Wednesday, April 15, 2020

மீன்துண்டு

இன்றைய (16 ஏப்ரல் 2020) நற்செய்தி (லூக் 24:35-48)

மீன்துண்டு

'உண்பதற்கு இங்கே உங்களிடம் ஏதேனும் உண்டா?' என்று கேட்டார்.

அவர்கள் வேக வைத்த மீன் துண்டு ஒன்றை அவரிடம் கொடுத்தார்கள். அதை அவர் எடுத்து அவர்கள்முன் அமர்ந்து உண்டார்.

நிற்க.

இந்த ஒற்றை மீன்துண்டு மூன்று விடயங்களை உள்ளடக்கியுள்ளது:

அ. சீடர்கள் தங்கள் பணிக்குத் திரும்பினார்கள்

இயேசு இறந்தபின், தங்களுடைய வேலையைப் பார்க்கத் திரும்பிச் செல்கின்றனர் திருத்தூதர்கள். குறிப்பாக, மீன்பிடித் தொழில் செய்தவர்கள் மீண்டும் தங்கள் வேலைக்குத் திரும்புகிறார்கள். இருந்தாலும், ஒரே குடும்பமாக கூடி இருக்கின்றனர்.

ஆ. சீடர்கள் உணவு உண்டனர்

இயேசு இறந்துவிட்டார், எல்லாம் முடிந்துவிட்டது என்று ஓய்ந்திருக்கவில்லை திருத்தூதர்கள். தங்கள் வாழ்வைத் தக்க வைத்துக்கொள்ள தாங்கள் உண்ண வேண்டும் என்பதை அறிந்த எதார்த்தவாதிகளாய் இருக்கிறார்கள்.

இ. கொஞ்சம் எக்ஸ்ட்ரா வைத்திருந்தார்கள்

யாராவது ஒருவர் வந்தால் அவர்களுக்கு என்று மீன்துண்டு ஒன்றை ஒதுக்கி வைக்கிறார்கள். இது அவர்களுடைய நிறைவு மனப்பான்மையைக் குறிக்கிறது. சில நேரங்களில் கடவுளே வந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.

இந்த மீன்துண்டு நமக்குச் சொல்வது என்ன?

இலத்தீன் மொழியில் ஒரு சொலவடை உண்டு: 'ப்ரீமும் எஸ்த் வீவெரே' (Primum est Vivere) - அதாவது, உயிர் வாழ்வதுதான் முதன்மையானது. அல்லது உயிரைத் தக்கவைப்பதுதான் முதன்மையானது. மற்ற எல்லாம் காத்திருக்கலாம். உயிர் போனால் போனதுதான். அந்த உயிர் வாழ்வதற்கு உடல் அவசியம். ஆக, உடலைக் காப்பாற்றாமல் உயிரைக் காப்பாற்ற முடியாது. அந்த உடலுக்குத் தேவையான உணவும், பராமரிப்பும் அவசியம். உடல் காப்பாற்றப்பட்டு, உயிர் காப்பாற்றப்பட்டால்தான் நாம் கொண்டிருக்கும் மற்ற அனைத்திற்கும் பொருள் உண்டு: உறவு, பணம், வேலை, படிப்பு, பதவி, பயணம், உதவி மற்றவை அனைத்தும் உடலும், உயிரும் இருந்தால்தான் சாத்தியம்.

இயேசுவின் சீடர்கள் இதைத் தெளிவாக உணர்ந்திருக்கிறார்கள்.

'அழுதுகிட்டே இருந்தாலும் உழுதுகிட்டே இருக்கணும்' என்ற நிலையில், இயேசுவின் இறப்பு சோகத்தையும், வெறுமையையும், விரக்தியையும் தந்தாலும், தங்களுடைய வேலையைத் தொடர்கிறார்கள், உண்கிறார்கள், நிறைவுடன் இருக்கிறார்கள்.

இப்படி இருக்கும்போதுதான் அங்கே அற்புதம் நடக்கிறது.

அங்கே இயேசு வருகிறார்.

அவர்களின் வாழ்க்கைப் போக்கை மாற்றுகிறார். 'நீங்கள் என் சாட்சிகள்' என்று அவர்களுடைய பணியின் இலக்கை மாற்றுகின்றார்.

ஆக, சுவரை நான் தயராக வைத்தால்தான் அவர் சித்திரம் வரைவார்.

இந்நாள்களில் நாம் 'லாக்டவுனில்' இருக்கிறோம். மற்ற எல்லாம் காத்திருக்கலாம். உயிரும், உடலும் போனால் வராது. ஆனால், இவற்றை நாம் இந்நாள்களில் காத்துக்கொண்டால், அவர் நம்மிடம் வருவார். நம் அருகே அமர்ந்து அவசரமின்றி உண்பார். நம் வாழ்வின் இலக்கை மாற்றி விடுவார்.

நற்செயல்: என் உடலோடு நான் இன்று உரையாடுவேன்.

2 comments:

  1. தாங்கள் உண்டபின் மீதமிருந்த ஒரு மீன்துண்டை, எதிர்பாராமல் வந்த விருந்தாளி இயேசுவுக்குக் கொடுக்கிறார்கள் சீடர்கள்.இயல்பாக இல்லங்களில் நடக்கும் ஒரு விஷயத்தைக் கவிதையாக வடித்துவிட்டார் தந்தை.பூமிக்கு வந்தவரெல்லாம் பூமிக்கே திரும்ப வேண்டுமெனும் நியதிக்கு முன்னே யாரும் சமமே! இறைமகனுக்கு நடந்ததுவும் இதுவே.எத்தனை உடலும்,உயிருமாகப் பழகியிருப்பினும் யாரும் யார் பின்னாலும் போய்விடுவதில்லை.நம் கண்களின் ஈரம் காய்ந்தவுடன், நாம் வாழ்ந்தே தீரவேண்டுமெனும் ஒரு கட்டாயம் இருக்கையில் அந்த உயிர் காக்கும் உடலை உபசரிக்கும் முறையைத்தான் இங்கே விவரிக்கிறார் தந்தை.” அழுதுகிட்டே இருந்தாலும் உழுதுகிட்டேயிருக்கணும்........நிறைவுடன் இருக்கிறார்கள்.”அழுதாலும்,புரண்டாலும் மாண்டவர் வருவதில்லை என்றறிந்து தங்கள் கடமையைக் கண்ணாக் கருதிய சீடர்களைக் காணவரும் இயேசு அவர்களைத்தன் “சீடர்கள்” எனும் நிலைக்கு உயர்த்துகிறார்.
    உடல் நலன் குறித்து அதிகம் பேசப்படும் இந்நாட்களில் நாமும் நம் கடமையைக் கருத்தாக...கண்ணாகப் பாவித்தால் நம்மிடமும் அவர் வருவார்.....அமர்ந்து உண்பார்.... நம் வாழ்வின் இலக்கை மாற்றுவார். இது நடக்க வேண்டுமெனில் நம் உடலோடு இன்று உரையாடுவோம்.
    “சீடர்கள் கொஞ்சம் எக்ஸ்ட்ரா வைத்திருந்தார்கள்”...இதுகுறித்த ஒரு சிறு துணுக்கு.எங்கள் செட்டிநாட்டுப் பக்கம் வந்தீர்களேயானால் எப்பொழுதுமே ஒருவர் சாப்பிடும் அளவுக்கு உணவு இருக்கும்.இருப்பவர்களைக் கணக்குப்பண்ணி சமைப்பதில்லை.இயேசு சீடர்களிடம் வந்தபோது இந்த எக்ஸ்ட்ராதான் கைகொடுத்தது எனும் விஷயம் என்னைப்பெருமையடையச் செய்தது.தந்தைக்கு நன்றி!
    கண்டிப்பாக அவர் சித்திரம் வரைய என் சுவரை நான் தயாராக வைத்திருப்பேன்.
    மிகச் சாதாரண விஷயங்களுக்குக் கூட அழுத்தம் தந்து...அர்த்தம் தந்து அதன் பொருளையே வேற லெவலுக்குக் கொண்டு செல்லும் தந்தைக்கு என் இதயபூர்வமான வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete
  2. அருமையான பதிவு தந்தையே...

    ReplyDelete