Tuesday, August 30, 2022

இலக்குத் தெளிவு

இன்றைய (31 ஆகஸ்ட் 2022) நற்செய்தி (லூக்கா 4:38-44)

இலக்குத் தெளிவு

இயேசு கப்பர்நகுமில் உள்ள தொழுகைக்கூடத்தில் போதனையை முடித்துவிட்டு சீமோனின் வீட்டிற்கு வருகின்றார். தொடர்ந்து மூன்று நிகழ்வுகள் நடக்கின்றன: ஒன்று, கடுங்காய்ச்சலால் துன்புற்ற சீமோன் பேதுருவின் மாமியாருக்கு நலம் தருகின்றார். இரண்டு, கதிரவன் மறையும் நேரத்தில் ஊரின் நடுவே நோயுற்றோர் பலருக்கு நலம் தருகின்றார், பேய்களை ஓட்டுகின்றார். மூன்று, தனிமையான இடத்திற்குச் சென்று இறைவேண்டல் செய்கின்றார்.

இயேசுவின் இப்பணிகளைக் கண்ட ஊரார் அவரைத் தடுத்து நிறுத்தப் பார்க்கின்றனர். இயேசுவோ தான் மற்ற ஊர்களிலும் நற்செய்தி அறிவிக்க வேண்டும் என்று சொல்லித் தன் வழி நடக்கின்றார்.

மூன்று பாடங்களை நமக்கு இயேசு தருகின்றார்:

(அ) தன் பணி ஒருபோதும் தன் பாதுகாப்பு வளையமாக மாறிவிட இயேசு விரும்பவில்லை. இன்று நாம் செய்யும் பணிகள், நம் ஊர் மற்றும் உறவுகள் நம் பாதுகாப்பு வளையங்களாக இருக்கின்றனவா? அவற்றிலிருந்து வெளியேறுவது எப்படி?

(ஆ) 'தங்கி விடும்' என்னும் சோதனை! இயேசுவை ஊரார் சோதிக்கின்றனர். 'இங்கேயே தங்கி விடும்!' என்று சொல்லும் அவர்களே, 'எங்களை விட்டு அகலும்!' என்று சொல்வார்கள் என்பதை இயேசு முன்னுணர்ந்தார். தங்குவிடுதல் என்பது தேக்கநிலை என்பதை இயேசு அறிந்திருந்ததால் அங்கிருந்து நகர முயற்சி செய்கின்றார். இன்று நாம் எவற்றில் எல்லாம் தேக்க நிலை அடைந்துள்ளோம்?

(இ) 'மற்ற ஊர்களிலும் இறையாட்சி' - இயேசு தன் இலக்கையும் அதற்கான பாதையையும் தெளிவாக அறிந்திருந்தார். வழிப்போக்கர் போல தன் வழியே நடக்கின்றார். தோமா நற்செய்தி வ. 42இல், இயேசு தன் சீடர்களிடம் 'வழிப்போக்கர் போல இருங்கள்!' என அறிவுறுத்துகின்றார். எதையும் பற்றிக்கொள்ளாமல், சுமைகளைக் குறைத்துக்கொண்டே தன் வழியே செல்பவரே வழிப்போக்கர்.

முதல் வாசகத்தில் (காண். 1 கொரி 3:1-9), பவுல் கொரிந்து நகரத் திருஅவையில் விளங்கிய பிரிவினையைக் கடிந்துகொள்கின்றார். அவர்கள் ஒவ்வொரு திருத்தூதரையும் பற்றிக்கொண்டிருந்தனர். நற்செய்தியைப் பற்றிக்கொள்வதை விடுத்து, நற்செய்தி அறிவித்தவரைப் பற்றிக்கொண்டு, அவரின் பொருட்டு தாங்கள் பிளவுபட்டுக் கிடந்தனர். பற்றுகள் விடுத்துப் பயணம் செய்தலே நலம் எனக் கற்பிக்கின்றார் பவுல்.


Monday, August 29, 2022

ஊரெல்லாம் பேச்சு

இன்றைய (30 ஆகஸ்ட் 2022) நற்செய்தி (லூக் 4:31-37)

ஊரெல்லாம் பேச்சு

இன்றைய நற்செய்தியில் நான்கு பேர் பேசுகின்றனர். முதலில் இயேசு பேசுகின்றார். இயேசுவின் பேச்சைக் கேட்டு மக்கள் வியப்படைகின்றனர். இரண்டாவதாக, தொழுகைக் கூடத்திலிருந்த தீய ஆவி பிடித்தவர் பேசுகிறார். இயேசு தீய ஆவியை விரட்டுகின்றார். மூன்றாவதாக, இயேசுவின் செயலைக் கண்ட மக்கள் வியந்து பேசுகின்றனர். இறுதியாக, ஊரே இயேசுவைப் பற்றிப் பேசுகின்றது.

மேற்காணும் நால்வரில் இயேசுவையும் அவருடைய பேச்சையும் நம் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம்.

இயேசு இரு நிலைகளில் பேசுகின்றார். அல்லது அவருடைய போதனை இரு நிலைகளில் இருக்கின்றது. முதலில், அவர் தொழுகைக் கூடத்தில் போதிக்கின்றார். இரண்டாவதாக, 'வாயை மூடு! இவரை விட்டு வெளியே போ!' எனத் தீய ஆவியிடம் பேச, தீய ஆவி உடனடியாக வெளியேறுகின்றது. இங்கே, இயேசுவின் பேச்சு செயலாற்றுகிறது. செயலாக மாறுகின்றது. 

'வாயை மூடு!' என்று தீய ஆவிக்குக் கட்டளையிடுகின்றார் இயேசு. இதைக் கேட்ட ஊரே தன் வாயைத் திறந்துகொள்கின்றது.

நேர்முகமான தாக்கத்தை ஏற்படுத்தும் சொற்களை இயேசு பேசுகின்றார்.

இதையே இன்று நம் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம்.

இன்று நாம் நிறையச் சொற்களைப் பேசுகின்றோம். நிறைய எழுத்துகளை குறுஞ்செய்திகளாக, மின்னஞ்சல்களாகப் பகிர்ந்துகொள்கின்றோம். இச்சொற்கள் முதலில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றனவா? நம் சொற்கள் ஏற்படுத்தும் தாக்கம் நேர்முகமாக இருக்கின்றதா? அல்லது எதிர்மறையாக இருக்கின்றதா?

இயேசுவின் சமகாலத்திலிருந்த பேயோட்டிகள் கடவுளின் பெயரால் அல்லது தீய ஆவியின் தலைவன் பெயரால் பேய்களை ஓட்டினர். ஆனால், இயேசு தன் சொந்த அதிகாரத்தாலேயே ஓட்டுகின்றார். இயேசுவின் அதிகாரம் அவருடைய கடவுள்நிலையிலிருந்து வந்தாலும், இயேசுவிடம் சொல்லுக்கும் செயலுக்குமான எந்த முரணும் இல்லை. இயேசுவின் இருத்தலும் தீய ஆவியின் இருத்தலும் ஒரே இடத்தில் சாத்தியமல்ல. 

இன்றைய முதல் வாசகத்தில் மனித இயல்பு மற்றும் ஆவிக்குரிய இயல்பு பற்றிப் பேசுகின்ற புனித பவுல், மனித இயல்பு மட்டுமே கொண்டிருப்பவரால் ஆவிக்குரியதை அறிந்து ஏற்றுக்கொள்ள இயலாது என மொழிகின்றார். 

நம்மில் செயலாற்றுவது எந்த இயல்பு?

இன்றைய நாளில் நாம் பேசும் சொற்கள் நேர்முகமான தாக்கத்தை மற்றவர்கள்மேல் ஏற்படுத்த முயற்சி செய்வோம். நம் நடுவே இருக்கின்ற தீமையைக் கடிந்துகொள்ளும் பக்குவம் பெறுவோம். தீய ஆவி தன்னைப் பற்றிய நம்பிக்கை அறிக்கை செய்ததால் இயேசு அதைப் பாராட்டி மகிழவில்லை. தீய ஆவியின் நம்பிக்கை அறிக்கை வெற்று அறிக்கை என்பதை உணர்ந்திருந்தார் அவர். மேலும், தூய ஆவிக்குரிய இயல்பில் வாழ்வதற்கான உறுதி ஏற்போம்.


Sunday, August 28, 2022

திருமுழுக்கு யோவானின் பாடுகள்



இன்றைய (29 ஆகஸ்ட் 2022) திருநாள்

திருமுழுக்கு யோவானின் பாடுகள்

அண்மையில் புதிய ஏற்பாட்டு கலிலேயப் பகுதியில் பெண்கள் அணியும் ஜிமிக்கி ஒன்றைக் கண்டுபிடித்துள்ளார்கள். இது ஏறக்குறைய இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் புழக்கத்தில் இருந்தது என்று சொல்லப்படுகின்றது.

ஏரோதியாவின் மகள் சலோமியின் காதுகளில் இருந்த இரண்டு ஜிமிக்கிகளில் ஒன்று அவர் நடனமாடும் போது தவறி விழுந்து இன்று நம் கைகளில் கிடைத்திருக்கிறதோ! இருக்கலாம்!

இன்று திருமுழுக்கு யோவானின் பாடுகள் திருநாளைக் கொண்டாடுகிறோம். திருமுழுக்கு யோவான் ஏரோது அரசனால் கொல்லப்படும் நிலையே அவர் அனுபவித்த பாடு.

இன்றைய நற்செய்தி வாசகம் (காண். மாற் 6:17-29) நாம் அதிகமாக வாசிக்கக் கேட்ட ஒன்றுதான்: ஏரோது, ஏரோதியா, சலோமி, யோவான்.

இந்த நிகழ்வு ஒரு வாழ்வியல் உருவகம் என்றே கருதுகிறேன். இந்நிகழ்வில் யோவான் மட்டுமல்ல, ஒட்டு மொத்த நான்கு பேருமே பாடுகள் பாடுகின்றனர். இப்பாடுகளை நாமும் நம் வாழ்வில் படுகின்றோம். இந்நால்வரின் துன்பங்கள் நம் துன்பங்களாகவும் இருக்கின்றன.

1. இரண்டு நல்லவற்றில் ஒன்றைத் தேர்ந்தெடுத்தலின் துன்பம்

நமக்கு வாழ்க்கையில ஒரு நல்லது ஒரு கெட்டது என்று சொல்லி ஒன்றைத் தேர்ந்தெடுக்கச் சொன்னால் கண்ணை மூடிக்கொண்டு அந்த ஒரு நல்லதைத் தேர்ந்தெடுத்து விடுவோம். ஒரு தட்டில் உணவும் இன்னொரு தட்டில் கல்லும் வைத்தால் நாம் உண்பதற்கு உணவைத் தேர்ந்துகொள்வோம். ஆனால், வாழ்க்கையின் தெளிவுகள் எல்லாமே அப்படி எளிதாக அமைந்துவிடுவதில்லை. இரண்டும் நல்லவையாக இருந்தால் அல்லது நல்லவை மாதிரி தெரிந்தால் என்ன செய்வது? தன் சகோதரனுடைய மனைவி ஏரோதியாவை வைத்திருப்பது நல்லது அல்ல என்று ஏரோதுக்குத் தெரிகிறது. ஆகையால் யோவானின் வார்த்தைகளுக்குச் செவிமடுக்கிறார். அதே நேரத்தில் ஏரோதியா தன்னோடு இருப்பதும் நல்லது என்றும், தான் அவள்மேல் கொள்ளும் காதல் உண்மை என்றும் தெரிகிறது. தொடர்ந்து, திருமுழுக்கு யோவான் வாழ்வதும் நல்லது என்று நினைக்கிறார். விருந்தினர்களைத் திருப்திப்படுத்துவதும் நல்லது என நினைக்கிறார். இரண்டு நல்லவைகளில் நாம் எந்த ஒன்றை எடுத்தாலும் அது நல்லது என்கிறது அறநெறியியல். ஆனால், ஏரோதின் தெரிவு யோவானின் உயிரை விலையாகக் கேட்கிறது.

2. கண்களில் விழும் தூசி தரும் துன்பம்

ஒரு குழுமத்தில் இருக்கிறோம் என வைத்துக்கொள்வோம். அல்லது ஒரு பள்ளிக்கூடத்தில் நிறையப் பேரோடு வேலை செய்கிறோம். ஐம்பது பேர் இருக்கின்ற அந்த இடத்தில் ஒருவர் நம்மை ஏதோ சொல்லிக் காயப்படுத்திவிட்டார். அந்த வார்த்தை நம் கண்களில் ஒரு தூசி போல விழுந்துவிடுகிறது. நாம் கசக்கினால் கண்கள் கலங்கும். கசக்காமல் விட்டால் தூசி வெளியே வராது. கண்களை உறுத்திக்கொண்டே இருக்கும். மெல்லவும் முடியாமல் துப்பவும் முடியாமல் இருக்கும் துன்பங்கள் இவை. ஏரோதியாவின் கண்களில் விழுந்த தூசிதான் திருமுழுக்கு யோவான். 'என் கணவர் பிலிப்பை விட்டுவிட்டு நான் ஏரோதிடம் கூடி வாழ்வதால் எனக்கும் பிரச்சினையில்லை, என் முன்னாள் கணவருக்கும் பிரச்சினையில்லை, என் இந்நாள் கணவருக்கும் பிரச்சினையில்லை, என் குடும்பத்தில், சமூகத்தில் யாருக்கும் பிரச்சினையில்லை. உனக்கு என்ன பிரச்சினை?' என்று அன்றாடம் யோவானைப் பார்க்கும்போதெல்லாம் தன் மனத்துள் கேட்டுக்கொள்கிறாள் ஏரோது. நேரம் வந்தவுடன் அதைச் சரியாகப் பயன்படுத்தி தூசியை அகற்றி விடுகிறாள். ஆனால், பாவம்! தூசியை அகற்றும்போது கண்ணையே குத்திக்கொள்கிறாள்.

3. 'நான் என்ன செய்வது?' என்று கேட்கும் துன்பம்

யாராவது நண்பரை டீக்கடைக்குக் கூட்டிச் சென்று, 'என்ன வேண்டும்?' என்று கேளுங்கள். அவர் அங்கிருக்கும் போர்டைப் பார்ப்பார், அடுத்தவர் குடிக்கும் குவளையைப் பார்ப்பார், அல்லது 'நீயே ஏதாச்சும் சொல்லு' என்பார். 'எனக்கு டீ பிடிக்குமா? காஃபி பிடிக்குமா?' என்றே பலருக்குத் தெரிவதில்லை. தங்களுக்கு என்ன வேண்டும், தாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று தெரியாமல் இருப்பவர்கள் மிகவும் பரிதாபத்துற்குரியவர்கள். சலோமி அப்படித்தான் இருக்கிறாள். அவளுக்கு என்ன வேண்டும் என்பது அவளுக்குத் தெரியவில்லை. நடனம் ஆடத் தெரிந்த அவளுக்கு நாட்டின் பாதியை ஆளத் தெரியாதுதான். ஆனால், அதுவே அவளுக்குத் தெரியவில்லை. தாயிடம் ஓடி, 'நான் என்ன கேட்கலாம்?' எனக் கேட்கிறாள். இந்த நேரத்தில் எனக்கு என்ன வேண்டும்? என் வாழ்விலிருந்து எனக்கு என்ன வேண்டும்? நான் செய்யவிருப்பது என்ன? என்று தெளிவாக இருப்பவர்களே இத்துன்பத்திலிருந்து தப்ப முடியும்.

4. நீதியா? சமரசமா? என எழும் துன்பம்

என்னிடம் ஒருவர் வேலை செய்கிறார் என வைத்துக்கொள்வோம். அவருடைய வேலைக்கு நான் தர வேண்டியது ஐந்நூறு ரூபாய். ஆனால், அவர் என்னிடம் முன்னால் நிறைய உதவிகள் பெற்றிருக்கிறார். நான் என்ன செய்கிறேன்? அதை மனத்தில் வைத்துக்கொண்டு முந்நூறு ரூபாய் கொடுக்கிறேன். அப்படிச் செய்யும்போது நான் நீதியோடு சமரசம் செய்துகொள்கிறேன். 'அரசன் செய்யும் தவற்றைச் சுட்டிக்காட்ட வேண்டும்' என்ற நீதியின் வேட்கை ஒரு பக்கம். 'யார் என்ன செய்தால் என்ன? இதில் என்ன தவறு?' என்ற மனச்சான்றைச் சமரசம் செய்து கொள்ளும் ஆசை ஒரு பக்கம். இந்த எண்ணம் ஒருவேளை யோவானுக்கும் வந்திருக்கலாம். ஆனால், சமரசம் செய்துகொள்ள அவர் மறுக்கிறார்.

மேற்காணும் நான்கு துன்பங்களும் நாம் அனுபவிக்கும் வாழ்வியல் பாடுகள். பாடுகளில் வெல்வது என்பது ஒரு காலை ஊன்றி இருப்பது. இரண்டு படகுகளில் கால் வைக்கும் எவரும் தன் பயணத்தை முடிப்பதில்லை. இரண்டு மான்களைத் துரத்தும் எவரும் ஒரு மானையும் பிடிப்பதில்லை. 


Friday, August 26, 2022

சிறியவற்றில் நம்பிக்கைக்குரியவராய்

இன்றைய (27 ஆகஸ்ட் 2022) நற்செய்தி (மத் 25:14-30)

சிறியவற்றில் நம்பிக்கைக்குரியவராய்

'விழிப்பாயிருந்து உன் இதயத்தைக் காவல் செய். ஏனெனில், அதனின்று பிறப்பவை உன் வாழ்க்கையின் போக்கை உறுதி செய்யும்' (நீமொ 4:23) என்னும் நீதிமொழிகள் நூல் ஆசிரியரின் சொற்கள் இன்றைய நற்செய்தியில் நாம் காணும் தாலந்து எடுத்துக்காட்டைப் புரிந்துகொள்ள உதவுகின்றன. முதலில் இவரின் சொற்களைப் புரிந்துகொள்வோம். முதல் ஏற்பாட்டுக் காலத்தில், 'இதயம்' என்பது 'உணர்வுகள் தங்கும் இடத்தை' குறித்தது. அதாவது, இன்று நாம் மனம் அல்லது மூளை அல்லது எண்ணம் என்று சொல்வதை முன்னோர் 'இதயம்' என்று குறிப்பிட்டனர். இதன் பின்புலத்தில்தான் 'அன்பு' அல்லது 'காதல்' என்னும் உணர்வைக் குறிக்க 'இதயம்' என்ற குறியீடு பயன்படுத்தப்படுகின்றது. ஆனால், மருத்துவ உலகைப் பொருத்தவரையில் 'இதயம்' என்பது இரத்தத்தை சுத்திகரிக்கும் மற்றும் சுழற்சி செய்யும் இடம். நம் உள்ளத்தில் எழும் எண்ணங்களைக் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனச் சொல்கின்றார் ஆசிரியர். நம் எண்ணங்களை இரு குழுக்களில் அடக்கலாம். சில நேரங்களில் எண்ணங்கள் தாமாகவே உருவாகின்றன. எடுத்துக்காட்டாக, சமையல் செய்துகொண்டிருக்கும் நேரத்தில் திடீரென நாம் காலையில் துணிகளைக் காயப் போட்டதோ, அல்லது கடந்த மாதம் தவணை செலுத்த மறந்ததோ, அல்லது ஏதோ ஒரு புதிய யோசனையோ எழுகின்றது. இதை உளவியல் 'விருப்ப நிலை எண்ணம்' என்கிறது. இவற்றை நாம் கட்டுப்படுத்த இயலாது. விருப்ப நிலை எண்ணம் மாறிக்கொண்டே இருக்கும். இது நம் உள்ளுணர்வின் வெளிப்பாடாகவும் இருக்கலாம். இரண்டாம் வகை எண்ணம், நாமாகவே விரும்பி நினைப்பது. அல்லது சிந்திப்பது. எடுத்துக்காட்டாக, இந்த மறையுரைச் சிந்தனையில் நான் என்ன எழுத வேண்டும் என்பதை நானாகவே யோசித்து, சிந்தித்து, மனதில் எண்ணங்களை உருவாக்குவது. நீதிமொழிகள் நூல் ஆசிரியர், இரண்டாம் வகை எண்ணங்களைக் குறித்தே கவனமாக இருக்குமாறு நம்மை எச்சரிக்கின்றார். ஏனெனில், இவையே செயல்களாக மாறி நம் வாழ்க்கையின் போக்கை மாற்றுகின்றன.

தூர நாட்டிற்குப் பயணம் செய்யும் ஒருவர் தன் பணியாளர்களிடம் பொறுப்புகளை ஒப்படைத்துவிட்டுச் செல்வது, நெடும் பயணம் மேற்கொள்ளும் அரசர் தன் அமைச்சர்கள் மற்றும் பணியாளர்களிடம் பொறுப்புகளை ஒப்படைத்து அவர்களைச் சோதிப்பதும் எல்லா இடங்களிலும் காணக் கூடிய ஓர் எதார்த்தம். இந்த எதார்த்தத்தின் பின்புலத்தில் விண்ணரசு பற்றிய கருத்துரு ஒன்றை முன்மொழிகின்றார் இயேசு.

நிகழ்வின்படி ஒருவர் தம் பணியாளர்களிடம் அவரவர் திறமைக்கு ஏற்ப ஐந்து, இரண்டு, ஒன்று என்று தாலந்தை வழங்குகின்றார். இங்கே தலைவர் தம் பணியாளர்களின் திறமையை எப்படி ஆராய்ந்து பார்த்தார் என்பதும், ஏன் அவ்வாறு செய்தார் என்பதும் கொடுக்கப்படவில்லை. தலைவர் தான் விரும்பியதைச் செய்கின்றார். சில நேரங்களில் எல்லாருக்கும் ஒரு தெனாரியம் கொடுப்பார். சில நேரங்களில் தகுதிக்கு ஏற்பக் கொடுப்பார். அவர் தலைவர்! பணம் அவருடையது! அவ்வளவுதான்!

ஐந்து மற்றும் இரண்டு தாலந்து பெற்றவர்கள் வணிகம் செய்யப் புறப்படுகின்றனர். ஒரு தாலந்து பெற்றவரோ அதைப் புதைத்து வைக்க நிலத்தைத் தேடிப் போகின்றார். மற்றவர்களின் தாலந்துகள் நிலத்துக்கு மேலே இருக்கின்றன. இவருடைய தாலந்தோ நிலத்துக்குக் கீழே இருக்கின்றது. தன் தலைவர் தனக்கு அளித்ததைப் பார்க்கக் கூட விரும்பவில்லை இவர். தன் தலைவர் தன் திறமையைக் குறைத்து மதிப்பிட்டார் என்னும் கோபமா? அல்லது மற்றவர்களோடு தன்னை ஒப்பிட்டுப் பார்த்து, 'இந்த ஒரு தாலந்தை வைத்து ஒன்றும் செய்ய முடியாது' என்று அவர் அடைந்த மனச்சோர்வா? இவருடைய செயலின் காரணம் நமக்கு இப்போது தெரியவில்லை. பின்னரே தெரிகிறது.

திரும்பி வந்த தலைவர், தன் பணியாளர்களிடம் கணக்குக் கேட்கின்றார். ஐந்து மற்றும் இரண்டு பெற்றவர்கள் அவற்றை இரு மடங்காகப் பெருக்குகின்றனர். தலைவர் அவர்களிடம், 'நன்று. நம்பிக்கைக்குரிய பணியாளரே' என்று பாராட்டி, 'சிறியவற்றில் அவர்கள் காட்டிய நம்பிக்கைக்காக' பெரிய பொறுப்புகளில் அவர்களை நியமிக்கின்றார். ஒரு தாலந்து பெற்றவர் அதை அப்படியே நீட்டுகின்றார். நீட்டும்போது தன் செயலின் காரணத்தை அவரே மொழிகின்றார்: 'ஐயா, நீர் கடின உள்ளத்தினர். நீர் விதைக்காத இடத்திலும் போய் அறுவடை செய்பவர். நீர் தூவாத இடத்திலும் விளைச்சலைச் சேகரிப்பவர். உமக்கு அஞ்சியதால் நான் போய் உம்முடைய தாலந்தை நிலத்தில் புதைத்து வைத்தேன்.'

இவரின் வார்த்தைகளிலிருந்து மூன்று விடயங்களை நாம் ஊகிக்க முடியும்: (அ) இவர் தலைவரை விமர்சனம் அல்லது தகுதியாராய்ச்சி செய்கின்றார். தன்னால் இதைப் பெருக்க இயலுமா என நினைப்பதை மறுத்து தனக்கு இதை வழங்கியவரையும் அவருடைய உளப்பாங்கையும் ஆய்ந்து பார்க்கின்றார். (ஆ) இவர் தலைவரைப் பற்றி முற்சார்பு எண்ணம் கொண்டிருக்கின்றார். தன் தலைவர் இப்படித்தான் என்றும், இப்படி இருப்பவர் என்றும் அப்படியே இருப்பார் என்றும் நினைக்கின்றார். (இ) தாலந்தைப் பெருக்கும் முயற்சியில் தான் அதை இழந்து விடுவோமோ என்று அச்சம் கொள்கின்றார். இதை பொருளியலில் (economics) 'லாஸ் அவெர்ஷன் ஃபேலஸ்ஸி' (loss aversion fallacy) என அழைக்கின்றார்கள். தாலந்துகள் பெருகினால் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும் என அவர் நினைப்பதற்குப் பதிலாக, இத்தாலந்து சுருங்கிவிட்டால் கவலைப்பட வேண்டுமே என நினைப்பதுதான் 'லாஸ் அவெர்ஷன் ஃபேலஸ்ஸி'. 

மொத்தத்தில், 'விழிப்பாயிருந்து தன் இதயத்தைக் காவல் செய்ய' மறந்துவிட்டார் இப்பணியாளர். விளைவு, அவர் நினைத்த எண்ணங்களே அவருடைய வாழ்க்கையின் போக்கை மாற்றுகின்றன. அவரிடம் உள்ளதும் எடுக்கப்பட்டு, புறம்பேயுள்ள இருளில் அவர் தள்ளப்படுகின்றார். 

மேலும், இப்பணியாளர் சிறியவற்றில் நம்பிக்கைக்குரியவராய் இருக்கவும் தவறிவிட்டார். சீராக்கின் ஞானநூல் ஆசிரியர், 'சிறியவற்றைப் புறக்கணிப்போர் சிறிது சிறிதாய் வீழ்ச்சியடைவர்' (சீஞா 19:1) என எச்சரிக்கின்றார். 

இன்றைய நற்செய்தி நமக்குத் தரும் பாடங்கள் எவை?

(அ) நம் இதயத்தில் எழும் எண்ணங்களைப் பற்றி நாம் விழிப்பாயிருத்தல் அவசியம். ஏனெனில், அவையே நம்மைச் செயல்பாட்டுக்கு இட்டுச் செல்கின்றன. எடுத்துக்காட்டாக, கொலை, கொள்ளை, வன்மம் போன்ற செயல்கள் எல்லாம் முதலில் எண்ணங்களாகவே தொடங்குகின்றன. 

(ஆ) சிறியவற்றிலும் பிரமாணிக்கம் அவசியம். கணவன்-மனைவி உறவு நிலை பிரமாணிக்கத்திலோ, அல்லது கடவுள்-அருள்பணியாளர் பிரமாணிக்கத்திலோ, 'சின்ன விடயம்தானே இது! கடவுள் இதை மன்னிக்க மாட்டாரா?' என்ற எண்ணமே பெரிய தவறுகளுக்கு நம்மை இட்டுச் செல்கின்றது.

(இ) அவரவருக்குக் குறிக்கப்பட்ட வேலையைச் செய்வது. மூன்றாவது பணியாளர் தான் ஒரு பணியாளர் என்ற வரையறையை மறந்து, தன்னைத் தலைவர்போல எண்ணிக் கொள்கின்றார். சில நேரங்களில் நம் வேலைகளைச் செய்வது மட்டுமே வாழ்க்கை நமக்கு வழங்கும் வரையறையாக இருக்கிறது.

இன்றைய முதல் வாசகத்தில் (காண். 1 கொரி 1:26-31), 'நீங்கள் அழைக்கப்பட்ட நிலையை எண்ணிப் பாருங்கள்' எனக் கொரிந்து நகரத் திருஅவையாருக்கு நினைவூட்டுகின்றார் பவுல். நாம் அழைக்கப்பட்ட நிலையை எண்ணிப்பார்ப்பதும் நலம். 

நம் தாய்த் திருஅவை இன்று புனித மோனிக்காவின் திருநாளைக் கொண்டாடி மகிழ்கின்றது. நாம் 28 ஆகஸ்ட் அன்று புனித அகுஸ்தினாரைக் கொண்டாடக் காரணமாக இருந்தவர் இவரே. தன் மகனது வாழ்வு பற்றி விழிப்பாயிருந்தார். சிறியவற்றிலும் அவர் சீராக இருக்க விரும்பினார். தன் கண்ணீரையே தன் மகனுக்கான இறைவேண்டலாக வடித்தார்.

'என் மகன் இப்படி இருக்கிறானே!' என்று தன் உள்ளத்தில் எந்த விமர்சனமும் அவர் உள்ளத்தில் எழவில்லை. தன் ஒற்றை மகனை நிலத்தில் புதைத்துவிட அவர் விரும்பவில்லை. தாயின் சிறிய சிறிய கண்ணீர்த் துளிகளே பெரிய புனிதராக அகுஸ்தினாரை நம் முன் நிறுத்துகின்றது.


Thursday, August 25, 2022

உங்களைத் தெரியாது

இன்றைய (26 ஆகஸ்ட் 2022) நற்செய்தி (மத் 25:1-13)

உங்களைத் தெரியாது

விண்ணரசு பற்றிய எடுத்துக்காட்டாக, பத்துக் கன்னியர் அல்லது பத்துத் தோழியர் எடுத்துக்காட்டை முன்மொழிகின்றார் இயேசு. இந்த எடுத்துக்காட்டே மத்தேயு நற்செய்தியில் நாம் காணும் இறுதி உவமை ஆகும். திருமண நிகழ்வின் பின்புலத்தில் இந்த உவமை அமைகின்றது. யூதர்களின் திருமணம் இரு நிலைகளில் நடந்தேறும். முதலில், நிச்சயம். இரண்டாவது திருமணம். திருமண நிகழ்வில் மணமகள் அழைப்பு, மணமகனுடைய பெற்றோர்முன் திருமணம், ஏழுநாள் கொண்டாட்டம் என்று மூன்று பகுதிகள் உண்டு. மணமகளை அழைத்துச் செல்வதற்காக மணமகன் அவளுடைய இல்லத்திற்கு வரும்போது இந்த நிகழ்வு நடக்கிறதா, அல்லது மணமகளை மணமகன் தன் பெற்றோரின் இல்லத்திற்கு அழைத்துச் செல்லும்போது நடக்கிறதா என்பது பற்றிய கலாச்சாரத் தரவுகள் தெளிவாக இல்லை.

மேலும், இந்த உவமையை இயேசுவே மொழிந்தாரா? அல்லது தொடக்கத் திருஅவை வாய்மொழி வரலாற்றில் இது உருவானதா என்றும் தெரியவில்லை. ஏனெனில், 'முன்மதியோடு அல்லது தயாரிப்பு நிலையில் இருத்தல்' என்பது, இயேசுவின் மலைப்பொழிவு பகுதியில் வரும், 'அன்றன்றைய தொல்லை அன்றன்றைக்குப் போதும்' என்னும் அறிவுரைப் பகுதியின் முரணாகவும் தெரிகின்றது. 

நற்செய்திப் பகுதியின் இறுதி வாக்கியத்திலிருந்து நம் சிந்தனையைத் தொடங்குவோம். கடைகளில் போய் எண்ணெய் வாங்கிக் கொண்டு இல்லம் திரும்பிய கன்னித் தோழியர் மணமகனின் கதவுகளைத் தட்டுகின்றனர். அப்போது அவர், 'எனக்கு உங்களைத் தெரியாது' என்கிறார். இது மிகப் பெரிய நிராகரிப்பு. 

இப்போது விளக்குகள் எரிந்துகொண்டிருந்தாலும் அவற்றின் வெளிச்சத்தால் பயனொன்றும் இல்லை. அந்த வெளிச்சம்கூட அவர்களை மணமகனுக்கு அடையாளப்படுத்தவில்லை. 

விண்ணரசு பற்றி இந்த உவமை சொல்வது என்ன?

விண்ணரசுக்குள் சிலர் அனுமதிக்கப்படுவர். சிலருக்கு அனுமதி மறுக்கப்படும். அனுமதி மறுக்கப்பட்டவர்கள் உள்ளே நுழைவது சாத்தியமே இல்லை. மேலும், முன்மதி அல்லது தயாரிப்பு நிலை மிகவே அவசியம்.

ஐந்து தோழியர் அறிவிலிகள் எனக் கருதப்பட மூன்று காரணங்கள் உள்ளன:

ஒன்று, அவர்கள் தங்களை மையமாக வைத்து யோசித்தார்களே அன்றி, மணமகனை மையமாக வைத்து யோசிக்கவில்லை. தங்கள் கைகளில் உள்ள விளக்கு எரிகிறது. அதற்குள் அவர் வந்துவிடுவார் என நினைக்கின்றனர். நேற்றைய நற்செய்தியில் நாம் கண்ட பொல்லாத பணியாளர், 'தலைவர் வரக் காலம் தாழ்த்துவார்' எனத் தனக்குள் சொல்லிக் கொள்கின்றார். இந்த இளவல்களோ, 'தலைவர் சீக்கிரம் வந்துவிடுவார்' எனத் தனக்குள் சொல்லிக் கொள்கின்றனர். இருவர் நினைப்பதும் தவறாகிவிடுகிறது.

இரண்டு, 'உங்கள் எண்ணெயில் எங்களுக்கும் கொடுங்கள்' எனத் தங்களின் சகத் தோழியரிடம் பங்கு கேட்கின்றனர். இப்படிச் செய்வதால் அவர்கள் தோழியரின் வளத்தைப் பகிர்ந்துகொள்ள நினைப்பதுடன், அவற்றை வற்றிப் போகச் செய்யவும் துணிகின்றனர். ஆனால், விண்ணரசைப் பொருத்தவரையில் அவர்களுடைய செயல்களின் பலன்கள் அவர்களுக்கு மட்டுமே. மற்றவர்கள் அவற்றில் பங்குபோட இயலாது.

மூன்று, திசை மாறிச் செல்கின்றனர். மணமகன் வருகின்ற திசை நோக்கிச் செல்லாமல், வணிகரின் திசை நோக்கிச் செல்கின்றனர். இவர்களுடைய பார்வை மீண்டும் தங்கள் விளக்குகளின்பக்கம் இருக்கிறதே தவிர, மணமகன் பக்கம் இல்லை. ஆகையால்தான், மணமகன் இவர்களைக் காணவில்லை. ஒருவேளை மணமகன் திசை நோக்கி அவர்கள் சென்றிருந்தால் அவரும் அவர்கள்மேல் இரக்கம் கொண்டு, 'பரவாயில்லை! வாருங்கள்!' எனச் சொல்லி அவர்கள்மேல் இரக்கம் காட்டி அவர்களைத் தன்னுடன் அழைத்துச் சென்றிருப்பார்.

இன்றைய நாளில் நம் ஆன்மிக வாழ்வில் மேற்காணும் மூன்று தவறுகளை நாமும் செய்கின்றோமா? எனக் கேட்டறிவோம்.

'உங்களை எனக்குத் தெரியாது' என்று இயேசு நம்மை நோக்கிச் சொன்னால் எப்படி இருக்கும்?

நாம் பல நேரங்களில் இயேசுவை நமக்குத் தெரியும் எனச் சொல்கிறோம். ஆனால், அவருக்கு நம்மைத் தெரியுமா? அவர் நம்மை குரலை அறிவாரா? நாம் ஏந்தியிருக்கும் ஒளி அவருக்கு நம்மை அடையாளப்படுத்துகிறதா? அல்லது ஒளி மங்கலாக இருக்கிறதா? இதையே பவுலும் கலாத்திய இறைமக்களிடம், 'நீங்கள் கடவுளை அறிந்துள்ளீர்கள். உண்மையில், கடவுளே உங்களை அறிந்துள்ளார்' (காண். கலா 4:9) என்று கூறுகின்றார்.

நற்செய்தி வாசகத்தில் ஐவரின் முன்மதியை நாம் பாராட்டுகின்றோம். ஆனால், 'மனித ஞானத்தை விடக் கடவுளின் மடமை ஞானம் மிக்கது' என்கிறார் பவுல் (முதல் வாசகம்).


நம்பிக்கைக்குரிய அறிவாளி

இன்றைய (25 ஆகஸ்ட் 2022) நற்செய்தி (மத் 24:42-51)

நம்பிக்கைக்குரிய அறிவாளி

இன்றைய நற்செய்தி இரு பகுதிகளாக அமைந்துள்ளது. முதல் பகுதியில், விழிப்பாயிருக்கும் உரிமையாளர் பற்றிப் பேசுகின்றார் இயேசு. விழிப்பாயிருக்கின்ற உரிமையாளர் தன் உடைமைகள் களவு போகாதவாறு காத்துக்கொள்கின்றார். இரண்டாவது பகுதியில், இரு வகை மேற்பார்வையாளர்களை முன்வைக்கின்றார் இயேசு. நம்பிக்கைக்குரிய மற்றும் அறிவாளியான பணியாளர் வேலையாள்களுக்குரிய உணவை நேரத்துக்குத் தருவதுடன் தலைவர் வரும்போது தன் பணியைச் செய்துகொண்டு இருக்கின்றார். பொல்லாத பணியாளரே வேலைக்காரரை அடிக்கவும், மற்றவர்களுடன் சேர்ந்து குடிக்கவும் செய்கின்றார். மேலும், தலைவரின் வருகைக்கு ஆயத்தம் இல்லாதவராகவும் இருக்கின்றார்.

மேற்காணும் இரு பணியாளர்களில் முன்னவர் நம்பிக்கைக்குரிய அறிவாளியாகவும், பின்னவர் பொல்லாதவராகவும் இருக்கின்றார்.

நம்பிக்கைக்குரிய அறிவாளி தான் செய்ய வேண்டிய வேலைகளைச் செய்கின்றார்.

பொல்லாதவரோ தனக்குத் தானே ஓர் எண்ணத்தை வகுத்துக்கொண்டு, அந்த எண்ணத்தின்படி தன் தலைவர் செயலாற்றுவதாக நினைக்கின்றார். இந்த வகையில் அவர் தனக்கு எதிராகவும் மற்றவர்களுக்கு எதிராகவும் தீமை செய்யத் தொடங்குகின்றார். 

இந்தப் பொறுப்பாளர் இரண்டு குணங்களைப் பெற்றிருக்க வேண்டும் என்கிறார் இயேசு: 'நம்பிக்கைக்கு உரியவர்,' 'அறிவாளி.' நம்பிக்கை உரியவராய் இருத்தல் என்பது மேல்நோக்கிச் செல்லக் கூடியது. அறிவாளியாய் இருத்தல் என்பது எனக்குச் சமமாக அல்லது கீழ்நோக்கி இருத்தல் வேண்டும். இது மாறினால்தான் நிர்வாகப் பிரச்சினை வரும். எடுத்துக்காட்டாக, ஒரு பள்ளியில் வேலை பார்க்கும் ஆசிரியர் தன்னுடைய தலைமை ஆசிரியரிடம் அறிவாளியாய் இருக்க நினைத்தால் அது அவருடைய வேலைக்கு ஆபத்தாய் முடியும். அதுபோல, ஆசிரியர் தனக்குக் கீழிருக்கும் அலுவலகப் பணியாளர்களுக்கும் மாணவர்களுக்கும் நம்பிக்கைக்கு உரியவராய் நடக்க ஆரம்பித்தால் மேலிருப்பவர்களின் அதிருப்தியைச் சம்பாதிக்க நேரிடும். ஆக, 'வீட்டுப் பொறுப்பாளர்' இந்த இரண்டு பண்புகளையும் சரியான திசையில் கொண்டிருக்க வேண்டும். இரண்டுமே மதிப்பீடுகள்தாம். ஆனால், அவைகளின் திசைகளே அவற்றை பயனுள்ளவை ஆக்குகின்றன. 

இந்தப் பொறுப்பாளர் மூன்று குணங்களைப் பெற்றிருத்தல் கூடாது: ஒன்று, தனக்குத்தானே சாக்குப் போக்கு சொல்லக் கூடாது, இரண்டு, தனக்குக் கீழிருக்கும் பணியாளர்களை அடித்தல் கூடாது, மற்றும் மூன்று, மயக்கமுற உண்ணவும் குடிக்கவும் கூடாது. ஆக, இவருடைய மனம், கரம், ஆன்மா அனைத்தும் தூய்மையாக இருக்க வேண்டும்.

மேலும், பொறுப்பாளர் நிலை என்பது இவர் தெரிந்தெடுத்த நிலை அல்ல. மாறாக, இவர்மேல் சுமத்தப்பட்ட ஒன்று. இவர் தன் தலைவரின் விருப்பத்திற்குக் கீழ் தன்னுடைய விருப்பத்தை வைத்துவிட்டார். ஆக, பொறுப்புணர்வு இன்னும் அதிகம் தேவை. இதுவே, இவரிடம் அதிகம் ஒப்படைக்கப்பட்ட நிலை.

இன்றைய முதல் வாசகத்தில் (காண். உரோ 6:12-18), 'எதற்கு அடிமைகளாக உங்களை ஒப்புவித்துக் கீழ்ப்படிகிறீர்களோ அதற்கே நீங்கள் அடிமைகள்' என்று சொல்கிறார் பவுல். அடிமைகள் தங்களுடைய சுதந்திரத்தை விற்றவர்கள். இவர்கள் தாங்கள் விரும்பும் எதையும் செய்ய முடியாது. நாம் ஒன்றுக்கு அடிமையாகிவிட்டால் அது நம்மை ஆட்கொள்ள ஆரம்பிக்கும். இதையே, புனித அகுஸ்தினார், 'கட்டுப்படுத்தப்படாத எந்தப் பழக்கமும் தேவையாக மாறிவிடும்' என்கிறார்.

சில கேள்விகள்:

அ. இயேசுவின் இரண்டாம் வருகையை விட்டுவிடுவோம். அன்றாடம் அவர் என்னிடம் வரும் மூன்றாம் வருகைக்கு - இறைவார்த்தை, அருளடையாளம், இறைமக்கள் வழி - நான் ஆயத்தமாய் இருக்கிறேனா?

ஆ. என் அருள்பணித்தளம், என் குடும்பம் என அனைத்திலும் நான் 'பொறுப்பாளராக' இருக்கிறேன். என்னுடைய நம்பிக்கைக்குரிய நிலையும், அறிவும் சரியான திசையில் இருக்கின்றனவா? என்னுடைய மனம், உடல், ஆன்மா தூய்மையாக இருக்கிறதா?

இ. என் தேவையாக மாறிவிட்ட என்னுடைய பழக்கங்கள் எவை? அல்லது இன்று நான் எதற்கெல்லாம் என்னையே அடிமையாக்கி இருக்கிறேன்? பொறுப்பாளர்கள் தங்களுடைய தலைவருக்கு மட்டுமே உரித்தானவர்கள்!

இன்றைய முதல் வாசகத்தில் (1 கொரி 1:1-9), 'கிறிஸ்துவுடன் இணைக்கப்பெற்று நீங்கள் எல்லா வகையிலும் செல்வர் ஆனீர்கள்' என்று தன் இறைமக்களைப் பார்த்து மொழிகின்றார் பவுல். கிறிஸ்துவின் உடனிருப்பு அவர்களின் கைகளை நிரப்புகின்றது.


Tuesday, August 23, 2022

புனித பர்த்தலமேயு

இன்றைய (24 ஆகஸ்ட் 2022) திருநாள்

புனித பர்த்தலமேயு

இன்று நாம் திருத்தூதரான புனித பர்த்தலமேயுவின் விழாவைக் கொண்டாடுகிறோம். இவரை நத்தனியேல் என்று யோவான் நற்செய்தியாளர் அழைக்கிறார். இதுதான் இவருடைய இயற்பெயராக இருந்திருக்க வேண்டும். ஏனெனில், 'பர்த்தலமேயு' என்றால் அரமேயத்தில் 'தலமேயுவின் மகன்' என்றுதான் பொருளே தவிர வேறொன்றுமில்லை. 'நத்தனியேல்' என்றால் 'கடவுளின் கொடை' அல்லது 'கடவுள் கொடுத்தார்' என்று பொருள்.

இயேசுவைக் கண்ட பிலிப்பு தன் நண்பரான நத்தனியேலிடம் போய், 'அவரை நாங்கள் கண்டுகொண்டோம்' என்று சொல்ல, அவரோ, 'நாசரேத்திலிருந்து நல்லது எதுவும் வர முடியுமோ?' என்று தயக்கம் காட்டுகிறார். ஆனால், 'வந்து பாரும்' என்று பிலிப்பு அழைத்தவுடன் இயேசுவைச் சென்று பார்க்கிறார்.

'வந்து பாரும்!'

நமக்கு உடல்நிலை சரியில்லாமல் வீட்டில் அல்லது மருத்துவமனையில் இருந்தால், அல்லது நம் வீட்டில் குழந்தை பிறந்திருந்தால், அல்லது ஒருவருக்கு பரிந்துரைக் கடிதம் கொடுப்பதாக இருந்தால், அல்லது ஒருவருக்கு உதவி செய்ய நினைத்தால், அல்லது மேலதிகரியாக இருக்கும் எனக்குக் கீழ் இருக்கும் ஒருவர் தவறு செய்தால், 'வந்து பாரும்' என்று என்ற வார்த்தையைப் பயன்படுத்துகிறோம். மேலும், 'அவன் வந்து பார்னு நிக்கிறான்' என்ற வாக்கியத்தில். 'வந்து பார்' என்பது நேருக்கு நேராக நிற்கும் துணிச்சலையும் குறிப்பிடுகிறது.

இன்று நாம் 'வந்து பாரும்' என்ற வார்த்தைகளை இரண்டு கோணங்களில் யோசிப்போம்.

அ. பிலிப்பு நத்தனியேலிடம் சொன்னது போல, இயேசுவை 'வந்து பாரும்' என நான் எத்தனை முறை சொல்லியிருக்கிறேன்? நான் இயேசுவை மெசியாவாகக் கண்டுணர்கிறேன். அல்லது அவருடைய அனுபவத்தை நான் பெற்றிருக்கிறேன். நான் எத்தனை பேருக்கு இந்த அனுபவத்தைக் கொடுக்க முயற்சி செய்திருக்கிறேன்?

ஆ. நத்தனியேல் பிலிப்பைப் பின்தொடர்ந்தது போல, 'வந்து பாரும்' என்ற அழைப்பு எனக்கு வந்தவுடன் நான் இயேசுவை எத்தனை முறை சென்று பார்த்திருக்கிறேன்? 'எனக்கு எல்லாம் தெரியும்' என்ற எண்ணத்திலோ, அத்திமரத்தின் கீழ் அமர்ந்து இறைவாக்குகள் படிப்பதோ போதும் என்று எண்ணவில்லை நத்தனியேல். உடனே புறப்படுகின்றார். இந்தத் தயார்நிலையும், இயேசுவை ஏற்றுக்கொள்ளும் கபடற்ற உள்ளமும் என்னிடம் இருக்கிறதா?

'வந்து பாரும்' என்ற அழைப்பை நான் ஏற்றுச் செல்லும்போதெல்லாம் அவரிடம் 'இன்னும் பெரியவற்றை நான் காண்பேன்.'


Monday, August 22, 2022

உட்புறத்தைத் தூய்மையாக்குங்கள்

இன்றைய (23 ஆகஸ்ட் 2022) நற்செய்தி (மத் 23:23-26)

உட்புறத்தைத் தூய்மையாக்குங்கள்

இயேசு மறைநூல் அறிஞர்களையும் பரிசேயர்களையும் சாடுவது தொடர்கின்றது. இரு காரியங்களுக்காக இயேசு இன்றைய நற்செய்தியில் அவர்களைச் சாடுகின்றார்: ஒன்று, பத்தில் ஒரு பங்கைக் கொடுக்கும் அவர்கள் நீதி, இரக்கம், நம்பிக்கை ஆகியவற்றைக் கடைப்பிடிக்காமல் இருக்கிறார்கள். இரண்டு, வெளிப்புறத் தூய்மைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் அவர்கள் உள்புறத் தூய்மையை மறுக்கிறார்கள்.

'கிண்ணத்தின் உள்புறத்தைத் தூய்மையாக்குங்கள். அதன் வெளிப்புறமும் தூய்மையாகும்' என்னும் இயேசுவின் போதனையை நம் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம்.

இந்த வாக்கியத்தை நேரடியாகவும், மறைமுகமாகவும் எடுத்துக்கொள்ளலாம். நேரடிப் பொருளாக எடுத்துக்கொண்டால், ஒரு பாத்திரத்தின் உட்புறத்தைக் கழுவும்போது இயல்பாக வெளிப்புறமும் தூய்மையாகிறது என்பது நம் அனுபவம். மிக மிக அரிதான சூழலில்தான் - கெட்டில் போன்ற மின்னணுச் சாதங்களைக் கழுவும்போது - உள்புறத்தை மட்டும் நாம் கழுவுகிறோம். மறைமுகப் பொருளில், இயேசு கிண்ணத்தின் உட்புறம் என மொழிவது மனித இதயத்தைக் குறிக்கிறது. இயேசுவின் சமகாலத்தில் தூய்மை என்பது வாழ்வியல் எதார்த்தமாக இருந்த நிலை மாறி சமயச் சடங்காக மாறியிருந்தது. இந்த நிலையில் சடங்குமயமாக்கும் போக்கையும் அவர் கண்டிக்கின்றார்.

இன்றைய சார்பியல் (ரெலடிவிட்டி) உலகில், 'தூய்மை' என்பதை 'இதுதான்' என்று வரையறுக்க முடியாது. தூய்மை என்பது தனிநபர் சார்ந்தது. நான் தூய்மை எனக் கருதும் இடம் மற்றொருவருக்குக் குப்பையாகத் தோன்றலாம். மேலும், தூய்மை என்பதை எப்போதும் உயர்ந்து மதிப்பீடு என்றும் முன்மொழிய முடியாது. எடுத்துக்காட்டாக, சாலையில் தூங்கும் நாடோடிப் பெண்களுக்கு அவர்களுடைய அழுக்கே பாதுகாப்பு. 

'புறந்தூய்மை நீரான் அமையும் அகந்தூய்மை வாய்மையால் காணப்படும்' (குறள் 298) என்று மொழியும் திருவள்ளுவர், தூய்மையை, புறம் மற்றும் அகம் என்னும் இரண்டாகப் பிரித்து, இரண்டும் அவசியம் எனவும், இரண்டையும் அடைவதற்கான வழிகளையும் முன்மொழிகின்றார்.

தூய்மை என்பதை நாம் எப்படிப் புரிந்துகொள்வது?

(அ) தூய்மை என்பது தயார்நிலை. தூய்மையாக இருக்கும் தட்டு உணவருந்தப் பயன்படுவதற்குத் தயாராக இருக்கிறது. தூய்மையாக இருக்கும் மெத்தை தூங்குவதற்குப் பயன்படுகின்றது. தூய்மையாக இருக்கும் அறை வாழ்வதற்குப் பயன்படுகின்றது. 

(ஆ) தூய்மை என்பது ஒன்றின் இருத்தல் நிலை. ஒரு பொருளை வாங்கும்போது அது தூய்மையாக இருக்கிறது. காலப் போக்கில் அதன்மேல் அழுக்கு ஏறுகிறது. அல்லது அந்தப் பொருள் தேயத் தொடங்குகிறது. எடுத்துக்காட்டாக, நாம் அணியும் ஆடை. இது முதன்முதலாகத் தன் இருத்தலைப் பெறும்போது இருக்கின்ற நிலையே அதன் தூய்மை.

பரிசேயர்கள் மற்றும் மறைநூல் அறிஞர்கள் தாங்கள் பயன்படுத்தும் பாத்திரங்களின் தயார்நிலை பற்றி அக்கறை கொண்டிருந்தார்களே அன்றி தாங்கள் உள்ளத்தில் இறைவனை ஏற்பதற்கான தயார்நிலை பற்றி அக்கறையின்றி இருந்தார்கள். தங்கள் மேல் தாங்களே வலிந்து பூசிக்கொண்ட அழுக்கினால் தங்கள் இருத்தல் நிலை கறைபட்டிருப்பதை அவர்கள் உணரவில்லை.

இதுவே நம் நிலையாகவும் இருக்கலாம்.

என் உள்ளம் இறைவனையும் மற்றவர்களையும் ஏற்பதற்கான தயார்நிலை கொண்டிருக்கிறதா?

என் இருத்தலின்மேல் நானே ஏற்றிக்கொண்டு நிற்கும் அழுக்குகள் எவை?

நாம் பேசும் பொய்கள், மற்றவர்கள்மேல் நாம் வளர்க்கும் கோபம், வன்மம், பகைமை, நாம் கொள்ளும் பொறாமை உணர்வு ஆகியவற்றால் நாம் உள்ளத் தூய்மையை இழந்துகொண்டே இருக்கின்றோம். 

அழுக்குகளை அழுத்தித் தேய்த்தால் பாத்திரங்களில் கோடுகள் விழுவது போல, நம் அழுக்குகளைத் தேய்த்து எடுக்கும் முயற்சியில் நாமும் நம் பாத்திரங்களில் கோடுகளை ஏற்படுத்திவிடுகின்றோம். ஆனால், சில விடாப்பிடியான கறைகளைத் தேய்த்துத்தான் எடுக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது.

தூய்மை நோக்கிய பயணம் என்பது தொடர் பயணம். 

'எதையாவது சுத்தம் செய்துகொண்டே இருந்தால் நம்மை அறியாமலேயே நம் அகமும் சுத்தமாகிறது' என்று கூறுவார் பவுலோ கோயலோ என்னும் நாவலாசிரியர். 

ஆக, வெளிப்புறத் தூய்மை உள்புறத் தூய்மையின் வெளிப்பாடாக இருத்தல் நலம். வெறும் சடங்காகச் சுருங்கிவிட்டால் ஆபத்து.


Sunday, August 21, 2022

அரசியான கன்னி மரியா

இன்றைய (22 ஆகஸ்ட் 2022) திருநாள்

(எசாயா 9:2-4,6-7. லூக்கா 1:26-38)

அரசியான கன்னி மரியா

அன்னை கன்னி மரியாவின் விண்ணேற்புத் திருவிழாவின் எட்டாம் நாளில், அன்னை கன்னி மரியாவை விண்ணரசி (விண்ணக-மண்ணக அரசி) எனக் கொண்டாடி மகிழ்கின்றோம். இதையே செபமாலையில், மாட்சிநிறை மறைபொருளில் ஐந்தாவதாகவும் சிந்திக்கின்றோம். 

'நான் ஆண்டவரின் அடிமை' என்று இறைவனிடம் தன்னையே அடியாராகச் சரணடைந்த மரியாவின் தாழ்ச்சியே அவரை அரசி நிலைக்கு உயர்த்துகின்றது. 

மேலும், அனைத்துலக அரசராம் கிறிஸ்துவைப் பெற்றெடுத்த நிலையிலும் அன்னை கன்னி மரியா அரசியாகக் கருதப்படுகின்றார்.

நாம் நம் வாழ்வில் அரசர் அல்லது அரசி என்ற நிலையில் வாழ்வது எப்படி? இன்றைய திருநாள் நமக்குத் தரும் பாடங்கள் எவை?

(அ) அரசர்கள் மையம் கொண்டிருப்பர்

மையம் கொண்டிருத்தல் (ஃபோகஸ்) என்பது முதன்மைகளை நெறிப்படுத்துதலில் தொடங்குகின்றது. முதன்மைகளை நெறிப்படுத்தியபின், தாங்கள் தேர்ந்துகொண்ட முதன்மையை மையமாகக் கொண்டு தங்கள் எண்ணம், விருப்பம், ஆற்றல் அனைத்தையும் அதன்மேல் குவிப்பர் அரசர். கன்னி மரியாவைப் பொருத்தவரையில் இறைவனின் திருவுளம் நிறைவேற்றுதல் என்பது அவர் தேர்ந்துகொண்ட மையம். அந்த மையத்தின் குவியத்தையே தன் வாழ்வாகக் கொண்டார் அவர். இன்று நான் என் முதன்மைகளை நெறிப்படுத்தி வாழ்கிறேனா? என் முதன்மைகளைக் கலைக்கின்ற கவனச்சிதறல்கள் எவை? அவற்றை நான் எப்படி அகற்றுகிறேன்?

(ஆ) அரசர்கள் தேர்ந்து தெளிவர், தேர்ந்து தெளிந்தபின் உறுதியாக இருப்பர்

மனிதர்களில் இரு வகையினர் உண்டு. முதல் வகையினர் தேர்ந்து தெளிவதற்கு நேரம் எடுப்பர். இரண்டாம் வகை மனிதர் தேர்ந்து தெளிந்தபின்னரும் தங்கள் மனத்தில் குழம்பிக்கொண்டே இருப்பர். இந்த இரு நிலைகளுமே ஆபத்தானவை. அரசர்கள் உடனடியாகத் தேர்ந்து தெளிவர். தன் தேர்வில் உறுதியாக இருப்பர். முதன்மைகள் தெளிவானால் தெரிவுகள் எளிதாகும். அன்னை கன்னி மரியா தன் வாழ்வின் இயக்கத்தை இறைவனின் கைகளில் ஒப்படைத்துவிட்டதால் அவரின் விரல் பிடித்து உறுதியாக நடந்தார்.

(இ) அரசர்கள் தமக்கு அடுத்திருப்பவர்களின் வாழ்வின் ஆசீராக இருப்பர்

இயேசுவின் பிறப்புச் செய்தி கேட்ட மரியா தன் உறவினர் எலிசபெத்து நோக்கி ஓடுகின்றார். காணாமல் போன இளவல் இயேசுவைக் கண்டுபிடிக்க மிகுந்த ஆர்வம் காட்டுகின்றார். கானாவில் திராட்சை இரசம் தீர்ந்தபோது இயேசுவை நோக்கி ஓடுகின்றார். தன் மகன் மதிமயங்கி இருப்பதாக ஊரார் சொல்லக் கேட்டு அவரைத் தேடி ஓடுகின்றார். தன் முதன்மைகளின்பின்னேயே ஓடினார் மரியா. தன் வாழ்வில் முதன்மையாகத் திகழ்ந்தவர்களுக்கு ஆசீராகத் திகழ்ந்தார்.

அரச நிலை நமக்கும் சாத்தியமே!


Saturday, August 20, 2022

அனைவரும் வருக!

ஆண்டின் பொதுக்காலம் 21ஆம் ஞாயிறு

I. எசாயா 66:18-21 II. எபிரேயர் 12:5-7,11-13 III. லூக்கா 13:22-30

அனைவரும் வருக!

ஒருவர் செய்யும் சமயச் சடங்கு அவருக்கு மீட்பைக் கொண்டுவருமா? மீட்பு அல்லது நலம் என்பது ஆட்டோமேடிக்காக நடக்கும் ஒரு நிகழ்வா? 'இல்லை' என்கிறது இன்றைய இறைவார்த்தை வழிபாடு.

மீட்பு அல்லது கடவுளின் தெரிவு என்பது ஒரு குறிப்பிட்ட இனத்திற்கு மட்டும் சொந்தமானது அல்ல என்றும், அந்த இனத்தில் பிறந்தால், வளர்ந்தால், இறந்தால் மட்டும் ஒருவர் 'ஆட்டோமேடிக்காக' மீட்பு பெற்றுவிடுவதில்லை என்றும், மீட்பு என்னும் வீட்டின் கதவுகள் அனைவருக்கும் திறந்துவிடப்பட்டுள்ளன என்றும், எனவே, 'அனைவரும் வருக' என்றும் அழைப்பு விடுக்கிறது இன்றைய ஞாயிறு.

இன்றைய முதல் வாசகத்தில் (காண். எசா 66:18-21), இறைவாக்கினர் எசாயா, பாபிலோனிய அடிமைத்தனத்திலிருந்து மீண்டு வந்த இஸ்ரயேல் மக்களிடம் உரையாடுகிறார். அழிந்துபோன தங்கள் நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் இவர்கள், உடைந்து போன ஆலயத்தைக் கட்டி எழுப்புவதைத் தங்களுடைய முதன்மையான கடமையாகக் கொண்டிருந்தனர். அவர்களுடைய தோற்றம் மற்றும் வரலாற்றின் பின்புலத்தில் தங்களையே தனித்தன்மை வாய்ந்த சமூகமாகக் கருதினர் இஸ்ரயேல் மக்கள். தங்களுடைய தனித்தன்மையைத் தக்கவைக்கவும், தங்களைக் கடவுள் முன் உயர்த்திக் காட்டவும் ஆலயம் கட்ட விரும்பினர். இவர்களின் இந்த விருப்பத்தைக் கேள்விக்கு உட்படுத்துகிறார் எசாயா. ஏனெனில், 'பிறஇனத்தார், பிறமொழியினா அனைவரையும் நான் கூட்டிச் சேர்க்க வருவேன். அவர்களும் கூடிவந்து என் மாட்சியைக் காண்பார்கள்' என்கிறார் ஆண்டவர். சீனாய் மலையில் ஆண்டவரின் மாட்சி தங்களுக்கு மட்டுமே வெளிப்படுத்தப்பட்டது என்று எண்ணிப் பெருமைப்பட்டர்வளுக்கு ஆண்டவரின் வார்த்தைகள் நெருடலாகவே இருந்திருக்கும். மேலும், அவ்வாறு மாட்சியைக் கண்ட மக்கள் அதே மாட்சியை மற்றவர்களுக்கு அறிவித்து மற்றவர்களையும் தங்களோடு அழைத்து வருவார்கள் என்றும், அவர்களுள் சிலர் குருக்களாகவும் லேவியர்களாகவும் நியமிக்கப்படுவார்கள் என்றும் கூறுகிறார் ஆண்டவர். ஆக, தங்களுக்கு வெளிப்படுத்த மாட்சி பிறருக்கு வெளிப்படுத்தப்படுவதையும், தங்கள் லேவி இனத்தில் மட்டுமே குருக்கள், லேவியர்கள் வருவார்கள் என்ற நிலை மாறி, எல்லாரும் குருக்களாகவும் லேவியராகவும் ஏற்படுத்துப்படுவார்கள் என்பதையும் இப்போது எசாயா மக்களுக்கு அறிவிக்கின்றார். இப்படிச் சொல்வதன் வழியாக, இஸ்ரயேல் மக்கள் இவ்வளவு நாள்கள் பிடித்துக் கொண்டிருந்த பெருமை, செருக்கு, மற்றும் மேட்டிமை உணர்வைக் களைய அழைப்பு விடுப்பதோடு, மற்ற மக்களையும் கடவுள் அணைத்துக்கொள்கிறார் என்ற உள்ளடக்கிய பரந்த உணர்வைப் பெற்றுக்கொள்ளவும் அழைப்பு விடுக்கின்றார். மேலும், இறைவனின் இத்திட்டத்திற்கு அவர்கள் ஒத்துழைக்க வேண்டும் என்றும் அழைப்பு விடுக்கின்றார்.

ஆக, இஸ்ரயேல் இனத்திற்கு மட்டுமே மீட்பு உண்டு, கடவுளின் உடனிருப்பு உண்டு என்று எண்ணியவர்களின் எண்ணத்தை அழிக்கும் ஆண்டவராகிய கடவுள், மீட்பின் கதவுகளை பிறஇனத்தாருக்கும் திறந்து விடுகின்றார். மேலும், ஒரு இனத்தில் பிறத்தல் மட்டுமே மேன்மையைக் கொண்டுவராது, கடவுளின் திட்டத்தால் யாரும் மேன்மை பெறலாம் என்றும் முன்மொழிகின்றார்.

இன்றைய இரண்டாம் வாசகத்தில் (காண். எபி 12:5-7,11-13), எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமடலின் ஆசிரியர், தன்னுடைய திருச்சபையில் மக்கள் துன்பத்தைப் பற்றிக் கொண்டிருந்த புரிதலைக் கேள்விக்குட்படுத்துகிறார். சிலர் கிறிஸ்தவர்களாக மாறினால் எந்தத் துன்பமும் இல்லாமல் இருக்கலாம் என்று எண்ணினர். இன்னும் சிலர் தங்களுடைய துன்பங்கள் தங்களுடைய பழைய பழைய பாவங்களுக்கான தண்டனை என்று எண்ணினர். மேலும் சிலர் கடவுள் அவர்களைக் கண்டுகொள்வதில்லை என்று எண்ணினர். 

இவர்களின் இத்தவறான புரிதல்களுக்குச் சவால்விடுகிறார் ஆசிரியர். ஆசிரியைப் பொருத்தவரையில் துன்பங்களும் வலியும் வறுமையும் பயிற்சிக்கான தளங்களாக அமைகின்றன. நம்பிக்கையில் காலப் போக்கில் மனம் தளர்ந்து போன இம்மக்களுக்கு எழுதும் ஆசிரியர், 'திருத்தப்படுவதற்காகத் துன்பங்களைத் தாங்கிக்கொள்ளுங்கள். கடவுள் உங்களைத் தம் பிள்ளைகளாக நடத்துகிறார்' என்கிறார். திருத்தப்படுவது அல்லது ஒழுக்கமாய் இருப்பது என்பது விளையாட்டு வீரர் அதிகமாகப் பெற்றிருக்க வேண்டிய ஒரு பண்பு. அவருடைய 'கைகள் தளர்ந்து போகும்போதும்,' 'முழங்கால்கள் தள்ளாடும்போதும்' அவரால் விளையாட முடியாது. இவ்விரண்டையும் சரி செய்ய அவர் தானே முயற்சிகள் எடுத்து அவற்றை நிறைவேற்ற வேண்டும். 

ஆக, கிறிஸ்தவர்களும் தாங்கள் ஏற்றுக்கொண்ட கிறிஸ்தவ நம்பிக்கையால் தாங்கள் அனைவரும் மீட்கப்பட்டுவிட்டதாக எண்ணாமல், தங்களுடைய துன்பங்களை பிள்ளைக்குரிய பக்குவத்துடன் ஏற்றுக்கொள்வதன் வழியாகவும், ஒழுக்கம் மற்றும் பயிற்சியின் வழியாகவும் தங்களையே தகுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். மேலும், இத்தகைய துன்பங்களை ஏற்கும் அனைவருமே இறைவனைத் தந்தையாக ஏற்றுக்கொள்ள முடியும் என்றும் மறைமுகமாக அறிவுறுத்துகிறார் ஆசிரியர்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (காண். லூக் 13:22-30) இயேசு எருசலேம் நோக்கிப் பயணம் செய்கிறார். வழியில் அவரைச் சந்திக்கின்ற ஒருவர், 'மீட்புப் பெறுவோர் சிலர் மட்டும்தானா?' என்று கேட்கிறார். கேள்வி கேட்டவருடைய எண்ணம் யூதர்களுக்கு மட்டும் மீட்பு என்பதாக இருக்கிறது. இயேசுவின் சமகாலத்து யூதர்கள் தாங்கள் ஆபிரகாம் வழி வந்தவர்கள் என்பதாலும், தாங்கள் கடவுளின் மக்கள் என்பதாலும் தங்களுக்கு மீட்பு தானாகவேக் கிடைத்துவிடும் என்று எண்ணினர். ஒருவர் ஒரு குழுமம் அல்லது சமூகத்தைச் சார்ந்தவர் என்பதற்காக அவருக்கு மீட்பு ஆட்டோமேடிக்காக கிடைத்துவிடும் என்ற எண்ணத்திற்குச் சவால் விடுவதாக இருக்கின்றன இயேசுவின் வார்த்தைகள். விளையாட்டு வீரருக்கு உரிய பழக்கம் ஒன்றை வலியுறுத்துவது போல, 'வருந்தி முயலுங்கள்' என்கிறார். மேலும், 'இடுக்கமான வாயில் வழியே நுழையுங்கள்' என்று அறிவுறுத்துவதோடு, 'வாயில் அடைக்கப்படலாம்' என எச்சரிக்கவும் செய்கின்றார். உள்ளே நுழைய முடியாமற்போவோர், 'நாங்கள் உம்மோடு உணவு உண்டோம், குடித்தோம், நீர் எங்கள் வீதிகளில் போதித்தீர்' என்ற இயேசுவோடு தங்களை ஒன்றிணைத்துக்கொள்ள முயல்கின்றனர். ஆனால், 'நாங்கள் உம்மை நம்பினோம், உம் வார்த்தைக்குச் செவிமடுத்தோம்' என்றோ சொல்லவில்லை. இயேசுவும் ஒரு யூதர் என்பதால் யூதர் எல்லாருக்கும் அவருடைய மீட்பு கிடைக்கும் எனப் புரிந்துகொண்டனர். இவர்களே தங்களை 'முதன்மையானவர்கள்' என எண்ணிக்கொண்டவர்கள். ஆனால், இவர்களால் கடைசியானவர்கள் என்று எண்ணப்பட்ட புறவினத்தார் இயேசுவை ஆண்டவராகவும் மீட்பராகவும் ஏற்றுக்கொள்ளவும், நம்பவும் செய்தனர். 

ஆக, மேலோட்டமான அடையாளங்களைக் கொண்டிருப்பதால் மட்டும் ஒருவருக்கு மீட்பு கிடைத்துவிடும் என்ற நம் எண்ணத்திற்குச் சவால் விடுவதாக இருக்கின்றது இன்றைய நற்செய்தி வாசகம். மேலும், இடுக்கமான வாயில் வழியே வருந்தி நுழையும் அனைவருக்கும் மீட்பு என்று மீட்பின் கதவுகளைப் புறவினத்தாருக்கும், கடைசியானவர்களுக்கும் திறந்து வைக்கிறார் இயேசு.

இன்று மீட்பு, கடவுள், மறுவாழ்வு, நிலைவாழ்வு பற்றிய என் புரிதல்கள் எவை? நானும் தவறான புரிதல்கள் கொண்டிருக்கின்றேனா? நம்முடைய பெயர், குடும்பம், பின்புலம், சமயம், சாதி, படிப்பு, வேலை போன்ற அடையாளங்கள்கூட நம்மை மேட்டிமை உணர்வுகொள்ளச் செய்து அடுத்தவர்களை இகழ்ச்சியாகப் பார்க்கும் எண்ணத்தை நம்மில் விதைக்கலாம். இவற்றிலிருந்து விடுபடுவது எப்போது? 'அனைவரும் வருக' என்று அரவணைத்துக்கொள்ளும் பக்குவம் பெற நாம் என்ன செய்ய வேண்டும்?

1. எல்லாம் அவரின் திருவுளம்

'ஆண்டவருக்குக் கோவில் கட்ட வேண்டும்' என்பது மக்களின் எண்ணமாக இருக்கிறது. இது நல்ல எண்ணமே. ஆனால், கடவுளின் திருவுளம் வேறுமாதிரியாக இருக்கிறது. இவர்கள் வெறும் ஆலயத்தைப் பார்க்க, கடவுளோ ஒட்டுமொத்த மக்களினத்தைப் பார்க்கிறார். அவரின் திருவுளமே நடந்தேறுகிறது. 'நாம்தான் அரசர்கள், நாம்தான் மறைப்பணியாளர்கள், நாம்தான் குருக்கள்' என்ற எண்ணத்தைப் புரட்டிப் போடுகின்றார் கடவுள். தான் விரும்பும் அரசர்களை, மறைப்பணியாளர்களை, குருக்களை ஏற்படுத்துகின்றார். ஆக, எல்லாவற்றிலும் அவரின் திருவுளமே நடந்தேறும் என்று நினைப்பது சால்பு.

2. தளர்ந்துபோன கைகள், தள்ளாடும் முழங்கால்கள்

கைகளின் இயல்பு தளர்வது. கால்களின் இயல்பு தள்ளாடுவது. வலுவின்மையைக் கொண்டாட வேண்டும். என் அடையாளம் எனக்குத் தருகின்ற மேட்டிமை உணர்வை, தனித்தன்மையை விடுத்து நான் அனுபவிக்கின்ற வலுவின்மையை ஏற்று, அதன் வழியாக நான் அடுத்தவரோடு என்னை இணைத்துக்கொள்ள வேண்டும். 'நான் அருள்பணியாளர். நான் செபம் செய்தால் கடவுள் வருவார். நான் கேட்பது எல்லாம் நடக்கும்' என்று நான் மேட்டிமை உணர்வு கொண்டிருப்பதற்குப் பதிலாக, என்னில் எழும் சோர்வு, நம்பிக்கையின்மை, விரக்தி, தனிமை போன்ற நேரங்களில் நான், 'நானும் மற்றவர்களில் ஒருவன்' என்று என்னை மற்றவரோடு இணைத்துப் பார்க்க வேண்டும். அப்படிப் பார்த்தால், நான் அனைவரையும் அணைத்துக்கொள்ள முடியும்.

3. இடுக்கமான வாயில் வழியே நுழையுங்கள்

இடுக்கமான வாயில் என்பது நான் அனுபவிக்கும் துன்பம். துன்பம் ஏற்றலே இடுக்கமான வாயில் வழியே நுழைதல். நன்றாக தூக்கம் வருகின்ற நேரத்தில் நான் எழுந்து வகுப்பிற்குச் செல்ல வேண்டும் என்றால் அதுதான் நான் நுழைகின்ற இடுக்கமான வாயில். எல்லாரும் நேர்மையற்று நடக்கும் இடத்தில் நான் நேர்மையாக இருக்க வேண்டும் என்று நினைப்பது இடுக்கமான வாயில். அகலமான வாயிலில் அனைவரும் நுழைவர். அங்கே யாருக்கும் யாரையும் பற்றிக் கவலை இல்லை. ஆனால் இடுக்கமான வாயிலில் நுழைபவர் தன்னை முழுமையாக அறிந்திருக்க வேண்டும். 

இறுதியாக,

'நான், எனது, எனக்கு' என்று எண்ணம் விடுத்து, 'நாம், நமது, நமக்கு' என்று குழு இணைவதையும் விடுத்து, வாழ்வில் எதுவும் ஆட்டோமேடிக்காக நிகழ்வது அல்ல என்பதை அறிந்து, 'அனைவரும் வருக' என்றழைக்கும் இறைநோக்கி ஒருவர் மற்றவரோடு கரம் கோர்த்து நடத்தல் சிறப்பு.

Friday, August 19, 2022

தலைப்புகளும் தான்மையும்

இன்றைய (20 ஆகஸ்ட் 2022) நற்செய்தி (மத் 23:1-12)

தலைப்புகளும் தான்மையும்

இயேசுவின் சமகாலத்தில் ஆறு குழுவினர் முதன்மையாக இருந்தனர்: பரிசேயர்கள், மறைநூல் அறிஞர்கள், சதுசேயர்கள், ஏரோதியர்கள், தீவிரவாதிகள், மற்றும் எஸ்ஸீனியர்கள். இவர்களில் பரிசேயர்கள் சமயம் சார்ந்த தூய்மைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தனர். மறைநூல் அறிஞர்கள் திருச்சட்டத்தைக் கற்றறிந்தவர்களாகவும், அவற்றைப் போதிப்பவர்களாகவும் இருந்தனர். இவர்கள் மோசேயின் அதிகாரத்தைக் கொண்டு போதித்தனர். அதாவது, மறைநூல் கற்கின்ற ஒவ்வொருவரும் தனக்குக் கற்றுக்கொடுத்த ஆசிரியர், அல்லது கடவுள், அல்லது மோசே ஆகியோரின் அதிகாரத்தைக் கொண்டே போதித்தனர். இந்த நிலையில் அவர்கள் மேன்மையானவர்களாகவும் மதிப்புக்குரியவர்களாகவும் கருதப்பட்டனர். காலப்போக்கில் மதிப்புக்குரிய நிலை என்பது மதிப்பு தேடுகின்ற நிலையாக மாறிப்போனது. மக்களால் இயல்பாகவே மதிக்கப்பட்டவர்கள், தங்களை மற்றவர்கள் மதிக்க வேண்டும் என விரும்பத் தொடங்கினர். அந்த விரும்பம் பல்வேறு சடங்குகளாகவும் வெளிப்பட்டது. தங்களை அடையாளப்படுத்திக்கொள்ள மிகவும் வருந்தி முயற்சி செய்தனர். அதே வேளையில், தாங்கள் கற்பிப்பதை செயல்படுத்த முனையவில்லை. 

இந்தப் பின்புலத்தில், இவர்கள் சொல்வதைச் செய்யுங்கள், ஆனால், இவர்கள் செய்வது போலச் செய்யாதீர்கள் என அறிவுறுத்துகின்றார் இயேசு. 

தொடர்ந்து தன் சீடர்கள், 'ரபி,' 'போதகர்' என்னும் தலைப்புகளை விடுப்பதோடு, 'தொண்டர்நிலை' என்ற தான்மையை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்துகின்றார்.

நம் மனம் இயல்பாகவே மற்றவர்களின் அங்கீகாரத்தையும், பாராட்டையும், ஏற்றுக்கொள்ளப்படுதலையும் தேடுகின்றது. இந்த மேட்டிமை எண்ணத்தைத் தடை செய்யுமாறு பணிக்கின்றார் இயேசு. ஏனெனில், இத்தகைய சூழல்களில் நம் எண்ணங்களைப் பெரும்பாலும் மற்றவர்கள் ஆக்கிரமிக்குமாறும், மற்றவர்களைக் கொண்டு என் தான்மையை நிர்ணயிப்பதாகவும் செய்கிறோம். எடுத்துக்காட்டாக, நான் வாயிலுக்கு அருகில் வரும்போது வாட்ச்மேன் எழுந்து நின்று எனக்கு வணக்கம் செலுத்த வேண்டும் என நான் விரும்பினால், என் உணர்வுகளை வாட்ச்மேன் வரையறுக்குமாறு நான் செய்துவிடுகிறேன். அவர் வணக்கம் செலுத்தினால் நான் மகிழ்ச்சியாக உணர்கிறேன். வணக்கம் செலுத்த மறுத்தாலோ அல்லது மறந்தாலோ அவர்மேல் கோபம் கொள்கிறேன். ஆனால், அந்த வணக்கத்தைக் கொண்டு என் தான்மையை நான் வரையறுக்கவில்லை என்றால் என் உணர்வுகள் என் கட்டுப்பாட்டுக்குள்ளேயே இருக்கின்றன.

இதுவே இயேசு சொல்கின்ற உயர்த்தப்படுதல். 

தன்னைத் தாழ்த்துகிற ஒருவர் மற்றவரால் அல்ல, மாறாக, தானாகவே உயர்த்தப்படுகின்றார். அல்லது தானாகவே உயர்ந்துநிற்கின்றார். அவரை உயர்த்துவதற்கு இன்னொருவர் தேவையில்லை.

Thursday, August 18, 2022

உலர்ந்த எலும்புகள்

இன்றைய (19 ஆகஸ்ட் 2022) முதல் வாசகம் (37:1-14)

உலர்ந்த எலும்புகள்

இன்றைய முதல் வாசகத்தில், 'எலும்புக்கூடு பள்ளத்தாக்கு' காட்சியை எசேக்கியேல் காண்கின்றார். உலர்ந்த எலும்புகளுக்கு உருக்கொடுத்து, அவற்றுக்கு உயிரும் கொடுக்கிறார் ஆண்டவராகிய கடவுள். பாபிலோனிய அடிமைத்தனத்தில் இருந்த மக்கள் மீண்டும் புத்துயிர் பெறுவர் என்பதன் அடையாளமாகவே இது இருக்கிறது.

இக்காட்சியில் வரும் முதல் உரையாடல் நம் கவனத்தை ஈர்க்கின்றன.

'எலும்புகள் மிக உலர்வாய் இருந்தன.

அவர் என்னிடம், 'மானிடா! இந்த எலும்புகள் உயிர் பெறமுடியுமா?' என்று கேட்டார்.

நான், 'தலைவராகிய ஆண்டவரே! உமக்குத் தெரியுமே!' என்று மறுமொழி அளித்தேன்.'

மனித வரையறைகளை நன்கு உணர்ந்தவராக இருக்கிறார் என்றார் எசேக்கியேல்.

'முடியுமா?' என்ற கேள்விக்கு, 'ஆம்' அல்லது 'இல்லை' என விடையளிக்காமல், 'நடப்பது அனைத்தும் அவருக்குத் தெரியும்,' 'செய்வதனைத்தையும் அறிந்தவர் ஆண்டவர்' என்ற நிலையில், 'உமக்குத் தெரியுமே' எனப் பதிலளிக்கின்றார்.

இறைவாக்கினரின் இந்தப் பதிலில், அவர் ஆண்டவர்மேல் கொண்டிருந்த நம்பிக்கையும், எதிர்நோக்கும், அதே வேளையில் அவரின் தாழ்ச்சியும் வெளிப்படுகிறது.

நம் ஆராய்ச்சிக்கு உட்படாதவற்றின்மேல் அல்லது நம் அறிவுக்கு எட்டாத பலவற்றைக் குறித்து நாம் கவலைகொண்டு நம்மை நாமே அழித்துக் கொள்கிறோம். 

வாழ்வில் இக்கட்டான கேள்விகளை நாம் எதிர்கொள்ளும்போதும், சூழல்கள் நமக்கு எதிராக நிற்கும்போதும்,

'தலைவராகிய ஆண்டவரே! உமக்குத் தெரியுமே!' என்று சரணாகதி அடைதல் சால்பு.


Wednesday, August 17, 2022

அவர்கள் பொருட்படுத்தவில்லை

இன்றைய (18 ஆகஸ்ட் 2022) நற்செய்தி (மத் 22:1-14)

அவர்கள் பொருட்படுத்தவில்லை

திருமண நிகழ்வை ஒட்டி நம் இல்லங்களில் சொந்த பந்தங்களுக்கு ஆடைகள் எடுக்கும் வழக்கம் நம் ஊர்களில் இன்னும் உள்ளது. சிலர் தாங்களே ஆடைகள் எடுத்துக் கொடுக்கின்றனர். இன்னும் சிலர் ஆடைகளுக்குரிய பணத்தைக் கொடுத்து ஆடைகள் எடுத்துக்கொள்ளுமாறு சொல்கின்றனர். திருமணத்திற்கென்று எடுத்த ஆடைகளை அணிந்து வருவது திருமண வீட்டாரால் எதிர்பார்க்கப்படுகிறது. அல்லது சிலர் திருமண வீட்டார்மேல் உள்ள கசப்புணர்வைக் காட்டுவதற்காக, அவர்கள் எடுத்துக்கொடுத்த ஆடையை அணிய மறுத்து, தாங்கள் விரும்பும் ஆடையில் செல்வதுண்டு. தாங்கள் கொடுத்த ஆடையை நிராகரித்த அவர்கள்மேல் மணவீட்டாருக்குக் கசப்புணர்வு இன்னும் அதிகமாகவே செய்கின்றது.

விண்ணரசு பற்றிய திராட்சைத் தோட்ட எடுத்துக்காட்டைத் தொடர்ந்து, இன்றைய நற்செய்தி வாசகத்தில், இயேசு, திருமண விருந்து எடுத்துக்காட்டைத் தருகின்றார். நேற்றைய எடுத்துக்காட்டின் நிறைவுப் பகுதி நமக்கு இடறலாக இருந்ததுபோல, இன்றைய எடுத்துக்காட்டின் நிறைவுப் பகுதியும் இடறலாக இருக்கிறது.

திருமண ஆடை அணியாத ஒருவனைக் காணும் அரசர், 'தோழா, திருமண ஆடையின்றி எவ்வாறு உள்ளே வந்தாய்?' எனக் கேட்டு, இருளில் தள்ளுகின்றார்.

அழைத்தவர்கள் அனைவரும் வர மறுக்கின்றனர். அவர்கள் தீக்கிரையாக்கப்படுகின்றனர்.

வந்தவர்களில் ஒருவர் திருமண ஆடை இன்றி ஒருவர் வருகின்றார். அவர் இருளில் தள்ளப்படுகின்றார்.

இங்கே இரண்டு விடயங்கள் புரிதலுக்கு உட்படுத்தப்பட வேண்டியவை:

(அ) அழைத்தலை நிராகரிப்பதும் தவறு

அழைத்தலை நிராகரித்தவர்கள் அரசனை ஒரு பொருட்டாகக் கருதவில்லை. அவர்களது முதன்மைகள் வேறாக இருந்தன. 

(ஆ) அழைத்தலுக்கு நம்மைத் தகுதியாக்க மறுப்பதும் தவறு

அழைத்தல் பெற்று விருந்தில் பங்கேற்றவர்களுள் ஒருவர், தனக்குக் கொடுக்கப்பட்ட விருந்து ஆடையை அணியை மறுக்கின்றார். ஆக, அவரும் அரசனை ஒரு பொருட்டாகக் கருதவில்லை.

மனித வாழ்வில், 'அதிகாரம்' என்பது அந்த அதிகாரத்தை ஏற்க ஒருவர் இருக்கும் வரைதான். ஒருவருடைய அதிகாரத்தை நான் ஏற்க மறுத்தால் அவர் என்மேல் அதிகாரம் செலுத்த முடியாது. ஆனால், இங்கே, அரசர் அனைவர்மேலும் அதிகாரம் பெற்றவராக இருக்கின்றார். 

'திருமண ஆடை' என்பதை நாம் இங்கே உருவகமாகவே புரிந்துகொள்ள வேண்டும். தகுதியான அல்லது தகுதிப்படுத்தப்பட்ட வாழ்வே திருமண ஆடை. மத்தேயு குழுமத்தில் நிலவிய ஒரு பிரச்சினைக்கான தீர்வையே நாம் இங்கே காண்கிறோம். கிறிஸ்தவ நம்பிக்கையைத் தழுவுதல் என்பது தானாகவே நடக்கும் ஒரு செயல் அல்ல. மாறாக, அந்த நம்பிக்கைக்கு ஒருவர் தன்னைத் தயார்படுத்த வேண்டும்.

நேற்றைய உவமையோடு இதை ஒப்பிட்டால்,

ஏணியில் ஏறுவது ஓர் அழைப்பு என்றால், அந்த அழைப்பிற்கு ஒருவர் தன்னையே தகுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். தகுதிப்படுத்தவில்லை என்றால், அவர் கீழே விழ வாய்ப்பு உண்டு.

தகுதிப்படுத்துதல் சிறிய அளவில்தான் தொடங்க வேண்டும். திருமண ஆடை அணிதல் போல.

ஏனெனில், 'சிறியவற்றைப் புறக்கணிப்போர் சிறிது சிறிதாய் வீழ்ச்சி அடைவர்' (காண். சீஞா 19:1)

கிறிஸ்தவ வாழ்வில், திருமுழுக்கின்போது நமக்கு வழங்கப்படும் 'வெள்ளைநிற ஆடை' என்பது நம் திருமண ஆடை. இந்த ஆடை நமக்குக் கொடையாக வழங்கப்பட்டாலும், அந்த ஆடையை அணிய நான் என்னைத் தகுதிப்படுத்த வேண்டும்.

அருள்பணியாளர்களாகிய நாங்கள் அணியும் வெள்ளை அங்கி, அல்லது துறவற சபையில் இருப்பவர்களின் ஆடைகள் என அனைத்தும் திருமண விருந்து ஆடைகளே. இவை கொடையாகக் கொடுக்கப்பட்டாலும், இந்த ஆடைகளை அணியும்போதுதான், எங்களையே திருமண விருந்திற்குத் தகுதியாக்கிக் கொள்ள முடியும். வெறுமனே ஆடைகள் அணிதல் அல்ல. மாறாக, ஆடைக்குரிய வாழ்க்கை முறையைத் தகவமைத்துக்கொள்தல்.

சேறும் சகதியும் தூசியுமாய் வந்த தன் இளைய மகன்மேல் புதிய ஆடையைப் போர்த்திய இரக்கத்தின் இறைவன், புதிய ஆடையை அணிய மறுத்தால் நீதியுள்ள இறைவனாக நம்மைத் தண்டிப்பார் என்பதை நினைவுபடுத்துகிறது நற்செய்தி வாசகம்.


Tuesday, August 16, 2022

நீங்களும் நானும்

இன்றைய (17 ஆகஸ்ட் 2022) நற்செய்தி (மத் 20:1-16)

நீங்களும் நானும்

மத்தேயு நற்செய்தியில் மட்டுமே காணப்படுகின்ற விண்ணரசு பற்றிய உவமை ஒன்றை இன்றைய நற்செய்தியில் நாம் வாசிக்கின்றோம். காலையிலிருந்து மாலை வரை வேலை செய்த அனைவருக்கும் ஒரே கூலி கொடுக்கப்படுகின்றது. நமக்கு நெருடலான ஒரு வாசகம். 'இது அநீதி!' என்று குரல் எழுப்ப நம்மைத் தூண்டும் ஒரு வாசகம். 'அநீதி எதுவும் நடக்கவில்லையே!' என்று நம்மையே சாந்தப்படுத்த நம்மைத் தூண்டும் வாசகம். 'நிலக்கிழார் அனைவருக்கும் இரக்கம் காட்டியிருக்கலாமே! முதலில் வந்தவர்களை நீதியோடும் கடைசியில் வந்தவர்களை இரக்கத்தோடும் அவர் அணுகுவது ஏன்?' என்று கேட்கத் தூண்டும் வாசகம்.

இந்த வாசகத்தின் வரலாற்றுப் பின்னணி, மத்தேயு நற்செய்தியாளரின் குழுமத்தில் நிலவிய வேறுபாடு அல்லது பிரிவினையாக இருக்க வேண்டும். இயேசுவின் உயிர்ப்புக்குப் பின்னர் நற்செய்தியை அறிவிக்கின்ற திருத்தூதர்கள் முதலில் யூதர்களுக்கும், பின்னர் புறவினத்தாருக்கும் அறிவிக்கின்றனர். ஆக, முதலில் கிறிஸ்தவராக மாறியவர்கள் நாங்கள், நீங்களோ கடைசியில் அல்லது பின்னர் வந்தவர்கள் என்ற, 'நாங்கள்-நீங்கள்' பாகுபாடு அங்கே எழுந்திருக்கலாம். 'முதலில் வந்த நாங்கள் பெரியவர்களா? கடைசியில் வந்த நீங்கள் பெரியவர்களா?' என்ற கேள்விக்கு விடையாக மத்தேயு நற்செய்தியாளர் இந்த உவமையை உருவாக்கியிருக்கலாம். அல்லது இயேசு இதைச் சொல்லியிருக்க, மற்ற நற்செய்தியாளர்கள் இதை எழுதாமல் விட்டிருக்கலாம்.

இந்த உவமையை நாம் பல கோணங்களில் பார்;த்திருக்கின்றோம். திராட்சைத் தோட்டம் என்பது பொதுவாக இஸ்ரயேல் மக்களைக் குறிக்கின்ற உருவகம். ஆக, புதிய இஸ்ரயேலாகிய திருச்சபை என்னும் திராட்சைத் தோட்டத்தை இது குறிப்பதாக நாம் எடுத்துக்கொள்ளலாம். வேலைக்கு முதலில் வந்தவர்களின் பார்வையில் நாம் இந்த உவமையைப் பார்த்தால், அவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டது போல நமக்குத் தெரிகிறது. கடைசியில் வந்தவர்களின் பார்வையில் பார்த்தால், கடவுள் அவர்களுக்கு இரக்கம் காட்டியது நமக்குத் தெரிகிறது. அவர்களின் தேவை அறிந்து அவர்களுக்குக் கூலி கொடுத்தது தெரிகிறது. நிலக்கிழாரின் பார்வையில் பார்த்தால், அவர் தன் திராட்சைத் தோட்டப் பணியையே முதன்மைப் படுத்துகின்றார். பணம் அவருக்கும் பெரிதாகத் தெரியவில்லை. ஆகையால்தான், குறைவான அளவு வேலை செய்தவர்களுக்கும் அவர் முழுமையான கூலியைக் கொடுக்கினின்றார். ஒரு சிலரை நீதியோடும் - பேசிய அளவு கூலி, இன்னும் சிலரை இரக்கத்தோடும் - குறைவான வேலைக்கும் நிறைவான கூலி என்று அவர் கொடுக்கின்றார்.

இரக்கத்திற்கும் நீதிக்குமான ஒரு பிரச்சினை தீர்க்க முடியாத பிரச்சினை.

எடுத்துக்காட்டாக, தேர்வில் ஒரு மாணவன் பார்த்து எழுதுகிறான் என வைத்துக்கொள்வோம். அந்த மாணவன் ஏழைப் பின்புலத்திலிருந்து வருபவன். அவன் நல்ல மதிப்பெண் வாங்கினால்தான் அவன் விரும்புகிற அல்லது இலவசமான படிப்பு அவனுக்குக் கிடைக்கும். அவன் ஏழை என்பதற்காக அவன்மேல் இரக்கப்பட்டு அவனைப் பார்த்து எழுதுமாறு அனுமதித்தால் அவன் இன்னொரு மாணவனின் இடத்தைப் பறித்துக்கொள்வான் அல்லவா! அல்லது அவன் செய்த செயலுக்கான தண்டனை என்று நீதியோடு தண்டித்தால் அவன் தன் எதிர்காலத்தையே இழந்துவிடக் கூடும் அல்லவா!

'சாலையில் பச்சை விளக்கு எரிகிறது. உன் வாகனம் செல்லலாம்!' என்கிறது நீதி.

'முதியவர் ஒருவர் சாலையைக் கடந்துகொண்டிருக்கின்றார். பொறு!' என்கிறது இரக்கம்.

இதே பிரச்சினைதான் லூக்கா நற்செய்தி 13இல் நாம் காணும் காணாமல் போன மகன் உவமையிலும் வருகின்றது. 'சொத்தை எல்லாம் அழித்தவனுக்கு அல்லது குற்றம் செய்தவனுக்குத் தண்டனையே தவிர, மன்னிப்பு அல்ல!' என்கிறது நீதி கேட்டு நிற்கும் அண்ணனின் மனது. 'அவனாவது வந்தானே! சொத்து போனா பரவாயில்லை!' என்கிறது இரக்கம் காட்டி நிற்கும் அப்பாவின் மனது. இரண்டு பேரின் விவாதமும் அவரவரின் தளத்திலிருந்து பார்த்தால் சரி.

இந்த உலகத்தில் இரக்கம் மட்டுமே காட்டிக்கொண்டிருந்தால் எந்தவொரு ஒழுங்கும் இல்லாமல் போய்விடுமே!

நீதியைக் கொண்டு மட்டுமே நடத்த முயன்றால் எல்லாரும் இயந்திரங்கள் ஆகிவிடுமே!

'நான் நல்லவனாய் இருப்பதால் பொறாமையா?' எனக் கேட்கிறார் நிலக்கிழார்.

'நான் நீதியைக் கேட்பதால் உனக்குக் கோபமா?' என்று அந்த வேலைக்காரர் கேட்டிருந்தால் நிலக்கிழார் என்ன பதில் அளிப்பார்?

காலையிலேயே வந்தவர் தனக்கு அநீதி இழைக்கப்பட்டதாக வெளியேறுகிறார். மாலையில் வந்தவர் தன் தலைவர் இரக்கம் காட்டியதாக மகிழ்ச்சியோடு வெளியேறுகிறார்.

வாழ்க்கை இப்படித்தான் குண்டக்க மண்டக்க நம்மை நடத்துகிறது. 'இது ஏன்?' என்ற கேள்வியை நம்மால் கேட்க முடிவதில்லை.

நீதியையும் இரக்கத்தையும் தாண்டி வாழ்க்கை தன் வழியில் நம்மை இழுத்துக்கொண்டே செல்கிறது.

'நான் நல்லவனாய் இருப்பதால் உனக்குப் பொறாமையா?' என்று கடவுள் என்னவோ கேட்டுக்கொண்டே இருக்கிறார்.

'உன்னை நல்லவன் என்று யார் சொன்னா?' என்ற நம் புலம்பலும் திராட்சைத் தோட்டத்திற்குள் தோன்றி மறைகிறது.

'எங்களை யாரும் வேலைக்கு அமர்த்தவில்லை' என்னும் வார்த்தைகள் நம் உள்ளத்தில் ஓர் உருவகத்தைத் தூண்டுகின்றன.

சின்ன வயசுல பாம்புக் கட்டம் விளையாடியிருக்கிறீர்களா? 1 முதல் 99 வரை உள்ள கட்டங்களில், சில கட்டங்களில் ஏணிகள், சில கட்டங்களில் பாம்புகள் என சிறிய, பெரிய அளவுகளில் இருக்கும். நாம் தாயக்கட்டை அல்லது சோளிகளை அல்லது புளியங்கொட்டைகளை வீசி நகர நகர, சில நேரங்களில் ஏணிகளில் உயர்வோம், சில நேரங்களில் பாம்பு கடி பட்டு கீழே வருவோம். 98 வது எண்ணில் ஒரு பாம்புத் தலை இருக்கும். அந்தப் பாம்பு கொத்தியது என்றால், கீழே 3ஆம் எண்ணுக்கு நாம் வந்துவிடுவோம். அதே போல 5ஆம் எண்ணில் ஓர் ஏணி இருக்கும். அதில் ஏறினால் நாம் 96வது கட்டத்திற்கு உயர்ந்திடுவோம்.

இந்தக் கட்டங்களில் விளையாடும் நமக்கு, இத்தனை எண்தான் விழும் என்று நம்மால் கணிக்க முடியுமா? கைகளை மடக்கி ஏமாற்றி விளையாண்டால் ஒரு வேளை கணிக்கலாம். ஏணியில் ஏறிக்கொண்டே ஒருவன் இருக்கிறான். மற்றவன் பாம்புக் கடிபட்டு கீழே உள்ள கட்டங்களில் இருக்கிறான். ஏணியில் ஏறியவன் பாம்புக் கடிபட்டவனைப் பார்த்து, 'நீ தோற்றுவிட்டாய்!' என்று சொல்ல முடியுமா?

'முடியாது'

'சொல்லக் கூடாது' என்றே நான் சொல்வேன்.

ஒருவன் ஏணியில் ஏறுவதும், இன்னொருவன் பாம்புக் கடி படுவதும் இயல்பாக விளையாட்டில் நடக்கக் கூடியது. அங்கே எதுவும் தகுதியைப் பொருத்து நடப்பதில்லை. ஒருவர் உயர்ந்த பதவியில் இருக்கிறார் என்றால், இன்னொருவர் உயர்ந்த பதவிக்கு வர முடியவில்லை என்றால், உயர்ந்த பதவியில் இருப்பவர் மற்றவரை விடத் தகுதி வாய்ந்தவர் என்பது பொருள் அல்ல. அவர் கட்டத்தில் ஏணி இருந்தது, இவர் கட்டத்தில் பாம்பு இருந்தது, அவ்வளவுதான்.

இன்று நான் என் அறையில் அமர்ந்து இதை கணிணியில் தட்டச்சு செய்கிறேன். என் அறைக்கு வெளியே இன்னொருவர் சுத்தம் செய்துகொண்டிருக்கிறார். அவரை விட நான் மேலானவனா? இல்லை. அவரை விட எனக்குத் தகுதி கூடுதலா? இல்லை. இருவரும் வாழ்வின் பாம்புக்கட்டத்தில் அவரவருடைய எண்களில் இருக்கிறோம். அவ்வளவுதான்! நான் பெருமை கொள்ளவோ, அவர் சிறுமை கொள்ளவோ இடமே இல்லை.

ஆனால், பல நேரங்களில் ஏணிகளில் நாம் உயரும்போது, வாழ்வில் வெற்றிபெறும்போது, உயர் பதவிகளை அடையும் போது, 'இது என்னால் நடந்தது! இதற்கு நான் தகுதி வாய்ந்தவன்!' எனக் கருதி இறுமாப்பு அல்லது ஆணவம் கொள்கிறோம். 

இது தவறு எனக் காட்டுகிறார் இன்றைய நற்செய்தி வாசகத்தில் நாம் காணும் நிலக்கிழார்.

ஆறு மணிக்கு வேலைக்கு அமர்த்தப்பட்டவர் தன் தகுதியால் தனக்கு வேலை கிடைத்தது என நினைத்துப் பெருமிதம் கொள்கிறார். 

மாலை ஐந்து மணிக்கு வேலைக்கு அமர்த்தப்பட்டவரை யாரும் அதுவரை வேலைக்கு அமர்த்தவில்லை. அவரும் காத்துக்கொண்டேதான் இருந்தார். எந்த விதத்திலும் அவருடைய தகுதி குறையவில்லை. 

காலையில் வேலைக்கு வந்தவர் ஏணியில் வந்தார். மாலையில் வேலைக்கு வந்தவர் பாம்பு கொத்திக் காத்துக் கிடந்தார்.

இங்கேதான், தோட்டக்காரர் கட்டங்களைப் புரட்டிப் போடுகின்றார். பாம்புகளை அழித்து விட்டு ஏணிகள் என்றும், ஏணிகளை அழித்துவிட்டு பாம்புகள் என்றும் வரைகின்றார். பாம்புகளால் கடிபட்டவர்கள் மகிழ்கின்றனர். ஏணிகளில் ஏறியவர்கள் முணுமுணுக்கிறார்கள். கட்டங்கள் புரட்டிப் போடப்படுவதை அவர்கள் விரும்பவில்லை. கட்டங்கள் என்றென்றும் அப்படியே இருக்க வேண்டும் என அவர்கள் விரும்புகிறார்கள். ஏனெனில், ஏணிகளில் ஏறியது தங்களது தகுதியால் என அவர்கள் நினைத்துக்கொள்கிறார்கள். பாவம் அவர்கள்! அறியாமையில் இருக்கிறார்கள்!

இரண்டு கேள்விகள் எனக்கு:

(அ) என் இருத்தலை நான் என் தகுதியின் பலன் எனக் கருதி பெருமை கொள்வதை விடுத்து, என் இருத்தல் இயல்பாக நடக்கிறது என்ற வாழ்வியல் பாடத்தைக் கற்றுக்கொள்ளத் தயாராக இருக்கிறேனா?

(ஆ) யாரும் வேலைக்கு அமர்த்தாத, யாரும் கண்டுகொள்ளாத, யாரும் உயர்பதவி அளிக்காத மற்றவர்களைப் பார்க்கும்போது, என் மனநிலை இரக்கம் சார்ந்ததாக இருக்கிறதா? அல்லது அவர்கள் சோம்பேறிகள், தகுதியற்றவர்கள் என நான் அவர்களைப் பழிக்கிறேனா?

பழித்தல் தவறு. பெருமிதம் கொள்தல் தவறு.

எது சரி?

அடுத்தவர் என்னைப் பார்த்துப் பொறாமைப்படும் அளவுக்கு நல்லவனாய் இருத்தலே சிறப்பு.

'தோழா! நான் நல்லவனாய் இருப்பதால் உனக்குப் பொறாமையா?' என்று கேட்கிறார் நிலக்கிழார்.

'நீ இருக்கிறவன்.நான் இல்லாதவன். நீ இடுகிறவன். நான் நீட்டுகிறவன்' என்று தனக்குள் சொல்லிக்கொண்டே மௌனமாக வெளியேறுகின்றான் பணியாளன்.

'ஒரு மணி நேரம் வேலை செஞ்ச எங்களுக்கும் அதே கூலிதான்!' என்று கேலி பேசுகிறான் உடன் ஊர்க்காரன்.

'கஷ்டப்படாம வந்த காசு கையில ஒட்டாது' என்று ஒப்புக்கு ஆறுதல் சொல்லிக் கொள்கிறான் இவன்.

இவன் இன்றும் நம்மிடைய இருக்கிறான். சில நேரங்களில் அவன் நீங்களாகவும் நானாகவும் இருக்கிறான்.


Monday, August 15, 2022

நிராகரிக்கப்படும் ஆஃபர்

இன்றைய (16 ஆகஸ்ட் 2022) நற்செய்தி (மத் 19:23-30)

நிராகரிக்கப்படும் ஆஃபர்

பாதி வழி வந்த இளவல் மீதி வழி செல்ல முடியாமல் தன் வழி நடக்க, இயேசுவுக்கும் அவருடைய சீடர்களுக்கும் இடையே உரையாடல் தொடர்கிறது. உரையாடலில் இரண்டு கருத்துருக்கள் இடம் பெறுகின்றன: (அ) செல்வர் விண்ணரசில் புகுவது கடினம். (ஆ) இயேசுவைப் பின்பற்றுபவர்களுக்குக் கிடைக்கும் கைம்மாறு

அ. செல்வரும் விண்ணரசும்

'செல்வர் விண்ணரசில் புகுவது கடினம்' எனச் சொல்கிறார் இயேசு. 'செல்வர்' என்றவுடன் நாம் உடனடியாக, செல்வம் படைத்த மற்றவர்களைத்தான் பல நேரங்களில் நினைக்கின்றோம். பெரிய அடுக்குமாடியில் குடியிருந்து, வங்கியில் நிறைய சேமிப்பு வைத்திருந்து, நிறைய நிலபுலங்கள் வைத்திருக்கும் மற்றவர்களை நாம் நம் மனத்திற்குள் சுட்டிக்காட்டி, அவர்கள் விண்ணரசில் நுழைய முடியாது என்று சொல்லி நாம் அகமகிழ்கிறோம். அது தவறு. இரண்டு புரிதல்கள் அவசியம். ஒன்று, 'செல்வம்' என்பது சார்பியல் வார்த்தை. எடுத்துக்காட்டாக, 'அவன் உயரமானவன்' என்ற வாக்கியத்தில், 'அவன் யாரைவிட உயரமானவன்' என்ற ஒப்பீடு அடங்கியுள்ளது. இந்த ஒப்பீடு இருந்தால்தான் வார்த்தையின் பொருள் கிடைக்கும். அளவு, நிறம், மதிப்பு சார்ந்த சொற்கள் அனைத்தும் சார்பியல் சொற்களே. யாரும் செல்வரும் அல்லர். யாரும் ஏழையரும் அல்லர். அல்லது எல்லாரும் செல்வர். எல்லாரும் ஏழையர். இரண்டு பெரிய வீடுகள் வைத்திருக்கும் ஒருவரை நான் செல்வர் என அழைக்கிறேன் என்றால், நல்ல உடல்நலத்தோடு இருக்கும் ஏழையும் செல்வரே. இரண்டு, செல்வத்தைப் பற்றிய புரிதல் விவிலியத்தில் தெளிவாக இல்லை. செல்வம் மறுக்கும் விவிலியமே, விண்ணரசைப் புதையலுக்கும் முத்துக்கும் ஒப்பிடுகிறது என்பதை மனத்தில் கொள்ளல் வேண்டும்.

ஆனால், செல்வம் என்பது சீடத்துவத்துக்கான பெரிய தடை என்பதில் விவிலியம் தெளிவாக இருக்கிறது. அந்த ஒரு பின்புலத்தில்தான் இந்தப் பாடத்தைப் புரிந்துகொள்தல் வேண்டும். செல்வம் ஏன் தடையாக இருக்கிறது? செல்வம் ஒருவருக்குத் தன்னிறைவைக் கொடுக்கிறது. செல்வம் இருந்தால் கோவில் கதவுகள் தானாகவே திறக்கும். எடுத்துக்காட்டாக, திருப்பதி கோவிவில், நேர்மையான செல்வம் ஈட்டிய ஒருவர் தன் காணிக்கையை பெருமாளுக்குக் கொடுக்க நீண்ட நாள்கள் காத்திருக்க வேண்டும். ஆனால், இலஞ்சம் வாங்கிய அரசியல்வாதி, இலஞ்சப் பணத்தில் காணிக்கை கொடுக்க, அதே இலஞ்சப் பணத்தைப் பயன்படுத்தி, விஐபி நுழைவுச்சீட்டு பெற்று, ஓரிரு நிமிடங்களில் கடவுளின் அருளைப் பெற முடியும். இதே நிலை நம் ஆலயங்களிலும் சில நேரங்களில் நீடிக்கிறது. பங்கு ஆலயத்திற்கு அள்ளிக் கொடுக்கும் ஒருவர் அலுவலகம் வந்தால் அவருக்கு உடனடியாக வேலை நிறைவேறுகிறது. காத்திருக்கும் மற்றவர்கள் காத்துக்கொண்டே இருக்க வேண்டும். செல்வத்தால் இப்படி நிறைய பலன்கள் இருப்பதால்தான் சபை உரையாளரும், 'பணம் இருந்தால்தான் எல்லாம் கிடைக்கும்' (காண். சஉ 10:19) என்கிறார். தன்னிறைவு பெற்ற ஒருவர் கடவுளைத் தான் உடைமையாக்கிக் கொள்ளலாம் என நினைக்கிறார்.

உடல்நலம், பொருள், அறிவு என்னும் எல்லாச் செல்வங்களும் தன்னிறைவுக்கே இட்டுச் செல்லும். இத்தன்னிறைவை இறைவனிடமிருந்து நம்மைத் திருப்பிவிடும். இதே எச்சரிக்கையை இன்றைய முதல் வாசகமும் விடுக்கிறது.

ஆ. கைம்மாறு

செல்வங்களைத் துறக்கச் சொல்லும் இயேசு, தன்னைப் பின்பற்றுபவர்கள் நூறு மடங்கு நிலபுலன்கள் பெறுவர் எனச் சொல்கிறார். அதாவது, நான் ஓர் ஏக்கர் நிலம் துறந்தால் எனக்கு நூறு ஏக்கர் கிடைக்கும். செல்வத்தைத் துறக்கும் ஒருவருக்கு செல்வமே மீண்டும் வாக்களிக்கப்படுவது புதிராக இருக்கிறது. 'எல்லாவற்றையும் விட்டு விட்டு நாங்கள் உம்மைப் பின்பற்றியவர்களாயிற்றே!' என்று பேதுரு இயேசுவிடம் கேட்கின்றார். இயேசுவும், 'நீங்கள் ஆட்சிப் பொறுப்பில் பங்கேற்பீர்கள்' என்றும், 'இழந்தவை அனைத்தும் நூறு மடங்கு கிடைக்கும்' எனவும் கூறுகின்றார். இயேசுவின் ஆஃபர் இன்றுவரை நிராகரிக்கப்படுகிறது. இயேசுவின் ஆஃபர் அப்படி ஒன்றும் இன்று யாரையும் ஈர்க்கவில்லை. ஏனெனில், இயேசுவின் ஆஃபர் மறுவுலகம் சார்ந்தது. செல்வர்கள் மறுவுலகை நம்புவதில்லை. இவ்வுலகிலேயே விண்ணகத்தை அனுபவிக்கும் ஒருவருக்கு மறுவுலகில் விண்ணகம் இருந்தால் என்ன, இல்லாவிட்டால் என்ன? செல்வர்கள் உடனடி ஆஃபரையே விரும்புகின்றனர்.

ஆக, இரண்டு கருத்துருக்களிலும் செல்வம், சீடத்துவத்துக்கான தடை என்பது முன்வைக்கப்படுகிறது.

என் இதயம் எங்கே இருக்கிறதோ அதுவே என் செல்வம்.

இறைவன் மேல் இருந்தால் அது விண்ணகம்.

மற்றதன் மேல் இருந்தால் அதை நான் இழக்க வேண்டும்.

இன்றைய முதல் வாசகத்தில் (எசே 28:1-10) இறைவாக்கினர் எசேக்கியேல் வழியாக ஆண்டவராகிய கடவுள் தீர் நகரின் மன்னனைச் சாடுகின்றார். 'உன் செல்வத்தினாலோ உன் இதயம் செருக்குற்றது' எனக் கடிந்துகொள்கின்றார். செல்வம் ஒருவரைத் தன்னிறைவுக்கு இட்டுச்சென்று, இறைசார்ந்த நிலையிலிருந்து தள்ளி வைப்பதால் அது ஆபத்தாகிறது.


Sunday, August 14, 2022

மன்னவரின் மாளிகைக்குள் நுழையும்போது

I திருவெளிப்பாடு 11:9, 12:1-6, 10 II. 1 கொரிந்தியர் 15:20-26 III. லூக்கா 1:39-56


(இந்த மறையுரையானது 'லெக்ஷியோ திவினா' (Lectio Divina என்ற ஆன்மிக-இறைவழிபாட்டு முறையில் எழுதப்பட்டுள்ளது)

மன்னவரின் மாளிகைக்குள் நுழையும்போது  

1. இறைவேண்டல்

'அருமைமிகு அரசிள மகளிர் உம்மை எதிர்கொள்வர்.

ஓபிரின் பொன் அணிந்து வடிவாக வலப்புறம் நிற்கின்றாள் பட்டத்து அரசி!

கேளாய் மகளே! கருத்தாய்க் காதுகொடுத்து கேள்!

உன் இனத்தாரை மறந்துவிடு. பிறந்தகம் மறந்துவிடு.

உனது எழிலில் நாட்டங் கொள்வர் மன்னர்.

உன் தலைவர் அவரே. அவரைப் பணிந்திடு!

மன்னவரின் மாளிகைக்குள் நுழையும்போது அவர்கள்

மகிழ்ச்சியோடும் அக்களிப்போடும் அழைத்து வரப்படுவர்!'

(திபா 45:9,10-11,15)

2. இறைவார்த்தை கேட்டல்

முதல் வாசகம் (திருவெளிப்பாடு 11:9, 12:1-6, 10)

பத்மு தீவில் காட்சி காண்கின்ற யோவான் வரவிருக்கின்ற ஏழு அடையாளங்கள் பற்றி எழுதுகின்றார். அவற்றில் முதல் அடையாளமே இன்றைய வாசகப் பகுதி. இதை பெரிய அடையாளம் என அவர் அழைக்கின்றார். கதிரவனை ஆடையாக அணிந்திருக்கும் பெண் இஸ்ரயேலைக் குறிக்கின்றது. ஏனெனில், விவிலியத்தில் சமய அடையாளங்கள் பெண் உருவகமாகவே கொடுக்கப்பட்டுள்ளன: ஈசபெல் - பாகால் வழிபாடு (திவெ 2:20), விலைமகள் - போலி சமயம் (திவெ 17:2), மணமகள் - கிறிஸ்துவின் திருச்சபை (19:7-8).  'கதிரவனை ஆடையாக அணிந்திருக்கும் பெண்' கத்தோலிக்க மரபில் அன்னை கன்னி மரியாள் என பல ஓவியங்களில் நாம் பார்க்கின்றோம். அன்னை கன்னி மரியாளின் பல திருவுருவங்கள் அவர் நிலவின்மேல் நிற்பவராகவும், கதிரவனின் ஒளியை ஆடையாக அணிந்திருப்பவராகவும், அவருடைய தலையைச் சுற்றி 12 விண்மீன்கள் இருப்பதாகவும் சித்தரிக்கின்றன. ஆனால், இது இஸ்ரயேலையே குறிக்கிறது. யோசேப்பு காண்கின்ற கனவில் (தொநூ 37:9-11) யாக்கோபு கதிரவனாகவும், ராகேல் நிலவாகவும், அவர்களுடைய பிள்ளைகள் பன்னிரு விண்மீன்களாகவும் உள்ளனர். மற்ற இடங்களிலும் சீயோன் அல்லது எருசலேம் அல்லது இஸ்ரயேல் பெண்ணாக உருவகிக்கப்பட்டுள்ளது (காண். எசா 54:1-6, எரே 3:20, எசே 16:8-14, ஓசே 2:19-20).

இஸ்ரயேலிடமிருந்து பிறக்கும் குழந்தை இயேசுவைக் குறிக்கிறது. இந்தக் குழந்தை இயேசுவைக் குறிப்பதால் இந்தப் பெண் அன்னை கன்னி மரியா என்றும் கூறலாம். நெருப்பு மயமான பெரிய அரக்கப் பாம்பு ஒட்டுமொத்த தீமையின் உருவகமாக உள்ளது. தானியேல் 7:7-8இன் பின்புலத்தில், ஏழு தலைகளும் பத்துக் கொம்புகளும் உள்ள இந்தப் பாம்பு உரோமை அரசைக் குறித்தது. இந்தக் குழந்தையை விழுங்க உரோமை அரசு துடிக்கிறது. பெண் பாலைவனத்துக்குத் தப்பி ஓடுகிறார். பாலைவனம் என்பது இங்கே இறைவன் தருகின்ற பாதுகாப்பைக் குறிக்கிறது. 1260 நாள்கள் (மூன்றரை வருடங்கள்), தானியேல் 9இன் பின்புலத்தில் இறைவாக்கு நிறைவேறும் ஆண்டைக் குறிக்கிறது. 'கடவுள் இடம் ஏற்பாடு செய்தல்' என்பது கடவுளின் பராமரிப்புச் செயலைக் காட்டுகிறது.

அரக்கப்பாம்பு தோல்வியுறுகிறது. விண்ணகத்தில் பெரியதொரு புகழ்ச்சி அல்லது வாழ்த்துப் பாடல் ஒலிக்கிறது.

இரண்டாம் வாசகம் (1 கொரிந்தியர் 15:20-26)

கொரிந்து ஒரு பணக்கார குடியேற்ற நகரம். பவுல் தன்னுடைய இரண்டாம் தூதுரைப் பயணத்தில் ஏறக்குறைய 18 மாதங்கள் இங்கே பணியாற்றினார் (காண். திப 18). கொரிந்து நகர்த் திருஅவையில் உள்ள பிரச்சினைகள் பற்றி அறிகின்ற பவுல், அந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வு வழங்க கடிதம் ஒன்றை எழுதுகின்றார். பவுலின் அதிகாரம், திருஅவையில் பிரிவுகள், பாலியல் பிறழ்வு, பரத்தைமை, சிலை வழிபாடு, அப்பம் பிட்குதல், கொடைகள் மற்றும் தனிவரங்கள் என்னும் பிரச்சினைகளின் வரிசையில், இறந்தோர் உயிர்த்தெழுதல் என்ற பிரச்சினையும் உள்ளது. முந்தையவை அனைத்தும் அறநெறி சார்ந்த பிரச்சினைகளாக இருக்க, 'இறந்தோர் உயிர்த்தெழுதல்' என்பது இறையியல் அல்லது கொள்கைசார் பிரச்சினையாக இருக்கிறது. கிறிஸ்துவின் சிலுவை மற்றும் இறப்பு பற்றித் தொடக்கத்தில் (அதி. 2) பேசுகின்ற பவுல், கிறிஸ்துவின் உயிர்ப்பு பற்றி இறுதியில் (அதி. 15) பேசுகின்றார்.

இறந்தோர் உயிர்ப்பு பற்றிய புரிதலுக்கு இரு தடைகள் இருந்தன: ஒன்று, யூத சமயத்தில் இறந்தோர் உயிர்ப்பு பற்றிய தெளிவான கருத்து இல்லை. 'ஷெயோல்' அல்லது 'பாதாளம்' என்பது இறந்தோர் வாழும் இடம் என்று கருதப்பட்டது. 'எல்லா உயிர்களும் இறுதியாகச் செல்லும் இடம் ஒன்றே. எல்லாம் மண்ணினின்றே தோன்றின. எல்லாம் மண்ணுக்கே மீளும்' (காண். சஉ 3:20). ஆண்டவர் உயிர் தருவார் (காண். இச 32:39) என்ற புரிதல் பிந்தைய காலத்தில்தான் வருகின்றது. இரண்டு, கொரிந்து நகர மக்கள் பிளேட்டோவின் மெய்யியல் அறிந்தவர்களாக இருந்தனர். பிளேட்டோவின் புரிதல்படி 'உடல்-ஆன்மா' என்று இருநிலைகள் உள்ளன. இவற்றில், உடல் அழியக் கூடியது. ஆன்மா எப்போதும் உயிரோடு இருக்கக் கூடியது. அப்படி என்றால், அழியக் கூடிய உடல் எப்படி அழியாமல் உயிர்த்தெழ இயலும்? என்று அவர்கள் கேட்டனர்.

இந்தப் பின்புலத்தில் இரண்டாம் வாசகத்தைக் காண வேண்டும். ஆதாம் வழியாக இறப்பு வந்தது போல, கிறிஸ்து வழியாக இறந்தோர் உயிர்த்தெழுகின்றனர் என்கின்ற பவுல், சாவு அழிக்கப்பட்டவுடன் அனைத்தும் கடவுளுக்கு அடிபணியும் என்கிறார். அதாவது, இறந்தோர் உயிர்த்தல் என்பது எப்படி என்று சொல்லாமல், இறந்தோர் உயிர்த்தெழுதல் 'ஏன்' என்ற நிலையில் பதிலிறுக்கிறார் பவுல்.

நற்செய்தி வாசகம் (லூக்கா 1:39-56)

இன்றைய நற்செய்தி வாசகம் இரண்டு பகுதிகளாக அமைந்துள்ளது. முதல் பகுதியில் எலிசபெத்து கன்னி மரியாவை வாழ்த்துகிறார். இரண்டாம் பகுதியில் மரியா கடவுளைப் புகழ்ந்து பாடுகின்றார். வானதூதர் கபிரியேலிடமிருந்து இயேசு பிறப்பின் முன்னறிவிப்பு கேட்டவுடன் விரைவாக யூதேய மலைநாட்டிலுள்ள ஓர் ஊருக்கு விரைந்து செல்கின்றார் மரியா. மரியாவின் வாழ்த்து கேட்டவுடன் எலிசபெத்து தூய ஆவியால் ஆட்கொள்ளப்படுகின்றார். எலிசபெத்தின் வாழ்த்துச் செய்தி தன் நோக்கி வர, மரியா, தன் வாழ்த்துச் செய்தியை இறைநோக்கித் திருப்புகின்றார். மரியாவின் புகழ்ச்சிப்பாடல் முதல் ஏற்பாட்டு அன்னாவின் பாடலோடு (காண். 1 சாமு 1-2) நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தாலும், இங்கே மரியாவின் பாடல் மூன்று நிலைகளில் கடவுளை வாழ்த்துகின்றது: ஒன்று, தனக்குக் கிடைத்த பேற்றுக்காக. இரண்டு, அவர் செய்யும் புரட்சிக்காக (புரட்டிப் போடுதலுக்காக). மூன்று, அவர் நிறைவேற்றும் வாக்குறுதிக்காக.

3. இறைவார்த்தை தியானித்தல்

இன்று நாம் அன்னை கன்னி மரியாவின் விண்ணேற்புப் பெருவிழாவைக் கொண்டாடுகின்றோம். 'கடவுளாக மாறுவீர்கள்' என்ற பாம்பின் பொய் கேட்டு, விலக்கப்பட்ட கனி உண்ட ஏவாள் மனுக்குலத்தின் தாயாக மாறுகின்றார். 'இதோ ஆண்டவரின் அடிமை!' என்று வானதூதருக்குச் சொல்லி, மீட்பின் கனியைத் தன் வயிற்றில் தாங்கிய மரியா இறைவனின் தாயாக மாறுகின்றார்.

'நான் கடவுளைப் போல ஆவேன்!' என்று தன்னை உயர்த்தியதால் ஏவாள் தோட்டத்திலிருந்து வெளியேற்றப்பட்டார்.

'நான் ஆண்டவரின் அடிமை!' என்று தன்னைத் தாழ்த்தியதால் மரியா தோட்டத்திலிருந்து விண்ணகத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டார்.

முதல் வாசகத்தில், பெண் அரக்கப் பாம்பிடமிருந்து பாதுகாக்கப்பட்டது போல, மரியா தீமையிடமிருந்து வியத்தகு முறையில் பாதுகாக்கப்படுகின்றார். இரண்டாம் வாசகத்தில், சாவு என்னும் பகைவன் கிறிஸ்துவால் அழிக்கப்பட்டது என்பதை அடையாளப்படுத்த சாவைத் தழுவாமல் மரியா விண்ணேற்பு அடைகின்றார். நற்செய்தி வாசகத்தில் நாம் காண்பது போல, எப்போதும் தன் கண்களை விண்ணகத்தின்மேலேயே பதித்திருந்த மரியா, அந்த விண்ணகத்திற்கே எடுத்துக்கொள்ளப்படுகின்றார்.

4. இறைவார்த்தை வாழ்தல்

(அ) தீமையிடமிருந்து விலகி நிற்கும் ஒவ்வொரு நிமிடமும் நாம் விண்ணேற்பு அடைகின்றோம். ஆக, தீமையிலிருந்து விலகி நிற்க எண்ணுதல், மற்றும் முயற்சி செய்தல் நலம்.

(ஆ) இறப்பு என்பது நாம் எதிர்கொள்ள வேண்டிய எதார்த்தம். உயிர்ப்பு என்ற ஒன்றுதான் இறப்புக்கு பொருள் தருகின்றது. அந்த உயிர்ப்பை எதிர்நோக்கி வாழ்தல்.

(இ) மரியா தன் உறவினர் நோக்கி உடலிலும், தன் இறைவன் நோக்கி உள்ளத்திலும் நகர்கின்றார். நம் வாழ்விலும் இவ்விரு வகை நகர்வுகளை நமக்குப் பொருள் தருகின்றன.

5. செயல்பாடு

தன்னாய்வு: இறப்பின் காரணிகளால் நான் அலைக்கழிக்கப்படுவது ஏன்? இன்று நான் விண்ணகத்தை நோக்கிக் காண இயலாதவாறு என் பார்வையைத் தடுப்பது எது? காண்பவற்றை மட்டுமே பற்றிக்கொள்ளும் நான் அவற்றை விடுவதற்கு என்ன முயற்சிகள் செய்கின்றேன்?

இறைநோக்கிய பதிலிறுப்பு: இறைவன் தரும் பராமரிப்பையும் பாதுகாவலையும் உணர்தல்.

உலகுநோக்கிய பதிலிறுப்பு: இந்த உலகமும் உடலும் என் இயக்கத்திற்குத் தேவை. இவற்றின் துணைகொண்டே நான் விண்ணேற முடியும்.

6. இறுதிமொழி

துன்பங்கள் தாங்கும் திறன் கற்றுத்தந்தார் ஏவாள். துன்பங்கள் தாண்டும் திறன் கற்றுத்தந்தார் மரியா. தாங்கிய முன்னவர் தங்கிவிட்டார். தாண்டிய பின்னவர் விண்ணேறினார்.

Saturday, August 13, 2022

இணைக்கும் பிளவுகள்

ஆண்டின் பொதுக்காலம் 20ஆம் ஞாயிறு

I. எரேமியா 38:4-6, 8-10 II. எபிரேயர் 12:1-4 III. லூக்கா 12:49-53

இணைக்கும் பிளவுகள்

ஒரு பங்கு ஆலயத்தில் திருப்பண்ட அறையில் (சக்ரீஸ்து) நடுத்தர வயது நபர் ஒருவர் வேலை பார்த்து வந்தார். அவர் கொஞ்சம் படித்தவர். பல ஆண்டுகளாக திருப்பண்ட அறையில் வேலை செய்து வந்தார். அந்தப் பங்கிற்கு புதிதாய் வந்த அருள்பணியாளருக்கு அவரைப் பிடிக்கவில்லை. அவர் செய்யும் எல்லாவற்றிலும் குறை கண்டுபிடித்துக்கொண்டே இருப்பார். ஒருநாள் கோபத்தின் உச்சியில், 'இனி நீ வேலைக்கு வர வேண்டாம். உன் கணக்கை முடித்துக்கொள்' என்று சொல்லி அனுப்பிவிடுகின்றார். இவர் ரொம்பவும் கெஞ்சிப் பார்க்க அருள்பணியாளர் மனம் மாறுவதாய் இல்லை. வீட்டிற்கு வருகின்ற இவர் ரொம்ப நேரமாக யோசிக்கிறார். தன் வீட்டிற்கு முன் நிறைய புல் முளைத்திருக்கிறது. இதை மேய்வதற்கு இரண்டு மாடுகள் வாங்கி விடலாம் என நினைக்கிறார். மாடுகள் வாங்கி விட, பால் வியாபாரம் நன்றாக நடக்கிறது. கோவிலுக்குச் செல்வதற்காக காலையில் எழுந்து பழகிய அவர் அதே பழக்கத்தில் மாடுகளைக் கவனிக்கவும், பால் கறக்கவும் என அர்ப்பணத்தோடு ஈடுபட சில ஆண்டுகளில் பெரிய பண்ணைக்கு உரிமையாளர் ஆகிவிடுகின்றார். இந்நேரத்தில் அருள்பணியாளரும் மாற்றலாகிச் சென்றுவிடுகின்றார். மாற்றலாய்ச் சென்ற அருள்பணியாளரை இவர் சந்திக்க தன்னுடைய புதிய காரில் செல்கின்றார். புதிய கார் வருகிறதே என்று வேகமாக அருள்பணியாளர் வெளியே வந்து பார்க்கிறார். காரில் வந்தவர் சக்ரீஸ்தர் என்றவுடன் அறைக்குள் சென்றுவிடுகின்றார். இவர் கதவைத் தட்ட, அவர் கோபமாய், 'என்னய்யா, என்ன வேணும்? இங்கு எந்த வேலையும் இல்லை' என்கிறார். அதற்கு இவர் சொல்கிறார், 'சாமி, உங்களுக்கு நன்றி சொல்லத்தான் வந்தேன். நல்ல வேளை என்னை சக்ரீஸ்தர் வேலையிலிருந்து வெளியேற்றினீர்கள். இன்னைக்கு நான் பெரிய பால்பண்ணைக்கு உரிமையாளராய் இருக்கிறேன். இல்லைன்னா இன்னும் மெழுகுதிரி ஏத்திக்கிட்டு உட்கார்ந்திருப்பேன்.'

நிற்க.

இப்படியாக சில பிளவுகள் நன்மையில் போய் முடிகின்றன. தன் முந்தைய பணியிடமிருந்து அவர் ஏற்படுத்திய பிளவு அவருடைய பொருளாதார முன்னேற்றத்துக்கு வழிவகுக்கிறது.

இதற்கு எதிர்மாறாக சில பிரிவுகள் அல்லது பிளவுகள் சோகத்தில் வெறுமையில் இறப்பில் முடிகின்றன.

எல்லாப் பிளவுகளும் தீமையானவை அல்ல. நன்மையான சில பிளவுகள் அல்லது பிரிவுகள் இருக்கின்றன என்று மொழிகிறது இன்றைய இறைவார்த்தை வழிபாடு. 

இன்றைய முதல் வாசகத்தில் (காண். எரே 38:4-6, 8-10) இறைவாக்கினர் எரேமியாவுக்கும் அரசன் செதேக்கியாவுக்கும் இடையே ஏற்படும் பிளவு பற்றி வாசிக்கின்றோம். பாபிலோனிய அரசன் நெபுகத்னேசர் யூதாவை முற்றுகையிடுகின்றார். தன்னுடைய பதில் அரசனாக செதேக்கியாவை நியமிக்கின்றார். இது அரச அலுவலர்களுக்கு அதிருப்தியைக் கொடுத்தது. எனவே பாபிலோனியாவுடன் போர் தொடுக்குமாறு அவர்கள் செதேக்கியாவைத் தூண்டுகின்றனர். ஆனால், அப்படிப் போர் செய்வது பெரிய அழிவை உண்டாக்கும் எனவும், இப்போதைக்கு சரணாகதி அடைவதே சிறந்த வழி என்றும் சொல்கிறார் எரேமியா. ஏனெனில், அரசர்களும் அரச அலுவலர்களும் மக்களும் கடவுளின் உடன்படிக்கையை மீறிப் பாவம் செய்ததால்தான் இத்தீமை வந்திருக்கிறது என்பதை எரேமியா அறிவார். அரச அலுவலர்கள் எரேமியாவின் இக்கூற்றை அரசியல் எதிர்க்கருத்து என்று எண்ணி, 'இம்மனிதன் கண்டிப்பாய்ச் சாக வேண்டும். ஏனெனில் இவன் மக்களின் அழிவைத் தேடுகிறானே அன்றி நலனைத் தேடுவதில்லை' என்கிறார்கள். அத்தோடு அவரைப் பாழுங்கிணற்றில் தள்ளி, பசியால் அவரைக் கொன்றுவிட நினைக்கின்றனர். அரசவையின் எத்தியோப்பிய பணியாளன் எபேதுமெலேக்கு எரேமியாவுக்குச் சார்பாக நின்று அவரை பாழுங்கிணற்றிலிருந்து காப்பாற்றுகின்றார். 

அரசன் மற்றும் அரச அலுவலர்கள் நெபுகத்னேசர் மீது மேற்கொண்ட போர் அவர்களுக்கு இன்னும் பேரழிவைத் தருகின்றது. அவர்கள் எரேமியாவின் பேச்சைக் கேட்டிருந்தால் இவ்வளவு பெரிய அழிவு வந்திருக்காது. அவர்கள் இரண்டு நிலைகளில் தவறு செய்கின்றனர்: (அ) இறைவனின் வார்த்தை எது, தங்களின் வார்த்தை எது என்று அவர்களால் தேர்ந்து தெரிவு செய்ய முடியவில்லை, (ஆ) தங்களுடைய எண்ணம்போலக் கடவுள் செயல்படுவார் என்று எண்ணி கடவுளை ஒரு பொம்மையாக்க முனைகின்றனர். ஆனால் கடவுளின் வார்த்தைக்கு யாரும் விலங்கிட முடியவில்லை. அவரின் வார்த்தைகள் நிறைவேறுகின்றன. எரேமியாவின் வார்;த்தைகள் மக்களிடம் பிளவை உண்டாக்கின. ஆனால், கடவுளின் வார்த்தைகள் அவை என்று நினைத்தவர்களுக்கு அவை பாதுகாப்பைக் கொண்டுவந்தன. 

இரண்டாம் வாசகம் (காண். எபி 12:1-4) எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமடலிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. கடந்த வாரத்தில் நம்பிக்கை என்றால் என்ன என வரையறை செய்த ஆசிரியர், 'திரண்டு வரும் மேகம் போல இத்தனை சாட்சிகள் இருக்க' என எல்லா நம்பிக்கையாளர்களையும் ஒன்றாக்கி, இவர்களின் பாதுகாப்பில் தன்னுடைய நம்பிக்கையாளர்கள் தொடர்ந்து முன்னேற அறிவுறுத்துகின்றார். இந்த தொடர் முன்னேற்றத்தை ஓட்டப் பந்தயத்திற்கு ஒப்பிடுகின்றார் ஆசிரியர். ஓட்டப் பந்தயத்தில் ஓடுபவர் விரைவாக ஓடுவதற்கு உந்துப் பலகை வைக்கப்படுவதுண்டு. உந்துப் பலகை கனமாக இருக்கும். அதன் ஒரு பகுதி நிலத்தில் பதிக்கப்பட்டிருக்கும் உந்துப் பலகையை எத்தி ஒருவர் அந்த விசையைப் பயன்படுத்தி முதல் அடியை நீளமாக எடுத்து வைத்தால் அவர் வெற்றி பெறும் வாய்ப்பு அதிகம். ஆனால், அவர் அப்படிச் செய்யாமல் உந்துப் பலகையோடு தன்னை இணைத்துக் கொண்டால், அல்லது உந்துப் பலகையைத் தன் காலோடு சேர்த்துக் கொண்ட ஓட முயற்சித்தால் என்ன ஆகும்? அவர் விழுந்து தன்னைக் காயப்படுத்திக் கொள்வதோடு போட்டியிலும் தோற்றுவிடுவார். ஆக, அவரின் கால்களுக்கும் உந்துப் பலகைக்கும் இடையே ஏற்படும் பிளவே அவரை வெற்றியாளராக மாற்றும். இதையே ஆசிரியர், ஒருவர் தன்னுடைய சுமையையும், பாவத்தையும் உதறித் தள்ளாத ஒருவர் பந்தயத்தில் வெற்றி அடைய முடியாது என்கிறார். உந்துப் பலகையிலிருந்து கால்கள் எடுக்கப்பட்டவுடன் ஓடுபவரின் கண்கள் இலக்கில் பதிய வேண்டும். இதை ஆசிரியர், 'நம்பிக்கையைத் தொடங்கி வழிநடத்துபவரும் அதை நிறைவு செய்பவருமான இயேசுவின்மீது கண்களைப் பதிய வைப்போம்' என்கிறார். இங்கே நம்பிக்கையின் உந்துப் பலகையாக, உடன் ஓடி வந்து உற்சாகம் தருபவராக, பந்தயத்தை நிறைவு செய்து வைக்கும் விளையாட்டின் நடுவராக இயேசுவை முன்வைக்கிறார் ஆசிரியர். 

இயேசு இந்த நிலைக்கு உயரக் காரணம் அவர் அனுபவித்த இழிவும் சிலுவையுமே. தான் அடைய வேண்டிய மகிழ்ச்சியை முன் நிறுத்தி தன்னுடைய இழிவு மற்றும் சிலுவையை ஏற்றுக்கொள்கின்றார் இயேசு. அவருடைய செயல்களுக்கு பாவிகள் பலர் எதிரிகளாக இருந்தாலும் அவர்களோடு ஏற்படுத்திக் கொண்ட பிளவால் இவர் வெற்றியை அடைகின்றார். ஆக, இயேசு அவருடைய எதிரிகளோடு ஏற்படுத்திய பிளவு இவருக்கு வெற்றியைக் கொடுக்கின்றது.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (காண். லூக் 12:49-53), 'மண்ணுலகில் தீயை மூட்ட வந்தேன்' எனச் சொல்கின்ற இயேசு, 'மண்ணுலகில் அமைதியை ஏற்படுத்த வந்தேன் என்றா நினைக்கிறீர்கள்? இல்லை. பிளவை உண்டாக்க வந்தேன்' என்று நமக்கு அதிர்ச்சியூட்டுகின்றார். அமைதியின் அரசர் என்றழைக்கப்பட்டவர், 'மண்ணுலகில் அவர் தயவு பெற்றோருக்கு அமைதி' என்று வானதூதர்களால் பாடி மகிழப்பட்டவர் அமைதிக்கு எதிரானவரா? இயேசுவைத் தேர்ந்துகொள்கிறவர்கள் எதிர்கொள்ள வேண்டிய பிளவு இங்கே சுட்டிக்காட்டப்படுகிறது. இயேசுவின் நற்செய்தி எல்லாருக்கும் ஏற்புடையது அல்ல. அதைச் சிலர் ஏற்றுக் கொள்வர். பலர் ஏற்றுக்கொள்ள மறுப்பர். ஏற்றுக்கொள்ளாதவர் இயேசுவைக் குறித்து இடறல் படுவர். இந்த இடறலே அவர்களுக்குள் பிளவை உண்டாக்கிவிடும். ஆனால், இதைப் பொருட்படுத்தாமல் ஒருவர் இயேசுவின்மேல் நம்பிக்கை கொள்ளும்போது இந்தப் பிளவே அவரை இயேசுவோடு இணைக்கும்.

இவ்வாறாக,

இன்றைய முதல் வாசகத்தில், எரேமியா ஏற்படுத்தும் பிளவு மக்களைக் கடவுளோடு இணைக்கிறது. இரண்டாம் வாசகத்தில், நம்பிக்கையாளர்கள் தங்களுடைய பாவத்தோடு ஏற்படுத்தும் பிளவு அவர்களை இயேசுவோடு இணைத்து நம்பிக்கையில் நிலைக்கச் செய்கிறது. நற்செய்தி வாசகத்தில், இயேசுவைத் தேர்ந்துகொள்வதால் ஏற்படும் பிளவு ஒருவரை நீதியின் அரியணைமுன் வெற்றியாளராய் நிறுத்துகிறது.

இதை இன்று நம்முடைய வாழ்வோடு எப்படிப் பொருத்திப் பார்ப்பது?

பிளவுகள் அல்லது போராட்டங்கள் நமக்கு வெளியில் நடப்பதைவிட உள்ளேயே நடக்கின்றன. காலையில் அலார்ம் வைத்து எழுவதில் தொடங்கி, திருமணம், அருள்பணி நிலை தேர்வு போன்ற பெரிய முடிவுகள் எடுப்பது வரை நம் உள்ளத்தில் போராட்டம் நடந்துகொண்டே இருக்கின்றது. இந்தப் போராட்டத்தினால் நம்முடைய மன அமைதி கெட்டு, உடல் நலமும் பாதிக்கப்படுகிறது. 

ஏன் இந்தப் போராட்டம்?

தவறானதைத் தெரிந்துவிடுவோமோ என்ற பயம். நாளை என்ன நடக்குமோ? அல்லது ஒன்றின் முடிவு எப்படி இருக்குமோ? என்ற கலக்கம். நம்முடைய பயமும் கலக்கமும் ஒரு பக்கம். இன்னொரு பக்கம் மற்றவர்களோடு ஒப்பிடுதல். மற்றவரோடு என்னையே ஒப்பிட்டு அவர் செய்வதனைத்தையும் நான் செய்ய முற்படும்போதும், அவருக்கு வெற்றியாக அமைவது எனக்கும் வெற்றியாக அமையும் என நினைப்பதும் கூட நம் அமைதியைக் கெடுத்துவிடுகிறது.

ஆனால், போரட்டம் அல்லது பிளவு இல்லாமல் வெற்றி இல்லை. 

பிளவுபடாமல் நினைக்கின்ற உள்ளம் காலில் ஒட்டிக்கொண்ட உந்துப் பலகை மாதிரி சுமையாக மாறிவிடும். ஆக, தேவையான நேரத்தில் தேவையற்றதை உதறித் தள்ளினால் தேவையானதை நோக்கி நான் வேகமாக நகர முடியும்.

இதை மூன்று நிலைகளில் அடையலாம்:

அ. இறைவனின் வார்த்தை எது, என்னுடைய வார்த்தை எது என்று பிரித்துப் பார்த்தல். எரேமியாவின் வார்த்தைகளை இறைவனின் வார்த்தைகளாகப் பார்க்க அவருடைய சமகாலத்தவர்கள் மறுத்தார்கள். ஏனெனில், அவர்கள் சுகமானவற்றையே எதிர்பார்த்தார்கள். என்னுடைய மூளை சுமைக்குப் பயந்து சுகமான வார்த்தைகளையே இறைவார்த்தைகளாக என்முன் காட்ட ஆரம்பிக்கும். இது பெரிய ஆபத்து. இறைவனின் வார்த்தையை அடையாளம் காண ஆழ்ந்த அமைதி, தியானம், செபம் போன்றவை துணை செய்யும்.

ஆ. என்னுடைய சுமை அல்லது பாவத்தை உதறித் தள்ளுவது. சுமை என்று தெரிந்தும், இழுத்துக் கொண்டு போய் விடலாம் என நினைப்பது, என் கால்களுக்குத் தளர்ச்சியைத் தருவதோடு என்னை பந்தயத்திலிருந்து வெளியேற்றிவிடவும் செய்யும். அதே நேரத்தில் பாவத்தை உதறித் தள்ளாமல் புண்ணியத்தில் வளர நினைப்பது என்பது, இறந்து போன எலியை அகற்றாமல் ஊதுபத்தி கொளுத்தி, 'சமாளித்துக்கொள்ள' நினைப்பது. எவ்வளவு அகர்பத்திகள் கொளுத்தினாலும் இறந்த எலி தரும் நாற்றத்தை அகற்ற முடியாது.

இ. மனநெருக்கடிக்குத் தயாராக இருப்பது. இயேசுக்கும் மனநெருக்கடி இருக்கிறது. நெருக்கடி உள்ள இடமே விரைவில் காலி ஆகும். குட்டை கலங்கினால்தான் மீன் சிக்கும்;. என் வாழ்வில் நான் தெரிவுகளை மேற்கொள்ள நிறைய குழப்பங்கள் வழியே நடந்து செல்ல வேண்டும்.

இறுதியாக,

இவை எல்லாவற்றிலும் இறைவன் மேல் என் கண்கள் பதிந்து இருந்தால், எல்லாப் பிளவுகளும் என்னை அவரோடு இணைத்துவிடும்!


Friday, August 12, 2022

சிறு பிள்ளைகள்

இன்றைய (13ஆகஸ்ட் 2022) நற்செய்தி (மத் 19:13-15)

சிறு பிள்ளைகள்

நேற்றைய நற்செய்தி வாசகத்தில் மண உறவு, மணமுறிவு, மற்றும் மணத்துறவு பற்றி வாசித்தோம். அதன் தொடர்ச்சியாக, குழந்தைகளைப் பற்றிப் பேசுகிறது இன்றைய நற்செய்தி வாசகம்.

எபிரேயத்தில் குழந்தையைக் குறிக்க, 'பென்,' 'யேலத்,' மற்றும் 'நஆர்' என்னும் பதங்கள் பயன்படுத்தப்படுகின்றன. கிரேக்கத்தில் 'டெக்னோன்' அல்லது 'பைதியோன்' என்ற பதங்கள் பயன்படுத்தப்படுகின்றன. கிரேக்கத்தில் 'குழந்தை' என்ற வார்த்தை 'அஃறிணை' (அதாவது, திணையில் வராதவை, பொருந்தாதவை) வார்த்தையாகவே உள்ளது. தமிழிலும், 'குழந்தை' என்பதை 'அது' என்றே நாம் அழைக்கின்றோம். எபிரேய சமூகத்தில் 12 வயது நிரம்பும் வரை இளவல், 'குழந்தை' என்றே அழைக்கப்பட்டார். 

யூத சமூகம் குழந்தைகள் குடும்பங்களுக்கு இறைவன் வழங்கும் ஆசீர் என்று கருதியது (காண். தொநூ 15:2, 30:1, 1 சாமு 1:11, திபா 127:3, லூக் 1:7). குழந்தைகள் அதிகமாக இருப்பது பொருளாதார அடிப்படையிலும் நல்லது என்று பார்க்கப்பட்டது. ஏனெனில், விவசாய சமூகத்தில் உடனுழைப்புக்கு மனித ஆற்றல் நிறையத் தேவைப்பட்டது. மேலும், போர், வன்முறை, புலம்பெயர்தல், பாதுகாப்பற்ற இயற்கைச் சூழலில் நிறையக் குழந்தைகள் இருந்தால் அது குடும்பத்திற்கு பாதுகாப்பு என்றும், இனவிருத்திக்கு உதவி என்றும் மக்கள் நம்பினர். ஒரு பெண் குழந்தை பெற இயலாமல் போனால், இன்னொரு பெண்ணின் வழியாக குழந்தை பெற்றுக்கொள்ள யூத சமூகம் அனுமதித்தது. ஒவ்வொரு யூதப் பெண்ணும் தன் மகன் ஒருவேளை மெசியாவாக வருவான் என்ற எண்ணத்திலேயே குழந்தைகள் பெற்றெடுத்தனர். குடும்பத்தலைவர் மகப்பேறின்றி இறந்து போனால், அவருடைய தம்பி தன் அண்ணனின் மனைவியை மணந்து குழந்தை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்ற கடமையும் இருந்தது. 

குழந்தைகள் கடவுளுக்கு அர்ப்பணம் செய்யப்பட்டனர் (காண். 1 சாமு 1:11). குழந்தைகளுக்கு இடும் பெயர்கள் முக்கியமானதாகக் கருதப்பட்டன: மோசே (விப 2:10), சாமுவேல் (1 சாமு 1:20). தலைப்பேறு ஆண்டவருக்கு உரியது என்று வழங்கப்பட்டது (காண். எண் 3:44). குழந்தையின் ஒவ்வொரு வளர்ச்சிநிலையும் குடும்ப மற்றும் சமூக விழாவாகக் கொண்டாடப்பட்டது. குழந்தைகள் தாயிடம் வளர்ந்தனர். ஆண் குழந்தைகளுக்கு மட்டுமே கல்வி வழங்கப்பட்டது. உயர்குடி மக்கள் தங்கள் இல்லங்களிலேயே ஆசிரியர்களைப் பணிக்கு அமர்த்தினர் என்ற வரலாற்று ஆசிரியர் யோசேபு எழுதுகின்றார். 

இயேசுவின் சமகாலத்தில் குழந்தைகளுக்கான பள்ளிக்கூடங்கள் இருந்தன. வாசிக்கவும், எழுதவும் அவர்களுக்குக் கற்றுக்கொடுக்கப்பட்டது. தோரா வாசிப்பு, விவசாயம், திறன்கள் வளர்த்தல் ஆகியவற்றுக்கும் பயிற்சி தரப்பட்டது. ஒரு குழந்தை பேசத் தொடங்கியவுடன் (4 வயதில்) சமயக் கல்வி வழங்கப்பட்டது. குழந்தைகள் தங்கள் பெற்றோருடன் ஓய்வுநாள் மற்றும் பாஸ்கா போன்ற திருவிழாக்களில் பங்கேற்றனர். குழந்தைகள் தந்தைக்குக் கீழ்ப்படிந்து நடக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. பெற்றோர்களுக்கு அளிக்கும் மதிப்பும் கீழ்ப்படிதலும் நல்லொழுக்கமாகக் கருதப்பட்டது.

ஆண்டவராகிய கடவுளும் இஸ்ரயேல் மக்களை தன் குழந்தைகள் என்று கொண்டாடுகின்றார். ஒரு தந்தை தன் குழந்தையைத் தூக்கி வளர்ப்பதுபோல, அதற்கு நடை பயிற்றுவிப்பது போல தான் இஸ்ரயேலுக்குச் செய்ததாக உச்சி முகர்கின்றார்.

இன்று குழந்தைகளைப் பற்றிய பார்வை மிகவும் மாறிவிட்டது. ஒருபக்கம், குழந்தைகள் தொழிலாளர்கள், குழந்தைகள்மேல் வன்முறை, வல்லுறவு ஆகியவை திணிக்கப்படுகின்றன. குழந்தைகள் வலுவற்றவர்களாக இருக்கின்றனர். இன்று வலுவற்ற இவர்களைக் குறிவைத்து கார்பரேட்கள் தங்கள் வன்முறையை காணொலி விளையாட்டுகள் வழியாகவும், வலைத்தளங்கள் வழியாகவும் திணிக்கின்றனர்.

இன்னொரு பக்கம், 'ஆன்ட்டி நேடலிசம்' (குழந்தை மறுப்பு மனநிலை) வேகமாக வளர்கின்றது. திருமண நாளன்று, மணமக்கள், 'நமக்கு குழந்தை வேண்டுமா? நாய்க்குட்டி வேண்டுமா?' என்று திட்டமிடுகின்றனர். 'நான் படும் கஷ்டத்தை என் பிள்ளையும் பட வேண்டுமா?' என்ற நினைப்பில் குழந்தைகள் வேண்டாம் என்று மணமக்கள் முடிவெடுக்கின்றனர். மேலும், கருத்தடை, கருக்கலைப்பு, சிசுக்கொலை என்று குழந்தைகள் பிறக்குமுன்னரே, அல்லது பிறந்த பின்னர் கொல்லப்படுகின்றனர்.


இந்தப் பின்புலத்தில், இயேசு குழந்தைகளை ஆசீர்வதிக்கும் நிகழ்வைக் காண்போம்.


குழந்தைகளை எபிரேயக் குடும்பங்கள் கொண்டாடினாலும், அவர்கள் 'ஆள் கணக்கில் சேராதவர்களாகவே' சமூகத்தில் பார்க்கப்பட்டனர். ஆகையால்தான், மத்தேயு தவிர மற்ற நற்செய்தியாளர்கள், 'அப்பம் உண்ட ஆண்கள் தொகை ஐயாயிரம்' எனப் பதிவு செய்கின்றனர். குழந்தைகளும் பெண்களும் எண்ணிக்கையில் கொள்ளத் தகுதியற்றவர்கள். இந்த மனநிலை சீடர்களுக்கும் இருக்கிறது. ஆகையால்தான், குழந்தைகள் இயேசுவிடம் வருவதை அவர்கள் கண்டிக்கின்றனர். இன்னொரு பக்கம், ரபி ஒருவரிடம் குழந்தைகள் பொதுவில் அமரக் கூடாது என்ற விதியும் இருந்தது. ஆனால், குழந்தைகளின் பெற்றோர், இயேசுவிடம் கடவுளையே காண்பதால், ஆசீர்வதிக்கப்படுமாறு தங்கள் குழந்தைகளை அழைத்து வருகின்றனர். இயேசுவும் ஆசீர்வதிக்கின்றார்.

மேலும், 'விண்ணரசு இத்தகையோருக்கு' என்கிறார்.

அதாவது, 'திருச்சட்டமே இவர்களுக்கு இல்லை' என்ற நம்பிக்கை நிலவிய இடத்தில், 'விண்ணரசு இவர்களுக்கு' என்று இயேசு சொன்னது அவர்களுக்குப் புதுமையாகவும் புரட்சியாகவும் இருந்திருக்கும்.

எதையும் பற்றிக்கொள்ளாத மனநிலையே குழந்தை மனநிலை. இந்தக் குழந்தை மனநிலை வந்தால் சிலைகளை நம்மால் அகற்றவும், நம் உடனிருப்பவருக்காகத் தியாகம் செய்யவும், இவ்வாறு விண்ணரசை உரிமையாக்கவும் முடியும்.