Tuesday, April 28, 2020

திருவுளம்

இன்றைய (29 ஏப்ரல் 2020) நற்செய்தி (யோவா 6:35-40)

திருவுளம்

கடந்த வாரத்தில், பேராயர் ஃபுல்டன் ஷீன் அவர்கள் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் வழங்கிய உரை ஒன்றைக் கேட்டேன். அந்த உரையின் தலைப்பு 'உளப்பகுப்பாய்வு' ('How to Psychoanalyze Yourself?). உளப்பகுப்பாய்வு (psychoanalysis) அல்லது உளப்பகுப்பாய்வு முறை என்பது உளவியலில் சிக்மண்ட் ஃப்ராய்ட் மற்றும் அவருடைய மாணவர் கார்ல் யுங் ஆகியோரால் தொடங்கப்பட்ட சிகிச்சை முறை. இப்போது உளவியல் பல கட்டங்களில் வளர்ந்துவிட்டது என்றாலும், இவ்விருவரும் வகுத்த, 'ஈத்,' 'ஈகோ,' 'சூப்பர்-ஈகோ' போன்ற வகையினங்களே இன்று எல்லா உளவியல் பகுப்பாய்வு முறைகளுக்கும் அடிப்படையாக உள்ளன.

தன்னுடைய உரையில், இவ்வுலகின் மனிதர்களை இரண்டாகப் பிரிக்கிறார் ஷூன்: 'மேன்மையானவர்கள்,' 'மேன்மையற்றவர்கள்.'

மேன்மையானவர்களின் பண்புகள் மூன்று:

(அ) அவர்களுக்கென்று ஒரு இலக்கு (vision / goal / aim) அல்லது குறிக்கோள் அல்லது நோக்கம் (mission) இருக்கும். எடுத்துக்காட்டாக, நம் அறையில் உள்ள பொருள்களை எடுத்துக்கொள்வோம். 'இந்தப் பொருள் இதற்காக' என்று நாம் நிர்ணயிக்காத எந்தப் பொருளும் நம் அறையில் குப்பைதான். அறையில் தொங்கும் கடிகாரம் நேரத்தைக் காட்டுவதற்காக, மேசையில் உள்ள பேனா எழுதுவதற்காக, அருகில் உள்ள விவிலியம் வாசிப்பதற்காக என ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு நோக்கம் இருக்கிறது. அதே போல, என் வாழ்விற்கும் நோக்கம் இருக்க வேண்டும். நான் இந்த உலகில் பிறந்தது விபத்து அல்ல. என் நோக்கம் என்ன என்பதை நான் அறிந்து, அதை நோக்கிச் செல்ல வேண்டும். மேலும், நோக்கம் நிர்ணயிக்கப்பட்டவுடன் அதில் நான் தொடர்ந்து முன்னேற வேண்டும். நோக்கம் இல்லாத போது நான் என்ன செய்வேன்? ஒரு பத்து அடி இந்தப் பாதையில் நடப்பேன். பின் யோசித்துவிட்டு, இல்லையில்லை, இந்தப் பாதை வேண்டாம், அடுத்த பாதையில் செல்லவேண்டும் என நினைத்து, திரும்பி வந்து புதிய பாதையில் செல்கிறேன். அதுவும் திருப்தி இல்லை. வேறு பாதையைத் தேர்வு செய்கிறேன். இப்படி நான் பாதைகளை மாற்றிக்கொண்டே இருந்தால் என் இலக்கை ஒருபோதும் அடைய முடியாது. என் வாழ்வின் இலக்கு என்பது எப்போதும் இறுதியில் வருவது. எடுத்துக்காட்டாக, மதுரைக்குச் செல்ல வேண்டும் என்பது காரில் ஏறுகின்ற என் இலக்கு என வைத்துக்கொள்வோம். மதுரை உடனே வந்துவிடாது. விராலிமலை, துவரங்குறிச்சி, கொட்டாம்பட்டி, மேலூர், எனக் கடந்து இறுதியில்தான் மதுரை வரும். விராலிமலையை நான் பிடித்துக்கொண்டு இதுதான் மதுரை என்று சொல்வதோ, அல்லது இங்கே இருந்துகொள்கிறேன் என்று சொல்வதோ என் இயக்கத்தை இறுக்கிவிடும்.

(ஆ) மேன்மையானவர்கள் தங்களது மனம் (mind / reason) மற்றும் ஆன்மாவால் (will) (விருப்பம் என்றும் மொழிபெயர்க்கலாம்) வழிநடத்தப்படுவார்கள். ஒரு முடிவு எடுக்கும்போது, மனம் பகுத்தாய்ந்து இதன் விளைவு இது, அதன் விளைவு அது என்று சொல்லும். அப்போது ஆன்மா இரண்டையும் ஆய்ந்து அவற்றில் ஒன்றைத் தெரிவு செய்யும்.

(இ) மேன்மையானவர்கள் தங்களுடைய உணர்ச்சிகளையும் (emotions), உந்துதல்களையும் (instincts) கட்டுக்குள் வைத்திருப்பார்கள். ஏனெனில், அவர்களுக்கு இலக்கு அவசியம்.

இதற்கு எதிர்மாறாக, மேன்மையற்றவர்கள் அல்லது மேன்மையை அடைய முடியாதவர்களின் பண்புகள் இருக்கும்:

(அ) அவர்களுக்கு என்று எந்த இலக்கும், குறிக்கோளும், நோக்கமும் இருக்காது.

(ஆ) அவர்கள் தங்களது உணர்ச்சிகளாலும், உந்துதல்களாலும் வழிநடத்தப்படுவார்கள்.

(இ) இவர்கள் தங்கள் மனத்தையும் ஆன்மாவையும் மயக்க மருந்து கொடுத்து வைத்திருப்பார்கள். அல்லது அவற்றை மழுங்கடித்துவிடுவார்கள்.

இப்பண்புகளை ஓர் உருவகமாகத் தருகின்றார் ஷீன்: ஒரு கப்பல்.

கப்பல்தான் மனித வாழ்க்கை. தூரத்தில் தெரிகின்ற கலங்கரை விளக்கம் அல்லது விண்மீன் நாம் அடைய வேண்டிய இலக்கு. மனம் உள்ளிருக்கும் இயந்திரம். ஆன்மா அதை இயக்கும் கேப்டன். உணர்ச்சிகளும் உந்துதல்களும் கப்பலை மோதும் அலைகள்.

மேன்மையானவர்கள், உணர்ச்சிகளையும் உந்துதல்களையும் கண்டுகொள்ளாமல், தங்கள் இலக்கை நோக்கி நகர்வர். ஆனால், மேன்மையற்றவரோ, தங்கள் கப்பலை தலைகீழாகக் கவிழ்த்துக்கொண்டு, மனத்தையும், ஆன்மாவையும் தண்ணீருக்குள் அமிழ்த்திவிட்டு, தங்களுடைய உணர்ச்சிகளாலும் உந்துதல்களாலும் இயக்கப்படுவர். விளைவு, இவர்களுக்கு இலக்கு தெரியாது. இவர்கள் அங்குமிங்கும் செல்வார்கள். தங்களுடைய மனத்தையும் ஆன்மாவையும் பயன்படுத்தி தங்களுடைய உணர்ச்சிகளையும் உந்துதல்களையும் நியாயப்படுத்திக்கொள்வர்.

நிற்க.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (காண். யோவா 6:35-40), இயேசு ஒரு மேன்மையானவராக முன்வைக்கப்படுகிறார்.

எப்படி?

தன்னைச் சுற்றி நின்ற மக்களிடம், தன் இலக்கு அல்லது நோக்கம் எது என்பதை முன் வைக்கின்றார்.

இயேசுவின் இலக்கு என்ன? தந்தையின் திருவுளம் நிறைவேற்றுவது.

அவரின் மனம் என்ன? எது தேவை, எது தேவையற்றது என்பதை பிரித்துப் பார்ப்பது.

அவரின் ஆன்மா என்ன? தந்தையின் திருவுளம்

உணர்ச்சிகளும் உந்துதல்களும் என்ன? மக்கள் அவரைப் பிடித்து அரசராக்க நினைப்பது.

தன்னுடைய இலக்கில் தெளிவாக இருந்த இயேசு, தன் உணர்ச்சிகளையும் உந்துதல்களையும் கட்டுக்குள் வைத்து, தன் மனம் மற்றும் ஆன்மாவால் வழிநடத்தப்பட்டு முன்னேறிச் செல்கின்றார்.

அவரின் இலக்கு அனைவரும் பெறுகின்ற நிலைவாழ்வில் நிறைவேறுகிறது.

நற்செயல்: நான் மேன்மையானவரா? மேன்மையற்றவரா? என்பதை மேற்காணும் பண்புகள் கொண்டு ஆய்வு செய்வதும், என் வாழ்வின் இலக்கைத் தெளிவாக்குவதும்.

என் வாழ்வின் இலக்கு (vision): 'அவரோடு இருக்கவும், நற்செய்தி பறைசாற்ற அனுப்பப்படவும், தீய ஆவிகள் மேல் அதிகாரம் கொண்டிருக்கவும்' (மாற். 3:14)

என் வாழ்வின் நோக்கம் (mission): 'இறைவேண்டலிலும் இறைவார்த்தைப் பணியிலும் நிலைத்திருப்பது' (திப 6:4).

நோக்கத்தின் வழி இலக்கை அடைவதும், இலக்கை மனத்தில் வைத்து நோக்கத்தை நெறிப்படுத்துவதும் சால்பு.

1 comment:

  1. உளவியலின் படி மேன்மையானவர்கள் மற்றும் மேன்மையற்றவர்களின் இலக்கணங்களைப் பிரித்துக்கூறும் தந்தை இறுதியாக இயேசுவை மேன்மையாளராக்குவது அவரிடமிருந்த ‘ இலக்கே’ என்கிறார்.தன்னுடைய இலக்கில் தெளிவாக இருந்த இயேசு தன் உணர்ச்சிகளையும்,உந்துதல்களையும் கட்டுக்குள் வைத்து தன் மனம் மற்றும் ஆன்மாவால் முன்னேறிச்செல்கிறார். நாம் பெறும் நிலை வாழ்வே அவரின் இலக்கு என முடிக்கிறார்.இந்த மேன்மையாளர்...மேன்மையற்றவர் என்பது அடுத்தவர் நமக்கு வரையறுக்கும் விதிகளாக இருக்க வேண்டுமெனும் அவசியமில்லை. இதெல்லாம் சிலருக்கு இயல்பியலேயே இறைவன் தருவதும்...சிலருக்கு கற்றறிவதும்,இன்னும் சிலர் தன்புத்தியும்,சொல்புத்தியுமின்றி செத்து மடிவதும் நாம் பார்க்கும் விஷயமே!

    இன்றைக்கு நற்செயலாக நான் தெரிவு செய்வது “ இறை வேண்டலிலும், இறைவார்த்தைப் பணியிலும் நிலைத்திருப்பது.” என் இறைவேண்டல் மற்ற எல்லாவற்றையும் பொறுப்பெடுத்துக்கொள்ளும் என்பது என் கருத்து.
    தந்தைக்கு நன்றிகளும்! வாழ்த்துக்களும்!!!

    ReplyDelete