவும் பிடித்த மரியம் என்னும் தன் மனைவியையும், மாமியாரையும்கூடக் கொன்றுவிடுகின்றார். இதைக் கேள்வியுற்ற அகுஸ்து, 'ஏரோதுவுக்கு மகனாகப் பிறப்பதை விட, அவர் வீட்டுப் பன்றியாகப் பிறப்பது நலம்!' என்று மொழிகின்றார். தன் அதிகாரத்தையும், ஆட்சியையும் தக்க வைத்துக்கொள்வதற்காக யாரையும் கொல்லத் துணிந்தவராக இருந்தார் பெரிய ஏரோது.

நாள்கள் செல்லச் செல்ல இவருடைய இனத்தாரான யூதர்களே அவரை வெறுக்கத் தொடங்குகின்றனர். தன்மேல் வெறுப்பு அதிகமாவதை உணர்கின்ற பெரிய ஏரோது, தான் நோயுற்று இறக்கும் தருவாயில் ஒரு திட்டம் தீட்டுகின்றார். தன் இறப்பு கண்டு யூதர்கள் மகிழ்வார்கள் என அறிந்து, யூதத் தலைவர்கள் அனைவரையும் கைது செய்து தான் உருவாக்கிய விளையாட்டரங்கில் அடைக்குமாறு உத்தரவிடுகின்றார். தான் இறக்கும் நாளில் இவர்கள் அனைவரையும் கொன்றுவிடுமாறு தன் சகோதரி சலோமிக்கு உத்தரவிடுகின்றார். ஆக, தனக்காக யாரும் அழவில்லை என்றாலும், நகரின் தலைவர்களுக்காக வருத்தம் தெரிவிப்பார்கள் என்பது ஏரோதுவின் எண்ணமாக இருந்தது. 

உள்ளத்தில் வன்மமும், வாள்களில் இரத்தமும் கண்டு பழகிய பெரிய ஏரோது தன் ஆட்சியைத் தக்க வைத்துக்கொள்வதற்காக யூதர்களின் அரசராகப் பிறந்த இயேசுவைக் கொலை செய்ய முயற்சி செய்யாமலா இருந்திருப்பார்?

2. குழந்தைகள் படுகொலை – கதையா?

பெரிய ஏரோது செய்த அனைத்துக் கொடிய செயல்களையும் பதிவிட்ட யோசேப்பு ஃப்ளேவியு குழந்தைகள் படுகொலையைப் பதிவு செய்யாதது ஏன்? என்னும் கேள்வி எழுகின்றது. பெத்லகேம் ஒரு சிறிய ஊர். ஏறக்குறைய அறுபதிலிருந்து நூறு குடும்பங்கள் இருந்திருக்கலாம். கிபி 2 முதல் 4ஆம் ஆண்டுகளில் அந்த ஊரில் இரு வயதுக்குட்பட்ட குழந்தைகள் இருபது முதல் இருபத்தைந்து இருந்திருக்கலாம். ஏனெனில், குழந்தைகள் இறப்பு விகிதம் அப்போது அதிகம். இவற்றில் ஆண் குழந்தைகள் பத்து அல்லது பதிமூன்று இருந்திருக்கலாம். இக்குழந்தைகள் படுகொலை பற்றி ஃப்ளேவியு அறியாமல் இருந்திருக்கலாம். அல்லது இதை முக்கியமான நிகழ்வாகக் கருதாமல் இருந்திருக்கலாம். கத்தோலிக்க மரபில், படுகொலை செய்யப்பட்ட குழந்தைகள் ஆறு முதல் இருபது என இருக்கலாம் என்றும், கிரேக்க மரபில், எண்ணிக்கை பதினான்காயிரம் என்றும், எகிப்திய மரபில், ஒரு இலட்சத்து நாற்பத்து நான்காயிரம் என்றும் சொல்லப்படுகின்றது. 

3. வரலாற்று நிகழ்வா? இறையியல் நிகழ்வா?

குழந்தைகள் படுகொலை என்பதை  இறையியல் நிகழ்வு என்றும் சில ஆசிரியர்கள் சொல்கின்றனர். எப்படி?

முதலில், இது ஓர் இலக்கிய உத்தி. அதாவது, பலர் கொல்லப்பட கதாநாயகன் மட்டும் தப்பிப்பது என்பது இலக்கியத்தில் பயன்படுத்தப்படும் ஓர் உத்தி. இந்த உத்தியின் வழியாக, கதாநாயகன் மற்ற எல்லாரையும் விட மேன்மையானவராகக் காட்டப்படுகின்றார். விவிலியத்தில் இதற்கு இரு உதாரணங்களைக் கூறலாம். முதலில், மோசே (காண். விப 2:1-10). பாரவோன் அரசன் எபிரேய ஆண் குழந்தைகளைக் கொல்ல முயற்சி செய்ய, மோசே மட்டும் காப்பாற்றப்படுகின்றார். இரண்டாவதாக, நீதித்தலைவர்கள் நூலில் (காண். காண். நீத 9:3-6), கிதியோனின் மகன்கள் 70 பேரும் கொல்லப்பட, யோத்தாம் மற்றும் தப்புகின்றார். இப்படித் தப்புகிறவர்கள் அரசாள்வர் என்பதும் இலக்கிய உத்தி. 

இரண்டாவதாக, இறைவாக்கு நிறைவேறும் ஃபார்முலா. இயேசுவின் குழந்தைப் பருவக் கதையாடல் நிகழ்வுகளில் முதல் ஏற்பாட்டு இறைவாக்குகள் நிறைவேறுவதாகப் பதிவிடுகிறார் மத்தேயு. அந்த வரிசையில், குழந்தைகள் கொல்லப்படும் நிகழ்வில், இரு இறைவாக்குகள் நிறைவேறுகின்றன. ஒன்று, 'எகிப்திலிருந்து என் மகனை அழைத்து வந்தேன்' என்னும் ஓசேயா (11:1) இறைவாக்கு. இதில், 'என் மகன்' என்பது 'இஸ்ரயேல் மக்களை' குறிக்கின்றது. இரண்டு, 'ராமாவிலே ஒரு குரல் கேட்கின்றது. ஒரே புலம்பலும் பேரழுகையுமாய் இருக்கிறது. இராகேல் தம் குழந்தைகளுக்காக அழுதுகொண்டிருக்கிறார். ஆறுதல் பெற அவள் மறுக்கிறார். ஏனெனில், அவர் குழந்தைகள் அவரோடு இல்லை' (எரே 31:15). இந்த இறைவாக்கை எரேமியா நாடுகடத்தலின் பின்புலத்தில் உரைக்கின்றார். ராகேல் என்பவர் யாக்கோபின் மனைவி. இவருடைய கல்லறை எருசலேமுக்கு வெளியே இருந்தது. இஸ்ரயேல் மக்கள் எருசலேமை விட்டு வெளியே நாடுகடத்தப்படும்போது, அவருடைய கல்லறைக்குள் இருந்து அவர் அழுவதாகப் பதிவு செய்கிறார் எரேமியா. ஆக, இந்த நிகழ்வு பெத்லகேமிலிருந்து இயேசுவே எகிப்துக்கு அனுப்புகிறது. எகிப்திலிருந்து அவர் மீண்டும் திரும்ப வருவார். அல்லது, மோசே எகிப்திலிருந்து வந்தது போல, புதிய மோசேவாகிய இயேசுவும் எகிப்திலிருந்து வருவார் என்பது மத்தேயு மொழிகின்ற இறையியல் கருத்து.

மூன்றாவதாக, இயேசுவுக்குச் சிலுவை மரணம் என்பது அவருடைய பிறப்பிலேயே தொடங்கியது என்பதை மத்தேயு அடையாளமாகப் பதிவு செய்கின்றார். ஆகையால்தான், இயேசுவின் பிறப்பை யூதர்கள் நிராகரிப்பதாகவும் (பெரிய ஏரோது), புறவினத்தார்கள் ஏற்றுக்கொள்வதாகவும் (கீழ்;த்திசை ஞானியர்) பதிவு செய்கின்றார்.  

4. வழிபாட்டில் திருவிழா

நம் திருவழிபாட்டில் மாசில்லாக் குழந்தைகள் திருநாள், கிறிஸ்து பிறப்புக் காலத்திலேயே, டிசம்பர் 28 அன்று கொண்டாடப்படுகின்றது. தங்கள் இரத்தத்தால் இயேசுவுக்குச் சான்று பகர்ந்ததால், இவர்களே முதன்மையான சாட்சிகள் என அழைக்கப்படுகின்றனர்.

5. இந்நிகழ்வு தரும் செய்தி என்ன?

ஒரே இரவில் பச்சிளங் குழந்தைகள் பலர் கொல்லப்பட்டதற்கு யார் காரணம்? கடவுள், ஏரோது, ஞானியர், அகுஸ்து சீசர், வானதூதர், நீங்கள், நான் என்று எல்லாருமே காரணம்தான். குழந்தைகளின் இயலாமை, மௌனம், மென்மை, கையறுநிலை ஆகியவை மற்றவர்களின் தன்னலத்திற்காகப் பயன்படுத்தப்படுகின்றன.

அதிகாரம் எப்போதும் தன்னை நிலைநிறுத்திக்கொள்ளவே விரும்புகிறது. பெரிய ஏரோதுவின் பாதுகாப்பற்ற உணர்வையும், கோழைத்தனத்தையும், மூடத்தனத்தையும் இந்நிகழ்வு வெளிப்படுத்துகின்றது. மற்றொரு பக்கம், கொடுங்கோல் ஆட்சியாளர்கள் வரலாற்றின் போக்கை தங்களுக்கு ஏற்றாற்போல மாற்ற நினைத்தாலும், இறைவன் அவற்றின் ஊடேயும் தன் திட்டத்தை நிறைவேற்றுகின்றார்.

மாசில்லாக் குழந்தைகள் இன்றும் நம் முன்னர் மடிந்துகொண்டே இருக்கின்றனர். நிகழ்வின் சோகம் நம் முகங்களையும் நிறையவே அப்பிக்கொள்கிறது. இந்த நிகழ்வின் சோகத்தை மத்தேயு நற்செய்தியாளர் பாபிலோனிய நாடுகடத்தல் நிகழ்வோடு ஒப்பிடுகின்றார். 'ராமாவிலே ஒரு குரல் கேட்கிறது. ஒரே புலம்பலும் பேரழுகையுமாய் இருக்கிறது. இராகேல் தன் குழந்தைகளுக்காக அழுதுகொண்டிருக்கிறார். ஆறுதல் பெற அவர் மறுக்கிறார். ஏனெனில் அவர் குழந்தைகள் அவரோடு இல்லை' என்னும் எரேமியா இறைவாக்கினர் வார்த்தைகளை இங்கே மேற்கோள் காட்டுகின்றார். 'ராமா' என்பது இஸ்ரயேல் நாட்டின் எல்லைப் பகுதி. நெபுகத்னேசர் அரசர் யூதா மக்களை பாபிலோனுக்கு நாடு கடத்திச் செல்லும்போது, அந்த இடத்தில் அனைவரையும் கூட்டிச் சேர்த்து, அங்கிருந்து அவர்களை சங்கிலிகளால் பிணைத்து இழுத்துச் சென்றார். அந்த இடத்தில்தான் யாக்கோபின் இனிய இல்லாளாகிய இராகேலின் கல்லறை இருந்தது. நாடுகடத்தப்பட்ட மக்களின் அழுகுரல் கேட்டு, துயில் எழுகிற இராகேல் அழுகிறாள். அவளுடைய குழந்தைகள் நாடுகடத்தப்படுவதை அவளால் சகித்துக்கொள்ள முடியவில்லை. என்ன ஒரு சோகம்! இறந்தவளும் எழுந்து அமர்ந்து அழும் அளவுக்குச் சோகம். இருப்பவர்கள் நாம் அழலாம்! நம் தனிமையில், பிரச்சினையில், சோகத்தில், சோர்வில்! பாவம்! இறந்தவள் ஏன் எழ வேண்டும்? மாசில்லாக் குழந்தைகள் கொண்டாடப்படுவதை விட, வன்முறையாளர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதே நம் விருப்பமாக இருக்கிறது. மாசில்லாக் குழந்தைகள் இயேசுவுக்காக இறந்து சான்று பகர்ந்தார்கள் என்று ஆன்மிக நிலையில் புரிந்துகொள்ள நம் மனம் ஒப்பவில்லை. 

ஒரு குழந்தையை நள்ளிரவில் அதன் பெற்றோர் தூக்கிக் கொண்டு ஓட வேண்டிய நிலைக்கு அன்றைய அரசு எந்திரத்தின் அதிகார வெறி இருந்திருக்கிறது. ஓர் அரசன் தன் கோபத்தை குழந்தைகள்மேலும் திருப்பலாம் என்ற அளவுக்கு அவன் உணர்ச்சிகளால் உந்தப்பட்டவனாக இருக்கிறான். அதிகாரத்தின் முன்னால் அதிகாரமின்மை துன்புறுகிறது. வலிமையின் முன்னால் வலுவின்மை மரித்துப் போகிறது.

6. குழந்தைகளைக் கொண்டாடுவோம்!

மாசில்லாக் குழந்தைகள் போல இன்றும் பலர் துன்புறுகிறார்கள் என்று சொல்லி, துன்பத்திற்கு மாட்சி உண்டு என்று ஆறுதல் தருவது தவறு. வலுவற்றவர்களை வாழ வைக்காத வலிமையால் பயன் ஏது? சாலையில் அவசரமாகச் சென்று கொண்டிருந்த ஒரு நபரை மறிக்கும் காவல்துறை என்ற அரசு எந்திரம், 'ஹெல்மெட் அணியவில்லை' என்று சொல்லி அவர் தன் குழந்தையின் மருத்துவச் செலவுக்கு வைத்திருந்த 100 ரூபாயைப் பறித்துக்கொள்கிறது. காவல்துறை என்ற ஏரோதின் முன் அந்த நபரும் மாசற்ற குழந்தையே. இது ஓர் எடுத்துக்காட்டு மட்டுமே. இன்றும் பல ஏரோதுக்கள் பல நிலைகளில் நம் பச்சிளம் குழந்தைகளைக் கொல்ல நம் இல்லங்களுக்கு வருகின்றனர். நாமே சில நேரங்களில் ஏரோதுக்களாக இருக்கின்றோம்.

'துன்புறும் குழந்தைகளுக்காக – குறிப்பாக, வீடற்ற, பெற்றோர்களற்ற, போர் மற்றும் வன்முறையால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்காக – இறைவேண்டல் செய்வோம்' என்று கடந்த மாதச் செபக் கருத்தை வெளியிட்டார் நம் திருத்தந்தை. எனவே, குழந்தைகளுக்காக இறைவேண்டல் செய்தும், அவர்களை அரவணைத்தும் அவர்களுடைய இருத்தலை நாம் கொண்டாடுவோம்.

நிற்க.

எவ்வளவுதான் விடைகள் காண முயன்றாலும், கேள்விகள் நம் உள்ளத்தில் தொடர்ந்து எழுந்துகொண்டே இருக்கின்றன: தன் மகன் இயேசுவை வியத்தகு முறையில் காப்பாற்றத் திருவுளம் கொண்ட எல்லாம் வல்ல, அன்பு இறைவன் எல்லாக் குழந்தைகளையும் ஏன் காப்பாற்ற திருவுளம் கொள்ளவில்லை? மற்ற குழந்தைகள் இறந்துதான் இவரது மகன் காப்பாற்றப்பட வேண்டுமா? ஞானிகள் ஏரோதிடம் வராமலேயே போயிருக்கலாமே? அல்லது குழந்தையைப் பார்த்துவிட்டு ஏரோதிடம் வந்து, 'அப்படி எந்த அரசனும் பிறக்கவில்லை அரசே! நீர்தாம் என்றும் யூதர்களின் அரசன்!' என்று பொய்யாவது சொல்லிவிட்டுப் போயிருக்கலாமே!

'நான் உன்னை திருப்பி அடிக்க முடியாது என்பதால்தானே நீ என்னை அடிக்கிறாய்?' - இந்தக் கேள்விதான் மாசில்லாக் குழந்தைகள் உள்ளத்தில் இருந்திருக்கும். நம் இயலாமை, கையறுநிலை, மௌனம் ஆகியவை மற்றவர்களால் பயன்படுத்தப்படும்போதெல்லாம் நாமும் மாசில்லாக் குழந்தைகளே!


No comments:

Post a Comment