Friday, April 17, 2020

கடின உள்ளம்

இன்றைய (18 ஏப்ரல் 2020) நற்செய்தி (மாற் 16:9-15)

கடின உள்ளம்

உயிர்ப்பின் எண்கிழமையின் இறுதி நாளாகிய இன்று, இயேசுவின் உயிர்ப்புக்குப் பின் நடந்த நிகழ்வை நாம் மாற்கு நற்செய்தியிலிருந்து வாசிக்கின்றோம். மாற்கு நற்செய்திதான் முதலில் எழுதப்பட்டது என்பது இன்று ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று. மேலும், மற்ற நற்செய்தி நூல்கள் மாற்கு நற்செய்தியின் நீட்சி என்பதும் பரவலாகக் கருதப்படும் ஒன்று. மற்ற நற்செய்தியாளர்கள் பதிவுசெய்த நிகழ்வுகளை மிகவும் சுருக்கமாகப் பதிவு செய்கிறார் மாற்கு.

இன்றைய வாசகம் இயேசு உயிர்ப்புக்குப் பின் சீடர்களுக்குத் தோன்றிய நிகழ்வு பற்றியதாக இருந்தாலும், இங்கே முழுக்க முழுக்க சீடர்களைப் பற்றித்தான் நாம் வாசிக்கின்றோம்:

அ. சீடர்கள் துயருற்று அழுதுகொண்டிருந்தனர்
ஆ. பெண்கள் சொன்னதை சீடர்கள் நம்பவில்லை
இ. மற்றவர்கள் சொன்னதையும் சீடர்கள் நம்பவில்லை
ஈ. அவர்கள் கடின உள்ளத்தோடு இருந்தனர்

இறுதியில், இயேசு அவர்களின் கடின உள்ளத்தையும் அதிலிருந்த நம்பிக்கையின்மையையும் கடிந்துகொண்டு, 'உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள்' எனக் கட்டளையிடுகின்றார்.

மாற்கு நற்செய்தியில் நாம் காணும் சீடர்கள் மிகவும் பரிதாபத்துக்குரியவர்கள். அவர்கள் இயேசுவைப் புரிந்துகொள்வதில்லை. அல்லது தவறாகப் புரிந்துகொள்கிறார்கள்.

எப்போது நம் உள்ளம் கடினப்படுகிறது?

மூன்று காரணங்களுக்காக என நினைக்கின்றேன்:

அ. நம்முடைய இறந்தகாலம் நம்மைப் பின்நோக்கி இழுக்கும்போது. (When we are pulled back by our past)

எடுத்துக்காட்டாக, என் கடந்த கால வாழ்வின் கசப்பான அனுபவம் அல்லது காயம் என்னைப் பின்நோக்கி இழுக்கும்போது, என்னால் இன்றைய வாழ்வின் இனிப்பான அனுபவங்களைச் சுவைக்க முடிவதில்லை.

ஆ. நம்முடைய நிகழ்காலத்தின்மேல் நாம் காதல்வெறி கொள்ளும்போது. (When we are enamoured of our present)

அதாவது, அளவுக்கு அதிகமாக நிகழ்காலத்தைப் பற்றிக்கொள்ளும்போது. இன்று நான் செய்யும் வேலை, படிக்கும் படிப்பு, உடனிருக்கும் உறவு போன்றவற்றில் நான் அதிகப் பற்றுக்கொள்ளும்போதும் என் உள்ளம் கடினப்படும். ஏனெனில், என்னால் வாழ்வை அண்ணாந்து பார்க்க முடியாத நிலையை இவை உருவாக்கிவிடும். இன்னும் நான் செல்ல வேண்டிய பாதை உள்ளது என்பதை மறக்கச் செய்யும்.

இ. நம்முடைய எதிர்காலத்தின்மேல் பயம் வரும்போது. (When we are afraid of our future)

நாளை என்ன நடக்குமோ, அல்லது அடுத்த ஐந்து வருடத்தில் எப்படி இருப்பேனோ, அல்லது என்னுடைய இறுதி நாள்கள் எப்படி இருக்குமோ என்ற பயம் நம் உள்ளத்தை கடினப்பத்திவிடும்.

கடின உள்ளமும் நம்பிக்கையின்மையும் இரட்டைப் பிள்ளைகள்.

கடின உள்ளம் தன்மேல், பிறர்மேல், இறைமேல் உள்ள நம்பிக்கையை அசைத்துவிடும். விளைவாக, அவநம்பிக்கை மீண்டும் நம் உள்ளத்தை கடினப்படுத்தும்.

இச்சங்கிலித் தொடரை எப்படி உடைப்பது?

மூன்று வார்த்தைகள் ஃபார்முலாவை நினைவில் கொள்ள வேண்டும்:

'இதுவும் கடந்து போகும்'

அல்லது

'எல்லாம் சில காலம்'

பெத்லகேம் பிறப்பு, வானதூதர் பாடல், எகிப்து பயணம், நாசரேத்து குழந்தைப் பருவம், எருசலேம் காணாமல் போதல், திருமுழுக்கு, இறையாட்சிப் போதனை, கதைகள், உவமைகள், அறிகுறிகள், வல்ல செயல்கள், அற்புதங்கள், கானாவூர் திருமணம், கலிலேயக் கடல் பயணம், சந்திப்புக்கள், வரவேற்புகள், ஓசன்னா, சிலுவையில் அறையும், சிலுவை, வாடகைக் கழுதை, வாடகைக் கல்லறை, நறுமணப் பொருள், தோட்டக்காரர், மகதலா மரியா, அவளிடமிருந்து விரட்டப்பட்ட ஏழு பேய்கள், வானதூதர்கள், போர்வீரர்கள், வதந்தி, ஆளுநர் -

- இவை எல்லாம் சில காலம். இவை எல்லாம் கடந்து போகும்.

நற்செயல்: இன்று நம் வீட்டில் உள்ள ஃப்ரிட்ஜின் (refrigerator) ஃப்ரீஸ்சரைத் (freezer) திறந்து கொஞ்சம் க்ளீன் செய்யலாம். ஃப்ரீஸ் (freeze) ஆன எதுவும் இயங்குவதில்லை. இயங்குவது எதுவும் ஃப்ரீஸ் (freeze) ஆவதில்லை.

2 comments:

  1. இறைச்செய்தி என்று வருகையில் அது மத்தேயுவிடமிருந்தோ...மாற்கிடமிருந்தோ நமக்கு ஒன்றும் பேதமில்லை.இயேசுவின் இறப்பு சீடர்களின் வாழ்க்கையைப் புரட்டிப்போட, அவர் உயிரோடு பல முறை அவர்கள் முன் தோன்றிடினும் அது அவர்கள் எதிர்பார்த்தபடி அவர்களின் அச்சம் போக்கவில்லை. எதிர்மறைவிளைவுகள் அவர்களின் உள்ளத்தை அலைக்கழிக்க, அவர்களின் உள்ளம் கடினப்பட்டுப்போவதாக, அவர்களை இயேசு கடிந்து கொள்ள, ஒருவரின் உள்ளம் கடினப்பட்டுப் போவதற்கான காரணங்களை அலசுகிறார் தந்தை. இந்த அலசல் அனைத்தும் காலங்களை அடிப்படையாகக் கொண்டுள்ளது.நேற்றைய தினத்தின் காயங்களும்,தவறுகளும் நமக்குக் கற்றுத்தந்த பாடங்களை மறந்துவிடுவதும்,அடுத்து நான் செல்ல வேண்டிய திசையை மறைக்குமளவுக்கு என் இன்றைய வாழ்க்கை என் கண்களை மறைத்து விடுவதும், நாளையைக்குறித்த பயமும்,அவநம்பிக்கையும் தான் ஒருவரின் கடின உள்ளத்திற்கான காரணங்கள் என்கிறார் தந்தை.அனைத்தும் நமக்குத் தெரிந்தவையே! நம் வாழ்க்கையோடு இணைந்தவையே! இறைநம்பிக்கையையும்,தன்னம்பிக்கையையும் உடைத்தெறியும் இந்தக்கடின உள்ளத்தை எப்படிக்கையாளுவது? தந்தை சொல்லும் மந்திரம் கைகொடுக்குமென்பதில் ஐயமில்லை.” எல்லாம் மறைந்து போகும்; அதில் இதுவும் கடந்து போகும்.”

    என்ன கொடுமை இது? நான் நேற்றுதானே ஃப்ரீசரை சுத்தம் பண்ணினேன்!.இருப்பினும் இன்னொரு முறை சுத்தம் செய்வதில் தப்பில்லைதான்.
    “ஃப்ரீஸ் ஆன எதுவும் இயங்குவதில்லை...இயங்குவது எதுவும் ஃப்ரீஸ் ஆவதில்லை”...அருமை!!!
    இதைப்படித்தவுடன் இன்னும் ஒருமுறை என்ன...ஓராயிரம் முறை கூட சுத்தம் செய்யலாம்!
    நாம் அன்றாடம் கடந்து போகும் ஒரு நிகழ்வை அழகாகக் கடக்க யோசனை சொல்லும் தந்தைக்கு என் வாழ்த்துக்களும்! நன்றிகளும்!!

    ReplyDelete
  2. Anonymous4/17/2020

    "இதுவும் கடந்து போகும் " என்பது பலவேளைகளில் என் வாழ்வை இதமாக நகர்த்த உதவியிருக்கிறது. இப்பதிவின்வழி மீண்டுமாக நினைவுபடுத்திய தந்தைக்கு நன்றி

    ReplyDelete