Monday, December 12, 2022

திருப்பம்

நாளின் (12 டிசம்பர் 2022) நல்வாக்கு

திருப்பம்

வாழ்க்கைப் பாதையில் நாம் பல திருப்பங்களைக் காண்கின்றோம். திருப்பங்கள் நம் வாழ்வில் ஆச்சர்யம் தருகின்றன. ஆண்டவராகிய கடவுள் ஏற்படுத்துகின்ற திருப்பம் பற்றிப் பேசுகின்றது இன்றைய இறைவார்த்தை வழிபாடு.

முதல் வாசகம் (காண். எண் 24:2-7,15-17) பிலயாமின் இறைவாக்குப் பகுதியாக உள்ளது. அன்றைய காலத்தில், 'இறைவாக்கினர்களை அழைத்துச் சாபமிடல்' என்ற ஒரு செயல் இருந்தது. அதாவது, நாம் பேசும் சொற்களுக்கு ஆற்றல் இருக்கின்றது. நேர்முகமான சொற்கள் மற்றவர்களை உருவாக்குகின்றன. எதிர்மறையான சொற்கள் மற்றவர்களை அழிக்கின்றன. அல்லது ஆசி கூறுவதால் வளமும், சாபம் கூறுவதால் அழிவும் நேரிடுகிறது. இஸ்ரயேல் மக்களின் எதிரியான பாலாக்கு அரசன் பிலயாம் என்னும் புறவினத்து இறைவாக்கினரை அழைத்து, அவர்களைச் சபிக்க முயற்சி செய்கின்றார். இப்படியாக, இஸ்ரயேல் மக்களைப் போரில் வெல்ல நினைக்கின்றார். இஸ்ரயேல் மக்களைச் சபிப்பதற்காகப் புறப்பட்டுச் சென்ற பிலயாமை இடைமறிக்கின்றார் ஆண்டவரின் தூதர். கழுதையும் இந்த நிகழ்வில் பேசுகிறது. கழுதையிலிருந்து தூக்கி எறியப்பட்ட பிலயாம் இஸ்ரயேல் மக்களைச் சபிப்பதற்குப் பதிலாக அவர்களை ஆசீர்வதிக்கின்றார். அவர் அளிக்கும் ஆசியே முதல் வாசகப் பகுதியாக அமைந்துள்ளது.

'உன் கூடாரங்களும், உன் இருப்பிடங்களும் எத்துணை அழகு வாய்ந்தவை! அவை விரிந்து கிடக்கும் பள்ளத்தாக்குகள் போன்றவை. ஆண்டவர் நட்ட அகில் மரங்கள் போன்றவை. தண்ணீர் அருகிலுள்ள கேதுரு மரங்கள் போன்றவை ... அவன் அரசு உயர்த்தப்படும் ... யாக்கோபிலிருந்து விண்மீன் ஒன்று உதிக்கும்! இஸ்ரயேலிலிருந்து செங்கோல் ஒன்று எழும்பும்!'

ஆண்டவர் புறவினத்து இறைவாக்கினர் வழியாகவும் செயலாற்றுகின்றார். ஆண்டவர் வரலாற்றை இயக்குகின்றார். ஆண்டவர் மற்றவர்களின் சாபங்களை ஆசீராக மாற்றுகின்றார். இதுவே ஆண்டவர் ஏற்படுத்தும் மாற்றம்.

நற்செய்தி வாசகத்தில் இயேசு கோவிலுக்குள் கற்பித்துக் கொண்டிருக்கும்போது, 'எந்த அதிகாரத்தால் நீர் இவற்றைச் செய்கிறீர்?' எனக் கேட்கின்றனர். அவரோ, 'திருமுழுக்கு யோவானுக்கு, திருமுழுக்கு அளிக்கும் அதிகாரம் எங்கிருந்து வந்தது? விண்ணகத்திலிருந்தா? மனிதரிடமிருந்தா?' என்று எதிர்கேள்வி கேட்கின்றார்.

யூத மரபில் ஒருவரின் செயல்களையும் சொற்களையும் நம்புவதற்கு, அதிகாரம் மற்றும் அறிகுறி முதன்மையானதாக இருந்தன. இயேசுவின் சமகாலத்து ரபிக்கள், 'மறைநூலின் அதிகாரத்தால் ...', 'மோசேயின் அதிகாரத்தால் ...', 'திருப்பீடத்தின் அதிகாரத்தால் ...' என்று சொல்லிக் கற்பிப்பார்கள். மேலும், அறிகுறிகள் நிகழ்த்தி தாங்கள் பெற்றுள்ள ஆற்றலை நிரூபிப்பார்கள். ஆனால், இயேசு, தானே அதிகாரம் கொண்டவராக, 'நான் உங்களுக்குச் சொல்கிறேன்' என்று கற்பிக்கின்றார். யோனா மற்றும் சாலமோனை அறிகுறிகள் என முன்வைக்கின்றார். புறவினத்தார் வழியாகவும் தங்கள் கடவுள் செயல்பட வல்லவர் என்பதை அவர்கள் அறிந்திருந்தாலும், தங்கள் இனத்தார்களான யோவானையும் இயேசுவையும் ஏற்றுக்கொள்ள மறுக்கின்றனர்.

இயேசுவின் மௌனமே புதிய திருப்பமாக அமைகின்றது. மறைமுகமாக அவர்களுடைய கடின உள்ளத்தை அவர்களுக்கு உணர்த்துகின்றார் இயேசு.

கடவுள் நம் வாழ்வில் திருப்பங்களை ஏற்படுத்துகின்றார். மௌனமாக இருக்கிறவர் பேசுவதும், பேசிக்கொண்டிருக்கிறவர் மௌனம் காப்பதும் அவர் ஏற்படுத்தும் திருப்பங்களாக இருக்கின்றன. கடவுள் நம் வாழ்வில் ஆற்றும் செயல்களை அறியவும், அவர்மேல் நம்பிக்கை கொள்ளவும் உள்ள தடைகள் எவை?


No comments:

Post a Comment