Wednesday, April 29, 2020

கற்றுத் தருதல்

இன்றைய (30 ஏப்ரல் 2020) நற்செய்தி (யோவா 6:44-51)

கற்றுத் தருதல்

'கடவுள்தாமே அனைவருக்கும் கற்றுத் தருவார்' என்று ஏற்கனவே சொன்னதை நினைவூட்டும் இயேசு, தொடர்ந்து, 'தந்தைக்குச் செவிசாய்த்து அவரிடமிருந்து கற்றுக்கொண்ட அனைவரும் என்னிடம் வருவர்' என்று கூறுகின்றார்.

'கற்றுத் தருதல்' அல்லது 'கற்றுக்கொள்ளுதல்' என்பது யோவான் நற்செய்தியிலும், மற்றும் அவருடைய திருமுகங்களிலும் நாம் வாசிக்கும் ஒன்று.

இந்த லாக்டவுன் நாள்களில் நாம் தனியாக நிறையக் கற்றுக்கொள்கிறோம். பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் ஆன்லைன் கற்றுக்கொடுத்தலை முன்னெடுத்துள்ளன. கொரோனா நமக்கு நிறையக் கற்றுத் தருகிறது. நாம் வாசிக்கும் புத்தகங்கள், நாம் காணும் காணொளிகள், திரைப்படங்கள், குறும்படங்கள் என எல்லா நிலைகளிலும் நாம் கற்றுக்கொண்டே இருக்கின்றோம்.

கற்றுக்கொள்ளுதலில் என்ன நடக்கிறது என்றால், பழையது மறைந்து புதியது வருகிறது.

இந்த நிலையை ஒருவரில் உருவாக்குபவரே உண்மையாகக் கற்றுக்கொடுக்கிறார்.

30 நிமிடங்கள் பாடம் கேட்டுவிட்டு, 30வது நிமிடத்தின் இறுதியில் நான் முதல் நிமிடத்தில் இருந்ததுபோல இருந்தால், என்னில் எந்தக் கற்றலும் நடக்கவில்லை. நிமிடங்கள் மட்டுமே வீணாகியுள்ளன.

என்னில் மாற்றம் வர வேண்டுமென்றால் நான் என்ன செய்ய வேண்டும்?

'செவிசாய்க்க வேண்டும்'

செவிசாய்த்தல் என்பது எனக்கும் பேசுபவருக்கும் இடையே ஒரு ப்ளுடூத் இணைப்பை உருவாக்கிக்கொள்ளுதல் போல. அதாவது, அவரோடு மெய்நிகர் (virtual) நிலையில் நான் இணைந்திருத்தல்.

ஆக, கற்றல், செவிசாய்த்தல், இணைதல் ஆகிய மூன்றும் ஒன்றோடொன்று இணைந்து இருக்கின்றன.

இன்றைய முதல் வாசகத்தில் (காண். திப 8:26-40), தான் வாசிப்பதன் பொருளை உணர்ந்து கொள்ளாத எத்தியோப்பிய திருநங்கை அமைச்சர், திருத்தொண்டர் பிலிப்புடன் தன்னை இணைத்துக் கொண்டதால், அவருக்குச் செவிகொடுப்பதால் வாசிப்பதன் பொருளை உணர்ந்துகொள்கின்றார்.

நற்செயல்: கடவுளிடமிருந்து கற்றுக்கொள்ள, அவரோடு இணைய, அவருக்குச் செவிசாய்க்க என்னில் உள்ள அக மற்றும் புறத்தடைகள் எவை?

2 comments:

  1. “கற்றுக்கொள்தல்”.....இது உண்மையான பலனைக்கொடுக்க வேண்டுமெனில் இதில் பழையன மறைந்து புதியது பிறப்பதும், இந்த பலனை என்னில் உருவாக்குபவரே உண்மையாக கற்றுக்கொடுக்கிறார் என்பதும்...அப்படியொன்று நடக்கவில்லை எனில் கற்பவருக்கும்,கற்றுக்கொடுப்பவருக்கும் அது நேர விரயமே என்பதையும் எடுத்துச் சொல்கின்றன தந்தையின் வரிகள். கற்றுக்கொடுப்பவருக்கும்,கற்பவருக்குமிடையே ஒரே வேவ்லென்க்த் இருப்பதும் அவசியமே! பல நேரங்களில் அந்த திருநங்கை அமைச்சர் போல நானும் உணர்ந்திருக்கிறேன். நானாக விவிலியத்தைப்புரட்டிக்கொண்டிருப்பதற்குப் பதிலாக என்னருகே ஒருவர் அமர்ந்து என் சந்தேகங்களை உடனுக்குடன் தீர்த்தால் எத்துணை நலமென்று!

    என்னிடமுள்ள அக மற்றும் புறத்தடைகள் எவை என்று தெரிந்தால்தான் பாதிப்பிரச்சனை தீர்ந்துவிடுமே! யோசிக்கிறேன்...தூய ஆவியைத்துணைக்கழைத்து.

    தேவையானதொரு நற்செயலுடன் கூடிய பதிவு! தந்தைக்கு நன்றிகள்!!!

    ReplyDelete