Friday, December 30, 2022

வலுவின்மைகளைக் கொண்டாடுதலே குடும்பம்

திருக்குடும்பத் திருவிழா

சீஞா 3:2-6,12-14 கொலோ 3:12-21 மத் 2:13-15,19-23

வலுவின்மைகளைக் கொண்டாடுதலே குடும்பம்

நான் இதை எழுதிக்கொண்டிருக்கும் இந்நேரம் உலகின் ஏதோ ஒரு மூலையில் இவையெல்லாம் நடந்து கொண்டிருக்கும்: ஒரு ஆணும், இன்னொரு ஆணும் அல்லது ஒரு பெண்ணும். இன்னொரு பெண்ணும் திருமணம் செய்து கொண்டிருப்பர். அல்லது இன்னொரு பெண் தன்னைத் தானே திருமணம் செய்து கொண்டதாக டுவிட் செய்து கொண்டிருப்பார். அல்லது நாம் இருவரும் நண்பர்களாகவே இருப்போம் என ஓர் ஆணும், பெண்ணும் முடிவெடுத்துக்கொண்டிருப்பர். அல்லது நம் சேர்ந்து வாழ்தலை இன்றோடு முடித்துக்கொள்வோம் என்ற இருவர் தத்தம் வீடுகள் நோக்கிச் செல்வர். அல்லது ஒரு பெண் தன் நண்பனுக்கு வாடகைத் தாயாக இருக்க முன்வருவதாக வாக்குறுதிப் பத்திரத்தில் கையெழுத்து போட்டுக் கொண்டிருப்பாள்.

குடும்பத்தின் பரிமாணங்கள் வேகமாக மாறிக்கொண்டே வரும் இக்காலத்தில் இயேசு-மரி-வளன் திருக்குடும்பம் நமக்குச் சொல்லும் பாடம் என்ன?

மனிதர்கள் மட்டும் உருவாக்கினால் அது குடும்பம். இறைவனும் அதில் ஓர் உறுப்பினர் என்றால் அது திருக்குடும்பம். இல்லையா?

ஒரு குடும்பத்தில் அண்ணன்-தம்பி என்று இரு சகோதரர்கள் இருந்தார்கள். இருவருக்கும் வயது 9-8 இருக்கும். தம்பி போலியோ நோயினால் நடக்க முடியாமல் ஆகிறான். ஆனால், அவனுக்கு கேரம் போர்ட் விளையாடுவது ரொம்பப் பிடிக்கும். ஊரின் வெளியில் உள்ள ஒரு அரங்கில் சிறுவர்களுக்காக கேரம் போர்ட் விளையாட்டு நடக்கும். அங்கே செல்ல விரும்பிய தன் தம்பியைத் தோளில் சுமந்துகொண்டு செல்கின்றான் அண்ணன். அரங்கம் நிரம்பி இருந்ததால் காத்திருக்க வேண்டிய கட்டாயம். அரங்கத்தின் ஓரத்தில் தம்பியை முதுகில் சுமந்தவாறு எந்த இடம் காலியாகும் என்று காத்திருக்கின்றான் அண்ணன். அண்ணன் தம்பியைத் தூக்கிக்கொண்டே நிற்பதைக் கவனிக்கின்ற பெரியவர் ஒருவர், 'தம்பி! அந்தச் சுமையைக் கொஞ்சம் இறக்கிவைக்கலாமே! இப்படி தூக்கிக்கொண்டே நிற்கின்றாயே?' எனக் கேட்கின்றார். 'இவன் சுமையல்ல. என் தம்பி!' என்கிறான் அண்ணன்.

குடும்பம் என்றால் ஒருவர் மற்றவரின் வலுவின்மையைச் சுமப்பதே.

பிறந்த கன்றுக்குட்டியோ, ஆட்டுக்குட்டியோ பிறந்த அதே நாளில் நடக்கவும், ஓடவும் செய்கின்றன. தங்களுடைய வாழ்க்கைத் தேவையை தாங்களே நிறைவேற்றிக்கொள்ளும் அளவிற்கு வலிமையுடையதாக மாறிவிடுகின்றன. ஆனால், மனிதர்கள் நாம் பிறந்தது முதல் இறப்பது வரை வலுவில்லாமல் இருக்கின்றோம். நம்முடைய வலுவின்மைகளைத் தாங்கிக்கொள்ள கடவுள் ஏற்படுத்திய ஒன்றுதான் குடும்பம்.

வலுவானவர்களுக்கு, தங்களிலேயே நிறைவு பெற்றவர்களாய் எண்ணுபவர்களுக்குக் குடும்பம் தேவையில்லை. வலுவற்றவர்களுக்கும், தங்களிலேயே நிறைவு காண இயலாதவர்களுக்குமே குடும்பம் தேவை.

இன்றைய முதல் வாசகத்தில் (காண். சீஞா 3:2-7, 12-14) அன்னையருக்கும் தந்தையருக்கும் தம்முடைய பிள்ளைகள்மேல் இருக்கும் உரிமைகளைச் சுட்டிக்காட்டும் சீராக்கின் ஞானநூல் ஆசிரியர், பிள்ளைகள் தங்களுடைய பெற்றோருக்கு ஆற்றவேண்டிய கடமைகளைச் சுட்டிக்காட்டுகின்றார்: 'குழந்தாய், உன் தந்தையின் முதுமையில் அவருக்கு உதவு, அவரது வாழ்நாளெல்லாம் அவர் உள்ளத்தைப் புண்படுத்தாதே. அவரது அறிவாற்றல் குறைந்தாலும் பொறுமையைக் கடைப்பிடி. நீ இளமை மிடுக்கில் இருப்பதால் அவரை இகழாதே. தந்தைக்குக் காட்டும் பரிவு மறக்கப்படாது. அது உன் பாவங்களுக்குக் கழுவாயாக விளங்கும்.' இங்கே 'தந்தை' என்ற சொல்லை, 'தாய்' என்ற சொல்லையும் உள்ளடக்கி, 'பெற்றோர்' என்ற நிலையிலேயே புரிந்துகொள்ள வேண்டும். இந்த அறிவுரைப்பகுதியில் இரண்டு விடயங்கள் புலப்படுகின்றன: ஒன்று, நாம் எல்லாரும் முதுமை அடைவோம். இன்றைய இளமை நாளைய முதுமையாகும். முதுமையில் நம்முடைய உடல் வல்லமை இழக்கும். சிந்திக்கும் திறன் அல்லது அறிவாற்றல் குறையும். இரண்டு, குழந்தை இந்நேரத்தில் தன் பெற்றோருக்குக் காட்டும் அன்பு பொறுமையாக வெளிப்பட வேண்டும். குழந்தை காட்டும் பொறுமை கடவுளிடமிருந்து அவருக்கு பரிவைப் பெற்றுக்கொடுக்கும்.

ஆக, உடல் தளர்ச்சி, அறிவுத் தளர்ச்சி என்று நம்முடைய பெற்றோர்கள் வலுவின்மையில் இருக்கும்போது குழந்தைகள் காட்ட வேண்டியது பொறுமை. 

இன்றைய இரண்டாம் வாசகத்தில் (காண். கொலோ 3:12-21), கொலோசை நகரத் திருஅவைக்கு எழுதும் தன்னுடைய மடலை நிறைவு செய்யுமுன் பவுல் சில அறிவுரைகளைக் கொடுக்கின்றார். அவருடைய அறிவுரை இரண்டு பகுதிகளாக அமைந்துள்ளது. முதல் பகுதியில், திருஅவை என்ற குடும்பத்தில் உறுப்பினர்கள் பெற்றிருக்க வேண்டிய பண்புகள் அல்லது குணநலன்கள் சிலவற்றைப் பட்டியலிடுகின்றார்: 'பரிவு, இரக்கம், நல்லெண்ணம், மனத்தாழ்மை, கனிவு, பொறுமை.' இரண்டாம் பகுதியில், திருமணமான பெண்களே, ஆண்களே, பிள்ளைகளே என்று ஒட்டுமொத்தக் குழுமத்திற்குள் இருக்கும் குடும்பங்களில் திகழ வேண்டிய பண்புநலன்களைச் சுட்டிக்காட்டுகின்றார்: 'பணிவு, அன்பு, கீழ்ப்படிதல்'. மேலும், 'கொடுமைப்படுத்தாதீர்கள்,' 'எரிச்சல் மூட்டாதீர்கள்' என்று எதிர்மறை வார்த்தைகளாலும் அறிவுறுத்துகின்றார்.

இம்மதிப்பீடுகள் எதற்காக? ஒருவர் மற்றவரின் வலுவின்மையைத் தாங்கிக்கொள்வதற்காகவே.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (காண். மத் 2:13-15, 19-23) குழந்தை இயேசுவைத் தூக்கிக்கொண்டு, மரியாவைக் கரம் பிடித்துக்கொண்டு, யோசேப்பு எகிப்திற்கு செல்வதையும், எகிப்திலிருந்து நாசரேத்து திரும்புவதையும் வாசிக்கின்றோம். 'குழந்தையின் உயிருக்கு அச்சுறுத்தல்' வருகின்றது. 'குழந்தையும் அதன் தாயும்' வலுவற்றவர்களாக இருக்கின்றனர். வலுவற்ற இவர்களைக் கூட்டிக்கொண்டு எகிப்திற்குச் செல்கின்றார் யோசேப்பு. இம்மூன்று வலுவற்றவர்களையும் இறைவனின் வல்லமை வழிநடத்துவதால், இறைவன் இவர்களோடு உடனிருப்பதால் இக்குடும்பம் திருக்குடும்பம் என ஆகிறது.

இங்கே, யோசேப்பின் உடனிருப்பு, பொறுமை, தெளிவான முடிவெடுத்தல், வேகம் போன்ற பண்புகள் நம்முடைய குடும்பங்களின் வாழ்வியல் பாடங்களாக இருக்கின்றன.

இவ்வாறாக, மூன்று வாசகங்களும் மனித வலுவின்மைகளை முன்னிறுத்தி, வலுவின்மையில் ஒருவர் மற்றவரோடு உடனிருப்பது குடும்ப உறவில்தான் என்று உறுதிபடக் கூறுகிறது.

நட்பு, காதல், பழக்கம், அறிமுகம் போன்ற மற்ற உறவுநிலைகளிலிருந்து குடும்ப உறவு மூன்று நிலைகளில் வேறுபடுகிறது:

அ. குடும்ப உறுப்பினர்களை நாம் தெரிந்துகொள்வதில்லை. அவர்கள் நமக்கு இறைவனால் கொடுக்கப்படுகிறார்கள். நம்முடைய அப்பா, அம்மா, அண்ணன், தம்பி, அக்கா, தங்கை, மகன், மகள் ஆகியோரைத் தேர்ந்தெடுக்கும் உரிமை நமக்கு இல்லை. 

ஆ. குடும்ப உறுப்பினர்களின் உறவு ஒருநாளும் முடிவதில்லை. என் அப்பாவை எனக்கு பிடிக்கவில்லை என்றாலும் அவர் எனக்கு அப்பாதான். இறுதிவரை என் அப்பா எனக்கு அப்பாதானே தவிர அவர் எனக்கு மாமாவாக, சித்தப்பாவாக மாறுவதில்லை. ஆனால், நட்பில் அந்த மாற்றம் சாத்தியம். மேலும், நானாக இந்த உறவை முறித்துக்கொள்ளவும் இயலாது. 

இ. குடும்ப உறுப்பினர்கள் ஒரே இரத்தத்தால் பிணைக்கப்படுபவர்கள். இரத்தம் என்றால் உயிர். ஆக, எவ்வளவு பிரச்சினைகள் வந்தாலும் அவர்களுக்கிடையே இருக்கின்ற பிணைப்பை நாம் எடுக்கவே முடியாது. மேலும், ஆபத்துக்காலத்தில் உடன் வருபவர்கள் குடும்ப உறுப்பினர்களே. சில நேரங்களில் இந்நிலை சாத்தியமில்லாமல் இருக்கலாம். விவிலியம் அழகாகச் சொல்கிறது: 'நண்பன் எப்போதும் அன்பு காட்டுவான். இடுக்கணில் உதவுவதற்கே உடன் பிறந்தவன் இருக்கிறான்' (நீமொ 17:17)

மற்ற எந்த உறவுநிலையிலும் இல்லாத நெருக்கமும் பிணைப்பும் குடும்ப உறவில் இருக்கின்றது. 

இந்தக் குடும்ப உறவின் நோக்கம் ஒருவர் மற்றவரின் வலுவின்மையைக் கொண்டாடுவது என்றால், வலுவின்மையை நாம் எப்படிக் கொண்டாட வேண்டும்?

1. பிறரின் நலன் நாடுவது

திருக்குடும்பத்தில் யோசேப்பு மரியாவின், குழந்தையின் நலன் நாடுகின்றார். திருமண உறவில் கணவனும், மனைவியும் ஒருவர் மற்றவரின் நலன் நாட வேண்டும் என்று அறிவுறுத்துகின்றார் பவுல். சீராக்கும் இதே கருத்தையே சொல்கின்றார். என்னுடைய நலனை நாடாது, நான் எனக்கு அடுத்திருக்கும் - அப்பா, அம்மா, சகோதரன், சகோதரி, மகன், மகள் - நபரின் நலனை நாட வேண்டும். அடுத்தவரின் நலன் நாடும் ஒருவரால்தான் அடுத்தவரின் வலுவின்மையைக் கொண்டாட முடியும்.

2. துன்பம் ஏற்பது

வலுவின்மையைக் கொண்டாடுதல் என்றால், நடுஇரவில் விழிப்பது, குளிரில் எகிப்து நோக்கி புறப்படுவது, ஆபத்துக்களை எதிர்கொள்வது, அஞ்சாநெஞ்சம் கொண்டிருப்பது, திட்டமிடுவது, செயல்படுத்துவது, கடவுள்தரும் அடையாளங்களைச் சரியாகக் கண்டுகொள்வது. என்னுடைய பாதுகாப்பு வளையத்திற்குள் நான் நின்றுகொண்டு அடுத்தவரின் வலுவின்மையைக் கொண்டாட முடியாது. 

3. பலனை எதிர்பாராமல் இருப்பது

குடும்ப உறவுகளுக்குள் பலனை எதிர்பார்ப்பது என்பது வியாபாரம் செய்வது போன்றது. 'இதைச் செய்தால் எனக்கு என்ன கிடைக்கும்' என்பது நட்பு அல்லது அறிமுக உறவில் இருக்கலாமே தவிர, குடும்ப உறவில் இருக்க முடியாது. தாயின் அன்புக்கும், தந்தையின் தியாகத்திற்கும் குழந்தை ஒருபோதும் கைம்மாறு செய்யவே முடியாது. எனக்கு என் குழந்தையிடம் எந்தக் கைம்மாறும் இல்லை என்று சொல்லி எந்தத் தந்தையாவது தன் குழந்தைக்குரிய கடமையைச் செய்யத் தவறுகிறாரா? இல்லை. நடுஇரவில் தன்னுடைய மனைவியையும், குழந்தையையும் தூக்கிக்கொண்டு எகிப்துக்கு ஓடிய வளனாருக்கு மரியாவும், குழந்தையும் என்ன கைம்மாறு செய்துவிட முடியும்? எந்த பலனையும் எதிர்பார்க்காமல் புறப்படுகின்றார் வளனார்.

இறுதியாக,

இன்றைய நாளில் நம்முடைய அப்பா, அம்மா, பிள்ளைகளுக்காக நன்றி கூறுவோம். என்னுடைய வலுவின்மைகளை மட்டுமே நான் அடுக்காமல், அவர்களின் வலுவின்மைகளை நான் கண்டறிந்து கொண்டாடும் போது, நம்முடைய குடும்பங்களும் திருக்குடும்பங்களாகும்!

Wednesday, December 28, 2022

வெளிப்பாடு அருளும் ஒளி

நாளின் (29 டிசம்பர் 2022) நல்வாக்கு

வெளிப்பாடு அருளும் ஒளி

இன்றைய இரண்டு வாசகங்களிலும், 'ஒளி' என்னும் உருவகம் முதன்மையாக இருக்கிறது. 

'ஒளியில் இருப்பதாகச் சொல்லிக் கொண்டு தம் சகோதரர் சகோதரிகளை வெறுப்போர் இருளில்தான் இருக்கின்றனர். தம் சகோதரர் சகோதரிகளிடம் அன்பு கொள்வோர் ஒளியில் நிலைத்திருக்கின்றனர்' என்று முதல் வாசகத்தில் திருத்தூதர் யோவான், ஒளியில் நிலைத்திருப்பது என்பது அன்பு செய்வதைக் குறிப்பதாக முன்மொழிகின்றார்.

நற்செய்தி வாசகத்தில், குழந்தை இயேசுவை எருசலேம் ஆலயத்தில் காணிக்கையாக அர்ப்பணிக்கும் நிகழ்வில், 'மக்கள் அனைவரும் காணுமாறு, நீர் ஏற்பாடு செய்துள்ள உமது மீட்பை என் கண்கள் கண்டுகொண்டன. இம்மீட்பே பிற இனத்தாருக்கு வெளிப்பாடு அருளும் ஒளி. இதுவே உம் மக்களாகிய இஸ்ரயேலுக்குப் பெருமை' என்கிறார் சிமியோன். இங்கே, ஒளி என்பது இயேசுவையும் அவர் தருகின்ற மீட்பையும் குறிக்கிறது.

ஒளி என்பதை நாம் இன்று எப்படிப் புரிந்துகொள்வது?

அன்பு என்பது ஒளியாக மாற முடியும்.

ஏனெனில், நாம் அன்பு செய்யும்போது நம்மைப் பற்றியும், மற்றவர்களைப் பற்றியும் புதிய புரிதலைப் பெறுகின்றோம். அன்பின் ஒளி கொண்டு நாம் மற்றவர்களை நன்றாகப் பார்க்க முடிகிறது.

சில நேரங்களில் அன்பு என்னும் ஒளி நம் பார்வையை மறைக்கவும் செய்யலாம். நம் அன்புக்குரியவர்களின் தவறுகளை, பிறழ்வுகளை நாம் கண்டுகொள்ளாமல் இருக்கவும் அன்பு நம்மைத் தூண்டுகிறது.

குழந்தை இயேசுவை நம் கைகளில் ஏந்துகின்ற நாம் சிமியோன் போல அக்குழந்தையின் கண்களில் நம் கண்களைக் கண்டோம் எனில், நாமும் மீட்புப் பெறலாம்.


Tuesday, December 27, 2022

மாசில்லாக் குழந்தைகள் திருநாள்

மாசில்லாக் குழந்தைகள் திருநாள்

விவிலியமும் வரலாறும்

இயேசுவின் குழந்தைப் பருவ நிகழ்வுகளைப் பதிவு செய்கின்ற மத்தேயு 'குழந்தைகள் படுகொலை' நிகழ்வையும் (காண். மத் 2:16-18) பதிவு செய்கின்றார். கீழ்த்திசை ஞானியர் வேறு வழியில் சென்றதைக் கேள்வியுற்ற ஏரோது பெத்லகேமிலும் அதன் சுற்றுப்புறமெங்கும் ஆள்களை அனுப்பி இரண்டு வயதும் அதற்கு உட்பட்டவையுமான எல்லா ஆண்குழந்தைகளையும் கொல்லுமாறு ஆணையிடுகின்றார்.

இந்த நற்செய்திப் பாடத்தை ஒருமுறை நான் குழந்தைகளுக்கு மறைக்கல்வி வகுப்பில் நடத்திக்கொண்டிருந்தேன். அப்போது ஓர் இளவல், 'ஏன் ஃபாதர் கடவுள் மற்றக் குழந்தைகளையும் காப்பாற்றவில்லை?' என்று கேட்டார்;. 'எல்லாத் தந்தையர்களின் கனவுகளிலும் தூதர் வந்து எச்சரித்திருக்கலாமே? அல்லது பெரிய ஏரோதுவைக் கடவுள் கொன்றிருக்கலாமே? ஒரு குழந்தை காப்பாற்றப்படுவதற்காக மற்றக் குழந்தைகள் கொல்லப்பட வேண்டுமா? யூதேய மலைநாட்டிலுள்ள சக்கரியா-எலிசபெத்தின் குழந்தை திருமுழுக்கு யோவான் எப்படிக் காப்பாற்றபட்டார்? இலக்கு சரியானது என்பதற்காக, எந்தவொரு வழியையும் பயன்படுத்த இயலுமா?' என்னும் கேள்விகள் அக்குழந்தையின் கேள்வியின் நீட்சிகளே. இக்கேள்விகள் நிகழ்வின் அறநெறி சார்ந்ததாக இருக்க, இந்நிகழ்வு வரலாற்று நிகழ்வா அல்லது இறையியல் நிகழ்வா என்னும் கேள்வியும் நம்மில் எழுகின்றது. இக்கேள்விகளுக்கு விடை காண முயற்சி செய்கின்றது இக்கட்டுரை.

1. யார் இந்தப் பெரிய ஏரோது?

ஏறக்குறைய 2000 ஆண்டுகளுக்கு முன்னர் பண்டைக்கால அண்மைக் கிழக்குப் பகுதியில் வாழ்ந்தவர்களில் அலெக்ஸாண்டர் தெ கிரேட், அகுஸ்து சீசர், இயேசு கிறிஸ்து, பவுல் போன்றவர்கள் பற்றிய குறிப்புகள் அல்ல, மாறாக, ஹெரட் தெ கிரேட் (பெரிய ஏரோது) பற்றிய குறிப்புகளே அதிகம் காணப்படுகின்றது. யோசேப்பு ஃப்ளேவியு என்னும் வரலாற்று ஆசிரியர் பெரிய ஏரோது பற்றிய இரு பெரும் நூல்களை எழுதியுள்ளார். 

பெரிய ஏரோது தன் பெயருக்கு ஏற்றாற்போலவே மேன்மை மிகுந்தவராகவே விளங்கினார். எப்படி? கிமு 63ஆம் ஆண்டு உரோமை யூதேயாவைக் கையகப்படுத்துகிறது. அந்த நேரத்தில் யூதேயாவின் ஆளுநராக இருந்த பெரிய ஏரோது யூதேயாவின் அரசராக நியமிக்கப்படுகின்றார். உரோமை அப்படித்தான் ஆட்சி நடத்தியது. கிமு 40இலிருந்து கிபி 4ஆம் ஆண்டு வரை யூதேயாவின் அரசராக ஆட்சி செய்கின்றார் பெரிய ஏரோது. செருபாபேல் கட்டிய இரண்டாம் எருசலேம் ஆலயத்தைப் புதுப்பித்து விரிவுபடுத்துகின்றார் பெரிய ஏரோது. மேலும், செசரியா என்னும் நகரையும், எருசலேமைச் சுற்றி ஏழு பாதுகாப்புக் கோட்டைகளையும், சாக்கடலுக்கு அருகே மசாதா என்னும் நகரையும் கட்டு எழுப்புகின்றார். யூதேயாவைக் கொடும் பஞ்சம் தாக்கியபோது தன் தந்தைவழிச் சொத்தையும் விற்று நகருக்குத் தண்ணீர் கொண்டு வந்தார். உரோமைக்கும் எருசNலுமுக்கும் இடையே அமைதியை ஏற்படுத்தியதோடு, மக்கள் மனத்திலும் நல்மனிதராகத் திகழ்ந்தார்.

ஆனால், அவருடைய குடும்பம் கண்களில் விழுந்த தூசியாக, செருப்புக்குள் சிக்கிய கல்லாக அவரை வருத்திக்கொண்டே இருந்தது. அவருக்கு பத்து மனைவியர். இவர்கள் பெற்றெடுத்த மகன்கள் அனைவரும் தந்தைக்குப் பிறகு அரசராக விரும்பினர். மேலும், ஒருவர் மற்றவர்மேல் போட்டி மற்றும் பொறாமை உணர்வு கொண்டு, ஒருவர் மற்றவரை அழித்துக்கொள்ளவும் தொடங்கினர். தனக்கு எதிராகச் சூழ்ச்சி செய்த தனது மூன்று மகன்களைக் கொன்று போடுகின்றார் பெரிய ஏரோது. மேலும், தனக்கு மிகவும் பிடித்த மரியம் என்னும் தன் மனைவியையும், மாமியாரையும்கூடக் கொன்றுவிடுகின்றார். இதைக் கேள்வியுற்ற அகுஸ்து, 'ஏரோதுவுக்கு மகனாகப் பிறப்பதை விட, அவர் வீட்டுப் பன்றியாகப் பிறப்பது நலம்!' என்று மொழிகின்றார். தன் அதிகாரத்தையும், ஆட்சியையும் தக்க வைத்துக்கொள்வதற்காக யாரையும் கொல்லத் துணிந்தவராக இருந்தார் பெரிய ஏரோது.

நாள்கள் செல்லச் செல்ல இவருடைய இனத்தாரான யூதர்களே அவரை வெறுக்கத் தொடங்குகின்றனர். தன்மேல் வெறுப்பு அதிகமாவதை உணர்கின்ற பெரிய ஏரோது, தான் நோயுற்று இறக்கும் தருவாயில் ஒரு திட்டம் தீட்டுகின்றார். தன் இறப்பு கண்டு யூதர்கள் மகிழ்வார்கள் என அறிந்து, யூதத் தலைவர்கள் அனைவரையும் கைது செய்து தான் உருவாக்கிய விளையாட்டரங்கில் அடைக்குமாறு உத்தரவிடுகின்றார். தான் இறக்கும் நாளில் இவர்கள் அனைவரையும் கொன்றுவிடுமாறு தன் சகோதரி சலோமிக்கு உத்தரவிடுகின்றார். ஆக, தனக்காக யாரும் அழவில்லை என்றாலும், நகரின் தலைவர்களுக்காக வருத்தம் தெரிவிப்பார்கள் என்பது ஏரோதுவின் எண்ணமாக இருந்தது. 

உள்ளத்தில் வன்மமும், வாள்களில் இரத்தமும் கண்டு பழகிய பெரிய ஏரோது தன் ஆட்சியைத் தக்க வைத்துக்கொள்வதற்காக யூதர்களின் அரசராகப் பிறந்த இயேசுவைக் கொலை செய்ய முயற்சி செய்யாமலா இருந்திருப்பார்?

2. குழந்தைகள் படுகொலை – கதையா?

பெரிய ஏரோது செய்த அனைத்துக் கொடிய செயல்களையும் பதிவிட்ட யோசேப்பு ஃப்ளேவியு குழந்தைகள் படுகொலையைப் பதிவு செய்யாதது ஏன்? என்னும் கேள்வி எழுகின்றது. பெத்லகேம் ஒரு சிறிய ஊர். ஏறக்குறைய அறுபதிலிருந்து நூறு குடும்பங்கள் இருந்திருக்கலாம். கிபி 2 முதல் 4ஆம் ஆண்டுகளில் அந்த ஊரில் இரு வயதுக்குட்பட்ட குழந்தைகள் இருபது முதல் இருபத்தைந்து இருந்திருக்கலாம். ஏனெனில், குழந்தைகள் இறப்பு விகிதம் அப்போது அதிகம். இவற்றில் ஆண் குழந்தைகள் பத்து அல்லது பதிமூன்று இருந்திருக்கலாம். இக்குழந்தைகள் படுகொலை பற்றி ஃப்ளேவியு அறியாமல் இருந்திருக்கலாம். அல்லது இதை முக்கியமான நிகழ்வாகக் கருதாமல் இருந்திருக்கலாம். கத்தோலிக்க மரபில், படுகொலை செய்யப்பட்ட குழந்தைகள் ஆறு முதல் இருபது என இருக்கலாம் என்றும், கிரேக்க மரபில், எண்ணிக்கை பதினான்காயிரம் என்றும், எகிப்திய மரபில், ஒரு இலட்சத்து நாற்பத்து நான்காயிரம் என்றும் சொல்லப்படுகின்றது. 

3. வரலாற்று நிகழ்வா? இறையியல் நிகழ்வா?

குழந்தைகள் படுகொலை என்பதை  இறையியல் நிகழ்வு என்றும் சில ஆசிரியர்கள் சொல்கின்றனர். எப்படி?

முதலில், இது ஓர் இலக்கிய உத்தி. அதாவது, பலர் கொல்லப்பட கதாநாயகன் மட்டும் தப்பிப்பது என்பது இலக்கியத்தில் பயன்படுத்தப்படும் ஓர் உத்தி. இந்த உத்தியின் வழியாக, கதாநாயகன் மற்ற எல்லாரையும் விட மேன்மையானவராகக் காட்டப்படுகின்றார். விவிலியத்தில் இதற்கு இரு உதாரணங்களைக் கூறலாம். முதலில், மோசே (காண். விப 2:1-10). பாரவோன் அரசன் எபிரேய ஆண் குழந்தைகளைக் கொல்ல முயற்சி செய்ய, மோசே மட்டும் காப்பாற்றப்படுகின்றார். இரண்டாவதாக, நீதித்தலைவர்கள் நூலில் (காண். காண். நீத 9:3-6), கிதியோனின் மகன்கள் 70 பேரும் கொல்லப்பட, யோத்தாம் மற்றும் தப்புகின்றார். இப்படித் தப்புகிறவர்கள் அரசாள்வர் என்பதும் இலக்கிய உத்தி. 

இரண்டாவதாக, இறைவாக்கு நிறைவேறும் ஃபார்முலா. இயேசுவின் குழந்தைப் பருவக் கதையாடல் நிகழ்வுகளில் முதல் ஏற்பாட்டு இறைவாக்குகள் நிறைவேறுவதாகப் பதிவிடுகிறார் மத்தேயு. அந்த வரிசையில், குழந்தைகள் கொல்லப்படும் நிகழ்வில், இரு இறைவாக்குகள் நிறைவேறுகின்றன. ஒன்று, 'எகிப்திலிருந்து என் மகனை அழைத்து வந்தேன்' என்னும் ஓசேயா (11:1) இறைவாக்கு. இதில், 'என் மகன்' என்பது 'இஸ்ரயேல் மக்களை' குறிக்கின்றது. இரண்டு, 'ராமாவிலே ஒரு குரல் கேட்கின்றது. ஒரே புலம்பலும் பேரழுகையுமாய் இருக்கிறது. இராகேல் தம் குழந்தைகளுக்காக அழுதுகொண்டிருக்கிறார். ஆறுதல் பெற அவள் மறுக்கிறார். ஏனெனில், அவர் குழந்தைகள் அவரோடு இல்லை' (எரே 31:15). இந்த இறைவாக்கை எரேமியா நாடுகடத்தலின் பின்புலத்தில் உரைக்கின்றார். ராகேல் என்பவர் யாக்கோபின் மனைவி. இவருடைய கல்லறை எருசலேமுக்கு வெளியே இருந்தது. இஸ்ரயேல் மக்கள் எருசலேமை விட்டு வெளியே நாடுகடத்தப்படும்போது, அவருடைய கல்லறைக்குள் இருந்து அவர் அழுவதாகப் பதிவு செய்கிறார் எரேமியா. ஆக, இந்த நிகழ்வு பெத்லகேமிலிருந்து இயேசுவே எகிப்துக்கு அனுப்புகிறது. எகிப்திலிருந்து அவர் மீண்டும் திரும்ப வருவார். அல்லது, மோசே எகிப்திலிருந்து வந்தது போல, புதிய மோசேவாகிய இயேசுவும் எகிப்திலிருந்து வருவார் என்பது மத்தேயு மொழிகின்ற இறையியல் கருத்து.

மூன்றாவதாக, இயேசுவுக்குச் சிலுவை மரணம் என்பது அவருடைய பிறப்பிலேயே தொடங்கியது என்பதை மத்தேயு அடையாளமாகப் பதிவு செய்கின்றார். ஆகையால்தான், இயேசுவின் பிறப்பை யூதர்கள் நிராகரிப்பதாகவும் (பெரிய ஏரோது), புறவினத்தார்கள் ஏற்றுக்கொள்வதாகவும் (கீழ்;த்திசை ஞானியர்) பதிவு செய்கின்றார்.  

4. வழிபாட்டில் திருவிழா

நம் திருவழிபாட்டில் மாசில்லாக் குழந்தைகள் திருநாள், கிறிஸ்து பிறப்புக் காலத்திலேயே, டிசம்பர் 28 அன்று கொண்டாடப்படுகின்றது. தங்கள் இரத்தத்தால் இயேசுவுக்குச் சான்று பகர்ந்ததால், இவர்களே முதன்மையான சாட்சிகள் என அழைக்கப்படுகின்றனர்.

5. இந்நிகழ்வு தரும் செய்தி என்ன?

ஒரே இரவில் பச்சிளங் குழந்தைகள் பலர் கொல்லப்பட்டதற்கு யார் காரணம்? கடவுள், ஏரோது, ஞானியர், அகுஸ்து சீசர், வானதூதர், நீங்கள், நான் என்று எல்லாருமே காரணம்தான். குழந்தைகளின் இயலாமை, மௌனம், மென்மை, கையறுநிலை ஆகியவை மற்றவர்களின் தன்னலத்திற்காகப் பயன்படுத்தப்படுகின்றன.

அதிகாரம் எப்போதும் தன்னை நிலைநிறுத்திக்கொள்ளவே விரும்புகிறது. பெரிய ஏரோதுவின் பாதுகாப்பற்ற உணர்வையும், கோழைத்தனத்தையும், மூடத்தனத்தையும் இந்நிகழ்வு வெளிப்படுத்துகின்றது. மற்றொரு பக்கம், கொடுங்கோல் ஆட்சியாளர்கள் வரலாற்றின் போக்கை தங்களுக்கு ஏற்றாற்போல மாற்ற நினைத்தாலும், இறைவன் அவற்றின் ஊடேயும் தன் திட்டத்தை நிறைவேற்றுகின்றார்.

மாசில்லாக் குழந்தைகள் இன்றும் நம் முன்னர் மடிந்துகொண்டே இருக்கின்றனர். நிகழ்வின் சோகம் நம் முகங்களையும் நிறையவே அப்பிக்கொள்கிறது. இந்த நிகழ்வின் சோகத்தை மத்தேயு நற்செய்தியாளர் பாபிலோனிய நாடுகடத்தல் நிகழ்வோடு ஒப்பிடுகின்றார். 'ராமாவிலே ஒரு குரல் கேட்கிறது. ஒரே புலம்பலும் பேரழுகையுமாய் இருக்கிறது. இராகேல் தன் குழந்தைகளுக்காக அழுதுகொண்டிருக்கிறார். ஆறுதல் பெற அவர் மறுக்கிறார். ஏனெனில் அவர் குழந்தைகள் அவரோடு இல்லை' என்னும் எரேமியா இறைவாக்கினர் வார்த்தைகளை இங்கே மேற்கோள் காட்டுகின்றார். 'ராமா' என்பது இஸ்ரயேல் நாட்டின் எல்லைப் பகுதி. நெபுகத்னேசர் அரசர் யூதா மக்களை பாபிலோனுக்கு நாடு கடத்திச் செல்லும்போது, அந்த இடத்தில் அனைவரையும் கூட்டிச் சேர்த்து, அங்கிருந்து அவர்களை சங்கிலிகளால் பிணைத்து இழுத்துச் சென்றார். அந்த இடத்தில்தான் யாக்கோபின் இனிய இல்லாளாகிய இராகேலின் கல்லறை இருந்தது. நாடுகடத்தப்பட்ட மக்களின் அழுகுரல் கேட்டு, துயில் எழுகிற இராகேல் அழுகிறாள். அவளுடைய குழந்தைகள் நாடுகடத்தப்படுவதை அவளால் சகித்துக்கொள்ள முடியவில்லை. என்ன ஒரு சோகம்! இறந்தவளும் எழுந்து அமர்ந்து அழும் அளவுக்குச் சோகம். இருப்பவர்கள் நாம் அழலாம்! நம் தனிமையில், பிரச்சினையில், சோகத்தில், சோர்வில்! பாவம்! இறந்தவள் ஏன் எழ வேண்டும்? மாசில்லாக் குழந்தைகள் கொண்டாடப்படுவதை விட, வன்முறையாளர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதே நம் விருப்பமாக இருக்கிறது. மாசில்லாக் குழந்தைகள் இயேசுவுக்காக இறந்து சான்று பகர்ந்தார்கள் என்று ஆன்மிக நிலையில் புரிந்துகொள்ள நம் மனம் ஒப்பவில்லை. 

ஒரு குழந்தையை நள்ளிரவில் அதன் பெற்றோர் தூக்கிக் கொண்டு ஓட வேண்டிய நிலைக்கு அன்றைய அரசு எந்திரத்தின் அதிகார வெறி இருந்திருக்கிறது. ஓர் அரசன் தன் கோபத்தை குழந்தைகள்மேலும் திருப்பலாம் என்ற அளவுக்கு அவன் உணர்ச்சிகளால் உந்தப்பட்டவனாக இருக்கிறான். அதிகாரத்தின் முன்னால் அதிகாரமின்மை துன்புறுகிறது. வலிமையின் முன்னால் வலுவின்மை மரித்துப் போகிறது.

6. குழந்தைகளைக் கொண்டாடுவோம்!

மாசில்லாக் குழந்தைகள் போல இன்றும் பலர் துன்புறுகிறார்கள் என்று சொல்லி, துன்பத்திற்கு மாட்சி உண்டு என்று ஆறுதல் தருவது தவறு. வலுவற்றவர்களை வாழ வைக்காத வலிமையால் பயன் ஏது? சாலையில் அவசரமாகச் சென்று கொண்டிருந்த ஒரு நபரை மறிக்கும் காவல்துறை என்ற அரசு எந்திரம், 'ஹெல்மெட் அணியவில்லை' என்று சொல்லி அவர் தன் குழந்தையின் மருத்துவச் செலவுக்கு வைத்திருந்த 100 ரூபாயைப் பறித்துக்கொள்கிறது. காவல்துறை என்ற ஏரோதின் முன் அந்த நபரும் மாசற்ற குழந்தையே. இது ஓர் எடுத்துக்காட்டு மட்டுமே. இன்றும் பல ஏரோதுக்கள் பல நிலைகளில் நம் பச்சிளம் குழந்தைகளைக் கொல்ல நம் இல்லங்களுக்கு வருகின்றனர். நாமே சில நேரங்களில் ஏரோதுக்களாக இருக்கின்றோம்.

'துன்புறும் குழந்தைகளுக்காக – குறிப்பாக, வீடற்ற, பெற்றோர்களற்ற, போர் மற்றும் வன்முறையால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்காக – இறைவேண்டல் செய்வோம்' என்று கடந்த மாதச் செபக் கருத்தை வெளியிட்டார் நம் திருத்தந்தை. எனவே, குழந்தைகளுக்காக இறைவேண்டல் செய்தும், அவர்களை அரவணைத்தும் அவர்களுடைய இருத்தலை நாம் கொண்டாடுவோம்.

நிற்க.

எவ்வளவுதான் விடைகள் காண முயன்றாலும், கேள்விகள் நம் உள்ளத்தில் தொடர்ந்து எழுந்துகொண்டே இருக்கின்றன: தன் மகன் இயேசுவை வியத்தகு முறையில் காப்பாற்றத் திருவுளம் கொண்ட எல்லாம் வல்ல, அன்பு இறைவன் எல்லாக் குழந்தைகளையும் ஏன் காப்பாற்ற திருவுளம் கொள்ளவில்லை? மற்ற குழந்தைகள் இறந்துதான் இவரது மகன் காப்பாற்றப்பட வேண்டுமா? ஞானிகள் ஏரோதிடம் வராமலேயே போயிருக்கலாமே? அல்லது குழந்தையைப் பார்த்துவிட்டு ஏரோதிடம் வந்து, 'அப்படி எந்த அரசனும் பிறக்கவில்லை அரசே! நீர்தாம் என்றும் யூதர்களின் அரசன்!' என்று பொய்யாவது சொல்லிவிட்டுப் போயிருக்கலாமே!

'நான் உன்னை திருப்பி அடிக்க முடியாது என்பதால்தானே நீ என்னை அடிக்கிறாய்?' - இந்தக் கேள்விதான் மாசில்லாக் குழந்தைகள் உள்ளத்தில் இருந்திருக்கும். நம் இயலாமை, கையறுநிலை, மௌனம் ஆகியவை மற்றவர்களால் பயன்படுத்தப்படும்போதெல்லாம் நாமும் மாசில்லாக் குழந்தைகளே!


Monday, December 26, 2022

மற்றச் சீடர்

நாளின் (27 டிசம்பர் 2022) நற்புனிதர்

மற்றச் சீடர்

'இயேசு அன்பு செய்த சீடர்' அல்லது 'மற்றச் சீடர்' என நான்காம் நற்செய்தி நூலில் அறியப்படுகின்ற புனித யோவானின் திருநாளை இன்று நாம் கொண்டாடுகின்றோம். இவர் செபதேயுவின் மகன் என்றும், இவருடைய சகோதரர் யாக்கோபு என்றும் ஒத்தமைவு நற்செய்தி நூல்கள் முன்மொழிகின்றன. யோவான் நற்செய்தி, மூன்று மடல்கள், மற்றும் திருவெளிப்பாடு என்று இவருடைய எழுத்துகள் இரண்டாம் ஏற்பாட்டில் ஏறக்குறைய மூன்றில் ஒரு பகுதியை நிரப்புகின்றன. இயேசுவின் பன்னிருவரில் இளையவராக இருந்தவர் இவரே. இவரிடமே இயேசு தன் தாயை ஒப்படைக்கின்றார். இவருடைய இதயம் கழுகு போல மேலே பறந்தது என்பதால், இவருடைய நற்செய்தி நூலுக்கு, 'கழுகு' என்னும் அடையாளம் கொடுக்கப்படுகின்றது.

இன்றைய முதல் வாசகத்தில் தாங்கள் இயேசுவிடம் கண்டதையும், கேட்டதையும் எழுதுவதாகப் பதிவு செய்கின்றார். மேலும், தன் எழுத்துகள் தனக்கு மகிழ்ச்சி தருகின்ற என மொழிகின்றார். நற்செய்தி வாசகத்தில், 'சென்றார், கண்டார், நம்பினார்' என்று இயேசுவின் உயிர்ப்புக்குச் சான்று பகர்கின்றார்.

யோவான் மற்றும் அவருடைய எழுத்துகள் இன்று நமக்கு ஆறு வாழ்க்கைப் பாடங்களைத் தருகின்றன:

(1) 'நல்ல ஆயன் போல வாழ்வது'

இயேசுவை நல்ல ஆயனாக உருவகித்து, அதையே ஒரு சிறந்த தலைமைத்துவப் பண்பாகத் தருபவர் யோவான். வாழ்க்கையை நாம் இரு நிலைகளில் வாழ முடியும்: ஒன்று, நல்ல ஆயன் போல. இரண்டு, கூலிக்காரர் போல. கூலிக்காரர் தன் வாழ்வைச் சுமையாகப் பார்க்கிறார், அவர் தான் காட்டும் அக்கறை தனக்குப் பணமாகத் திரும்ப வேண்டும் என நினைக்கிறார், அவர் தன் பொறுப்பைத் தள்ளி விடுகிறார். ஆனால், ஆயன் தன் வாழ்வை சுகமாகப் பார்க்கிறார். கணக்குப் பார்க்காமல் அக்கறை காட்டுகின்றார். அவர் பொறுப்புணர்வுடன் வாழ்கிறார். நல்ல ஆயன் போல நாம் தலைமைத்துவத்தை ஏற்க வேண்டும். தலைமைத்துவம் நம் தனிப்பட்ட வாழ்வில் தொடங்க வேண்டும்.

(2) சீடத்துவம் நம் வாழ்வின் அனைத்துத் தளங்களையும் பாதிக்கிறது

இயேசுவின் சீடராக மாறுவது என்பது இரயிலின் ஒரு பெட்டியில் ஏறுவது போல அல்ல. மாறாக, வானூர்தியில் பறப்பது போல. அதாவது, சீடத்துவம் என்பதை நம் வாழ்வின் ஒரு பகுதியாகப் பார்க்க இயலாது. அது நம் வாழ்வின் அனைத்துத் தளங்களையும் தழுவி நிற்கிறது. இயேசுவின் சீடராகத் தான் பெற்ற அழைப்பில் எல்லா நேரங்களிலும் எல்லா இடங்களிலும் நிலைத்து நிற்கிறார் யோவான்.

(3) இயேசு நம் அறிவுக்கு அப்பாற்பட்டவர்

தான் இயேசுவைப் பற்றி நிறைய எழுதினாலும், இறுதியில், அனைத்தையும் எழுதினால் இந்த உலகமே கொள்ளாது எனத் தன் நற்செய்தியை நிறைவு செய்கிறார் யோவான். ஏனெனில், இயேசு அனுபவம் என்பது நம் சொற்களையும் கடந்து நிற்கிறது.

(4) சான்று பகர்தலின் ஆற்றல்

யோவான் நற்செய்தியில் இயேசுவைக் கண்ட அனைவரும் அவருக்குச் சான்று பகர்கின்றனர். 'இதோ கடவுளின் ஆட்டுக்குட்டி' என்று திருமுழுக்கு யோவான், 'நாங்கள் மெசியாவைக் கண்டோம்' என்று அந்திரேயா, 'வந்து பாருங்கள்' என்று சமாரியப் பெண், 'நான் பார்வையற்று இருந்தேன். இப்போது பார்க்கிறேன்' என பார்வையற்ற நபர், 'நான் ஆண்டவரைக் கண்டேன்' என்று மகதலா மரியா என அனைவரும் இயேசுவுக்குச் சான்று பகர்கின்றனர். இயேசுவைப் பற்றி நான் இன்று பகரும் சான்று என்ன?

(5) 'இறத்தலின்' ஆற்றல்

யோவான் நற்செய்தி முழுவதும் 'மாட்சி' இழையோடிக் கிடந்தாலும், 'இறப்பும்' இழையோடிக் கிடக்கின்றது. நற்செய்தியின் ஒவ்வொரு நகர்வும் இயேசுவின் இறப்பைப் பின்புலத்தில் கொண்டிருக்கிறது. இறப்பின் ஆற்றலை மிக அழகாக கோதுமை மணி உருவகத்தில் பதிவு செய்கிறார் யோவான்: 'கோதுமை மணி மண்ணில் விழுந்து இறந்தால்தான் பலன் தரும்!' ஆக, யோவானைப் பொருத்தவரையில், 'இறத்தல்' அல்லது 'மடிதல்' என்பது கனி தருதலுக்கான முதல் படி.

(6) தங்குதல் அல்லது இணைந்திருத்தல் ஆற்றல்

நற்செய்தியின் தொடக்கத்தில் முதற் சீடர்கள் இயேசுவுடன் சென்று தங்குகின்றனர். திராட்சைச் செடி உருவகத்தில் இணைந்திருத்தல் முதன்மைப்படுத்தப்படுகின்றது. தங்குதல் என்பது ஒரு நீடித்த அனுபவம். அந்த அனுபவம் ஒருவருடைய வாழ்வை முழுமையாக மாற்றுகிறது. நாம் இன்று செல்தலுக்குத் தரும் முக்கியத்துவத்தை தங்குதலுக்குத் தருவதில்லை. தங்குதல் என்பதை நாம் நேர விரயமாகவும் ஆற்றல் விரயமாகவும் பார்க்கின்றோம்.

(6அ) கட்டின்மை அல்லது விடுதலை

எழுதிக்கொண்டிருக்கும்போது என் மனத்தில் எழுந்த ஏழாவது பாடத்தை, '6அ' எனப் பதிவு செய்வோம். 'உண்மையை அறிந்தவர்களாக இருப்பீர்கள். உண்மை உங்களுக்கு விடுதலை அளிக்கும்' (காண். யோவா 8:31-32) என்று சொல்லும் இயேசுவின் சொற்கள் யோவான் நற்செய்தியில் உள்ளன. யோவானைப் பொருத்தவரையில் மனிதர்களின் மிக முதன்மையான மற்றும் மேன்மையான உணர்வு கட்டின்மை. நம் வாழ்வு இதை நோக்கியே நகர வேண்டும். நம் விடுதலை அல்லது கட்டின்மைக்குக் குறுக்கே இருக்கும் அக மற்றும் புறக் காரணிகள் அறவே களையப்பட வேண்டும்.

மேற்காணும் வாழ்க்கைப் பாடங்களை நம் வாழ்வியல் எதார்த்தங்களாக மாற்றினால் நாமும் மற்றச் சீடரே.

இன்று நாம் கொண்டாடும் யோவானின் எழுத்துகளோடு இன்றைய நாளின் சில நிமிடங்களையாவது கழித்தல் நலம்.


 

Friday, December 23, 2022

கிறிஸ்து பிறப்பு முன்நாள்

கிறிஸ்து பிறப்பு முன்நாள் (24 டிசம்பர் 2022)

இன்றைய முதல் வாசகத்தில் (2 சாமு 7:1-5,8-12, 16) ஆண்டவராகிய கடவுள் நாத்தான் இறைவாக்கினர் வழியாக தாவீது அரசருடன் உடன்படிக்கை செய்துகொள்கின்றார். இந்த நிகழ்வில் மூன்று விடயங்கள் நம் கவனத்தை ஈர்க்கின்றன:

(அ) 'ஆண்டவர் அளிக்கும் ஓய்வு'

'தாவீது அரசர் தம் அரண்மனையில் குடியேறிய பின், சுற்றியிருந்த எல்லா எதிரிகளின் தொல்லையினின்றும் ஆண்டவர் அவருக்கு ஓய்வு அளித்தார்' என்கிறார் ஆசிரியர். 'ஓய்வு' என்பது இறைவன் அளிக்கும் கொடை. படைப்பின் ஆறு நாள்களும் ஓய்வு நாளாகிய ஏழாம் நாளை நோக்கியே இருக்கின்றன. வெறும் உழைப்பு மட்டுமே இருந்தால் மனித குலம் வறண்டுவிடும். நம் வாழ்க்கைப் பயணத்தைப் பார்த்தால், 'மழலைப் பருவம்' என்னும் ஓய்வில் தொடங்கி, 'முதுமைப் பருவம்' என்னும் ஓய்வில் நிறைவு செய்கின்றோம். ஓய்வுக்கும் ஓய்வுக்கும் இடையே தேவையற்ற பரபரப்பு. 40 மற்றும் 45 வயதுகளில் உழைப்பிலிருந்து ஓய்வு பெறுவது நல்லது இன்று பலர் அறியத் தொடங்கியுள்ளனர். எல்லாவற்றுக்கும் மேலாக, ஆண்டவர் தரும் ஓய்வே நமக்கு நீடித்த அமைதியைத் தருகிறது.

(ஆ) 'ஆண்டவர் உம்மோடு இருக்கிறார்'

'நீர் விரும்பியது அனைத்தையும் செய்து விடும். ஏனெனில், ஆண்டவர் உம்மோடு இருக்கிறார்' என்று நாத்தான் தாவீதிடம் கூறுகின்றார். ஆண்டவர் நம்மோடு இருக்கும்போது, அனைத்தையும் செய்துவிடும் துணிச்சல் நம்மில் பிறக்கிறது. ஆண்டவருடன் இணைந்த 'கூட்டியக்கம்' நம் ஆற்றலை அதிகரிக்கிறது.

(இ) 'ஆடு மேய்த்த நாள் முதல்'

'என் மக்கள் இஸ்ரயேலின் தலைவனாக விளங்க புல்வெளியில் ஆடு மேய்த்துக்கொண்டிருந்த உன்னை நான் அழைத்தேன்' என்று தாவீதிடம் மொழிகிறார் ஆண்டவராகிய கடவுள். தாவீது தன்னிறைவு கொள்கின்றார். இதை ஆண்டவர் தீமையாகப் பார்க்கிறார். அதாவது, 'எனக்கு எல்லாம் கிடைத்துவிட்டது. நான் ஆண்டவருக்கு ஏதாவது செய்ய வேண்டும்' என்று தாவீது மமதை அடையும்போது, 'தம்பி! நீ இன்று இருப்பது போல முன்னர் இருந்ததில்லை' என்று அவருடைய எளிய பின்புலத்தை நினைவூட்டுகின்றார். மேலும், இந்த இடத்தில் எளிய பின்புலத்திலிருந்த தாவீதை ஆண்டவர் தேர்ந்துகொண்டார் என்பதையும் அவருக்கு நினைவூட்டுகின்றார். ஆக, நம் உயர்வு ஆண்டவரிடமிருந்தே வருகிறது.

நற்செய்தி வாசகத்தில் (லூக் 1:67-79) சக்கரியாவின் பாடலை நாம் வாசிக்கின்றோம். 'இருளிலும் இறப்பின் பிடியிலும் இருப்போர்க்கு ஒளி தரவும், நம்முடைய கால்களை அமைதி வழியில் நடக்கச் செய்யவும் நம் கடவுளின் பரிவுள்ளத்தாலும் இரக்கத்தாலும் விண்ணிலிருந்து விடியல் நம்மைத் தேடி வருகிறது' என்று தன் கண்களை உயர்த்திப் பார்க்கின்றார் சக்கரியா. 'ஓர் ஊமையனின் பாடல்' என்றழைக்கப்படும் இப்பாடலின் கதாநாயகராக இருப்பவர் கடவுளே.

இன்று, 'தாவீதின் குடும்பத்தில் வல்லமை உடைய மீட்பர் ஒருவர் நமக்காகத் தோன்றச் செய்கிறார்' ஆண்டவர். அந்த மீட்பர் நம் ஒவ்வொருவருடைய உள்ளத்திலும் பிறக்க நம்மைத் தயாரிப்போம்.

Wednesday, December 21, 2022

நாடுகளின் அரசரே, வாரும்!'

கிறிஸ்து பிறப்பு நவநாள் - 6 (22 டிசம்பர் 2022)

'நாடுகளின் அரசரே, வாரும்!'

இயேசு தன் பிறப்பின் போதும், பணித் தொடக்கத்திலும், தன் வாழ்வின் இறுதியிலும், 'யூதர்களின் அரசர்' என்று அழைக்கப்படுகின்றார்: அவர் பிறந்த போது அவரைத் தேடி வருகின்ற கீழ்த்திசை ஞானியர், 'யூதர்களின் அரசராகப் பிறந்திருக்கிறவர் எங்கே?' என்று கேட்டுத் தேடி வருகின்றனர் (காண். மத் 2:2). பிலிப்பு இயேசுவிடம் நத்தனியேலை அழைத்து வருகின்றார். இயேசுவைக் கண்ட நத்தனியேல், 'ரபி, நீர் இறைமகன். நீரே இஸ்ரயேல் மக்களின் அரசர்' (யோவா 1:49). இயேசுவின் இறப்பின் போது, அவருடைய சிலுவையில், 'நாசரேத்து இயேசு யூதர்களின் அரசன்' என்னும் குற்ற அறிக்கை வைக்கப்படுகிறது (யோவா 19:19). மத்தேயு நற்செய்தியின் நிறைவுகாலப் பொழிவில், மக்களினத்தார் அனைவருக்கும் தீர்ப்பு வழங்கும் அரசராக இயேசு தன்னை உருவகப்படுத்துகின்றார் (காண். மத் 25:31-46). ஆக, யூதர்களின் அரசராகவும், ஒட்டுமொத்த அனைத்து நாடுகளின் அரசராகவும் இயேசுவை நற்செய்தி நூல்கள் முன்மொழிகின்றன.

இன்றைய முதல் வாசகத்தில் (காண். 1 சாமு 1:24-28), சாமுவேல் பால்குடி மறந்ததும் அவரைத் தூக்கிக் கொண்டு சீலோவிலிருந்த ஆண்டவரின் இல்லத்திற்குச் செல்கின்ற அன்னா, 'நான் அவனை ஆண்டவருக்கு அர்ப்பணிக்கிறேன். அவன் தன் வாழ்நாள் முழுவதும் ஆண்டவருக்கே அர்ப்பணிக்கப்பட்டவன்' என்று சொல்லி ஆண்டவர்முன் அவரை ஒப்படைக்கின்றார். தான் கேட்டு வாங்கிப் பெற்ற மகனை ஆண்டவருக்கே அர்ப்பணிக்கின்றார். தனக்கெனக் கடவுள் கொடுத்த மகனை தனக்கு வேண்டாம் என்று சொல்லி கடவுளுக்குக் கொடுக்கின்றார் அன்னா. எப்ராயிம் மலைநாட்டிலுள்ள இராமாத்தயிம் சோப்பிம் என்னும் கிராமத்தில் அறியாக் குழந்தையாக மறைந்து போயிருக்கும் ஒரு குழந்தை, ஆண்டவருக்கு அர்ப்பணிக்கப்பட்டதால், இஸ்ரயேலில் அரசரை ஏற்படுத்திய இறைவாக்கினர் சாமுவேல் என்னும் பெயர் பெறுகிறது. சாமுவேல் 'தூக்கிச் செல்லப்பட்டார்' என்னும் சொல்லாடல், சாமுவேலின் மழலைப் பருவத்தை நம் கண்முன் கொண்டுவருகின்றது. சாமுவேல் என்னும் குழந்தையின் விருப்பம் கேட்டறியப்படவில்லை. அதனால்தான் என்னவோ, சாமுவேலின் மகன்கள் யோவேல் மற்றும் அபியா ஆகியோர் 'சாமுவேலின் வழிமுறைகளில் நடவாமல், பொருளாசைக்கு உட்பட்டு கையூட்டு வாங்கி, நீதியை வழங்கவில்லை' (1 சாமு 8:3).

தன் வாழ்வில் ஆண்டவர் ஏற்படுத்திய தலைகீழ் மாற்றத்திற்காக அவரைப் புகழ்ந்து பாடுகின்றார் அன்னா. ஆண்டவர் ஏற்படுத்திய தலைகீழ் மாற்றம் என்ன? (அ) மலடியாக இருந்தவர் நிறைவான குழந்தையைப் பெற்றெடுத்தார், (ஆ) தன் கையில் ஒன்றுமில்லை என்று ஏழையாக இருந்தவரை, என் கையில் உள்ளது அனைத்தும் உனக்கு என்று கடவுளுக்கே தானம் செய்யும் அளவுக்குச் செல்வராக்குகின்றார், (இ) கிராமத்து இளவல் சாமுவேல் அரசர்களோடு அரசர்களாக அமர்ந்து உண்ணும் நிலைக்கு உயர்கின்றார்.

நற்செய்தி வாசகத்தில் (லூக் 1:4-56) அன்னை கன்னி மரியாவின் பாடல் இடம் பெற்றுள்ளது. இப்பாடல் முழுக்க முழுக்க அன்னாவின் பாடலின் தழுவல் என்பது விவிலிய ஆய்வாளர்களின் கருத்து. எலிசபெத்தைச் சந்திக்கும் நிகழ்வில், எலிசபெத்து மரியாவைப் புகழ, மரியாவோ தன் புகழ்ச்சியைக் கடவுளை நோக்கி ஏறெடுக்கின்றார். இது மரியாவின் மகிழ்ச்சியின் பாடலாக இருக்கின்றது. ஆண்டவராகிய கடவுள் மரியாவின் வாழ்விலும், இந்த உலகத்திலும் ஏற்படுத்துகின்ற தலைகீழ் மாற்றத்தை இப்பாடல் நம் கண்முன் கொண்டு வருகின்றது.

இன்றைய வாழ்த்தொலியான, 'நாடுகளின் அரசரே, வாரும்!' என்பதை இவ்வாசகங்களின் பின்புலத்தில் எப்படிப் புரிந்துகொள்வது?

'கடவுள் வல்லவர்' என்னும் கருத்துரு இரு பாடல்களிலும் உள்ளது. வல்லவரான கடவுள் தலைகீழ் மாற்றங்களை ஏற்படுத்துகின்றார். அனைத்தின்மேலும் அதிகாரம் கொண்ட கடவுளாக அவர் வீற்றிருக்கின்றார். அனைத்தையும் தன் ஆளுகைக்குக் கீழ் கொண்டுள்ள ஒருவரே அனைத்தையும் புரட்டிப் போட முடியும்.


Tuesday, December 20, 2022

விடியலே வாரும்!

கிறிஸ்து பிறப்பு நவநாள் - 5 (21 டிசம்பர் 2022)

விடியலே வாரும்!

இலத்தீன் மொழியில், 'ஓ ஓரியன்ஸ்' ('ஓ கிழக்கே!') என்பதை 'ஓ விடியலே' என மொழிபெயர்த்துக்கொள்வோம். 'விடியற்காலை விண்மீனே' என்றும் சில இடங்களில் மொழிபெயர்க்கப்படுகிறது. நாளின் விடியலை நமக்குச் சுட்டிக்காட்ட கிழக்கில் தோன்றும் விண்மீனை இது குறிக்கிறது. அதாவது, இரவும் இருளும் முடிந்துவிட்டன என்றும், புதிய நாளும், ஒளியும் வரவிருக்கின்றன என்பதையும் இந்த நட்சத்திரம் நமக்கு நினைவுபடுத்துகிறது. 'இருள்' என்பது இறப்புக்கு ஒப்பிடப்படுவதால், 'ஒளி' என்பது எதிர்ப்பதமாக வாழ்வைக் குறிக்கிறது. 'காரிருளில் வாழ்ந்த மக்கள் பேரொளியைக் கண்டனர்' (எசா 9:2) மற்றும் எசா 60:1-2, மற்றும் மலா 4:2 ஆகிய அருள்வாக்கியங்கள் இந்த அழைப்பின் பின்புலத்தில் இருக்கின்றன.

இன்றைய முதல் வாசகத்திற்கு இரு பகுதிகள் தரப்பட்டுள்ளன. இனிமை மிகு பாடலிலிருந்து எடுக்கப்பட்ட பகுதியில் (2:8-14), தலைவி மற்றும் தலைவனின் பாடல்கள் கொடுக்கப்பட்டுள்ளன. காதலின் மயக்கத்தில் இருக்கும் காதலி தன் தலைவனின் வருகையை எதிர்நோக்கியிருக்கிறாள். தலைவனின் வருகை தலைவிக்கு மகிழ்ச்சி. தலைவனின் எதிர்பாராத வருகை தலைவிக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி. தலைவி கூற்றாக இங்கே உள்ள பகுதி, தலைவனை எதிர்பார்த்து தலைவி பாடுவதாகவும், அதே வேளையில் தலைவன் இப்படிப்பட்ட ஓர் இன்ப அதிர்ச்சியை நமக்குத் தரமாட்டானா என்ற ஆவலை வெளிப்படுத்துவதாகவும் உள்ளது. தலைவரின் வருகையை கலைமானின் ஓட்டத்தோடு ஒப்பிடுகிறார் தலைவி. மேலும், கார்காலத்து மழைச்சாரல் பொழியும் நேரமும் தலைவனின்மேல் உள்ள ஆர்வத்தை அதிகரிக்கிறது. தலைவன் தன் தலைவியை வெண்புறாவுக்கு ஒப்பிட்டுப் பாடுகின்றார். கலைமானும், வெண்புறாவும் சந்திக்கும் நிகழ்வு இன்பமயமானதாக இருக்கும்.

இன்னொரு தெரிவாகக் கொடுக்கப்பட்டுள்ள செப்பனியா இறைவாக்குப் பகுதியில் (3:14-17), எருசலேம், 'மகளுக்கு' ஒப்பிடப்படுகின்றது. 'மகிழ்ச்சியால் ஆர்ப்பரி' என்று எருசலேமை உற்சாகப்படுத்துகின்றார் ஆசிரியர்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (காண். லூக் 1:39-45), மரியா எலிசபெத்தைச் சந்திக்கச் செல்லும் நிகழ்வு தரப்பட்டுள்ளது. இனிமைமிகு பாடல் வாசகத்தோடு இதை இணைத்துப் பார்த்தால், மரியாவின் வயிற்றில் இருக்கும் இயேசுவைத் தலைவன் என்றும், எலிசபெத்தின் வயிற்றில் இருக்கும் திருமுழுக்கு யோவானை தலைவி என்றும் உருவகித்து, மெசியாவின் வருகையை முன்னுரைக்கத் துடிக்கும் யோவானின் மகிழ்ச்சியைப் புரிந்துகொள்ள முடியும்.

தலைவனின் வருகை தலைவிக்கு விடியலாக இருக்கிறது! துன்பம் மறைந்து இன்பம் கிடைக்கிறது.

அரசரின் வருகை எருசலேமுக்கு விடியலாக இருக்கிறது! அடிமைத்தனம் மறைந்து அமைதி கிடைக்கிறது.

மரியாவின் வருகை எலிசபெத்துக்கு விடியலாக இருக்கிறது! எதிர்நோக்கு கனிந்து மகிழ்ச்சியாக மாறுகிறது.

இன்று நம் வாழ்வில் விடியல் தேவைப்படும் பகுதி எது? நம்மால் புரிந்துகொள்ள இயலாத வாழ்வியல் சூழல் எது? இருள்சூழ் பள்ளத்தாக்குப் பயணம் போல இன்று நம் வாழ்வில் நிகழ்வது என்ன?

'ஓ விடியலே வாரும்!' என்னும் புகழ்ச்சி, அவரை நோக்கிய இறைவேண்டலாக உயரட்டும். நம் வாழ்வின் விடியல் விரைவில் வரட்டும்!


Monday, December 19, 2022

தாவீதின் திறவுகோலே வாரும்!

கிறிஸ்து பிறப்பு நவநாள் - 4 (20 டிசம்பர் 2022)

தாவீதின் திறவுகோலே வாரும்!

நம் கிறிஸ்து பெருமானை இன்று நாம், 'தாவீதின் திறவுகோலே!' என அழைக்கின்றோம். இதன் பின்புலத்தில் இரு விவிலிய வாக்கியங்கள் இருக்கின்றன:

'அந்நாளில் தாவீது குடும்பத்தாரின் திறவுகோலை அவன் தோளின்மேல் வைப்பேன். அவன் திறப்பான். எவனும் பூட்ட மாட்டான். அவன் பூட்டுவான். எவனும் திறக்க மாட்டான்.' (எசாயா 22:22)

'தூயவரும் உண்மையுள்ளவரும் தாவீதின் திறவுகோலைக் கொண்டிருப்பவரும் எவரும் பூட்ட முடியாதவாறு திறந்துவிடுபவரும் எவரும் திறக்க முடியாதவாறு பூட்டிவிடுபவரும் கூறுவது இதுவே.' (திவெ 3:7)

எசாயா இறைவாக்கினர் வரப்போகும் அரசர் பற்றி முன்னுரைத்ததை, யோவான், இயேசுவில் நிறைவேறியதாக எழுதுகின்றார். இயேசுவே தாவீதின் திறவுகோல். திறவுகோல் என்பது அதிகாரம் அல்லது உரிமையின் அடையாளம். எடுத்துக்காட்டாக, வீட்டு உரிமையாளர் வீட்டின் கதவுகளைத் திறவுகோல் கொண்டு திறக்கின்றார். ஆனால், திருடரோ கதவுகளை உடைத்து உள்ளே செல்கின்றார். ஒருவரிடம் இல்லத்தின் பொறுப்பை நாம் ஒப்படைக்கும்போது, அவரிடம் திறவுகோலைக் கொடுக்கின்றறோம். திறவுகோலைக் கொண்டிருப்பதால் அவர் அவ்வில்லத்திற்குள் நுழையும் ஆற்றல் பெற்றவராக இருக்கின்றார். 'திறவுகோல்' என்பது மூன்று விடயங்களைக் குறிக்கிறது: (அ) நகரத்தின் திறவுகோல். அதாவது, ஓர் அரசன் ஒட்டுமொத்த நகரத்தின்மேல் அதிகாரம் கொண்டிருக்கிறார். அவருடைய அனுமதியின்றி, யாரும் உள்ளே வரவும் வெளியே செல்லவும் இயலாது. (ஆ) கருவூலத்தின் திறவுகோல். ஒரு நாட்டின் சொத்துகளைப் பாதுகாக்கின்ற கருவூலத்தின் திறவுகோல் அரசரிடமே இருக்கின்றது. (இ) ஆலயத்தின் திறவுகோல். எருசலேமில் ஒரு கதவு மூடப்பட்டே இருக்கும். அதாவது, அந்தக் கதவை மெசியாவால் மட்டுமே திறக்க முடியும் என்பது இஸ்ரயேல் மக்களின் நம்பிக்கை. மெசியா மட்டுமே அந்தக் கதவைத் திறக்கவும், மூடவும் முடியும்.

ஆக, இன்றைய நாளில் நாம் கிறிஸ்து பெருமானை, 'திறவுகோலே' என அழைத்து, அவர் நம்மேல் உரிமையும் அதிகாரமும் கொண்டவர் என்பதை அறிக்கையிடுகின்றோம்.

இன்றைய முதல் வாசகத்தில் (காண். எசா 7:10-14), ஆண்டவராகிய கடவுள் இறைவாக்கினர் எசாயா வழியாக ஆகாசு அரசருக்கு ஓர் அடையாளம் வழங்குகின்றார். எதிரிகளுடன் கைகோர்ப்பதா, அல்லது ஆண்டவரைப் பற்றிக்கொள்வதா என்று முடிவெடுக்க இயலாமல் அல்லாடிக் கொண்டிருந்த ஆகாசுக்கு, 'இம்மானுவேல்' அடையாளத்தை வழங்குகின்றார் கடவுள். அதாவது, 'கடவுள் நம்மோடு' என்ற செய்தியை அந்த அடையாளம் தாங்கியுள்ளது. இது வாக்குறுதியின் அடையாளமாக இருக்கிறது.

குழப்பத்திலிருந்து ஆகாசு அரசரைத் தெளிவுக்கு நடத்திச் செல்கிறது ஆண்டவரின் திறவுகோல்.

நற்செய்தி வாசகத்தில் (லூக் 1:26-38), கிறிஸ்து பெருமானின் பிறப்பு மரியாவுக்கு முன்னறிவிக்கப்படுகின்றது. 'இது எங்ஙனம் ஆகும்?' என்ற மரியாவின் கேள்விக்கு, 'கடவுளால் இயலாதது ஒன்றுமில்லை' என்று பதிலுரைக்கின்றார் வானதூதர். மரியாவின் தெரிவு முதல் அனைத்தையும் வழிநடத்துபவர் கடவுளே. 'நான் ஆண்டவரின் அடிமை. உம் சொற்படியே எனக்கு நிகழட்டும்' என்று அடிமை நிலைக்குத் தாழ்த்திய மரியா, தன் தாழ்ச்சியின் வழியாகவே தாவீதின் திறவுகோலின் தாயாக மாறுகின்றார்.

வாழ்வின் குழப்பங்கள் மற்றும் தெளிவின்மைக்கு இறைவன் திடீரென தீர்வைக் கொண்டு வருகின்றார். நம் வலுவற்ற நிலையில் நம்மைத் தெரிவு செய்து, அருளை நம்மேல் அள்ளிப் பொழிகின்றார். வாழ்வின் வழியைக் காட்டும் அவரே, வாழ்வின் கதவுகளை நமக்குத் திறந்துவிடுவாராக!

'தாவீதின் திறவுகோலே வாரும்!'


Sunday, December 18, 2022

கிறிஸ்து பிறப்பு நவநாள் - 3

இன்றைய (19 டிசம்பர் 2022) நற்செய்தி (லூக் 1:5-25)

கிறிஸ்து பிறப்பு நவநாள் - 3

ஈசாயின் தளிரே வாரும்!

இன்றைய முதல் மற்றும் நற்செய்தி வாசகங்கள் மிகவும் கலர்ஃபுல்லாக இருக்கின்றன. முதல் வாசகத்தில் சிம்சோனின் பிறப்பு முன்னறிவிக்கப்படவும் நிகழவும் செய்கிறது. நற்செய்தி வாசகத்தில் திருமுழுக்கு யோவானின் பிறப்பு முன்னறிவிக்கப்படுகிறது. 

இவ்விரு நிகழ்வுகளுக்கும் சில பொருத்தங்கள் உள்ளன:

இரண்டிலுமே ஆண்டவரின் தூதர் வருகிறார். தூதர் சந்திக்க வரும்போது இரண்டு பேருமே (சிம்சோனின் அம்மா, சக்கரியா) தங்கள் அன்றாடப் பணியில் மும்முரமாக இருக்கின்றனர். 'உனக்கொரு மகன் பிறப்பான்! அவன் நான் சொல்வது போல இருப்பான்!' என்று இருவருக்குமே சொல்கின்ற வானதூதர் இரு குழந்தைகளின் நடை, உடை, பழக்கவழக்கம் பற்றிச் சொல்கின்றார். இரு குழந்தைகளுமே (சிம்சோன் மற்றும் யோவான்) கடவுளுக்கான நாசீர் (அர்ப்பணிக்கப்பட்டவர்) என வளர்கின்றனர்.

இரண்டு நிகழ்வுகளுக்கும் மிக முக்கியமான வேறுபாடு என்னவென்றால், சிம்சோனின் அம்மா மௌனமாகக் கேட்டுக்கொள்கின்றார். சக்கரியாவோ எதிர்கேள்வி கேட்கின்றார். எதிர்கேள்வி கேட்டதன் விளைவு, கடவுள் அவரை 'ம்யூட்' ஆக்கிவிடுகின்றார். ஆனால், திருமுழுக்கு யோவான் ஒரு குரல் என்பதைக் காட்டுவதற்காகவே, அவருடைய தந்தை 'ம்யூட்' ஆக்கப்பட்டு ஒரு எதிர்மறை ஒளியில் வைக்கப்படுகின்றார்.

சக்கரியாவின் வாழ்வில் அந்த நாள் ஒரு பொன்நாள். ஏனெனில், ஏறக்குறைய 24 ஆயிரம் குருக்கள் இருந்த அக்காலத்தில் தன் வாழ்வில் ஒருமுறைதான் ஒரு குரு ஆலயத்தில் திருப்பணி செய்யும் வாய்ப்பு பெறுவார். ஆக, அவர் பெயருக்கு சீட்டு விழுந்ததே ஒரு நேர்முகமான அடையாளம். ஒரு நல்லது நடந்தவுடன், அடுத்த நல்லது நடக்கிறது. அவருடைய மன்றாட்டு கேட்கப்படுகிறது. அவருக்கு ஒரு குழந்தை வாக்களிக்கப்படுகிறது. தொடர்ந்து இன்னொரு நல்லது நடக்கிறது. மக்களின் நடுவில் இருந்த அவமான வார்த்தைகள் களையப்பட்டு அனைவரும் அவரை வியந்து பார்க்கின்றனர்.

இதுதான் கடவுளின் செயல்பாடு. இதை 'டோமினோ விளைவு' என்றும் சொல்லலாம். ஒரு நல்லது நடந்தால் தொடர்ந்து நல்லவை நடந்துகொண்டே இருக்கும்.

நிகழ்வின் தொடக்கத்தில் வாசகருக்கு சக்கரியா மற்றும் எலிசபெத்து தம்பதியினரின் வலி நமக்குப் புரிகிறது. அவர்கள் இருவருமே கடவுள் பார்வையில் நேர்மையானவர்களாக விளங்குகின்றனர். அனைத்துக் கட்டளைகளுக்கும் ஒழுங்குகளுக்கும் ஏற்ப அவர்கள் நடக்கிறார்கள், ஆனால், பிள்ளை இல்லை. அவர்களுடைய சமகாலத்தில் மலட்டுத்தன்மை அல்லது குழந்தைப்பேறின்மை என்பது ஒருவர் செய்த பாவத்தால் விளைவது என்று கருதப்பட்டது. ஆனால், இங்கே நாம் காண்பது நேர்மையாளர் அனுபவிக்கும் துன்பம். யோபு போல, தோபித்து போல நேர்மையாளராக இருந்த சக்கரியாவும் எலிசபெத்தும் துன்பம் அனுபவிக்கின்றனர்.

மேலும், சக்கரியா-எலிசபெத்திடம் எனக்குப் பிடித்தது என்னவென்றால், தங்களுடைய குழந்தைக்கு பிறந்தது முதல் இரண்டாவது இடம்தான் என்பதை விரும்பி ஏற்றுக்கொள்கின்றனர். வழக்கமாகப் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் எப்போதும் முதல் இடத்தில் இருக்க வேண்டும் என்றே விரும்புவார்கள். ஆனால், இந்தத் தம்பதியினருக்குத் தெரியும், தன் மகன் ஒரு குரல்தான் என்று. அவன் மெசியாவுக்கு முன் செல்வான், அவன் மெசியா அல்ல. மணமகனின் குரல் கேட்பான், ஆனால், மணமகன் அல்லன். சிரிப்பான், ஆனால் அவன் சிரிப்பு அவனுக்குச் சொந்தமல்ல. அழுவான், பாவம்! அவன் அழுகையும் அவனுக்குச் சொந்தமில்லை. திரைக்குப் பின்னே நின்று மறைந்துசெல்லும் ஒரு கதாநாயகனைப் பெற்றெடுக்கிறார்கள். நிழலாகவே மறைந்துவிடும் ஒரு நிஜத்தைப் பெற்றெடுக்கிறார்கள்.

சக்கரியாவின் மௌனம் அவரை உள்நோக்கிப் புறப்படச் செய்தது.

மௌனமே பெரிய குரல் என்று அவர் உணர்ந்தார்!

இயேசு கிறிஸ்துவை, 'ஈசாயின் அடிமரத்தின் தளிரே!' என இன்று அழைத்து மகிழ்கின்றோம் நாம்.

யூதாவின் வழிமரபு அழிந்துவிட்டது என நினைத்த இஸ்ரயேல் மக்களுக்கு, அடிமரம் துளிர்விடும் என்னும் எதிர்நோக்கை விதைக்கின்றார் கடவுள்.

சிம்சோனின் தாய், யோவானின் தந்தை - இருவருடைய வேர்களும் காய்ந்து நின்றபோது அவற்றைத் தளிர்க்கச் செய்கின்றார் கடவுள்.

நம் வேர்களையும் தளிர்க்கச் செய்பவர் அவரே!


அருள்திரு யேசு கருணாநிதி

மதுரை உயர்மறைமாவட்டம்

Saturday, December 17, 2022

தூக்கத்திலிருந்து விழித்தெழுதல்

திருவருகைக்காலம் நான்காம் ஞாயிறு

I. எசாயா 7:10-14 II. உரோமையர் 1:1-7 III. மத்தேயு 1:18-24

தூக்கத்திலிருந்து விழித்தெழுதல்

திருவருகைக்காலத்தின் நான்கு ஞாயிறு நற்செய்தி வாசகங்களும் ஒன்றோடொன்று இணைந்து நகர்கின்றன: (1) விழித்திருங்கள்! (2) தயாரியுங்கள்! (3) மகிழுங்கள்! மற்றும் (4) ஏற்றுக்கொள்ளுங்கள்!

இன்று நாம் ஏற்றுகின்ற மெழுகுதிரி அமைதியைக் குறித்துக் காட்டுகின்றது. போர் மற்றும் எதிரியின் அச்சுறுத்தல்களால் குழப்பம் அடைந்த ஆகாசு அரசனின் மனம் இறைவன் தருகின்ற 'இம்மானுவேல்' அடையாளத்தால் அமைதி பெறுகிறது. மரியாவை ஏற்றுக்கொள்வதா அல்லது யாருக்கும் தெரியாமல் விலக்கி விடுவதா எனக் குழப்பம் அடைந்த யோசேப்பின் மனம் இறைவனின் வெளிப்பாட்டில் அமைதி பெறுகிறது. ஆகாசு மற்றும் யோசேப்பு தூக்கத்திலிருந்து விழித்தெழுகின்றனர். தூக்கத்திலிருந்து விழித்தெழுகின்ற எவரும் அமைதியைத் தழுவிக் கொள்கிறார். ஆக, தூக்கம் நம் வாழ்வுக்கு உடல் அளவில் அமைதி தந்தாலும், மன அமைதியைப் பெற்றுக்கொள்ள நாம் தூக்கம் கலைப்பது அவசியம்.

இன்றைய வாசகங்கள் மூன்று மனிதர்களையும், அவர்களுடைய தூக்கங்களையும், அவற்றிலிருந்து அவர்கள் விழித்தெழுவதையும் நம் கண் முன் கொண்டுவருகின்றன.

கிமு 735ஆம் ஆண்டு ஆகாசு யூதாவை ஆட்சி செய்தார். சாலமோன் அரசருக்குப் பின்னர் ஒருங்கிணைந்த இஸ்ரயேல் அரசு, வடக்கே இஸ்ரயேல், தெற்கே யூதா என்று பிரிந்தது. வடக்கே உள்ள இஸ்ரயேல் அரசு அசீரியாவின் அடிமையாக மாறி வரி செலுத்தி வந்தது (காண். 2 அர 15:19-20). இஸ்ரயேலின் அரசனான பெக்கா, சிரியாவின் அரசன் ரெஸினுடன் இணைந்து அசீரியாவை எதிர்க்கவும், அசீரியாவுக்கு எதிராக ஆகாசின் படைகளைத் திருப்பவும் திட்டமிட்டான். ஆகாசு அத்திட்டத்திற்கு உடன்பட மறுத்ததால் அவனை நீக்கிவிட்டு, தபியேலின் மகனை தாவீதின் அரியணையில் அமர வைக்க விரும்பி, ஆகாசின் மேல் படையெடுத்தான். ஏறக்குறைய எருசலேமை நெருங்கியும் விட்டான் (காண். எசா 7:1). வலுவற்ற உள்ளம் கொண்ட ஆகாசு, அச்சத்தால் நடுங்கி அசீரியப் பேரரசன் திக்லத்-பிலேசரின் உதவியை நாட முடிவெடுத்தான் (காண். 2 அர 16:7). அப்படிச் செய்வதற்கு அவன் நிறைய வரிசெலுத்த வேண்டியிருந்ததுடன், நாட்டின் சுதந்திரத்தையும் பணயம் வைக்க வேண்டிய கட்டாயம் இருந்தது. இப்படிப்பட்ட இக்கட்டான சூழலில் இறைவாக்குரைக்குமாறு எசாயா அனுப்பப்படுகின்றார் (முதல் வாசகம்). ஆகாசு ஆண்டவராகிய கடவுளின் துணையையோடு, தன் மக்களின் துணிவையோ நாடாமல் எதிரியின் உதவியை நாடுகிறான். ஆகாசு அரசனின் அச்சத்தைக் களையவும், அசீரியாவுடன் கூட்டுச் சேர்வதைத் தடுக்கவும் இறைவாக்கினர் எசாயா அடையாளம் ஒன்றை வழங்குகின்றார். அடையாளம் வழங்குதல் என்பது இறைவாக்குரைத்தலின் ஒரு கூறு ஆகும். ஆண்டவரைச் சார்ந்திருப்பதற்கு அஞ்சுகின்ற ஆகாசு, 'நான் கேட்க மாட்டேன். ஆண்டவரைச் சோதிக்க மாட்டேன்' (எசா 7:12) என்று போலியாகச் சொல்கின்றார். அவனது நம்பிக்கையின்மையைக் கடிந்துகொள்கின்றார் எசாயா: 'மனிதரின் பொறுமையைச் சோதித்து மனம் சலிப்படையச் செய்தது போதாதோ? என் கடவுளின் பொறுமையைக்கூட சோதிக்கப் பார்க்கிறீர்களா?' (எசா 7:13).

தொடர்ந்து எசாயா, 'ஆண்டவர்தாமே உங்களுக்கு ஓர் அடையாளத்தை அருள்வார். இதோ, கருவுற்றிருக்கும் அந்த இளம்பெண் ஓர் ஆண் மகவைப் பெற்றெடுப்பார். அக்குழந்தைக்கு அவர், 'இம்மானுவேல்' என்று பெயரிடுவார்' (எசா 7:14) என்று அடையாளம் ஒன்றை வழங்குகின்றார். இந்த அடையாளத்துக்கான விளக்கம் தெளிவாக இல்லை. கிரேக்க மொழிபெயர்ப்பிலும், மத்தேயு நற்செய்தியிலும் (1:23), 'இளம்பெண்' என்னும் சொல்லுக்குப் பதிலாக, 'கன்னி' என்னும் சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. எசாயா இறைவாக்கு நூலில் 'இளம்பெண்' என்ற சொல் யாரைக் குறிக்கிறது? என்னும் கேள்விக்குத் தெளிவான விடை காண நம்மால் இயலவில்லை. சில விவிலிய அறிஞர்கள், இறைவாக்கினர் எசாயாவின் மனைவியைக் குறிக்கலாம் என்கின்றனர். ஓசேயா இறைவாக்கினரின் மகன்கள் அடையாளமான பெயர்களைப் பெற்றது போல, எசாயாவின் இரு மகன்களும் அடையாளமான பெயர்களைப் பெறுகின்றனர் – 'செயார்யாசிப்' ('எஞ்சியோர் திரும்பி வருவர்') (எசா 7:3), 'மகேர் சாலால் கஸ்-பாசு' ('கொள்ளைப் பொருள் வேகமாக வருகின்றது. இரை விரைகின்றது') (எசா 8:3). 'இம்மானுவேல்' என்பது இரண்டாவது பெயரைக் குறிக்கலாம் என்பது இவர்களின் கருத்து. இன்னும் சிலர், 'இம்மானுவேல்' என்னும் சொல் ஆகாசின் மகன் எசேக்கியாவைக் குறிக்கிறது என்பர். ஆனால், இந்த இறைவாக்கு உரைக்கப்படும்போது எசேக்கியாவுக்கு ஏற்கெனவே ஒன்பது வயது ஆகிறது (காண். 2 அர 16:2). எசாயாவைப் பொருத்தவரையில், 'இம்மானுவேல்' என்னும் சொல், 'செயார்யாசிப்' என்னும் சொல்லைப் போல பெரிய கருத்துருவையும் புரட்சியையும் தன்னிலே கொண்டுள்ளது. ஆகையால்தான், 'இம்மானுவேலே, அதன் கிளைகள் உன் நாட்டின் பரப்பையெல்லாம் நிரப்பி நிற்கும்' (எசா 8:8) என்று மீண்டும் இச்சொல்லைப் பயன்படுத்துகின்றார்.

ஆகாசுக்கு ஆண்டவராகிய கடவுள் அளித்த 'இம்மானுவேல்' என்னும் அடையாளம் நம்பிக்கை தருகின்ற வாக்குறுதியா? அல்லது அழிவை முன்னுரைக்கும் அச்சுறுத்தலா? என்னும் கேள்வியும் எழுகிறது. முதலில் இதை மீட்பு மற்றும் ஆசீரின் அடையாளமாகத்தான் எசாயா முன்னுரைக்கின்றார் (எசா 7:4, 7). அப்படி என்றால், ஆகாசின் நம்பிக்கையின்மை அடையாளத்தின் தன்மையை மாற்றிவிட்டதா? 'எப்ராயிமின் தலைநகர் சமாரியா. சமாரியா நகரின் தலைவன் இரமலியாவின் மகன். உங்கள் நம்பிக்கையில் நிலைத்திராவிடில் நீங்களும் நிலைத்துநிற்கமாட்டீர்கள்' (எசா 7:9). 'அந்தக் குழந்தை தீமையைத் தவிர்த்து, நன்மையை நாடித் தேர்ந்து கொள்வதற்குமுன் உம்மை நடுநடுங்கச் செய்யும் அரசர்கள் இருவரின் நாடுகளும் பாலைநிலமாக்கப்படும்' (எசா 7:16) என்னும் வாக்கியத்தில் வரும் 'இரு நாடுகள்' என்பது 'சிரியா மற்றும் எப்ராயிமை' குறிக்கிறதா? அல்லது 'யூதா மற்றும் அசீரியாவை' குறிக்கிறதா? என்பதும் தெளிவாக இல்லை. 'யூதா மற்றும் அசீரியாவைக் குறிக்கிறது' என்றால், 'இம்மானுவேல்' அடையாளம் அச்சுறுத்தல் மற்றும் எச்சரிக்கையாக இருக்கிறது. மேலும், 'அவன் வெண்ணையையும் தேனையும் உண்பான்' (எசா 7:15) என்றும் இறைவாக்குரைக்கின்றார் எசாயா. 'பாலும் தேனும்' பாலைவனத்து உணவே அன்றி, செழிப்பான விவசாய நிலத்தின் உணவு அல்ல. அப்படி எனில், இம்மானுவேல் பிறக்கும்போது அனைத்தும் அழிக்கப்பட்டு நிலம் பாழாக்கப்படுமா? எசாயாவின் இந்தப் பாடம் புரிந்துகொள்வதற்குக் கடினமாகவே இருக்கிறது. பெரும்பாலான அறிஞர்கள், 'இது வாக்குறுதியின் அடையாளம்' என்றே 'இம்மானுவேல்' அடையாளத்தைக் கருதுகின்றனர். 'இம்மானுவேல்' என்னும் பெயரில் இளம்பெண்ணின் நம்பிக்கை அடங்கியுள்ளது. குழந்தை பிறப்பதற்கு முன்னர் தன் நாடு விடுவிக்கப்படும் என்று அவள் நம்புகிறாள். ஆனால், அந்த நம்பிக்கை ஆகாசுக்கு இல்லை. ஆக, சிரியாவும் எப்ராயிமும், தொடர்ந்து வருகின்ற அசீரியப் படையெடுப்பும் அழிந்துவிடும். எஞ்சியோர் வழியாக யூதாவுக்கு மீட்பு வரும் (காண். எசா 11:11). 'இம்மானுவேல்' என்னும் பெயரைத் தொடர்ந்து வரும், 'மகேர் சாலால் கஸ்-பாசு' ('கொள்ளைப் பொருள் வேகமாக வருகின்றது. இரை விரைகின்றது) என்னும் பெயரும் நம்பிக்கை தருகின்ற பெயராக இருக்கிறது. எசா 7:15, 17 என்னும் வாக்கியங்கள் எதிர்மறையான பொருளைத் தந்தாலும், ஒட்டுமொத்த பாடப் பகுதி நேர்முகமான பொருளையே தருகின்றது. 

மத்தேயு நற்செய்தியாளர் தன் நற்செய்தியில் பல முதல் ஏற்பாட்டு மேற்கோள்களைப் பயன்படுத்துகின்றார். அவர் தன் மேற்கோள்களை எழுபதின்மர் பதிப்பிலிருந்து (கிரேக்கம்) கையாளுகின்றார். குறிப்பாக, இயேசு பிறப்பு நிகழ்வில் பல முதல் ஏற்பாட்டு இறைவாக்குகள் நிறைவேறுவதாக முன்மொழிகின்றார். எடுத்துக்காட்டாக, 'யூதேயாவிலுள்ள பெத்லகேமில் மெசியா பிறக்க வேண்டும். ஏனெனில், 'யூதா நாட்டுப் பெத்லகேமே, யூதாவின் ஆட்சி மையங்களில் நீ சிறியதே இல்லை. ஏனெனில், என் மக்களாகிய இஸ்ரயேலே ஆயரென ஆள்பவர் ஒருவர் உன்னிலிருந்தே தோன்றுவார்' என்று இறைவாக்கினர் எழுதியுள்ளார்' (மத் 2:5-6ளூ மீக் 5:2). முதல் இறைவாக்காக மத்தேயு முன்மொழிவது, ''இதோ! கன்னி கருவுற்று ஓர் ஆண்மகவைப் பெற்றெடுப்பார். அக்குழந்தைக்கு இம்மானுவேல் எனப் பெயரிடுவர்' என்று இறைவாக்கினர் வாயிலாக ஆண்டவர் உரைத்தது நிறைவேறவே இவை யாவும் நிகழ்ந்தன. இம்மானுவேல் என்றால் 'கடவுள் நம்முடன் இருக்கிறார் என்பது பொருள்'' (மத் 1:22-23). இங்கே மத்தேயு, 'இம்மானுவேல்' என்ற சொல்லின் பொருளையும் முன்மொழிகின்றார். மத்தேயு நற்செய்தியார், 'இம்மானுவேல்' என்னும் அடையாளம் 'இயேசு' என்னும் 'ஆபிரகாமின் மகனை, தாவீதின் மகனை' குறிப்பதாகப் பதிவு செய்கின்றார்.

ஆக, அச்சம் என்னும் தூக்கத்திலிருந்த ஆகாசு ஆண்டவராகிய கடவுள் எசாயா வழியாக அருளிய அடையாளத்தால் துணிவுக்குள் விழித்தெழுந்து அமைதி பெறுகின்றார். 

இன்றைய இரண்டாம் வாசகம் (காண். உரோ 1:1-7), பவுல் உரோமையருக்கு எழுதிய திருமடலின் தொடக்கமாக இருக்கிறது. இரு உள்பிரிவுகளைக் கொண்டுள்ளது இந்தப் பாடம்: முதலில், பவுல் மூன்று சொற்களால் தன் அடையாளத்தைப் பதிவு செய்கின்றார் – 'இயேசு கிறிஸ்துவின் தொண்டன் அல்லது அடிமை,' 'திருத்தூதன்,' மற்றும் 'நற்செய்திப் பணிக்காக ஒதுக்கிவைக்கப்பட்டவன்.' ஆண்டவராகிய திருஅவையை, ஆண்டவரின் திருஅவையை அச்சுறுத்துவதற்காகத் தமஸ்கு புறப்பட்ட சவுல் தூக்கத்திலிருந்து விடுதலை பெறுகின்றார். புதிய அடையாளங்களைப் பெற்றுக்கொள்கின்றார். இரண்டாவதாக, 'தாவீதின் மரபினரான இயேசுவே கடவுளின் மகன்' என முன்மொழிந்து பிறஇனத்தார் அனைவரையும் நம்பிக்கைக்கு விழித்தெழச் செய்கின்றார். 

ஆக, நம்பிக்கையின்மை என்னும் தூக்கத்திலிருந்த பவுல் (மற்றும் பிறஇனத்தார்) இயேசு கிறிஸ்து தமஸ்கு வழியில் தோன்றிய நிகழ்வு வழியாக நம்பிக்கைக்குள் விழித்தெழுந்து அமைதி பெறுகின்றார். 

இன்றைய நற்செய்தி வாசகம் (காண். மத் 1:18-24), இயேசுவின் பிறப்பு யோசேப்புக்கு முன்னறிவிக்கப்படும் நிகழ்வாகவும், பிறக்கப்போகும் குழந்தைக்கு வழங்கப்படும் பெயரின் வரையறையாகவும் இருக்கின்றது. நேர்மையாளராகிய யோசேப்பு, தூய ஆவியால் மரியாள் கருத்தாங்கியிருக்கும் குழந்தையைத் தன்னுடையதாக ஏற்றுக்கொள்கின்றார். இந்த ஏற்றுக்கொள்தல் 'பெயரிடும் நிகழ்வால்' உறுதிசெய்யப்படுகிறது. 

நிகழ்வில் அதிகமாகச் சிந்தித்துக்கொண்டிருந்த யோசேப்பு திடீரென தூங்கிவிடுகின்றார். கனவில் ஆண்டவரின் தூதர் அவரிடம் பேசுகின்றார். இரு செய்திகள் தரப்படுகின்றன. ஒன்று, மரியா கருவுற்றிருப்பது தூய ஆவியாரால்தான். இரண்டு, குழந்தைக்கு வழங்கப்பட வேண்டிய பெயர்.

வாழ்வின் எதார்த்தங்கள் நம் புரிதலுக்கு அப்பாற்பட்டதாக இருக்கும்போது, அதீத எண்ணங்களால் நம் மனத்தின் சுமை அதிகமாகும்போது, உடனடியாகத் தூங்கிவிடுதல் நலம் என்பது யோசேப்பு தருகின்ற முதல் பாடமாக இருக்கின்றது.

நிராகரித்தல் என்னும் தூக்கத்திலிருந்த யோசேப்பு கனவில் நிகழ்ந்த வெளிப்பாட்டின் வழியாக ஏற்றுக்கொள்தல் என்னும் நிலைக்கு விழித்தெழுந்து அமைதி பெறுகின்றார்.

இன்று நம் வாழ்வில் நாம் தூங்கிக்கொண்டிருக்கும் நிலைகளில் இருக்கக் காரணம் நாம் கொள்ளும் அச்சம், நம்பிக்கையின்மை, மற்றும் நிரகாரித்தல் ஆகியவைதாம். இவற்றால்தாம் நம் அமைதியும் நிலைகுலைகிறது. தனிப்பட்ட வாழ்வு பற்றிய அச்சம், இறைவன்மேல் நம்பிக்கையின்மை, மற்றவர்களின் இருத்தலையும் இயக்கத்தையும் நிரகாரித்தல் ஆகியவற்றிலிருந்து நாம் விழித்தெழ வேண்டும் எனில் என்ன செய்வது?

இறைவனின் குறுக்கீட்டைக் கண்டடைந்து அதை உறுதியாகப் பற்றிக்கொள்வது.

திருவருகைக்காலத்தின் நான்காம் (இறுதி) வாரத்திற்குள் நுழையும் நாம் தூக்கத்திலிருந்து விழித்தெழுந்து அமைதியின் அரசரைக் கண்டுகொள்வோம்.

நிற்க.

'கடவுள் நம்மோடு' என்னும் செய்தியை மையமாக வைத்துச் சிந்தித்தால், பின்வரும் பிறழ்வுகள் தவிர்க்கப்பட வேண்டியவை. 'கடவுள் நம்மோடு' என்பது மூன்று நிலைகளில் பிறழ்வுக்குள்ளாக்கப்படுகிறது. அப்பிறழ்வுகள் எவை எனவும், அவற்றை எப்படிக் களைவது எனவும் அறிதல் முதன்மையான வாழ்வியல் சவால். 

(அ) கடவுள் நம்மோடு இல்லை

முதல் ஏற்பாட்டில் சில கதைமாந்தர்களை விட்டு கடவுள் நீங்குகின்றார். தனிநபர்களும் (காண். சிம்சோன் நீத 16:20, சவுல் 1 சாமு 16:14) ஒட்டுமொத்த குழுவும் (இஸ்ரயேல் மக்கள் எசே 11:23), 'கடவுள் நம்மோடு இல்லை' என்ற உணர்வைப் பெறுகின்றனர். 'கடவுள் நம்மோடு இல்லை' என்பது இங்கே ஒரு வாழ்வியல் அனுபவமாக அவர்களுக்கு இருக்கிறது. சில நேரங்களில் நம் வாழ்வில் நாம் நம்பிக்கை இழக்கிறோம். நம் அன்புக்குரியவரின் இறப்பு, எதிர்பாராமல் நிகழும் இழப்பு, குணப்படுத்த இயலாத நோய், மீள முடியாத தீய பழக்கம் ஆகியவை, 'கடவுள் என்னோடு இல்லை' என்ற ஒருவித விரக்தி உணர்வை நம்மில் ஏற்படுத்துகிறது. கோவித்-19 பெருந்தொற்று மற்றும் இயற்கைச் சீற்றங்களின்போது, கடவுள் நம்மை விட்டு நீங்கிவிட்டதாக நாம் உணர்கிறோம். சிலர் தங்கள் வாழ்வில் தாங்கள் செய்த தவறான செயல்களுக்காகக் கடவுள் தங்களைத் தண்டிக்கிறார் என்று நினைப்பதுண்டு. எடுத்துக்காட்டாக, அறியாமல் செய்த கருச்சிதைவினால், தங்களுக்கு குழந்தைப்பேறு இல்லாமல் கடவுள் செய்துவிட்டார் என்றும், நாம் ஆன்மிகத்தில் நன்றாக இல்லாததால், கடவுள் நமக்குத் தீமைகளை அனுப்புகிறார் என்றும் சில நேரங்களில் நாம் எண்ணுகிறோம். கடவுள் நம் தீச்செயலின் பொருட்டு தன் உடனிருப்பை நம்மிடமிருந்து விலக்கிக்கொள்வதில்லை. ஆக, 'கடவுள் நம்மோடு இல்லை' என்ற அவநம்பிக்கையை நம் உள்ளத்திலிருந்து வெளியேற்ற வேண்டும்.

(ஆ) கடவுள் நம்மோடு இருக்கத் தேவையில்லை

அறிவொளி இயக்கம் தொடங்கிய காலம் தொட்டே, அறிவு அரியணையில் ஏற்றப்பட்டு, நம்பிக்கை வெளியே விரட்டப்பட்டு வருகிறது. புலன்களால் உணர முடியாத எதுவும் இருத்தல் கொண்டிருப்பதில்லை எனக் கற்பிக்கின்ற அறிவுமைய வாதம் கடவுளையும் புலன்களுக்குள் அடக்கிவிட நினைக்கிறது. ஆக, அறிவொளி இயக்கம் கடவுள் நம்பிக்கையை சுமையாகப் பார்க்கிறது. மேலும், சமயச் சடங்குகள் அனைத்தும் மூட நம்பிக்கைகளாக பார்க்கப்படுகின்றன. இரண்டாவதாக, சமயத்தின் பெயரால் நடந்தேறும் வன்முறை, போர், அறநெறிப் பிறழ்வுகள் ஆகியவற்றைக் காண்கின்ற சிலர், கடவுள் இல்லாமல் இருந்தால் இத்தகைய சண்டைகள் தவிர்க்கப்படலாம் என்றும், கடவுள் இருப்பது நமக்கு ஒரு பெரிய நேர விரயம் என்றும் கருதுகின்றனர். சிலர் கடவுள் நம்பிக்கை கொண்டிருந்தாலும் ஆலயம், அருள்பணி நிலை போன்ற அமைப்புகள் தேவையற்றவை எனக் கருதுகின்றனர். மூன்றாவதாக, கடவுள் நம்மோடு இல்லை என்றால் நாம் விரும்பியதை நம்மால் செய்ய இயலும் என்று சொல்கின்ற சிலர், கடவுள் இருப்பதால்தான் அறநெறிக் கோட்பாடுகள் இருக்கின்றன என்று சொல்லி, கடவுள் நம்மோடு இருக்கத் தேவையில்லை என முன்மொழிகின்றனர். யோபுவும் கூட தன் துன்பத்தின் ஒரு கட்டத்தில், 'என்னுடைய நாள்கள் சிலமட்டுமே. என்னிடமிருந்து எட்டி நிற்பீரானால், மணித்துளி நேரமாவது மகிழ்ந்திருப்பேன்' (யோபு 10:20) என்கிறார். தன் மகிழ்ச்சியைத் தடைசெய்கின்ற நபராக கடவுளைக் காண்கின்றார் யோபு. அறிவுவாதத்தின் கூற்று உண்மை போல இருந்தாலும், வெறும் புலனறிவு மட்டுமே மனித அறிவு அல்ல. புலன்களால் உணர முடியாத பல எண்ணங்கள் நம் மூளையில் இருக்கின்றன. இறையனுபவம் என்பது புலனறிவுக்கு அப்பாற்பட்டது. கடவுள் பெயரால் நாம் பல நேரங்களில் பிளவுபட்டிருந்தாலும், சமயம் மானுடருக்கு அளிக்கப்பட்ட மயக்கமருந்து என்றாலும், சமயத்தின் வழியாக நிறைய மேம்பாடு மனித இனத்தில் நடந்துள்ளது என்பதையும் நாம் மறுக்க இயலாது. கடவுள் நம்பிக்கை இல்லை என்றாலும் நாம் ஏற்றுக்கொள்ள வேண்டிய உண்மை, நீதி போன்ற கோட்பாடுகள் இருக்கவே செய்கின்றன. ஆக, கடவுள் நம்மோடு இருக்கத் தேவையில்லை என்ற கூற்று ஆபத்தானது.

(இ) கடவுள் எங்களோடு மட்டும்

'கடவுள் நம்மோடு' என்ற சொல்லாட்சி, 'கடவுள் எங்களோடு' அல்லது 'கடவுள் எங்களோடு மட்டும்' என்று மாறும்போது சமய அடிப்படைவாதம் தோன்றுகிறது. மனிதர்களுக்குள் பிளவை ஏற்படுத்துவதோடு, தங்களைச் சாராத மற்றவர்களை அழிக்கவும் இது தூண்டுகிறது. கடவுள் யாருடைய தனிப்பட்ட உரிமைப் பொருளும் அல்ல. பல நேரங்களில் கடவுளைக் காப்பாற்றுவதிலும், கடவுள்சார் கோட்பாடுகளைத் தூக்கிப் பிடிப்பதிலும் நாம் நேரத்தையும் ஆற்றலையும் பணத்தையும் செலவழிக்கின்றோம். 'எங்கள் கடவுளே உண்மைக் கடவுள்' என்ற மனநிலையே காலனியாதிக்கத்திற்கும் கட்டாய சமயமாற்றத்திற்கும் வழிவகுத்தது. உண்மைக் கடவுள் யார் என உறுதி செய்ய நடந்தேறிய போர்களை வரலாறு அறியும். கடவுள் எங்களோடு மட்டும் என்ற மனநிலையில்தான் தூய்மை-தீட்டு, மேல்-கீழ், உயர்ந்தவர்-தாழ்ந்தவர் என்னும் பாகுபாடுகள் வருகின்றன. ஆக, 'கடவுள் நம்மோடு' என்பது ஒட்டுமொத்த மானுட அனுபவமாக இருக்க வேண்டுமே தவிர, தனிப்பட்ட குழுவின் அடிப்படைவாத நிகழ்வாக மாறக் கூடாது.

இப்பிறழ்வு எண்ணங்களும் நம் அமைதியைக் குலைக்கின்றன. 'கடவுள் நம்மோடு' என்று இறங்கி வந்த இயேசு, 'கடவுள் நமக்காக' என்று விண்ணேறிச் சென்றார். கடவுள் நம்மோடு இருக்கிறார் எனில், நாம் அவரோடும், அவர் வழியாக ஒருவர் மற்றவரோடும் இணைந்து நின்றால் எத்துணை நலம்!


ஞானமே வாரும்!

கிறிஸ்து பிறப்பு நவநாள் - 1 (17 டிசம்பர் 2022)

ஞானமே வாரும்!

இன்று கிறிஸ்து பிறப்பு நவநாளின் முதல் நாள். மேலை நாடுகளில் இந்த நவநாள்கள் ஒவ்வொன்றிலும், கிறிஸ்துவுக்கு ஒரு பெயர் சூட்டி மெழுகுதிரிகள் ஏற்றுவதுண்டு. இலத்தீனில்  ERO CRAS 'ஏரோ க்ராஸ்' என எழுதப்படும் அச்சொல்லுக்கு, 'நான் வருகிறேன்' என்பது பொருள். அவ்வரிசையில் முதல்நாளில் கிறிஸ்துவுக்கு வழங்கப்படும் பெயர், 'ஞானம்.'

இன்றைய முதல் வாசகத்தில் (காண். தொநூ 49:1-2,8-10) யாக்கோபு தம் புதல்வர்களுக்கு ஆசி வழங்கும் நிகழ்விலிருந்து ஒரு பகுதி கொடுக்கப்பட்டுள்ளது. 'என்னைச் சுற்றி நில்லுங்கள். வரவிருக்கும் நாள்களில் உங்களுக்கு நிகழ இருப்பதை நான் அறிவிக்கப் போகிறேன்' என்று மொழிகின்ற குலமுதுவர் யாக்கோபு, 'யூதா! நீ ஒரு சிங்கக் குட்டி, என் மகனே, இரை கவர்ந்து வந்துள்ளாய்! ஆண் சிங்கமென, பெண் சிங்கமென அவன் கால் மடக்கிப் படுப்பான். அவன் துயில் கலைக்கத் துணிந்தவன் எவன்? அரசுரிமை உடையவர் வரும் வரையில், மக்களினங்கள் அவருக்குப் பணிந்திடும் வரையில், யூதாவைவிட்டுச் செங்கோல் நீங்காது. அவன் மரபைவிட்டுக் கொற்றம் மறையாது!'

யாக்கோபுக்கு பிறந்த 12 குழந்தைகளில் யூதா நான்காவது நபர். இவருடைய தாய் லேயா. பல இலக்கியங்களிலும் ஓவியங்களிலும் சிங்கம் என்பது அதிகாரம் மற்றும் ஆற்றலின் அடையாளமாக இருக்கிறது. யாக்கோபு தரும் ஆசியில், (அ) சிங்கம் இரை கவர்கின்றது, (ஆ) சிங்கம் கால் மடக்கிப் படுத்திருக்கிறது. அதாவது, யூதாவின் ஆட்சியில் உணவு நிறைவாகக் கிடைக்கும் என்றும், போர்கள் இன்றி மக்கள் அமைதியுடன் இளைப்பாறுவார்கள் என்பதையும் இவ்வடையாளங்கள் குறிக்கின்றன. மேலும், 'செங்கோல்' மற்றும் 'கொற்றம்' ஆகியவை அரசாட்சியைக் குறிக்கின்றன. யூதாவின் ஆட்சி பாபிலோனிய அடிமைத்தனத்தோடு முடிவடைகிறது. அப்படி என்றால், யாக்கோபின் ஆசி பொய்யாகி விடுமா? இல்லை! நீடித்த அரசாட்சியை ஏற்படுத்தும் மெசியா வருவார் என்பது யூதர்களின் நம்பிக்கை. நீடித்த அரசாட்சியை ஏற்படுத்துகின்ற மெசியா இயேசு என்பது கிறிஸ்தவர்களின் நம்பிக்கை.
 
நற்செய்தி வாசகத்தில் (காண். மத் 1:1-17) மத்தேயு நற்செய்தியாளர் பதிவு செய்துள்ள இயேசுவின் தலைமுறை அட்டவணையைக் காண்கின்றோம். தொடக்கநூலில் பல தலைமுறை அட்டவணைகள் உள்ளன. பண்டைக்கால அரசர்களுக்கு தலைமுறை அட்டவணைகள் எழுதப்படுவது வழக்கம். 'இராஜாதி இராஜ ...' என்று நம் நாட்டில் அரசர்கள் அழைக்கப்படுவதிலும் அவர்களுடைய தலைமுறை அடங்கியுள்ளது. இவ்வரிசையில் இயேசுவுக்குத் தலைமுறை அட்டவணை எழுதத் தலைப்படுகின்றனர் மத்தேயு மற்றும் லூக்கா. மத்தேயு ஆபிரகாமில் தொடங்கி இயேசுவில் முடிக்கின்றார். தலைமுறைகளை 14 என மும்முறை பிரிக்கின்றார். லூக்கா இயேசுவில் தொடங்கி ஆதாமில் முடிக்கின்றார். இருவரும் வெள்வேறு தரவுகளின் பின்புலத்தில் எழுதுகின்றனர். ஆகையால்தான், இயேசுவின் தாத்தா பெயர் மத்தேயுவில் யாக்கோபு என்றும், லூக்காவில் ஏலி என்றும் உள்ளது. மத்தேயுவின் எண்ணிக்கையிலும் குறைவு இருக்கிறது. மத்தேயு பெண்கள் மற்றும் புறவினத்தாரின் பெயர்களையும் உள்ளிடுகின்றார்.

14 என்ற எண் தாவீதைக் குறிக்கிறது, நிறைவைக் குறிக்கிறது, பெண்கள் மற்றும் புறவினத்தாரின் பெயர்களைக் குறிப்பதால் இயேசு அனைவருக்கும் பொதுவானவர் என்று மத்தேயு முன்வைக்கிறார் என்று வழக்கமாகப் பொருள்கொள்வதுண்டு.

இன்றைய முதல் வாசகம் மற்றும் நற்செய்தி வாசகத்தை இணைத்துப் பார்த்தால் மூன்று விடயங்கள் தெளிவாகின்றன: ஒன்று, முதல் வாசகம் அரசரை மையப்படுத்தியதாக இருக்கிறது. நற்செய்தி வாசகத்தில் சாதாரண மனிதர்களும் இடம் பெறுகின்றனர். இரண்டு, அரசர்களின் வழிநடத்துதல் அல்ல, மாறாக, கடவுளின் ஞானமே தலைமுறைகளை நகர்த்தி வருகின்றது. மூன்று, இயேசு என்னும் நபர் கடவுளின் மகன் என்றாலும், மெசியா என்றாலும், நம்மோடு நம் தலைமுறைகளோடு இணைந்து பிறப்பதால் அவர் நம்முடன் ஒருவராகின்றார். ஏதோ ஒரு வகையில் நாம் இயேசுவின் தலைமுறையோடு இணைந்திருக்கிறோம் என்ற உணர்வே நமக்கு ஆச்சர்யம் தருகின்றது. இந்த தலைமுறை தொடரும். ஆகையால்தான், 'கதிரவன் உள்ள வரையில் அவர் பெயர் நிலைக்கும்' என்று திருப்பாடல் ஆசிரியர் பாடுகின்றார் (திபா 72).

இயேசுவே கடவுளின் ஞானம் என்று பவுல் மற்றும் யோவான் பதிவு செய்கின்றனர். ஞானத்தால் அரசுகள் நகர்கின்றன. கடவுள் தன் ஞானத்தால் காலத்தின் நகர்வுகளை நிகழ்த்துகின்றார். அவருடைய ஞானத்தின் ஒரு துகள் நாம் எனில், அன்றாட வாழ்வில் ஞானம் பெற்றவர்களாக வாழவும் செயல்படவும் முயற்சி செய்வோம்.

இன்றைய நம் இணைய உலகம் அறிவு என்னும் ஒற்றைச் சொல்லால் இயக்கப்படுகிறது. அறிவு அல்லது தரவுகளின் தொகுப்பு யாரிடம் உள்ளதோ அவர் சிறந்தவராகக் கருதப்படுகிறார். ஆனாலும், இந்த அறிவுக் குவியலில் இரு பிரச்சினைகள் இருக்கின்றன. ஒன்று, 'அறிவு மலிவு' (ஆங்கிலத்தில், 'knowledge abundance'). இரண்டு, 'அறிவு மாயை' (ஆங்கிலத்தில், 'knowledge illusion'). ஒரு விடயத்தைத் தெரிந்துகொள்ள வேண்டி இணையத்தைத் திறந்தால் அறிவு மலிந்து கிடக்கிறது. இதில் எந்த அறிவு உண்மையானது, எது உண்மையற்றது என்பதை அறிந்துகொள்வதற்கு அளவுகோல் இல்லை. உண்மையைத் தேடுகின்ற நம் தேடலில் நிறைய கவனச் சிதறல்கள் வந்துவிடுகின்றன. இரண்டாவதாக, எல்லாம் நாம் அறிந்திருப்பதாக ஒரு மாயையில் இருக்கின்றோம். உண்மையில் அமர்ந்து பார்த்தால் பல விடயங்கள் நமக்குத் தெரியாது என்பதே நிதர்சனமான உண்மை.

ஞானம் என்பது அறிவை விடச் சற்றே மேலானது. அது அன்றாட வாழ்க்கை தொடர்பானது. நாம் எடுக்கும் முடிவுகள் தொடர்பானது. அறிவு செயல்பாடாக மாறும் தளமே ஞானம்.

கிறிஸ்து கடவுளின் ஞானமாக நம் நடுவில் நடந்தார். 'எங்கள் வாழ்நாள்களைக் கணிக்க எங்களுக்குக் கற்றுக்கொடும். அப்போது ஞானமிகு உள்ளத்தை நாங்கள் பெற்றிடுவோம்' (திபா 90:12) என இறைவேண்டல் செய்கிறார் தாவீது. வாழ்நாள்களைக் கணிக்கும் ஞானம், வாழ்வை மகிழ்ச்சியாக வாழும் ஞானம், கடவுளின் ஞானத்தோடு நம்மை இணைத்துக்கொள்ளும் ஞானம் என ஞானம் நம் பயணத்தின் தோழியாக உடன்வரட்டும்!

'ஞானமே, வாரும்!' என்று இன்று நாம் இறைவேண்டல் செய்வோம். 

Thursday, December 15, 2022

சுடர்விடும் விளக்கு

இன்றைய (16 டிசம்பர் 2022) நற்செய்தி (யோவா 5:33-36)

சுடர்விடும் விளக்கு

கடந்த மூன்று நாள்களாக திருமுழுக்கு யோவானைப் பற்றிய பகுதிகளையே நற்செய்தியாக நாம் வாசித்துக் கொண்டிருக்கிறோம். இன்றைய நற்செய்தி வாசகத்தில் யோவானின் செய்திக்குப் பதிலிறுப்பு செய்ய மறுத்த தன் சமகாலத்தவர்களைப் பற்றிப் பேசுகின்றார் இயேசு. 

யோவான் நற்செய்தியின் தொடக்கப் பாடலில் யோவான் ஒளிக்குச் சான்று பகர வந்ததாகப் பதிவு செய்கின்றார் நற்செய்தியாளர். தொடர்ந்து வரும் இப்பகுதியில், யோவான் சிறிய விளக்குக்கு ஒப்பிடப்படுகின்றார். 

விளக்கின் ஒளி அருகில் இருக்கும் அனைத்தையும் வெளிப்படுத்திக் காட்டுவதால் யோவானின் சமகாலத்தவர்கள் அதை விரும்பவில்லை.


Wednesday, December 14, 2022

விரிவாக்கு

இன்றைய (15 டிசம்பர் 2022) முதல் வாசகம் (எசா 54:1-10)

விரிவாக்கு

'உன் கூடாரத்தின் இடத்தை விரிவாக்கு. உன் குடியிருப்பின் தொங்கு திரைகளைப் பரப்பிவிடு. உன் கயிறுகளைத் தாராளமாய் நீட்டிவிடு. உன் முளைகளை உறுதிப்படுத்து. வலப்புறமும் இடப்புறமும் நீ விரிந்து பரவுவாய்' (காண். எசா 54:2).

கூட்டொருங்கியக்கத்துக்கான மாமன்றத்தின் இரண்டாம் கட்டமான கண்டத்தின் அளவு கலந்தாலோசித்தல் நிலையில் நாம் இப்போது இருக்கிறோம். இரண்டாம் நிலைக்கான கலந்தாலோசித்தலுக்காக நமக்குத் தரப்பட்டுள்ள கையேட்டின் தலைப்பாகக் கொடுக்கப்பட்டுள்ள இறைவார்த்தைப் பகுதி இன்றைய முதல் வாசகப் பகுதியிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது: 'உன் கூடாரத்தின் இடத்தை விரிவாக்கு!' திருஅவை என்னும் கூடாரத்திற்குள் சிலர் இருக்கின்றனர். பலர் வெளியே இருக்கின்றனர். திருஅவை தன் கூடாரத்தை விரிவுபடுத்தினால் அனைவரும் உள்ளே நுழைந்துகொள்ள முடியும். இதுவே கூட்டொருங்கியக்கத்தின் பொருள்.

நிற்க.

இன்றைய முதல் வாசகப் பகுதியை இறைவாக்கினர் எசாயா, பாபிலோனியாவில் அடிமைப்பட்டுக் கிடந்த இஸ்ரயேல் மக்களைப் பார்த்து அறிவிக்கின்றார். இஸ்ரயேல் அடிமைத்தனத்தில் இருந்தபோது அதன் எல்கைகள் சுருங்கிப் போனது. பலர் சிதறடிக்கவும் கொல்லவும் பட்டனர். இந்தப் பின்புலத்தில் இறைவாக்குரைக்கின்ற எசாயா, இஸ்ரயேல் பெறவிருக்கின்ற விடுதலையையும், விடுதலைக்குப் பின்னர் நாடு அடையும் வளர்ச்சியையும் இறைவாக்காக முன்னுரைக்கின்றார்.

'உன் கூடாரத்தின் இடத்தை விரிவாக்கு' 

கூடாரம் அடித்து வாழ்கின்ற மக்களை இன்றும் நாம் பல இடங்களில் பார்க்கின்றோம். பேருந்து நிலையங்கள், தொடர்வண்டி நிலையங்களுக்கு அருகே, பெரிய கட்டுமானப் பணிகள் நடக்கும் இடங்களருகே, மேய்ச்சல் நிலங்களில், விவசாய நிலங்களில் இன்றும் பலர் கூடாரங்கள் அடித்துக் குடியிருக்கின்றனர். தரையில் விரிக்கப்பட்ட துணி அல்லது பாய் தூக்கி நிறுத்தப்பட்டால் அது கூடாரம். அவ்வளவுதான்!

ஒரு கூடாரம் உருப் பெற்று நிலைபெற மூன்று காரணிகள் அவசியம்: (அ) தொங்கு திரை அல்லது துணி, (ஆ) கயிறுகள், (இ) முளை. முதலில், தொங்குதிரை அல்லது துணியின் அளவைப் பொருத்தே கூடாரத்தின் அளவு அமையும். கூடாரத்தின் பரப்பளவு கூட வேண்டுமெனில் துணியின் அளவு கூட வேண்டும். அதே வேளையில் துணிகளின் அளவு கூடினால் கயிறுகளும் அதிகம் தேவைப்படும், முளையும் மிக உறுதியாக இருக்க வேண்டும். காற்று அதிகமான பகுதிகளில் பெரும்பாலும் சிறிய கூடாரங்களே அமைக்கப்படுகின்றன. இரண்டாவதாக, கயிறுகள். கயிறுகள் கூடாரத் துணி காற்றில் பறக்காதவாறு அதைப் பாதுகாப்பதுடன், காற்றின் அசைவுக்கு ஏற்ப அமிழ்ந்து கூடாரத்தின் உள்ளே இருப்பவர்களைத் தழுவுகின்றன. மூன்றாவதாக, இரும்பு முளை கூடாரத்தின் கயிறுகளை உறுதியாகத் தாங்குவதோடு, ஓரிடத்திலிருந்து மற்ற இடத்திற்கு நகர்த்திச் செல்வதற்காகப் பிடுங்கவும் ஏதுவாக இருக்க வேண்டும்.

கூடாரத்தின் வலிமை, அழகு, நேர்த்தியால் கூடாரத்தில் வாழ்வோர் வளமும் நலமும் பெறுகின்றனர்.

இஸ்ரயேல் மக்கள் பெறுகின்ற உறுதித்தன்மையை அவர்களுக்கு அறிவிக்கின்ற எசாயா, வலமும் இடமும் அவர்கள் பெருகுவர் என்றும் முன்னுரைக்கின்றார்.

தொடர்ந்து இன்னொரு உருவகத்தையும் நாம் முதல் வாசகத்தில் வாசிக்கின்றோம்: 'கைவிடப்பட்டு மனமுடைந்து போன துணைவி போலும், தள்ளப்பட்ட இளம் மனைவி போலும் இருக்கும் உன்னை ஆண்டவர் அழைத்துள்ளார் என்கிறார் கடவுள். நொடிப்பொழுதே நான் உன்னைக் கைவிட்டேன். ஆயினும் பேரிரக்கத்தால் உன்னை மீண்டும் ஏற்றுக்கொள்வேன்.'

'கைவிடப்பட்டு மனமுடைந்தபோன துணைவி,' 'தள்ளப்பட்ட இளம் மனைவி'

இஸ்ரயேல் சமூகத்தில் மனைவியின் அடையாளம் அல்லது தான்மை அவருடைய கணவரைப் பொருத்தே இருந்தது. கணவர் வழியாகவே மனைவி சமூகத்துடன் உறவுகொள்ள இயலும். அதாவது, பொது வாழ்வில் என்ன நிகழ்வு இருந்தாலும் அந்த நிகழ்வில் பங்கேற்பது கணவர் வழியாகவே நடைபெறும். மணவிலக்கு கொடுக்கப்படும்போதும், கணவர் இறந்தபோதும் அதிகம் பாதிப்புக்கு உள்ளானவர்கள் மனைவியரே. ஏனெனில், கணவருடைய எந்தச் சொத்துரிமையும் அவர்களுக்குக் கிடைக்காமல் போகும். மேலும், கைவிடப்பட்டவர்களைக் கரம் பிடிப்பவர்களும் மிகவும் குறைவாக இருந்ததால், இத்தகைய பெண்கள் மிகவும் துன்பப்பட்டனர். இவர்களோடு இஸ்ரயேல் மக்களை ஒப்பிடுகின்ற ஆண்டவராகிய கடவுள், தன் பேரிரக்கத்தால் இஸ்ரயேல் மக்களை மீண்டும் ஏற்றுக்கொள்வதாக வாக்குறுதி தருகின்றார்.

இன்றைய முதல் வாசமும் நமக்கு இரு நிலைகளில் நம்பிக்கை தருகின்றது:

ஒன்று, நம் வாழ்வின் எல்கைகள் சுருங்கி விட்டது என நினைக்கும்போது, அவற்றின் எல்கைகளை விரிவாக்கி நம்மை வளர வைக்கின்றார் கடவுள்.

இரண்டு, வாழ்வின் சூழல்களால் நாம் மனமுடைந்து போகும் நிலையில் இருந்தாலும் தன் பேரிரக்கத்தால் அவர் நம்மைத் தழுவிக்கொள்கின்றார்.


Tuesday, December 13, 2022

செயல்களே சான்று

நாளின் (14 டிசம்பர் 2022) நல்வாக்கு

செயல்களே சான்று

நேற்றைய நாளில் சொற்கள் மறைந்து செயல்கள் பெருக வேண்டும் என்று சிந்தித்தோம். இன்றைய வாசகங்கள் அதே கருத்துருவின் மறுபக்கத்தை நமக்குக் காட்டுகின்றன. அதாவது, நாம் செய்யும் செயல்கள் நம்மை யாரென்று மற்றவர்களுக்கு வெளிப்படுத்துகின்றன. ஆன்மிக அளவில், இறைவன் ஆற்றும் செயல்களைக் கொண்டு நம் இறைவன் யாரென நாம் அறிந்துகொள்கின்றோம்.

முதல் வாசகத்தில் (காண். எசா 45:6-8,18,21-25) மண்ணுலகில் பெய்யும் மழையும், பனியும் இறைவன் யாரென வெளிப்படுத்துகின்றன என்பதைக் காண்கின்றோம். ஆண்டவராகிய கடவுள், 'என்னிடம் திரும்பி வாருங்கள்' எனத் தன் மக்களுக்குக் கட்டளையிடுகின்றார். திரும்பி வருதல் என்பது அவருடைய அரும்பெரும் செயல்களை நினைவுகூரவும், அவற்றை ஏற்று ஆண்டவர் யார் என அறிக்கையிடவும் செய்கின்ற அழைப்பாக இருக்கின்றது.

நற்செய்தி வாசகத்தில் (காண். லூக் 7:19-23), யோவான் தம் சீடர்களை இயேசுவிடம் அனுப்பி, 'வரவிருப்பவர் நீர்தாமா? அல்லது வேறொருவரை எதிர்பார்க்க வேண்டுமா?' எனக் கேட்கச் சொல்கின்றார்.

இந்த இடத்தில் வாசகருக்கு ஒரு சந்தேகம் வர வேண்டும். இதே லூக்கா நற்செய்தியில், அன்னை கன்னி மரியா எலிசபெத்தைச் சந்திக்கச் செல்லும் நிகழ்வில், மரியாவின் வாழ்த்தைக் கேட்டவுடன், எலிசபெத்தின் வயிற்றிலிருந்த திருமுழுக்கு யோவான் துள்ளிக் குதிக்கின்றார். அதாவது, மரியின் வயிற்றில் உள்ள மெசியா கண்டு துள்ளிக் குதிக்கின்றார். ஒன்றும் அறியாப் பருவத்திலேயே துள்ளிக் குதித்த திருமுழுக்கு யோவானுக்கு இப்போது இயேசு பற்றிய சந்தேகம் ஏன் வந்தது? இதற்கு இரு நிலைகளில் பதில் அளிக்கலாம்: ஒன்று, இயேசுவின் குழந்தைப் பருவ நிகழ்வுகள் கதையாடல்கள் என்பவை வேறொரு இலக்கிய நடையைப் பின்பற்றுகின்றன. அந்த நடையில் உள்ள அனைத்தும் மித்ராஷ் இலக்கிய வகையை – அதாவது, விளக்கவுரை நடையை – சார்ந்தவை. மெசியாவின் பிறப்பை ஒட்டிய நிகழ்வுகள் வியக்கத்தக்கவையாக இருந்தன என்றும், வயிற்றிலிருந்த குழந்தைகூட துள்ளிக் குதித்தது என்றும் சொல்வது போல அவை எழுதப்பட்டுள்ளன. இரண்டு, திருமுழுக்கு யோவான் தான் கேட்டது தனக்கு ஏற்பட்ட சந்தேகத்தினால் அல்ல, மாறாக, மற்றவர்களுக்கு இயேசு யார் என்பதைச் சுட்டிக்காட்டுவதற்கு என்றும் பொருள் கொள்ளலாம். ஏனெனில், யோவான் நற்செய்தியில் திருமுழுக்கு யோவானே தன் சீடர்கள் இருவர் இயேசுவோடு சென்று தங்குமாறு அனுப்புகின்றார். அந்த வரிசையில் இங்கே அவர் தன் சீடர்கள் இருவரை அனுப்புகின்றார். ஏன் இருவரை அனுப்ப வேண்டும்? யூத மரபில் இருவரின் சாட்சியமே செல்லுபடியாகும். ஆகவே, இருவர் அனுப்பப்படுகின்றனர்.

சீடர்கள் இயேசுவிடம் செல்கின்ற நேரத்தில் அவர் குணமாக்கும் பணி செய்துகொண்டிருக்கின்றார். தான் யார் என்று இயேசு தனக்கே சான்றுபகரவில்லை. மாறாக, 'நீங்கள் கண்டவற்றையும் கேட்டவற்றையும் யோவானிடம் போய் அறிவியுங்கள்' என அனுப்புகின்றார். இறுதியில், 'என்னைத் தயக்கமின்றி ஏற்றுக்கொள்வோர் பேறுபெற்றோர்!' என்று சொல்லும் இயேசு அனைவரையும் நம்பிக்கை நோக்கி அழைக்கின்றார். தன் பணித்தொடக்கத்தில் தொழுகைக் கூடத்தில் தான் பயன்படுத்திய வார்த்தைகளையே இங்கே இயேசு குறிப்பிடுகின்றார்.

ஆக, இயேசு தான் தன் பணி வாழ்வின் தொடக்கத்தில் அறிவித்ததை இங்கே செயல்படுத்துகின்றார். அவரின் செயல்கள் அவர் யார் என்பதை மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்கின்றன.

இன்றைய இறைவார்த்தைப் பகுதிகள் நமக்குச் சொல்லும் பாடம் என்ன?

'செயல்களிடமிருந்து செய்பவருக்குக் கடந்து செல்வது'

இயேசுவின் செயல்களின் நோக்கம் மற்றவர்களை நம்பிக்கை நோக்கி ஈர்ப்பதே. கடவுள் நம் வாழ்வில் அன்றாடம் பல நிலைகளில் செயல்பட்டுக்கொண்டே இருக்கின்றார். நாம் செயல்களிடமிருந்து கடவுளை நோக்கிக் கடக்கின்றோமா?

இயேசுவை ஏற்றுக்கொள்வதற்கு நான் ஏன் தயக்கம் காட்டுகிறேன்?


Monday, December 12, 2022

சொல்லும் செயலும்

நாளின் (13 டிசம்பர் 2022) நல்வாக்கு

சொல்லும் செயலும்

ஒருவரின் சொல்லுக்கும் செயலுக்கும் உள்ள இடைவெளி குறைவதில்தான் மனித வாழ்க்கையின் முதிர்ச்சி இருக்கிறது என்பதை நான் சில மாதங்களாக உணர்கிறேன். சிறிய வயதில், இளவலாக இருக்கும்போது நாம் நிறைய பேசுகிறோம். நாம் பேசுபவை பல நேரங்களில் சொற்களாக நின்றுவிடுகின்றன. ஆண்டுகள் கடக்கக் கடக்க, நேரம் குறைவாக இருக்கிறது என்ற நிலையோ என்னவோ, நம்மை அறியாமலேயே நாம் சொற்களைக் குறைக்கிறோம். அல்லது நிறுத்திக் கொள்கிறோம். செயல்களை அதிகரிக்கிறோம். ஏனெனில், நம் செயல்களே நம் சொற்கள் என்பதை அறியும் முதிர்ச்சி வரத் தொடங்குகிறது.

இன்றைய முதல் வாசகத்தில் ஆண்டவராகிய கடவுள் எருசலேமை நோக்கிப் புலம்புகின்றார். அவரின் சொற்கள் திடீரென நிற்க, இரக்கச் செயல்கள் பிறக்கத் தொடங்குகின்றன. ஆண்டவருடைய சொற்கள் கண்டிப்பானவையாக இருக்கின்றன. அவர் இஸ்ரயேல் மக்களைத் தண்டிக்கின்றார். ஆனால், அவர் அவர்களுக்காக ஆற்றும் இரக்கச் செயல்கள் வியப்புக்குரியவையாக இருக்கின்றன.

நற்செய்தி வாசகத்தில், இயேசு தலைமைக் குருக்களையும் மக்களின் மூப்பர்களையும் பார்த்து ஓர் உவமை கூறுகின்றார். இரு மகன்கள் உவமையில், மூத்தவர் தந்தையின் சொல் கேட்டு திராட்சைத் தோட்டத்திற்கு வேலைக்குப் போக விருப்பம் இல்லை. ஆனால், சற்று நேரம் கழித்து போகின்றார். ஆனால், இளையவர், 'இதோ! செல்கின்றேன்!' என்று வார்த்தையால் சொல்கிறார். ஆனால், செல்லவில்லை. மூத்தவரிடம் சொல் இல்லை, ஆனால் செயல் இருக்கிறது. இளையவரிடம் சொல் இருக்கிறது, செயல் இல்லை. இரண்டுமே ஏற்புடையது அல்ல. ஏனெனில், முதலாமவர் தன் சொல்லால் பொய் சொல்கின்றார், அல்லது தன்னை மறுக்கின்றார். இரண்டாமாவர், செயலால் பொய் சொல்கின்றார், அல்லது தன்னை மறுக்கின்றார்.

இந்த உவமையை முன்னும் பின்னும் நீட்டிக்கொண்டு, இதை இயேசு பிறப்பு கதையாடல்களில் வரும் கதைமாந்தர்களுக்குப் பொருத்திப் பார்ப்போம்:

(1) சொல் இல்லை, செயல் இல்லை

சிலர் இயேசுவை சொல்லாலும் ஏற்றுக்கொள்ளவில்லை, செயலாலும் அவரை அழிக்க முயன்றனர். பெரிய ஏரோது இதற்கு ஓர் எடுத்துக்காட்டு. கீழ்த்திசை ஞானியர் அவரைத் தேடி வந்தபோது (காண். மத் 2), பெத்லகேமில் அரசர் பிறப்பார் என்று மறைநூல் அறிஞர்கள் எடுத்துச் சொன்னாலும், 'அவரே அரசர்' என்று சொல்லால் ஏற்றுக்கொள்ளாததோடு, குழந்தையை அழிக்கவும் துணிகின்றார் ஏரோது.

(2) சொல் உண்டு, செயல் இல்லை

பெரிய ஏரோதுவின் அரண்மனையில் இருந்த மறைநூல் அறிஞர்கள் மெசியா எங்கே பிறப்பார் என்பதை அறிந்திருந்தனர். அதை அரசருக்கும் எடுத்துச் சொல்லினர். ஆனால், அவர்களோ மெசியாவைத் தேடிச் செல்லவில்லை. எருசலேமில் வாழ்ந்தோர் புதிய நட்சத்திரத்தைக் கண்டனர். ஆனால், அதைப் பின்தொடர மெனக்கெடவில்லை. இவ்வாறாக, இவர்களிடம் சொல் இருந்தது. ஆனால். செயல் இல்லை.

(3) சொல் இல்லை, செயல் இருந்தது

வானதூதர்கள் இடையர்களுக்கு மெசியாவின் பிறப்புச் செய்தியை அறிவித்தபோது, இடையர்கள் எந்தவொரு பதில்வார்த்தையும் பேசவில்லை. ஆனால், உடனடியாக பெத்லகேமுக்குப் புறப்பட்டுச் செல்கின்றனர். குழந்தையைக் காண்கின்றனர். குழந்தையைப் பற்றி மற்றவர்களுக்கு அறிவிக்கின்றனர்.

(4) சொல் உண்டு, செயல் உண்டு

மரியா, யோசேப்பு ஆகியோர் இறைத்திருவுளத்திற்கு 'ஆம்' என்றனர் – மரியா வார்த்தையாகவும், யோசேப்பு மௌனமாகவும். மேலும், இறைத்திருவுளத்திற்கு ஏற்றவாறு செயல்பட்டனர். அவர்களிடம் எந்தவொரு முரண்பாடும் இல்லை.

சொல், 'ஆம்' என இருந்து, செயல், 'இல்லை' என இருந்தால் என்ன பயன்? அது போல, சொல், 'இல்லை' என இருந்து, செயல், 'ஆம்' என இருந்தும் என்ன பயன்?

சொல்லுக்கும் செயலுக்கும் உள்ள முரண் களைவதே மெசியாவைக் காணப் புறப்படுவதற்கான தயார்நிலை. ஏனெனில், அவர் ஒரே நேரத்தில் ஆம் என்றும், இல்லை என்றும் சொல்வதில்லை. 


திருப்பம்

நாளின் (12 டிசம்பர் 2022) நல்வாக்கு

திருப்பம்

வாழ்க்கைப் பாதையில் நாம் பல திருப்பங்களைக் காண்கின்றோம். திருப்பங்கள் நம் வாழ்வில் ஆச்சர்யம் தருகின்றன. ஆண்டவராகிய கடவுள் ஏற்படுத்துகின்ற திருப்பம் பற்றிப் பேசுகின்றது இன்றைய இறைவார்த்தை வழிபாடு.

முதல் வாசகம் (காண். எண் 24:2-7,15-17) பிலயாமின் இறைவாக்குப் பகுதியாக உள்ளது. அன்றைய காலத்தில், 'இறைவாக்கினர்களை அழைத்துச் சாபமிடல்' என்ற ஒரு செயல் இருந்தது. அதாவது, நாம் பேசும் சொற்களுக்கு ஆற்றல் இருக்கின்றது. நேர்முகமான சொற்கள் மற்றவர்களை உருவாக்குகின்றன. எதிர்மறையான சொற்கள் மற்றவர்களை அழிக்கின்றன. அல்லது ஆசி கூறுவதால் வளமும், சாபம் கூறுவதால் அழிவும் நேரிடுகிறது. இஸ்ரயேல் மக்களின் எதிரியான பாலாக்கு அரசன் பிலயாம் என்னும் புறவினத்து இறைவாக்கினரை அழைத்து, அவர்களைச் சபிக்க முயற்சி செய்கின்றார். இப்படியாக, இஸ்ரயேல் மக்களைப் போரில் வெல்ல நினைக்கின்றார். இஸ்ரயேல் மக்களைச் சபிப்பதற்காகப் புறப்பட்டுச் சென்ற பிலயாமை இடைமறிக்கின்றார் ஆண்டவரின் தூதர். கழுதையும் இந்த நிகழ்வில் பேசுகிறது. கழுதையிலிருந்து தூக்கி எறியப்பட்ட பிலயாம் இஸ்ரயேல் மக்களைச் சபிப்பதற்குப் பதிலாக அவர்களை ஆசீர்வதிக்கின்றார். அவர் அளிக்கும் ஆசியே முதல் வாசகப் பகுதியாக அமைந்துள்ளது.

'உன் கூடாரங்களும், உன் இருப்பிடங்களும் எத்துணை அழகு வாய்ந்தவை! அவை விரிந்து கிடக்கும் பள்ளத்தாக்குகள் போன்றவை. ஆண்டவர் நட்ட அகில் மரங்கள் போன்றவை. தண்ணீர் அருகிலுள்ள கேதுரு மரங்கள் போன்றவை ... அவன் அரசு உயர்த்தப்படும் ... யாக்கோபிலிருந்து விண்மீன் ஒன்று உதிக்கும்! இஸ்ரயேலிலிருந்து செங்கோல் ஒன்று எழும்பும்!'

ஆண்டவர் புறவினத்து இறைவாக்கினர் வழியாகவும் செயலாற்றுகின்றார். ஆண்டவர் வரலாற்றை இயக்குகின்றார். ஆண்டவர் மற்றவர்களின் சாபங்களை ஆசீராக மாற்றுகின்றார். இதுவே ஆண்டவர் ஏற்படுத்தும் மாற்றம்.

நற்செய்தி வாசகத்தில் இயேசு கோவிலுக்குள் கற்பித்துக் கொண்டிருக்கும்போது, 'எந்த அதிகாரத்தால் நீர் இவற்றைச் செய்கிறீர்?' எனக் கேட்கின்றனர். அவரோ, 'திருமுழுக்கு யோவானுக்கு, திருமுழுக்கு அளிக்கும் அதிகாரம் எங்கிருந்து வந்தது? விண்ணகத்திலிருந்தா? மனிதரிடமிருந்தா?' என்று எதிர்கேள்வி கேட்கின்றார்.

யூத மரபில் ஒருவரின் செயல்களையும் சொற்களையும் நம்புவதற்கு, அதிகாரம் மற்றும் அறிகுறி முதன்மையானதாக இருந்தன. இயேசுவின் சமகாலத்து ரபிக்கள், 'மறைநூலின் அதிகாரத்தால் ...', 'மோசேயின் அதிகாரத்தால் ...', 'திருப்பீடத்தின் அதிகாரத்தால் ...' என்று சொல்லிக் கற்பிப்பார்கள். மேலும், அறிகுறிகள் நிகழ்த்தி தாங்கள் பெற்றுள்ள ஆற்றலை நிரூபிப்பார்கள். ஆனால், இயேசு, தானே அதிகாரம் கொண்டவராக, 'நான் உங்களுக்குச் சொல்கிறேன்' என்று கற்பிக்கின்றார். யோனா மற்றும் சாலமோனை அறிகுறிகள் என முன்வைக்கின்றார். புறவினத்தார் வழியாகவும் தங்கள் கடவுள் செயல்பட வல்லவர் என்பதை அவர்கள் அறிந்திருந்தாலும், தங்கள் இனத்தார்களான யோவானையும் இயேசுவையும் ஏற்றுக்கொள்ள மறுக்கின்றனர்.

இயேசுவின் மௌனமே புதிய திருப்பமாக அமைகின்றது. மறைமுகமாக அவர்களுடைய கடின உள்ளத்தை அவர்களுக்கு உணர்த்துகின்றார் இயேசு.

கடவுள் நம் வாழ்வில் திருப்பங்களை ஏற்படுத்துகின்றார். மௌனமாக இருக்கிறவர் பேசுவதும், பேசிக்கொண்டிருக்கிறவர் மௌனம் காப்பதும் அவர் ஏற்படுத்தும் திருப்பங்களாக இருக்கின்றன. கடவுள் நம் வாழ்வில் ஆற்றும் செயல்களை அறியவும், அவர்மேல் நம்பிக்கை கொள்ளவும் உள்ள தடைகள் எவை?


Saturday, December 10, 2022

மகிழ்ச்சி மெசியாவின் செயல்

திருவருகைக்காலம் மூன்றாம் ஞாயிறு

I. எசாயா 35:1-6,10 II. யாக்கோபு 5:7-10 III. மத்தேயு 11:2-11

மகிழ்ச்சி மெசியாவின் செயல்

திருவருகைக்காலத்தின் மூன்றாம் ஞாயிற்றை 'கௌதேத்தே தொமெனிக்கே' ('மகிழ்ச்சி ஞாயிறு') என அழைக்கின்றோம். இன்றைய திருப்பலியின் வருகைப் பல்லவியும், முதல் வாசகமும் 'அகமகிழ்தல்' என்னும் சொல்லுடன் தொடங்குகின்றன. 

மகிழ்ச்சியின் வரையறை என்ன? 'சிரிப்பு,' 'இன்பம்,' 'சந்தோஷம்,' 'நிறைவு,' 'உடல்நலம்' என நாம் பல வார்த்தைகளைச் சொன்னாலும், எந்த வார்த்தையும் மகிழ்ச்சி என்ற உணர்வை முழுமையாகப் பிரதிபலிப்பதில்லை. மகிழ்ச்சி என்பது ஒரு 'ரெலடிவ்'  (தனிநபர்சார் உணர்வு) எமோஷன் என்பதில் ஐயமில்லை. அதாவது, அது தனிநபர் சார்ந்தது. எல்லாருக்கும் பொதுவான மகிழ்ச்சி என்று ஒன்றை வரையறுக்க முடியாது. மகிழ்ச்சி உள்ளிருந்து வருகிறதா? அல்லது வெளியிலிருந்து வருகிறதா? 'உள்ளிருந்து வருகிறது' என்றால், சில நேரங்களில் நம் மனம் எந்தக் காரணமும் இல்லாமல் சோர்ந்திருக்கக் காரணம் என்ன? 'வெளியிலிருந்து வருகிறது' என்றால், மகிழ்ச்சி நிபந்தனைக்குட்பட்டதாகிவிடுமே! 

மகிழ்ச்சியை வரையறை செய்வதில் இவ்வளவு சிக்கல்கள் இருந்தாலும் மகிழ்ச்சி என்பது நாம் அனைவரும் அன்றாடம் அனுபவிக்கின்ற ஓர் உன்னத உணர்வு. நாம் உண்பது, உறங்குவது, படிப்பது, பயணம் செய்வது, பணி செய்வது, உறவாடுவது என எல்லாவற்றின் இலக்கு ஒன்றே ஒன்றுதான்: 'மகிழ்ச்சியாக இருப்பதற்கு!' யாரும் துன்பப்பட விரும்புவதில்லை. துன்புறவேண்டும் என்பதற்காக எதையும் செய்வதில்லை. அலெக்ஸாண்டர் தெ கிரேட் உலகையே தன் கைக்குள் அடக்கிவிடத் துணிந்ததும் மகிழ்ச்சிக்காகவே! புத்தர் அரண்மனையை விட்டு வெளியேறி போதி மரத்தடியில் அமர்ந்ததும் மகிழ்ச்சிக்காகவே! இவர்களின் மகிழ்ச்சியில் ஒன்று உயர்ந்தது மற்றொன்று தாழ்ந்தது என்று சொல்லிவிட முடியாது. மகிழ்ச்சியும் துன்பமும் மாறி மாறி எழுகின்ற உணர்வுகளாக இருக்கின்றன என்பதே நம் வாழ்வியல் எதார்த்தம். 

மெசியாவின் செயல்களைக் கேள்வியுறுவதும், ஏற்பதும், செய்வதும் மகிழ்ச்சி என்று மகிழ்ச்சிக்கான புதிய வாயில்களைத் திறக்கின்றன இன்றைய வாசகங்கள்.

இன்றைய முதல் வாசகத்தின் (காண். எசா 35:1-6,10) பின்புலம் மிகவும் சோகமானது. கிமு 7ஆம் நூற்றாண்டின் இறுதியில் இஸ்ரயேலும் எருசலேமும் அசீரியாவால் மிகுந்த அச்சுறுத்தலுக்கு ஆளாகின. மக்கள் அடிமைப்படுத்தப்பட்டார்கள். கோயில் தீட்டாக்கப்பட்டது. 'எல்லாம் முடிந்தது' என்று நினைத்த மக்களுக்கு, 'முடியவில்லை, விடிகிறது' என்று இறைவாக்குரைக்கின்றார் எசாயா. முதலில், ஒட்டுமொத்த படைப்பும் புத்துணர்ச்சி பெறுகிறது - 'பாலைநிலமும் பாழ்வெளியும் அகமகிழ்கிறது,' 'பொட்டல்நிலம் அக்களிக்கிறது,' 'லீலிபோல் பூத்துக்குலுங்கி மகிழ்ந்து பாடிக் களிப்படைகிறது' - படைத்தவரின் அரவணைப்பை படைப்பு பெற்றுக்கொள்கிறது. தொடர்ந்து, 'அஞ்சாதீர்கள்' என்று செய்தி அனைத்து மக்களுக்கும் வழங்கப்படுகிறது. மூன்றாவதாக, நான்கு வகை நோய்களிலிருந்து மக்கள் விடுபடுகிறார்கள் - கண்பார்வையற்ற நிலை, காதுகேளாத நிலை, கால்கள் முடமான நிலை, மற்றும் பேச்சற்ற நிலை. அக்காலத்தில் இந்நோய்களுக்குக் காரணம் ஒருவர் செய்த பாவம் என்று கருதப்பட்டது. ஆனால், அவர்களை நோய்களிலிருந்து விடுவிப்பதன் வழியாக கடவுள் அவர்களின் பாவங்களை எல்லாம் மன்னிக்கிறவராக முன்வைக்கப்படுகிறார்.

பகைவரின் படையெடுப்பால் படைப்பும், மக்களும் அனுபவித்த துன்பங்கள் மறைந்து மகிழ்ச்சி பிறக்கிறது. கிறிஸ்தவ வாசிப்பில் இப்பகுதி மெசியாவின் செயல்கள் முன்னறிவிப்பு பகுதி என அழைக்கப்படுகின்றது. 

இன்றைய இரண்;டாம் வாசகம் (காண். யாக் 5:7-10) யாக்கோபின் திருமுகத்திலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. யாக்கோபு இத்திருமடலை எழுதுகின்ற நேரத்தில் உலகின் முடிவு மற்றும் இரண்டாம் வருகையை மையமாகக் கொண்டு 'நிறைவுகாலம்' ('பரூசியா') பற்றிய எதிர்பார்ப்பு மேலோங்கி இருந்தது. மக்கள் பொறுமையின்றி இருந்தனர். அதாவது, ஒரு வகையான அவசரம் அனைவரையும் பற்றிக்கொண்டது. எல்லாம் அழியப் போகிறது என்னும் அச்சம், அந்த அச்சத்தோடு இணைந்த பதற்றம் மற்றும் கவலையினால் ஒருவர் மற்றவரிடம் கொண்டுள்ள உறவும் பாதிப்புக்குள்ளாகிறது. போட்டி மனப்பான்மையும் முணுமுணுத்தலும் எழுகின்றது. இதன் பின்புலத்தில்தான் அவரின் அறிவுரை அமைகின்றது. இவர்களுக்கு அறிவுறுத்துகின்ற யாக்கோபு, 'பயிரிடுபவரைப் போல பொறுமையாகவும்,' 'ஒருவர் மற்றவரிடம் முறையீடு இன்றியும்' இருக்குமாறு அறிவுறுத்துகின்றார். 

நற்செய்தி வாசகம் (காண். மத் 11:2-11) இரண்டு பகுதிகளாக அமைந்துள்ளது: முதல் பகுதியில், சிறையிடப்பட்டுள்ள திருமுழுக்கு யோவான், மெசியாவின் செயல்களைப் பற்றிக் கேள்வியுற்று, 'வரவிருப்பவர் நீர்தாமோ?' என்று இயேசுவிடம் கேட்குமாறு தம் சீடர்களை அனுப்புகிறார். இரண்டாம் பகுதியில், திருமுழுக்கு யோவானுக்குப் புகழாரம் சூட்டுகிறார் இயேசு. இயேசுவின் சமகாலத்தில் மெசியா பற்றிய எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. மெசியா என்றால் அரசராக அல்லது அருள்பணியாளராக வந்து தங்களை எதிரிகளின் கைகளிலிருந்து விடுவிப்பார் என்று நம்பினர் மக்கள். இந்த நம்பிக்கை யோவானுக்கும் இருந்தது. ஆனால், இயேசு அப்படி எந்த ஒரு முயற்சியையும் எடுக்காமல் இருப்பதைப் பார்த்து, சற்றே குழப்பத்துடன் சீடர்களை அனுப்புகிறார் யோவான். இயேசுவின் மெசியா புரிதல் முற்றிலும் வித்தியாசமாக இருந்தது. இயேசுவைப் பொருத்தவரையில் மெசியாவின் செயல்கள் என்பவை தனிநபர் வாழ்வில் நடந்தேறுபவை: 'பார்வையற்றோர் பார்வை பெறுகின்றனர், கால் ஊனமுற்றோர் நடக்கின்றனர், தொழுநோயாளர் நலமடைகின்றனர், காதுகேளாதோர் கேட்கின்றனர், இறந்தோர் உயிர்பெற்று எழுகின்றனர், ஏழைகளுக்கு நற்செய்தி அறிவிக்கப்படுகிறது' என்று மெசியாவின் வருகையின் மாற்று அடையாளங்களைச் சொல்லி அனுப்புகின்றார். 

மூன்று வாசகங்களிலும் துன்பம் பின்புலமாக நிற்கிறது: (அ) முதல் வாசகத்தில், இஸ்ரயேல் மக்கள் அசீரியாவின் அடிமைத்தனத்தில் இருக்கிறார்கள்ளூ (ஆ) இரண்டாம் வாசகத்தில், எதிர்காலம் பற்றிய அச்சம் யாக்கோபின் திருஅவைக்குத் துன்பம் தருகிறதுளூ (இ) நற்செய்தி வாசகத்தில், திருமுழுக்கு யோவான் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 

இருந்தாலும், அடிமைத்தனம், அச்சம், சிறையடைப்பு என்றும் மூன்று துன்ப நிலையில் இருந்தவர்களும் மெசியாவின் செயல்களைக் கேள்வியுறுகிறார்கள், காண்கிறார்கள், அனுபவிக்கிறார்கள்.

இன்று நம் வாழ்வில் நாம் அனுபவிக்கும் துன்பங்களையும் மேற்காணும் துன்ப நிலைகளோடு பொருத்திப் பார்க்க இயலும். பழக்கங்கள் மற்றும் மனிதர்களுக்கு அடிமையாக இருக்கின்ற நிலையில் நாம் துன்பம் அனுபவிக்கின்றோம். எதிர்காலம் பற்றிய அதீத அச்சமும் மற்ற பயங்களும் நமக்குத் துன்பம் தருகின்றன. நம் குறுகிய எண்ணங்களில் நாம் சிறைப்பட்டுக் கிடக்கும்போதும் துன்பப்படுகின்றோம்.

விளைவு, மெசியா நம் வாழ்வில் ஆற்றும் செயல்களைக் காண இயலாததோடு, அவற்றைச் செய்யவும் நாம் துணிவதில்லை. துன்பம் நீக்குதலே மெசியாவின் செயல்.

மெசியாவின் செயல்களை நாம் காணவும், அனுபவிக்கவும், செய்யவும், இவ்வாறாக, மகிழ்ச்சியைக் கண்டுகொள்ளவும் நாம் செய்ய வேண்டியது என்ன?

(அ) உள்ளத்தில் உறுதி

'தளர்ந்துபோன கைகளைத் திடப்படுத்துங்கள். தள்ளாடும் முழங்கால்களை உறுதிப்படுத்துங்கள்' என அழைப்பு விடுக்கின்றார் எசாயா. உள்ளத்தில் உறுதி குலையும்போது நம் உடலின் உறுதியும் குலைந்துபோகிறது. நம் தனிநபர் வாழ்வில், குடும்பத்தில், நட்பு வட்டத்தில், சமூகத்தில் உள்ளத்தில் உறுதியற்று வாழ்பவர்கள் ஏராளம். தவறான முடிவுகளாலும், கோபம், குற்றவுணர்வு, பயம், தாழ்வு மனப்பான்மை, ஒப்பீடு, பொறாமை போன்ற காரணங்களால் உள்ளம் உறுதியற்றுக் கிடக்கும் நபர்களுக்கு ஊக்கம் தருவது மெசியாவின் செயல்.

(ஆ) பொறுமை 

நம் வாழ்வில் நம்மை அறியாமல் ஏதோ ஓர் அவசரம் நம்மைப் பற்றிக்கொள்ள அனுமதிக்கிறோம். எதையாவது செய்துகொண்டே வேண்டும் என்ற நிர்பந்தமும் நம்மை அழுத்துகிறது. இந்த இடத்தில் யாக்கோபு தருகின்ற உருவகத்தின் பொருளை உணர்ந்துகொள்வோம். பயிரிடுபவர் கொண்டிருக்கும் பொறுமையை நாம் கொண்டிருக்க வேண்டும். நிலத்தில் விதைகளை இட்ட விவசாயி விதை தானாக வளரும் வரை பொறுமையுடன் இருக்க வேண்டும். நிலத்தின் ஈரப்பதம், சத்து, வெளிப்புற காரணிகள் ஆகியவற்றைப் பொருத்து வளர்ச்சி வேகமாகவோ தாமதாமாகவோ அமையும். விதை முளையிடும் வரை பொறுமை காப்பதை விடுத்து, எதையாவது செய்துகொண்டே இருக்க வேண்டும் என்பதற்காக, நிலத்தைத் தோண்டித் தோண்டி விதையைப் பார்த்துக்கொண்டிருந்தால் விதை முளைக்காது. அவசரம் குறைத்து பொறுமை ஏற்றால்தான் நம் வாழ்வில் மெசியாவின் செயல் நடந்தேறுதலைக் காண முடியும். நாமும் அச்செயலைச் செய்ய முடியும்.

(இ) சிறைப்படாத உள்ளம்

யோவானின் உடல் சிறைப்பட்டிருந்தாலும் அவருடைய உள்ளம் என்னவோ கட்டின்மையோடே இருக்கிறது. தன்னைச் சுற்றி நடக்கும் செயல்கள் பற்றிய அவருடைய அறிவு நமக்கு வியப்பளிக்கிறது. மெசியாவின் செயல்கள் ஆலயங்களில் அல்ல, சிறைக்கூடங்களின் தனிமையில் விரக்தியில் கண்டுகொள்ளப்படுகின்றன. மெசியாவின் செயல்களைக் கேள்வியுற்ற யோவான் உடனடியாகச் செயலாற்றுகின்றார். இவ்வாறாக, மெசியாவின் செயல்கள் தொடர்ந்து நடந்தேறுவதற்கான தளத்தை ஏற்படுத்திக் கொடுக்கின்றார். யோவானின் பரந்த உள்ளம் மகிழ்ச்சிக்கான முக்கியக் கூறு.

இன்றைய பதிலுரைப் பாடலில், திருப்பாடல் ஆசிரியர், 'சீயோனே! உன் கடவுள் என்றென்றும் எல்லாத் தலைமுறைகளுக்கும் ஆட்சி செய்கின்றார்' (146:10) என்று பாடுகின்றார். மெசியாவின் செயல்கள் இஸ்ரயேல் மக்களுக்கும் இயேசுவின் சமகாலத்தவருக்கும் மட்டும் உரியவை அல்ல. அவை இன்றும் நம்மில் நம் வழியாக நடந்தேறுகின்றன.

அவரின் செயல்கள் நம் வாழ்வில் மகிழ்ச்சி தருகின்றன.

அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்