Monday, December 26, 2022

மற்றச் சீடர்

நாளின் (27 டிசம்பர் 2022) நற்புனிதர்

மற்றச் சீடர்

'இயேசு அன்பு செய்த சீடர்' அல்லது 'மற்றச் சீடர்' என நான்காம் நற்செய்தி நூலில் அறியப்படுகின்ற புனித யோவானின் திருநாளை இன்று நாம் கொண்டாடுகின்றோம். இவர் செபதேயுவின் மகன் என்றும், இவருடைய சகோதரர் யாக்கோபு என்றும் ஒத்தமைவு நற்செய்தி நூல்கள் முன்மொழிகின்றன. யோவான் நற்செய்தி, மூன்று மடல்கள், மற்றும் திருவெளிப்பாடு என்று இவருடைய எழுத்துகள் இரண்டாம் ஏற்பாட்டில் ஏறக்குறைய மூன்றில் ஒரு பகுதியை நிரப்புகின்றன. இயேசுவின் பன்னிருவரில் இளையவராக இருந்தவர் இவரே. இவரிடமே இயேசு தன் தாயை ஒப்படைக்கின்றார். இவருடைய இதயம் கழுகு போல மேலே பறந்தது என்பதால், இவருடைய நற்செய்தி நூலுக்கு, 'கழுகு' என்னும் அடையாளம் கொடுக்கப்படுகின்றது.

இன்றைய முதல் வாசகத்தில் தாங்கள் இயேசுவிடம் கண்டதையும், கேட்டதையும் எழுதுவதாகப் பதிவு செய்கின்றார். மேலும், தன் எழுத்துகள் தனக்கு மகிழ்ச்சி தருகின்ற என மொழிகின்றார். நற்செய்தி வாசகத்தில், 'சென்றார், கண்டார், நம்பினார்' என்று இயேசுவின் உயிர்ப்புக்குச் சான்று பகர்கின்றார்.

யோவான் மற்றும் அவருடைய எழுத்துகள் இன்று நமக்கு ஆறு வாழ்க்கைப் பாடங்களைத் தருகின்றன:

(1) 'நல்ல ஆயன் போல வாழ்வது'

இயேசுவை நல்ல ஆயனாக உருவகித்து, அதையே ஒரு சிறந்த தலைமைத்துவப் பண்பாகத் தருபவர் யோவான். வாழ்க்கையை நாம் இரு நிலைகளில் வாழ முடியும்: ஒன்று, நல்ல ஆயன் போல. இரண்டு, கூலிக்காரர் போல. கூலிக்காரர் தன் வாழ்வைச் சுமையாகப் பார்க்கிறார், அவர் தான் காட்டும் அக்கறை தனக்குப் பணமாகத் திரும்ப வேண்டும் என நினைக்கிறார், அவர் தன் பொறுப்பைத் தள்ளி விடுகிறார். ஆனால், ஆயன் தன் வாழ்வை சுகமாகப் பார்க்கிறார். கணக்குப் பார்க்காமல் அக்கறை காட்டுகின்றார். அவர் பொறுப்புணர்வுடன் வாழ்கிறார். நல்ல ஆயன் போல நாம் தலைமைத்துவத்தை ஏற்க வேண்டும். தலைமைத்துவம் நம் தனிப்பட்ட வாழ்வில் தொடங்க வேண்டும்.

(2) சீடத்துவம் நம் வாழ்வின் அனைத்துத் தளங்களையும் பாதிக்கிறது

இயேசுவின் சீடராக மாறுவது என்பது இரயிலின் ஒரு பெட்டியில் ஏறுவது போல அல்ல. மாறாக, வானூர்தியில் பறப்பது போல. அதாவது, சீடத்துவம் என்பதை நம் வாழ்வின் ஒரு பகுதியாகப் பார்க்க இயலாது. அது நம் வாழ்வின் அனைத்துத் தளங்களையும் தழுவி நிற்கிறது. இயேசுவின் சீடராகத் தான் பெற்ற அழைப்பில் எல்லா நேரங்களிலும் எல்லா இடங்களிலும் நிலைத்து நிற்கிறார் யோவான்.

(3) இயேசு நம் அறிவுக்கு அப்பாற்பட்டவர்

தான் இயேசுவைப் பற்றி நிறைய எழுதினாலும், இறுதியில், அனைத்தையும் எழுதினால் இந்த உலகமே கொள்ளாது எனத் தன் நற்செய்தியை நிறைவு செய்கிறார் யோவான். ஏனெனில், இயேசு அனுபவம் என்பது நம் சொற்களையும் கடந்து நிற்கிறது.

(4) சான்று பகர்தலின் ஆற்றல்

யோவான் நற்செய்தியில் இயேசுவைக் கண்ட அனைவரும் அவருக்குச் சான்று பகர்கின்றனர். 'இதோ கடவுளின் ஆட்டுக்குட்டி' என்று திருமுழுக்கு யோவான், 'நாங்கள் மெசியாவைக் கண்டோம்' என்று அந்திரேயா, 'வந்து பாருங்கள்' என்று சமாரியப் பெண், 'நான் பார்வையற்று இருந்தேன். இப்போது பார்க்கிறேன்' என பார்வையற்ற நபர், 'நான் ஆண்டவரைக் கண்டேன்' என்று மகதலா மரியா என அனைவரும் இயேசுவுக்குச் சான்று பகர்கின்றனர். இயேசுவைப் பற்றி நான் இன்று பகரும் சான்று என்ன?

(5) 'இறத்தலின்' ஆற்றல்

யோவான் நற்செய்தி முழுவதும் 'மாட்சி' இழையோடிக் கிடந்தாலும், 'இறப்பும்' இழையோடிக் கிடக்கின்றது. நற்செய்தியின் ஒவ்வொரு நகர்வும் இயேசுவின் இறப்பைப் பின்புலத்தில் கொண்டிருக்கிறது. இறப்பின் ஆற்றலை மிக அழகாக கோதுமை மணி உருவகத்தில் பதிவு செய்கிறார் யோவான்: 'கோதுமை மணி மண்ணில் விழுந்து இறந்தால்தான் பலன் தரும்!' ஆக, யோவானைப் பொருத்தவரையில், 'இறத்தல்' அல்லது 'மடிதல்' என்பது கனி தருதலுக்கான முதல் படி.

(6) தங்குதல் அல்லது இணைந்திருத்தல் ஆற்றல்

நற்செய்தியின் தொடக்கத்தில் முதற் சீடர்கள் இயேசுவுடன் சென்று தங்குகின்றனர். திராட்சைச் செடி உருவகத்தில் இணைந்திருத்தல் முதன்மைப்படுத்தப்படுகின்றது. தங்குதல் என்பது ஒரு நீடித்த அனுபவம். அந்த அனுபவம் ஒருவருடைய வாழ்வை முழுமையாக மாற்றுகிறது. நாம் இன்று செல்தலுக்குத் தரும் முக்கியத்துவத்தை தங்குதலுக்குத் தருவதில்லை. தங்குதல் என்பதை நாம் நேர விரயமாகவும் ஆற்றல் விரயமாகவும் பார்க்கின்றோம்.

(6அ) கட்டின்மை அல்லது விடுதலை

எழுதிக்கொண்டிருக்கும்போது என் மனத்தில் எழுந்த ஏழாவது பாடத்தை, '6அ' எனப் பதிவு செய்வோம். 'உண்மையை அறிந்தவர்களாக இருப்பீர்கள். உண்மை உங்களுக்கு விடுதலை அளிக்கும்' (காண். யோவா 8:31-32) என்று சொல்லும் இயேசுவின் சொற்கள் யோவான் நற்செய்தியில் உள்ளன. யோவானைப் பொருத்தவரையில் மனிதர்களின் மிக முதன்மையான மற்றும் மேன்மையான உணர்வு கட்டின்மை. நம் வாழ்வு இதை நோக்கியே நகர வேண்டும். நம் விடுதலை அல்லது கட்டின்மைக்குக் குறுக்கே இருக்கும் அக மற்றும் புறக் காரணிகள் அறவே களையப்பட வேண்டும்.

மேற்காணும் வாழ்க்கைப் பாடங்களை நம் வாழ்வியல் எதார்த்தங்களாக மாற்றினால் நாமும் மற்றச் சீடரே.

இன்று நாம் கொண்டாடும் யோவானின் எழுத்துகளோடு இன்றைய நாளின் சில நிமிடங்களையாவது கழித்தல் நலம்.


 

No comments:

Post a Comment