Wednesday, April 22, 2020

பொம்மைகள் அழுவதில்லை

இன்றைய (23 ஏப்ரல் 2020) நற்செய்தி (யோவா 3:31-36)

பொம்மைகள் அழுவதில்லை

நாம் இந்த நாள்களில் அனுபவிக்கும் தனிமைப்படுத்தப்படுதல், சமூக விலகல் பல உடல்சார் மற்றும் மனம்சார் பிரச்சினைகளை எழுப்பிக்கொண்டே வருகின்றன. ஒரு பக்கம், இது கடவுளின் சினம் என்று ஆன்மீகவாதிகளும், அவசர இறைவாக்கினர்களும் சொல்லி பணம் வாங்குகின்றனர். இது கடவுளின் சினம் என்றும், கடவுள் இதன் வழியாக உலகை அழிக்கிறார் என்றால், அவர்கள் ஏன் கொரோனா பெயரில் வியாபாரம் செய்கிறார்கள் என்று தெரியவில்லை.

இன்னொரு பக்கம், கொரோனா வைத்து அரசியல். சோதனைக் கருவி வாங்குவதில் ஊழல். அதை செய்கின்ற நாட்டிலும் ஊழல். ஒன்று மட்டும் தெரிகிறது, இவர்களுக்கு நம்மேல் அக்கறை இல்லை.

ஒரு பக்கம், கடவுளின் சினம். இன்னொரு பக்கம், மனிதர்களின் பேராசை.

இந்த இரண்டிற்கும் இடையில் இருப்பதற்குப் பதிலாக, கொரோனா வந்து இறந்துவிட்டால் நலம்! என்று எண்ணத் தோன்றுகிறது. பயத்தாலும், கோபத்தாலும் உயிர் தினமும் போய்க்கொண்டிருக்கத் தேவையில்லையே!

I think that's what Samson of the Book of Judges did. He purposely attempted to play with the Philistine fire so that he would be consumed by it early.

இன்றைய நற்செய்தி வாசகப் பகுதியோடு நிக்கதேம்-இயேசு உரையாடல் நிறைவு பெறுகிறது. 'நம்பிக்கை கொள்ளாதோர் வாழ்வைக் காணமாட்டார். மாறாகக், கடவுளின் சினம் அவர்கள்மேல் வந்து விழும்' என்ற எச்சரிக்கையோடு முடிகிறது உரையாடல்.

கடவுள் சினம் கொள்பவரா? அல்லது இரக்கம் கொள்பவரா?

இரண்டிற்கும் ஆதாரங்கள் விவிலியத்தில் உள்ளன.

ஆனால், கடவுளின் இரக்கமே மேலோங்கி இருக்கிறது. நான் எப்போதும் நினைக்கும் ஒரு கதைமாந்தர் சிம்சோன். அவர் மற்றவர்களைப் போல இருக்க விரும்பவில்லை. அதுதான் அவருடைய பிரச்சினை. அவருடைய அம்மா, 'நீ ஏன் மற்றவர்களைப் போல நம் இனத்தில் பெண் கொள்ள மறுக்கிறாய்? நீ ஏன் மற்றவர்களைப் போல இருக்க மறுக்கிறாய்?' என்று கேட்கின்றார். ஆனால், சிம்சோன் மற்றவர்களைப் போல இருக்க நினைத்த அனைத்துப் பொழுதுகளிலும் தோல்வியைச் சந்திக்கின்றார். தான் எத்தனை முறை ஏமாற்றப்பட்டாலும், மறுதலிக்கப்பட்டாலும், காட்டிக்கொடுக்கப்பட்டாலும், அவமானப்படுத்தப்பட்டாலும், இறுதியாக கடவுளிடம் குரல் எழுப்புகின்றார். என்ன ஓர் ஆச்சர்யம்! கடவுள் அவருடைய குரலைக் கேட்கின்றார். கடவுள் மனித அறநெறிக்கு எந்த வரையறையும் வைப்பதில்லை என்பது சிம்சோன் வாழ்வில் தெளிவாகிறது. மனித வலுவின்மைதான் கடவுளின் இயங்குதளம்.

நம்பிக்கையின்மையும்கூட ஒரு வலுவின்மைதான்.

இன்றைய முதல் வாசகத்தில் (காண். திப 5:27-33), திருத்தூதர்கள் தலைமைச் சங்கத்தாருக்குக் கீழ்ப்படிய மறுக்கின்றனர். ஆக, தலைமைச் சங்கத்தார் அவர்கள்மேல் கோபம் கொண்டு கொதித்தெழுகின்றனர். ஆனால், மனிதர்களின் கோபத்தைப் பற்றி அவர்கள் கவலைப்படவில்லை.

மனிதர்களின் கோபம் கடவுளின் இரக்கத்தின்முன் ஒன்றுமில்லை.

'கடவுளுக்கல்லவா நாங்கள் கீழ்ப்படிய வேண்டும்?' என்று கேட்கின்றனர் திருத்தூதர்கள்.

இவர்கள் கடவுளுக்குக் கீழ்ப்படிந்ததால் கடவுள் இவர்களுக்கு இரக்கம் காட்டினார் எனில், தன்னுடைய நாசீர் அர்ப்பண வாக்குறுதிகள் அனைத்தையும் மீறிய சிம்சோனுக்கு கடவுள் ஏன் இரக்கம் காட்டினார்?

கடவுளை வரையறுக்க நம்மால் இயலாது.

ஆக, நாம் கடவுளின், அரசியல்வாதிகளின், விதியின், கடவுளின் திருவுளத்தின், இயற்கையின் கையில் இருக்கும் பொம்மை.

அவர்களின் சினம், இரக்கம் எல்லாவற்றாலும் நாம் அலைக்கழிக்கப்படலாம்.

ஆனாலும், பொம்மைகள் அழுவதில்லை!

2 comments:

  1. கடவுள் சினம் கொள்பவரா? இரக்கம் கொள்பவரா? இரக்கம் கொள்பவரென்றே என் மனதும் அனுபவமும் சொல்கின்றன. மனித வலுவின்மைதான் கடவுள் இயங்கு தளம்.....ஆம்! மனிதனின் அறநெறிக்கு எந்த வரையறையையும் இறைவன் வைப்பதில்லை என உணர்த்துகிறது சிம்சோன் வாழ்க்கை என்கிறார் தந்தை. அவரின் வார்த்தைகளை சிரமேல் கொண்டு செயல்படுகையில் நம்மேல் இரக்கம் காட்டும் இறைவன், அவரை எதிர்த்து நிற்கும் தருணங்களிலும் அந்த இரக்கத்தைக் காட்டத்தவறுவதில்லை.ஏனெனில் அவர் “இறைவன்”. உண்மையை அழகாகச் சொல்கிறார் தந்தை! எளியவர்கள் எப்பொழுதுமே வலியவர்களின் கையில் பொம்மை தான்.நம்மை அவர்கள் காலடியில் போட்டு மிதிக்கும் நிலை வந்திடினும் அவர்கள் அழுவதில்லை.....ஏனெனில் பாவம்...அவர்கள் கையாளாகதவர்கள்....வலுவற்றவர்கள் . நாமும் கூட பல நேரங்களில் குமுறி வரும் அழுகையைக்கூட வெளிக்காட்ட முடியாத பொம்மை போன்றவர்களே!

    பல நேரங்களில் நடக்கும் சமூக அவலத்தைப்படம் பிடித்துக் காட்டிய தந்தைக்கு நன்றிகள்!

    ReplyDelete
  2. “நற்செயல் “ என்னாச்சு? என்றும் போல் கிரியாஊக்கியாக இருந்து பலரின் நற்செயல்களுக்கு ஒரு தூண்டுகோலாயிருங்களேன்.அன்புடன்.....

    ReplyDelete