Friday, December 2, 2022

புனித பிரான்சிஸ் சவேரியார்

இன்றைய (3 டிசம்பர் 2022) பெருவிழா

புனித பிரான்சிஸ் சவேரியார்

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின்மேல் நாம் இன்று கொண்டுள்ள நம்பிக்கையை நம் மூதாதையரின் உள்ளத்தில் விதைத்த பெரிய தகப்பன், ஞானத் தகப்பன், புனித பிரான்சிஸ் சவேரியாரின் திருநாளைக் கொண்டாடி மகிழ்கின்றோம்.

அருள்பணியாளர்களின் கட்டளை செபத்தில், இன்றைய நாளின் இரண்டாம் வாசகம், புனித பிரான்சிஸ் சவேரியார் புனித இஞ்ஞாசியாருக்கு (தன் சபை நிறுவுனருக்கு) எழுதிய கடிதத்திலிருந்து கொடுக்கப்பட்டுள்ளது. அன்று அவர் சந்தித்த சவால்கள், நம் நாட்டில் நிலவிய வறுமை மற்றும் எழுத்தறிவின்மை, மறைபரப்புப் பணியாளர்களின் ஆர்வம் ஆகியவற்றை இக்கடிதத்திலிருந்து நாம் உணர முடிகிறது.

சவேரியார் காலத்தில் இருந்த சூழல் இப்போது இல்லைதான். அன்று, கத்தோலிக்கத் திருஅவையில் மட்டும்தான் மீட்பு உண்டு என்று திருஅவை நம்பியது. இன்று, எல்லா சமயங்களிலும் கடவுள் தன்னை வெளிப்படுத்துகிறார் என்று நம்புகிறது. அன்று, மறைத்தூதுப் பணிக்கு திருஅவை முக்கியத்துவம் கொடுத்தது. அதாவது, நிறைய இடங்களுக்குச் செல்ல வேண்டும். தன் இருத்தலை நிறைய 'இடத்தில்' பரப்ப வேண்டும். காலனியம் என்பது இடம் பரப்பலின் எச்சமே. இன்று, நாம் மறைக்குச் சான்று பகர்ந்தால் போதும் என்றும், யாரையும் நம்மிடம் இழுத்துக்கொள்ளத் தேவையில்லை என்றும், 'நேரம் இடத்தைவிடப் பெரியது' என்றும் கற்பிக்கின்றது. அன்று, கிறிஸ்தவம் என்பது திருமுழுக்கு, நம்பிக்கை அறிக்கை, கர்த்தர் கற்றுக்கொடுத்த செபம், அருள் நிறைந்த மரியே என்று மட்டும் இருந்தது. இன்று, கிறிஸ்தவம் என்றால் ஆலயம், பங்குத்தந்தை, ஆயர், திருத்தந்தை, சங்கம், மாமன்றம், திருஅவைச் சட்டம், பங்குப் பேரவை, பக்த சபைகள், அமைப்புகள், இயக்கங்கள், அருள்பணியாளர்கள், துறவியர்கள், கல்வி நிறுவனங்கள், பணம், சொத்து என்று மாறி நிற்கிறது. கிறிஸ்தவத்திற்கு வெளியேயும் நிறைய மாற்றங்கள். அன்று சவேரியார் திருமுழுக்கு கொடுத்தது போல, இன்று நாம் ஆயிரக்கணக்கில் திருமுழுக்கு கொடுக்க முடியாது. எல்லா சமயங்களும் தங்கள் சமயத்தின்மேல் அடிப்படைவாத நம்பிக்கை கொண்டிருக்கின்றன. மதமாற்றத்தை இன்று யாரும் விரும்புவதில்லை. வருகின்ற 5ஆம் தேதி நம் நாட்டின் உச்சநீதிமன்றமும் மனமாற்றத் தடைச் சட்டம் பற்றிய விவாதத்தை எடுக்கின்றது. அன்று சவேரியார் தெருவில் நின்று போதித்ததுபோல இன்று நாம் போதிக்க முடியாது. சட்ட, ஒழுங்கு பிரச்சினை வந்துவிடும். மேலும், கிறிஸ்தவத்திற்குள்ளேயே இன்று பல பிரிவுகளாகி நிற்கின்றோம். நம்மில் யாருடைய சபை உண்மையான சபை என்று நிரூபிக்கவே நமக்கு நேரம் சரியாகப் போய்விடுகிறது. ஒரே கத்தோலிக்கத் திருஅவை என்று ஓரளவுக்கு ஒத்துக்கொண்டாலும், வழிபாட்டு ரீதி அடிப்படையிலும் பிரச்சினைகள் இருக்கின்றன.

சவேரியாரைப் போல நாமும் இருக்க வேண்டும் என்று சொல்லிவிட்டு நம் சிந்தனையைச் சுருக்க இயலாது. இன்று கிறிஸ்தவம் தன்னைத் தக்கவைத்துக்கொள்ளவே பெருமுயற்சி எடுத்துக்கொண்டிருக்கிறது. கூட்டொருங்கியக்கம், மாமன்றம், இணைந்து பயணித்தல் என்று சொல்லித் தன்னை மாற்றிக்கொள்ள நினைக்கிறது. ஏனெனில், இப்போது இருப்பது தொடர்ந்தால் கிறிஸ்தவம் மறைந்துவிடும் அல்லது பொருந்தாதது ஆகிவிடும் என்னும் ஐயத்தையும் பயத்தையும் கொண்டிருக்கிறது. நிறுவனம் மட்டுமல்ல, தனிநபரும் மாற்றம் பெறாவிட்டால் பொருந்ததாகி விடுவார்.

சவேரியாரின் திருநாள் நமக்கு முன்மொழியும் சவால்கள் மூன்று:

(அ) அருள்பொழிவை உணர்வது

'ஆண்டவர் எனக்கு அருள்பொழிவு செய்துள்ளார்' என்று முதல் வாசகத்தில் மொழிகிறார் எசாயா. திருமுழுக்கின் வழியாக நாம் அனைவரும், பணிக்குருத்துவத்தின் வழியாக திருநிலையினரும் அருள்பொழிவு பெற்றுள்ளனர். அதாவது, ஒரு சிறப்பு அழைப்பை நாம் பெற்றுள்ளோம். இந்த அழைப்பை நாம் இன்று நினைவில்கொள்ள முன்வருவோம். 'இறைவாக்கு உரைத்து, மூப்பர்கள் உன்மீது கைகளை வைத்துத் திருப்பணியில் அமர்த்தியபோது உனக்கு அளிக்கப்பட்ட அருள்கொடையைக் குறித்து, அக்கறையற்றவனாய் இராதே' (1 திமொ 4:14) என அறிவுறுத்துகின்றார் பவுல்.

(ஆ) எல்லாருக்கும் எல்லாம் என ஆதல்

தன் நற்செய்தி அறிவுப்பணி பற்றி கொரிந்து நகரத் திருச்சபைக்கு எழுதுகின்ற பவுல், 'ஒரு சிலரையேனும் மீட்கும்படி நான் எல்லாருக்கும் எல்லாமானேன்' என்கிறார். சவேரியார் பேராசிரியராகப் பணி செய்கின்றார். இஞ்ஞாசியாரின் சொல் கேட்டு தன் பாதையை மாற்றுகின்றார். தன் பணி முழுவதிலும் மற்றவர்களை மட்டுமே நினைக்கின்றார். 'மற்றவர்கள் என்னைப் போல ஆக வேண்டும்' என எண்ணுவதற்குப் பதிலாக, குழந்தைக்கு குழந்தையாக, இளவலுக்கு இளவலாக, பெரியவருக்குப் பெரியவராக என்று மாறுகின்றார். மொழி அறிதல், உணவுப் பழக்கம் கற்றல், தூக்கம் மறத்தல் என அவர் ஏற்ற துன்பங்கள் ஏராளம்.

(இ) ஆண்டவர் உறுதிப்படுத்துகிறார்

நற்செய்தி வாசகத்தில், ஆண்டவர் உடனிருந்து நிகழ்ந்த அரும் அடையாளங்களால் சீடர்களின் வார்த்தையை உறுதிப்படுத்தினார் எனப் பதிவு செய்கின்றார் மாற்கு. ஆண்டவரின் உடனிருப்பை சவேரியார் என்றும் உணர்ந்தார். இறைவேண்டலில் நிலைத்திருந்தார். சில நேரங்களில் நம் பணியில் நாம் மற்றவர்களைக் கண்முன் நிறுத்திக்கொண்டே இருந்துவிட்டு ஆண்டவரை மறந்துவிடுகிறோம். ஆண்டவர் இல்லை என்றால் நம் பணி வெறும் சமூக மேம்பாட்டுப் பணி என்று ஆகிவிடும். ஆவியாரால் இயக்கப்படுகின்ற ஆன்மிகப் பணி என்பதை நாம் என்றும் நினைவில் கொள்தல் வேண்டும்.

நிற்க.

இப்புனிதர் நம் வாழ்வுக்கும், நம் நற்செய்திப் பணிக்கும் தரும் 12 பாடங்களைத் தருகின்றார்:

1. மாற்றமும் திரும்பாத திடமும்

பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருந்த பிரான்சிஸ் சவேரியார், தன் எழுத்து, புத்தகம், கரும்பலகை, மாணவர் சந்திப்பு, ஆய்வுத்தாள் என்று மும்முரமாக இருந்தபோது, புனித இஞ்ஞாசியார் சுட்டிக்காட்டிய விவிலிய வார்த்தைகளை - 'ஒருவர் உலகமெல்லாம் தனதாக்கிக் கொண்டாலும் தன் வாழ்வை (ஆன்மாவை) இழந்துவிட்டால் என்ன பயன்!' - கேட்டவுடன், தன் வாழ்க்கைப் பாதையை மாற்றிக்கொண்டார். மாற்றியது மட்டுமல்ல, அந்தப் பாதையிலிருந்து ஒரு நொடியும் திரும்பவில்லை. மாற வேண்டியது மட்டுமல்ல, மாறியபின் திடமாக இருப்பதும் முக்கியமானது எனக் கற்றுத் தருகிறார் நம் புனிதர்.

2. நலம் தருதல்

நம் புனிதர் தன் பணிவாழ்வில் பல வல்ல செயல்களை நடத்தியிருப்பதாக - குறிப்பாக, நலம் நல்கியதாக - நாம் பல இடங்களில் வாசித்திருக்கின்றோம். புனித அருளானந்தரும் கூட, அவருடைய அன்னை புனித சவேரியாரிடம் மன்றாடியதால்தான் உடல்நலம் பெற்றதாக வரலாற்றில் வாசிக்கின்றோம். அவருடைய நலம் தரும் செயல்கள் அவருடைய நற்செய்திப் பணிக்கான உறுதியளிப்புச் சான்றாக அமைந்தன. தன்னிலே நலமாக இருக்கும் ஒருவர்தான் பிறருக்கு நலம் தர முடியும். இன்று, நாம் உடல், உள்ளம், ஆன்மா எனப் பல நிலைகளில் காயம் பட்டிருக்கலாம். ஒவ்வொரு காயமும் ஒரு பிளவு. அந்தப் பிளவின் வழியே நம் ஆற்றல் அன்றாடம் வெளியேறி வீணாகிறது. பிளவுகள் குறைந்து நலம் அடைந்தால் நலம் தருதல் நமக்கும் சாத்தியமே.

3. ஆன்மீகப் பயிற்சிகள்

நம் உடல்நலனுக்கு உடற்பயிற்சி பயன்தருவது போல, ஆன்மீக வாழ்வுக்கு ஆன்மீகப் பயிற்சிகள் பயன்தருவதோடு அவசியமாகின்றன. பயிற்சி தரப்படும் எதுவும் பலம் பெறுகிறது. புனித சவேரியார் தன் மனமாற்றத்தில் உறுதியாக இருக்கக் காரணம் அவர் தன்னையே அன்றாடம் ஆன்மீகத்தில் புதுப்பித்துக் கொண்டதுதான். இன்று நாம் மேற்கொள்ளும் ஆன்மீகப் பயிற்சிகள் எவை?

4. கீழ்ப்படிதல்

கீழ்ப்படிதலில் நம் கட்டின்மை (சுதந்திரம்) பாதிக்கபடுவதாக பல அருள்பணியாளர்கள் சொல்லக் கேள்விப்பட்டுள்ளேன். ஆனால், கீழ்ப்படிதலில்தான் முழுமையான கட்டின்மை (சுதந்திரம்) உள்ளது என்பதற்கு புனித சவேரியாரின் வாழ்வு நல்ல எடுத்துக்காட்டு. கடவுளுக்கும், திருஅவைக்கும், திருத்தந்தைக்கும், தன் சபையின் தலைவர் இனிகோவுக்கும் கீழ்ப்படிதலை வழங்கிய நம் புனிதர், கீழ்ப்படிதலே தூய்மை வாழ்வுக்கான அழைப்பின் முதற்படி என உணர்த்துகின்றார். என் விருப்பத்தை இறைவனின் விருப்பத்திற்குக் கையளிப்பது எனக்கு எளிதாக இருக்கிறதா? 

5. ஏழ்மையின்மேல் காதல்

நம்மவர்கள் வெளி நாடுகளில் சென்று பணி செய்வது கடினம் அல்ல. தட்பவெப்ப நிலை தவிர மற்ற அனைத்தும் மேலை நாடுகளில் மிகவும் சிறப்பாக இருக்கும். மோசமான தட்பவெப்ப நிலையை எதிர்கொள்வதும் அங்கே எளிது. ஆனால், அங்கிருப்பவர்கள் இங்கு வந்து பணி செய்வது கடினம். அதிக வெப்பம், காரம் நிறை உணவு, புரியாத மொழிகளும் கலாச்சாரங்களும், மோசமான வாழிடம், பாதுகாப்பற்ற தண்ணீர், கழிப்பிட வசதியின்மை, மருத்துவத்தில் பின்தங்கிய நிலை, மின்சாரம் மற்றும் சாலை வசதிகள் இல்லாமை, மக்களை பிரிவுபடுத்திய சாதியம், மக்களின் மூட நம்பிக்கைகள் என எவ்வளவோ இடர்பாடுகள் இருந்தாலும், தன் ஏழ்மையால் நம் மண்ணைத் தழுவிக்கொண்டார். நம் நாட்டின் ஏழையருள் ஒருவராகத் தன்னை இணைத்துக்கொண்டார் நம் புனிதர். இன்று நாம் ஏழ்மையை எப்படித் தழுவிக்கொள்கிறோம்?

6. மக்கள்மேல் அன்பு

மக்கள்மேல் கொண்ட அன்பினால் புனித சவேரியார் மக்களின் குறைகள் அனைத்தையும் ஏற்றுக்கொண்டார். நம் புனிதர், தன் சபைத் தலைவர் இனிகோவுக்கு எழுதிய கடிதங்கள் நம் மக்களைப் பற்றி அறிந்துகொள்ளவும் உதவுகின்றன. நம் தாய்நாட்டு மக்களின் அறியாமை மற்றும் இயலாமையை அவர் குறையென்று ஒருபோதும் கருதவில்லை. அவற்றைப் பற்றி தன் தலைவரிடம் முறையிடவும் இல்லை. நம் மக்களைத் தீர்ப்பிடாமல் அன்பு செய்தவர் இவர். ஏனெனில், 'அன்பு அனைத்தையும் பொறுத்துக்கொள்ளும்' என்பதை இவர் உணர்ந்திருந்தார்.

7. திருத்தூதுப்பணி படைப்பாற்றல்

இன்று நம் கிறிஸ்தவம் தக்கவைக்கப்படுகிறதே அன்றி விரிவுபடுத்தப்படுவதில்லை. நாம் நம் பாதுகாப்பு வளையங்களான நிறுவனங்கள், ஆலயங்கள், வளாகங்களுக்குள் நம்மையே சுருக்கிவிட்டோம். நம் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் குறிப்பிடுவதுபோல, 'காணாமல் போன ஆடுகளைத் தேடிச் செல்லாமல், இருக்கின்ற ஆடுகளுக்கு முடிவெட்டிக் கொண்டிருக்கிறோம்.' புனித சவேரியார் ஒரு நல்ல பேராசிரியராக இருந்ததால், மறைக்கல்வி கற்றலை எளிதாக்குகின்றார். பாடல்கள், சுலோகங்கள், பயிற்சிகள் வழியாக மறைக்கல்வி கற்றுத்தந்தார். இன்று நம் படைப்பாற்றலைப் பயன்படுத்தி திருத்தூதுப் பணி வழிமுறைகளை உருவாக்குகிறோமா?

8. திருமுழுக்கு

நாளின் இறுதியில் தன் கையைத் தூக்க முடியாத அளவுக்கு வலி ஏற்படும் அளவுக்கு புனித சவேரியார் திருமுழுக்கு கொடுத்ததாக நாம் அவரது வாழ்க்கை வரலாற்றில் வாசிக்கின்றோம். அந்தக் காலத்தில், அதிகமான திருமுழுக்கு அதிகமான கிறிஸ்தவர்கள்ளூ அதிகமான கிறிஸ்தவர்கள், அதிகமான கிறிஸ்தவம் என்ற புரிதலே இருந்தது. வெறும் திருமுழுக்கு மட்டும் நம்மைக் கிறிஸ்தவர்கள் ஆக்கிவிடுமா? எனப் பலர் விமர்சிப்பதுண்டு. ஆக்கிவிடாதுதான்! ஆனால், அது ஒரு நல்ல தொடக்கம் என்பதை அறிந்திருந்தார் நம் புனிதர்.

9. பணிப் பகிர்வு

தானே ஒரு இடத்தில் தங்கி தன் பணியைச் சுருக்கிக்கொள்ளவில்லை புனித சவேரியார். தன் வாழ்வின் குறுகிய தன்மையை உணர்ந்த ஞானியாக அவர் இருந்ததால், தான் தன் திருஅவையின் தலைவராக இருப்பதற்குப் பதிலாக, அந்தந்த ஊரில் தலைவர்களை உருவாக்கினார். இது நாம் கற்க வேண்டிய பெரிய மேய்ப்புப் பணிப் பாடம். நம் பங்குகள் இன்னும் அருள்பணியாளர்களை மையப்படுத்தியே இயங்குகின்றன. மேலும், அருள்பணியாளர்கள் பல நேரங்களில் தலைவர்களாக இருக்கவே விரும்புகின்றனரே, தலைவர்களை உருவாக்கத் தயங்குகிறார்கள். தனக்கு எதுவும் நிலையல்ல என்று நினைத்த நம் புனிதர், அனைவரையும் நிரந்தரத்திற்குத் தயாரித்தார்.

10. பண்பாட்டுமயமாக்கல்

நம் திருஅவையின் இரண்டாம் வத்திக்கான் சங்கம், பண்பாட்டுமயமாக்கல் அல்லது கலாச்சாரமயமாக்கலை அதிகமாக வலியுறுத்துகிறது. 'நான் எல்லாருக்கும் எல்லாம் ஆனேன்' என்ற பவுலைத் தன் முன்மாதிரியாகக் கொண்ட நம் புனிதர், கிறிஸ்தவத்தின் முக்கியக் கூறுகளை நம் பண்பாட்டின் கூறுகளோடு பிணைத்து மக்களுக்கு அளித்தார். இப்படியாக, தன் அந்நியத்தன்மை நம் மக்களுக்கு இடறலாக இல்லாதவாறு பார்த்துக்கொண்டார். மேலும், தன் இன்சொல்லால் நம் நாட்டு அரசர்களின் நன்மதிப்பைப் பெற்றார் புனிதர். எல்லாப் பண்பாடும் நல்லதே, எல்லா மாந்தர்களும் பண்புடையவர்களே என்ற தன் பெருந்தன்மையால் அவர் இவ்வாறு செயல்பட்டார். இன்று சில நேரங்களில் நாம் பாரம்பரிய இலத்தீன் திருச்சபையை விட அதிகமான இலத்தீன் கூறுகளைக் கொண்டிருப்பதில் மகிழ்ந்துகொண்டிருப்பதை மறு ஆய்வு செய்தல் நலம்.

11. செபமும் தவமும்

தன் அயராத பணிகளுக்கு நடுவிலும் பல மணி நேரங்கள் நற்கருணையின் முன் அமர்ந்து இறைவேண்டல் செய்தார். பல மைல் கற்கள் பயணம் செய்ய வேண்டியிருப்பினும் குறைவான உணவே உட்கொண்டார். இந்நாட்டு மக்கள் ஏழ்மையில் இருக்க தான் உண்டு குடிப்பது தவறு என்று உணர்ந்திருந்தார் நம் புனிதர். தன் பணிதான் செபம் என்று சொல்லித் தன் ஓய்வை நியாயப்படுத்தவில்லை அவர். 'ஆனால் தேவையானது ஒன்றே' என்று இயேசு மார்த்தாவுக்குச் சொன்ன வார்த்தைகளை இவர் எந்நேரமும் நினைவில் கொண்டிருந்தார். 'தேவையான ஒன்றான' ஆண்டவரின் காலடிகளில் அமர்ந்து, பற்றற்றான் பாதங்களை இறுதியாகப் பற்றிக்கொண்டார். இவ்வாறாக, தன் பற்றுகளைத் துறந்தார்.

12. திருத்தூது ஆர்வம்

'எனக்கு நிறைய ஆன்மாக்களைக் கொடும்!' என்பதும், 'எப்போதும் மேன்மையானதே!' என்பதும் தான் இவருடைய இறைவேண்டல்களாக இருந்தன. இவருடைய திருத்தூது ஆர்வம் இவரை ஜப்பான் நாட்டின் கடற்கரை வரை அழைத்துச் சென்றது. 'இது போதும்!' என்று தன் பணியை நிறுத்திக்கொள்ளவில்லை நம் புனிதர். 'இன்னும் கொஞ்சம்! இன்னும் கொஞ்சம்! என் இயேசுவுக்காக!' என்பதே இவரது எண்ணமும் செயலுமாக இருந்தது.

பெரிய தகப்பனே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!


No comments:

Post a Comment